Press "Enter" to skip to content

பிரபாகரன் மரணம்: இதற்கு முன் எத்தனை சந்தர்ப்பங்களில் மறுக்கப்பட்டுள்ளது?

  • முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்

பட மூலாதாரம், Getty Images

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் கொல்லப்படவில்லை என்றும் அவர் உயிருடன் இருப்பதாகவும் உலகத் தமிழர் பேரவை தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்திருக்கிறார். இவரது கூற்றை இலங்கை ராணுவம் மறுத்துள்ளது. ஆனால், பிரபாகரனின் மரணம் மறுக்கப்படுவது இது முதல் முறையல்ல.

2009ஆம் ஆண்டு மே மாதம் இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் புலிகள் இயக்கம் முழுமையாக அழிக்கப்பட்டு விட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மே 18-19ஆம் தேதிகளில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், தமிழ்நாட்டில் உள்ள தமிழீழ ஆதரவாளர்கள் பிரபாகரன் கொல்லப்பட்ட செய்தி வெளிவந்த உடனேயும் அதற்குப் பிறகும் பல தருணங்களில் அவர் மரணமடையவில்லை என்று கூறி வந்துள்ளனர்.

1. பிரபாகரன் கொல்லப்பட்ட சில நாட்களில் அதாவது 2009ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி பேசிய பழ. நெடுமாறன், அந்தச் செய்தியைக் கடுமையாக மறுத்தார். “பிரபாகரன் கொல்லப்பட்டதாக ஏற்கெனவே மூன்று முறை இலங்கை ராணுவம் பொய்ச் செய்திகளை வெளியிட்டுள்ளது. இதன் பின்னணியில் இந்திய உளவு அமைப்பான “ரா’ இருக்கிறது. இதுபோன்ற பொய்ச் செய்திகளைப் பரப்புவது கண்டனத்துக்குரியது. அவரது மண்ணில் பிரபாகரன் பாதுகாப்பாக இருக்கிறார்,” என்று கூறினார் நெடுமாறன்.

2. இதற்கு அடுத்த நாள், அதாவது 2009 மே 22ஆம் தேதி புலிகள் இயக்கத்தின் சர்வதேச பொறுப்பாளராக இருந்த செல்வராசா பத்மநாபன், “பிரபாகரன் சாகவில்லை, உயிருடன் பாதுகாப்பாக – நலமாக இருக்கிறார்” என்று அறிக்கை வெளியிட்டார். (ஆனால், இதற்கு ஒரு வாரத்திற்குப் பிறகு பிபிசியிடம் பேசிய அவர் பிரபாகரன் மரணம் அடைந்ததாகக் கூறினார்).

3. மே 24, 2009: பிரபாகரன் மரணமடைந்த தருணத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அதை ஏற்கவில்லை. அவர் உயிரோடு இருப்பதாகவே பல காலம் தெரிவித்து வந்தார். 2009ஆம் ஆண்டு மே 24ஆம் தேதி பேசிய வைகோ, “தமிழ்த் தேசிய இனத்தின் தலைவரும் உலகத் தமிழர்களின் இதய நாயகனுமான பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருக்கிறார். அதில் எள் அளவும் எனக்குச் சந்தேகம் இல்லை. உரிய காலத்தில் தமிழ் ஈழத்தை வென்றெடுக்க வருவார். தலைவர் பிரபாகரன் அவர்கள், உயிருடன் இருக்கிறார்” என்று கூறினார்.

4. ஜனவரி 20, 2010: பிரபாகரனுடைய தந்தை வேலுப்பிள்ளை இறந்தபோது, அதில் பங்கேற்க இலங்கை சென்று திரும்பினார் திருமாவளவன். அப்போது பேசிய அவர், “எங்களிடம் பேசிய பலரும் பொட்டு அம்மான் பற்றி மறக்காமல் கேட்டனர். பிரபாகரன், பொட்டு அம்மான், சூசை ஆகிய 3 பேரும் ஒன்றாகத்தான் இருந்தனர். எனவே 3 பேரும் ஒன்றாக பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள் என்று பெரும்பாலானவர்கள் கூறினர். பிரபாகரனும் இருக்கிறார். பொட்டு அம்மானும் இருக்கிறார்” என்று தெரிவித்தார் திருமாவளவன். ஆனால், 2021 டிசம்பரில் அளித்த பேட்டி ஒன்றில், அவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாகத் தான் நம்பவில்லை என்று தெரிவித்தார்.

5. ஜூன் 11, 2009: அதே ஆண்டு ஜூன் மாதத்திலும் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக வைகோ கூறினார். “புலிகளுக்கு நிகராகப் போர் நடத்தியவர்கள் யாரும் இல்லை. பிரபாகரன் உயிருடன்தான் உள்ளார். இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். உரிய நேரம் வரும்போது அவர் வெளியே வருவார். அப்போது பலரது முகத்திரை கிழியும்” என்று கூறினார்.

6. 2014 ஜனவரி 16: தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டியி்ல நடந்த பொங்கல் நிகழ்ச்சியில் பேசிய ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பிரபாகரன் மீண்டும் வந்து தமிழீழத்தை மீட்பார் என்று தெரிவித்தார். “வீரமங்கை வேலுநாச்சியாருக்கும் விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிராபகரனுக்கும் 19 ஒற்றுமைகள் உண்டு. அதில் ஒன்றை மட்டும் கூறுகிறேன். வேலுநாச்சியார் எட்டு ஆண்டுகள் மறைந்திருந்து வெள்ளையரை வீழ்த்தி சிவகங்கையை மீட்டார். அதேபோல பிரபாகரன் மீண்டும் வந்து ராஜபக்ச கூட்டத்தை வீழ்த்தி தமிழீழத்தை மீட்பார். அந்தக் காலம் வெகுவிரைவில் வரும்” என்று கூறினார்.

செய்தித்தாள்

பட மூலாதாரம், Getty Images

7. 2018 அக்டோபர் 13: இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்ததில் இருந்து இப்போதுவரை, பிரபாகரன் உயிருடன் இருப்பதாகத் தொடர்ந்து கூறி வருபவர் பழ. நெடுமாறன் மட்டும்தான். பிரபாகரன் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டதில் இருந்து இப்போதுவரை, தொடர்ந்து அந்த நிலைப்பாட்டிலேயே அவர் இருந்து வருகிறார். இதற்கு முன்பாக கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பழ. நெடுமாறன், “இலங்கையில் மக்கள் போராட்டம் நடத்தத் துவங்கியுள்ளனர். இதுபோன்ற பிரச்னைகள் தொடர்வதால், அங்கு தமிழீழம் அமைய வேண்டும் என்ற போராட்டம் வெடிக்கும். விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் இறுதிக் கட்ட போரில் கொல்லப்படவில்லை. அவர் நலமுடன் இருந்து வருகிறார். இலங்கை தமிழர்களின் உரிமை போராட்டக் களத்தில் உரிய நேரத்தில் வெளிப்படுவார்” என்று தெரிவித்தார்.

8. 2018 டிசம்பர்: ஒரு தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த வைகோ, “பிரபாகரன் உயிருடன் இருப்பதாக நான் உணர்வுப்பூர்வமாக நம்புகிறேன். கோடியக்கரை கடலில் இறங்கி பிரபாகரனின் கனவை நனவாக்குவேன் என்று சபதமிட்டேன். என்னைப் பொறுத்தவரையில் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்றே நம்புகிறேன். இதில் விவாதிக்க எதுவும் இல்லை” என்று குறிப்பிட்டார்.

2009ஆம் ஆண்டில் இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த தருணத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பலரும் பிரபாகரன் மரணமடையவில்ல; அவர் திரும்பி வந்து போராடுவார் என்ற கருத்துகளையே கூறி வந்தனர். ஆனால், ஆண்டுகள் செல்லச் செல்ல அந்தக் கருத்துகளை அவர்கள் மாற்றிக்கொண்டனர். ஆனால், பழ. நெடுமாறன் தொடர்ச்சியாக பிரபாகரன் உயிரோடு இருப்பதாகக் கூறி வருகிறார்.

பிபிசி விளையாட்டு வீராங்கனை

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »