Press "Enter" to skip to content

பிபிசி இந்திய அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் ஆய்வு

பட மூலாதாரம், Reuters

இந்திய தலைநகர் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இந்திய பிரதமர் நரேந்திர மோதியை விமர்சித்து பிரிட்டனில் ஒரு ஆவணப்படம் வெளி வந்த சில வாரங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

2002இல் குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் அப்போதைய முதல்வராக இருந்த நரேந்திர மோதிக்கு பங்கு இருந்தது தொடர்பாக பிரிட்டனில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆவணப்படத்தில் தகவல்கள் இடம்பெற்றிருந்தன. அதை இந்தியாவில் பகிரவும் சமூக ஊடகங்கள் வாயிலாக பார்க்க முடியாதவாறும் இந்திய அரசு முடக்கியது.

இந்த நிலையில், பிபிசியின் இந்திய அலுவலகங்களில் அதிகாரிகள் நடத்தி வரும் ஆய்வுக்கு “முழுமையாக ஒத்துழைப்பதாக” பிபிசி தெரிவித்திருக்கிறது.

“இந்த நிலைமை விரைவில் தீர்க்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அறிக்கை மூலம் பிபிசி கூறியுள்ளது.

நடவடிக்கைக்கு எதிர்வினை

இந்திய எதிர்க்கட்சியான காங்கிரஸின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், “இந்த நடவடிக்கை, விரக்தியில் மூழ்கிய மோதி அரசு விமர்சனங்களுக்கு பயப்படுவதைக் காட்டுகிறது” என்று கூறியுள்ளார்.

“இத்தகைய மிரட்டல் தந்திரங்களை கடுமையான முறையில் நாங்கள் கண்டிக்கிறோம். இந்த ஜனநாயகமற்ற, சர்வாதிகார அணுகுமுறை இனியும் தொடர முடியாது” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

இதேவேளை, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா “உலகின் மிகவும் ஊழல் நிறைந்த அமைப்பு பிபிசி” என்று விமர்சித்துள்ளார்.

“நீங்கள் விஷத்தை கக்காத வரையில், ஒவ்வொரு அமைப்புக்கும் வாய்ப்பளிக்கும் நாடு இந்தியா” என்று அவர் கூறியுள்ளார்.

வருமான வரித்துறையினரின் ஆய்வு நடவடிக்கை சட்டபூர்வமானது என்றும் ஆய்வு நடக்கும் நேரத்துக்கும் அரசாங்கத்துக்கும் என்த தொடர்பும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நடிகை குஷ்பு, வருமான வரித்துறை சோதனை விவகாரத்தில் பிபிசியை ஆதரிக்க காங்கிரஸ் முந்திக் கொண்டு வருவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டையும் பிரதமரையும் அவமதிக்கும் எவரையும் காங்கிரஸ் கட்சி ஆதரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஊடக சங்கங்கள் எதிர்ப்பு

இந்தியாவில் உள்ள முக்கிய ஊடகங்களின் ஆசிரியர்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ள எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா, பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை ஆய்வு நடவடிக்கைகள் குறித்து தமது “ஆழ்ந்த கவலையை” வெளிப்படுத்தியுள்ளது.

“அரசாங்கக் கொள்கைகள் அல்லது ஆளும் அமைப்பை விமர்சிக்கும் ஊடகங்களை மிரட்டுவதற்கும் துன்புறுத்துவதற்கும் அரசுத் துறைகள் பயன்படுத்தும் போக்கின் தொடர்ச்சி இவை ” என்று எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா கூறியுள்ளது.

பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை “மேலாய்வு” செய்வதை வன்மையாகக் கண்டிப்பதாக கூறியுள்ளது.

சமீப காலங்களில் தனக்கு எதிராகவும், ஆளும் அமைப்புக்கு எதிராகவும் உள்ள ஊடகங்களை விரோதமாக அரசாங்க கருதுகிறது. அதன் ஒரு பகுதியாக அத்தகைய ஊடகங்கள் மீது நடக்கும் தாக்குதலின் அங்கமாகவே இந்த ஆய்வு உள்ளது என்று இந்திய பத்திரிகையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

பிபிசி அழைப்பை நிராகரித்த அரசு

முன்னதாக, குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப்படம் ஒளிபரப்பாகும் முன்னர், அது தொடர்பாக பதில் தெரிவிக்கும் வாய்ப்பு இந்திய அரசுக்கு வழங்கப்பட்டதாகவும் ஆனால், அதை அரசு நிராகரித்து விட்டதாகவும் பிபிசி கடந்த மாதம் கூறியிருந்தது.

“அந்த ஆவணப்படம் ‘கடுமையாக ஆராயப்பட்டது’ என்றும், ‘பரந்த அளவிலான குரல்கள், சாட்சிகள்’ மற்றும் நிபுணர்கள் அதற்காக அணுகப்பட்டது. பாஜகவில் உள்ளவர்களின் பதில்கள் உட்பட பல தரப்பினரின் கருத்துக்களை வழங்கியுள்ளோம்” என்றும் பிபிசி குறிப்பிட்டிருந்தது.

பிரிட்டன் பிரதமர் எதிர்வினை

இந்த ஆவணப்படம் குறித்து பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கிடம் கடந்த மாதம் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, “துன்புறுத்தல்கள் எங்கு நடந்தாலும் அதை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்” என்று கூறிய அவர், மோதியின் குணாதிசயத்துடன் தாம் உடன்படவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

பிபிசி விளையாட்டு வீராங்கனை

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »