Press "Enter" to skip to content

குடியிருப்பு பகுதிகளுக்கு உரிமை கோரும் வக்ஃப் வாரியம் – என்ன சர்ச்சை?

  • எழுதியவர், மோகன்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள வடுகபாளையத்தைச் சேர்ந்த சுப்ரமணியம் தனக்கு சொந்தமான 10 சென்ட் நிலத்தில் வீடு கட்ட இணைப்பு வாங்கலாம் என முயற்சித்தபோது அந்த இடம் தமிழ்நாடு வக்ஃப் வாரியத்துக்கு சொந்தமானது அதனால் இணைப்பு வழங்க முடியாது எனக் கூறப்பட்டுள்ளது.

சுப்ரமணியம் போலவே வடுகபாளையத்தைச் சேர்ந்த சுமார் நானூறுக்கும் மேற்பட்டவர்களின் நிலங்களை எந்த மாறுதலும் செய்யக்கூடாது எனக் கூறப்பட்டுள்ளதால் சர்ச்சை வெடித்துள்ளது.

பிபிசி தமிழிடம் பேசிய சுப்ரமணியம், ”கடந்த 2015 ஆம் ஆண்டு சொந்த வீடு கட்டலாம் என இங்கு 10 சென்ட் நிலம் வாங்கினேன். கடந்த மூன்று மாதங்களாக இந்தப் பகுதி வக்ஃப் சொத்துக்கள் எனக் கூறப்பட்டு வந்தது. தற்போது எங்கள் நிலத்திற்கு இணைப்பு பெறவோ அல்லது வேறு எதுவுமே செய்ய முடியாது என பதிவு அலுவலகத்தில் கூறியுள்ளதால் அதிர்ச்சியில் உள்ளோம்.

நான் இந்த இடத்தை வாங்கியபோது மூலப்பத்திரம், தாய் பத்திரம் என அனைத்தும் சரியாக இருந்து பதிவுத்துறை அதிகாரிகள் பத்திரப் பதிவு செய்தனர். தற்போது எங்கள் நிலங்களை வக்ஃப் சொத்து எனக் கூறுவது அதிர்ச்சியாக உள்ளது” என்றார்.

தமிழ்நாடு வக்ஃப் வாரியத்துக்குச் சொந்தமானவை எனக் கூறப்படும் நிலங்களைப் பத்திரப்பதிவு செய்யக்கூடாது எனக் கூறப்பட்டுள்ளதால் பல ஊர்களில் சர்ச்சை எழுந்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் பல ஊர்களில் இந்த சிக்கல் இருப்பதாக அறிய முடிகிறது. கடந்த செப்டம்பர் மாதம் திருச்சி மாவட்டம் திருச்செந்துறை கிராமத்திலும் வக்ஃப் வாரியத்துக்கு சொந்தமான நிலங்கள் இருப்பதாக எழுந்த சர்ச்சை பூதாகரமானது.

தற்போது திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வடுகபாளையம் ஊராட்சியில் சில பகுதிகள் வக்ஃப் வாரியத்துக்கு சொந்தமானவை என அறிவிக்கப்பட்டுள்ளதற்கு அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஊத்துக்குளி பதிவாளரிடம் புகார் மனுவும் அளித்துள்ளனர். 

சார் பதிவாளர் அலுவலகம்

வக்ஃப் வாரியம் என்றால் என்ன?

தமிழ்நாடு முழுவதும் உள்ள மசூதிகளுக்கு கொடையாக வழங்கப்பட்ட மசூதிகளின் பெயரில், நிர்வாகத்தில் உள்ள சொத்துகளே வக்ஃப் சொத்துகள் எனப்படும். இந்த வக்ஃப் சொத்துக்களை கையாள்வதற்கு 1954 ஆம் ஆண்டு வக்ஃப் சட்டத்தின் மூலம் வக்ஃப் வாரியம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வாரியத்தில் ஒரு தலைவர் உட்பட 12 உறுப்பினர்கள் உள்ளனர், தலைமை செயல் அதிகாரி ஒருவர் உள்ளார். 11 மண்டல அலுவலகங்கள் உள்ளன. ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு கண்காணிப்பாளர் மற்றும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு வக்ஃப் ஆய்வாளர் உள்ளார். 

வக்ஃப் பணிகளை மேற்கொள்வது, வக்ஃப் நிர்வாகம் மற்றும் சொத்துக்களை பராமரிப்பது மற்றும் வக்ஃப் வாரியத்தின் சொத்துக்களை மீட்பது ஆகியவை இந்த வாரியத்தின் பிரதான பணிகளாக உள்ளன. தற்போது வரை 158 கோடி மதிப்பிலான 16 லட்சம் சதுர அடி கொண்ட வக்ஃப் சொத்துக்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் மேலும் ஆக்கிரமிப்பில் உள்ள வக்ஃப் சொத்துக்கள் தொடர்பாக பதிவுத்துறைக்கு அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளதாகவும் வக்ஃப் வாரியம் தெரிவித்துள்ளது. 

சர்ச்சையின் பின்னணி என்ன?

வக்ஃப் வாரிய இடமாக அடையாளம் காணப்பட்டுள்ள பகுதி.

கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம் தேதி தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திலிருந்து திருப்பூர் மாவட்ட பதிவு துறைக்கும் அதன் கீழ் இயங்கும் 14 சார் பதிவாளர் அலுவலங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வக்ஃப் வாரியத்தின் சொத்துக்கள் என்கிற பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் பட்டா எண், நில அளவு ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. அதற்கான பத்திரங்கள் அல்லது ஆதாரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை.

இந்த பட்டியலில் உள்ளவை வக்ஃப் சொத்துக்கள், இவற்றை விற்கவோ அல்லது வேறு மாற்றங்கள் செய்யவோ கூடாது  என பதிவுத்துறைக்கு வக்ஃப் வாரியம் அறிவுறுத்தல் அனுப்பியுள்ளது. மேலும் இந்த சொத்துக்களை பதிவு, மாற்றம், தானம் செய்யவோ அல்லது சொத்துக்களை வைத்து கடன் வாங்குவதோ தடை செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வக்ஃப் சொத்து என அடையாளம் காணப்பட்டுள்ள நிலங்களை தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரியிடம் `ஆட்சேபனை இல்லா சான்று` பெறாமல் பதிவு செய்யக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தெளிவற்ற நிலை இருப்பதால் தாங்களும் குழப்பத்தில் இருப்பதாக பதிவுத்துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்தில் வடுகபாளையம் மட்டுமில்லாமல் கவுண்டம்பாளையம், ஊத்துக்குளி என பல இடங்களிலும் வக்ஃப் சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதுபோக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பிற பதிவாளர் அலுவலங்களின் எல்லைக்கு உட்பட்ட வக்ஃப் சொத்துக்களின் பட்டியலும் தனித்தனியாக அனுப்பப்பட்டுள்ளன.

நிலங்களை வைத்திருப்போர் சொல்வது என்ன?

சார் பதிவாளரிடம் புகார் அளிக்கும் பெண்.

வடுகபாளையம் ஊராட்சியைச் சேர்ந்த மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சார் பதிவாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். 

இது தொடர்பாக வடுகபாளையத்தைச் சேர்ந்த சண்முகம் பிபிசி தமிழிடம் பேசுகையில், “ஆறு மாதங்களுக்கு முன்பு பக்கத்து ஊரில் வக்ஃப் சொத்து தொடர்பான சர்ச்சை எழுந்தது. தற்போது மேலாய்வு எண் மாறி எங்கள் ஊரிலும் இதே சர்ச்சை எழுந்துள்ளது. வக்ஃப் வாரியத்திடம் அவர்களின் சொத்து என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கொடுக்கப்பட்ட இனாம் மேலாய்வு எண்ணை வைத்துதான் அவர்கள் இந்த தடை கடிதத்தை பதிவுத்துறைக்கு அனுப்பியுள்ளனர். பதிவுத்துறை இதை வைத்துக் கொண்டு எங்கள் நிலங்களை பதிவு செய்ய முடியாது எனக் கூறுகிறது.

வடுகபாளையம் ஊராட்சியில் மட்டும் சுமார் 50 ஏக்கர் நிலம் தற்போது வக்ஃப் சொத்து என அறிவிக்கப்பட்டுள்ளது. எங்களிடம் 100 வருடங்களுக்கு முன்புள்ள பத்திரங்கள், ஆவணங்கள், நீதிமன்ற உத்தரவுகள் முதற்கொண்டு அனைத்தும் உள்ளன. ஆனால் வக்ஃப் வாரியம் எந்த ஆதாரமும் வழங்கவில்லை. வக்ஃப் வாரியம் வருவதற்கு முன்பிருந்தே இந்த நிலங்களை எங்களில் பலரும் பயன்படுத்தி வந்துள்ளோம். 

பல நிலங்கள் 5, 6 முறை பட்டா மாற்றப்பட்டுள்ளது. பல தலைமுறையாக பயன்படுத்தப்பட்டு வந்த நிலங்கள் தற்போது வக்ஃப் சொத்து எனக் கூறுவதற்கு என்ன முகாந்திரம் உள்ளது? நாங்கள் எங்களிடம் உள்ள ஆவணங்கள் அனைத்தையும் சமர்பித்துள்ளோம் வக்ஃப் வாரியம் இந்த ஆவணங்களை கொடுக்க வேண்டும் எனக் கேட்டுள்ளோம்.

சொத்து எங்கள் பெயரில் இருக்கும்போது எங்கள் நிலங்களைப் பயன்படுத்த நாங்கள் ஏன் வக்ஃப் வாரியத்திடம் `ஆட்சேபனை இல்லா சான்று` பெற வேண்டும்? 2018 ஆம் பதிவுத்துறை தலைவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை ஒன்றின்படி தடை மனுக்கள் கொடுப்பவர்கள்தான் உரிய ஆதாரங்களை சமர்பிக்க வேண்டும். 

உரிய ஆதாரங்கள் இல்லையென்றால் பதிவாளர்கள் தடை மனுக்களை நிராகரிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது. ஆனால் இங்கு பதிவுத்துறை அதிகாரிகள் வக்ஃப் வாரியத்தின் தடை மனுவை ஏற்றுக் கொண்டு எங்கள் நிலங்களை பதிவு செய்யாமல் நிறுத்தி வைத்துள்ளனர். இதையும் குறிப்பிட்டுதான் எங்கள் மனுவை அளித்துள்ளோம்” என்றார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி பதிவுத் துறைக்கு வக்ஃப் வாரியம் பல கடிதங்கள் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக பதிவுத்துறை தலைவரிடமிருந்து மாவட்ட பதிவாளர் மற்றும் சார் பதிவாளர்களுக்கு கடந்த 08.10.2021 அன்று தனியாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் வக்ஃப் சொத்து என அடையாளம் காணப்பட்ட நிலங்களைப் பதிவு செய்கையில் வக்ஃப் வாரியத்தின் ‘ஆட்சேபனை இல்லா சான்று’ பெற்று அதனை தனியாக உறுதி செய்தபின்தான் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

வடுகபாளையம் ஊராட்சி மக்களின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஊத்துக்குளி சார் பதிவாளர் இரா. இளவரசன் பிபிசி தமிழிடம் பேசிய போது, “வக்ஃப் வாரியத்திலிருந்து பதிவுத்துறை மூலமாக எங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையின்படி குறிப்பிடப்பட்ட சொத்துக்கள் மீதான பத்திரப்பதிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம். நில உரிமையாளர்கள் அதற்கு ஆட்சேபனை தெரிவித்து மனு அளித்துள்ளனர். அதனை வக்ஃப் வாரியத்திற்கும் மாவட்ட பதிவாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம். எங்களுக்கு கொடுக்கப்படும் வழிகாட்டுதலின் அடிப்படையில் செயல்படுவோம்“ என்றார். 

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ். வினீத்

வக்ஃப் வாரியம் கூறுவது என்ன?

இது தொடர்பாக வக்ஃப் வாரியத்தின் தலைவர் அப்துல் ரஹ்மான் பிபிசி தமிழிடம் பேசுகையில், “சட்டப்படி பூமிதான நிலங்கள், இந்துசமய அறநிலையத் துறையின் சொத்துக்கள் மற்றும் வக்ஃப் வாரியத்தின் சொத்துக்களை வேறு யாருக்கும் பதிவு செய்ய முடியாது. தமிழ்நாடு முழுவதும் கடந்த காலங்களில் வக்ஃப் வாரியத்தின் சொத்துக்கள் போலியான ஆவணங்கள் மூலம் விற்கப்பட்டுள்ளன. 

வக்ஃப் சட்டம் 1954 ஆம் ஆண்டு இயற்றப்பட்டபோது வக்ஃப் சொத்துக்கள் மேலாய்வு எடுக்கப்பட்டன. அந்த மேலாய்வுயில் உள்ள தரவுகளை தொகுத்து பதிவாளர் அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி இந்த வக்ஃப் சொத்துக்களை பதிவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளோம். அந்தப் பட்டியலில் சில நிலங்கள் தவறாகப் பதிவாகியிருக்கலாம்.

அவ்வாறு உள்ளவர்கள் எங்களிடம் சான்றுகளுடன் ஆட்சேபனை தெரிவிக்கலாம். ஆவணங்களை ஆராய்ந்த பிறகு அது வக்ஃப் சொத்து இல்லையென்று தெரிந்தால் ‘ஆட்சேபனை இல்லா சான்று’ வழங்கிவிடுவோம். ஒருவேளை அந்த நிலங்கள் வக்ஃப் சொத்துதான் என்றால் சான்று வழங்குவதில்லை. அத்தகைய நிலங்களை எந்த பரிமாற்றமும் செய்யாமல் நிறுத்தி வைப்பதற்குதான் முதல் கட்டமாக இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஒரு சிலர் இதற்கு மதச்சாயம் பூசுகிறார்கள். இதில் இந்து, முஸ்லிம், கிறித்தவர் என்கிற பாகுபாடு பார்க்கப்படுவதில்லை. வக்ஃப் சொத்துக்களை முதலில் பயன்படுத்தியவர் தவறான ஆவணங்களை வைத்து அபகரித்து பயன்படுத்திவிட்டு விற்றுள்ளனர். பின்னர் அது பலரின் கை மாறிச் சென்றுள்ளது. ஆனாலும் அவை வஃக்ப் சொத்துக்கள்தான்” என்றார்.

நில உரிமையாளர்களிடம் நாம் பேசியபோது, “இவ்வளவு காலம் கழித்து வக்ஃப் வாரியத்தின் சொத்துக்கள் எனச் சொல்வதற்கு என்ன ஆதாரம் உள்ளது? இப்போது ஏன் செய்ய வேண்டும்” என்கிற கேள்விகளை எழுப்பியிருந்தனர்.

அதே கேள்விகளை வக்ஃப் வாரிய தலைவரிடமும் முன்வைத்தோம். அதற்குப் பதிலளித்தவர், “கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தான் வக்ஃப் சொத்துக்களை மீட்கும் நடவடிக்கைகளை முழு வீச்சில் எடுத்து வருகிறோம். பழைய மேலாய்வுக்குப் பிறகு பல மாறுதல்கள் நிகழ்ந்துள்ளன. அதனால் வக்ஃப் சொத்துக்களை மீண்டும் புதிதாக மேலாய்வு எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்” என்றார். 

திருப்பூர் மாவட்டத்தில் வக்ஃப் நில சர்ச்சைகள் தொடர்பாக மனுக்கள் பதிவுத்துறையால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் பிபிசி தமிழிடம் பேசியபோது, “வக்ஃப் சொத்துக்கள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் வந்துள்ளன. சுமார் 80 பேர் நேரடியாகவும் என்னை சந்தித்து இது தொடர்பாக முறையிட்டனர். அவர்களின் மனுக்கள் வருவாய்த் துறை ஆவணங்களுடன் சரிபார்க்கப்பட்டு வக்ஃப் வாரியத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக வரும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வருவாய் துறைக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

திருப்பூர் மாவட்டத்தைப் போல தமிழ்நாடு முழுவதும் வக்ஃப் சொத்து மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை அறிய முடிகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »