Press "Enter" to skip to content

பிரபாகரன் சர்ச்சை: இலங்கை 13வது திருத்தம் அமலாக்க முயற்சியில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

  • ரஞ்சன் அருண் பிரசாத்
  • பிபிசி தமிழுக்காக

பட மூலாதாரம், Getty Images

இலங்கை தமிழர் பிரச்னைக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதிமொழி வழங்கிய சில காலத்திற்குள், பிரபாகரன் உயிருடன் உள்ளார் என வெளியிடப்பட்ட கருத்தானது, 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தாக்கத்தை செலுத்துமா என்ற கேள்வியும் தற்போது பலரது மத்தியில் எழுந்துள்ளது.

தமிழர் பிரச்னைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கும், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவிற்கும் இடையில் 1987ஆம் ஆண்டு இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இலங்கையில் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டமை, அதனூடாக மாகாணங்களுக்கு காணி, காவல் துறை அதிகாரங்கள் வழங்கப்படுகின்றமை உள்ளிட்ட சுயநிர்ணய உரிமைகளை வழங்கும் நோக்குடன் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இலங்கையின் அரசியலமைப்பில் 1987ஆம் ஆண்டு உள்வாங்கப்பட்ட இந்த ஒப்பந்தத்திலுள்ள அதிகாரங்கள், 36 வருடங்கள் கடந்தும் இன்று வரை மாகாணங்களுக்கு வழங்கப்படவில்லை.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு, குறித்த அதிகாரங்களை வழங்க வேண்டும் என்பதே பெரும்பாலான தமிழர்களின் கோரிக்கையாக காணப்படுகின்றது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை தவிர்ந்த ஏனைய மாகாணங்கள் பெரும்பாலும் மத்திய அரசாங்கத்தில் ஆட்சியிலுள்ள தரப்பினர் வசம் காணப்படுகின்றமையினால், 13வது திருத்தத்திலுள்ள அதிகாரங்களை ஏனைய மாகாணங்கள் இதுவரை கோராதுள்ளன.

இவ்வாறான நிலையில், மாகாணங்களுக்கு 13வது திருத்தச் சட்டத்திலுள்ள அதிகாரங்களை வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதிமொழி வழங்கியிருந்தார்.

இதற்காக கடந்த காலங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் சர்வகட்சி மாநாடு கூட்டப்பட்டு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், அந்த பேச்சுவார்த்தைகளின் ஊடாக இன்று வரை சாதகமான பதில் கிடைக்கப் பெறவில்லை.

இலங்கையின் 75வது சுதந்திர தினத்திற்கு முன்பாக தமிழர்களுக்கான அதிகாரங்கள் வழங்கப்படும் என ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கப்பட்ட உறுதிமொழி, சுதந்திர தினத்திற்கு முன்பாக நிறைவேற்றப்படவில்லை.

பேச்சுவார்த்தைக்கு தமிழர்கள் தரப்பு பிரதிநிதிகள் உரிய வகையில் கலந்துக்கொள்ளாமையே, அதிகாரங்களை வழங்க முடியாமைக்கான காரணமாக அமைந்தது என ஜனாதிபதி தரப்பைச் சார்ந்தோர் தெரிவிக்கின்றனர்.

அதேபோன்று, 13வது திருத்தச் சட்டத்தை அமல்படுத்த வேண்டாம் என பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்திருந்தனர்.

அதேபோன்று, 13வது திருத்தச் சட்டத்தை அமல்படுத்தும் ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிராக பௌத்த பிக்குகள் கொழும்பில் ஒன்று கூடி கடந்த 8ஆம் தேதி பாரிய போராட்டத்தை நடத்தியிருந்தார்கள்.

இலங்கை போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

இதன்போது பௌத்த பிக்குகளினால் 13வது திருத்தச் சட்டம் தீ வைக்கப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டது.

தமிழர்களுக்கு அதிகாரங்களை வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதி வழங்க போதிலும், அவரது உறுதிமொழிக்கு எதிராக உள்நாட்டில் கடுமையான எதிர்ப்புக்கள் வெளியிடப்படுகின்றமையானது, அதிகார பகிர்வுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

இவ்வாறான நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் உள்ளதாக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தமிழகத்திலிருந்து வெளியிட்ட கருத்தானது, தமிழர்களுக்கான அதிகார பகிர்வு வழங்குவதில் சிக்கலை ஏற்படுத்தும் சூழ்நிலை உருவாகுமா என்ற கேள்வி பலரது மனங்களில் எழுந்துள்ளது.

இலங்கை போராட்டம்

எவ்வாறான கருத்துக்கள் வந்தாலும், 13வது திருத்தத்தை ஜனாதிபதி அமல்படுத்த மாட்டார் என அன்னிதா சிங்கள பத்திரிகையின் பிரதம செய்தி ஆசிரியரும், உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான லசந்த ருஹுணுகே பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார்.

”ஜனாதிபதிக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. தனக்கு எதிராக நாட்டில் எழுந்துள்ள எதிர்ப்பு அலைகளை இல்லாது செய்யும் வகையிலும், தனக்கு எதிராக அரசியல் கூட்டணிகளை இல்லாது செய்யும் வகையிலுமே இந்த 13 தொடர்பான அறிவிப்பை அவர் வெளியிட்டார். அவர் அதனை எப்படியும் வழங்க மாட்டார். மாகாணங்களுக்கு காவல் துறை அதிகாரங்களை வழங்க போவதில்லை என நாடாளுமன்ற அமர்வுகளை ஆரம்பித்த வைத்து உரையாற்றிய போது, ஜனாதிபதி தெளிவாக கூறினார்.

காவல் துறை அதிகாரத்தை வழங்க மாட்டேன் என கூறிய பின்னர் வேறு என்ன அதிகாரத்தை வழங்க வேண்டியுள்ளது. ஏனைய அதிகாரங்கள் ஏதோ ஒரு வகையில் பகுதியளவிலேனும் வழங்கப்பட்டுள்ளன. காணி அதிகாரம் என்று பார்க்கும் போது, மாகாணத்திற்கு காணி ஆணையாளர் ஒருவர் தற்போது இருக்கின்றார். சுகாதாரம், கல்வி அதிகாரங்கள் மாகாணங்களுக்கு காணப்படுகின்றன.

அடிப்படை இல்லாத விஷயம்

பிரபாகரன் வருகைத் தருவதாக கூறும் விடயத்தில் எந்தவித அடிப்படையும் கிடையாது. இதற்கு முன்னரும் பிரபாகரன் வருவதாக கூறினார்கள். பிரபாகரனின் கதை வருவதற்கு முன்னரே, 13வது அதிகாரம் வழங்குவதற்கு எதிராக பிக்குகள் போராட்டங்களை நடத்தியிருந்தனர்.

ரணிலுக்கு இதனை வழங்க வேண்டும் என்றால், நாடாளுமன்றத்தை பார்த்துக்கொண்டிருக்க வேண்டிய தேவையோ, அல்லது ஒவ்வொருவரிடம் கேட்டுக்கொண்டிருக்க வேண்டிய தேவையோ கிடையாது.

13 என்பது நாட்டிலுள்ள ஒரு சட்டம். அது அரசியலமைப்பில் உள்ளது. அரசியலமைப்பில் உள்ளதை அமல்படுத்தாதமைக்கு எதிராகவே எவராவது ஒருவர் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும். அதனை யாரிடமும் கேட்டு வழங்க வேண்டியதில்லை. அவருக்கு தனியாக வழங்க முடியும். இதுவொரு வேடிக்கையானது விடயம். 13வது திருத்தத்தை வழங்கும் போது, அதற்கு எதிராக எதிர்ப்புக்கள் வருவது என்பது வேறொரு விடயம்.

மாகாண அதிகாரத்திற்கு தேவையான மாகாண காவல் துறை ஆணைக்குழுக்களை அமைத்து, அதிகாரத்தை வழங்க முயற்சிக்கும் போது எதிர்ப்பு வந்திருந்தால், அது வேறொரு விடயம். அவ்வாறு ஒன்றையும் செய்யாது, தனது வேலையை செய்துக்கொள்வதற்காக அவ்வாறான அறிவிப்பொன்றை வெளியிட்டு மக்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்துகின்றாரே தவிர, அவர் அதனை வழங்க மாட்டார்” என அன்னிதா சிங்கள பத்திரிகையின் பிரதம செய்தி ஆசிரியரும், உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான லசந்த ருஹுணுகே தெரிவிக்கின்றார்.

“அரசு நடவடிக்கை எடுக்காது”

பிரபாகரன் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழர்கள் கோரும் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது என சிரேஷ்ட ஊடகவியலாளர் இரா.செல்வராஜா பிபிசி தமிழுக்கு குறிப்பிட்டார்.

பிரபாகரன்

”பிரபாகரன் உயிருடன் உள்ளதாக அரசியல்வாதிகள் மாத்திரமே சொல்கின்றார்கள். இந்திய புலனாய்வு பிரிவு அதை உறுதிப்படுத்தவில்லை. அடிக்கடி பழ.நெடுமாறன் இப்படி சொல்வது வழக்கமானது. ஆனால், உறுதியான தகவலை இந்தியாவின் ரா அமைப்பு சொல்லவில்லை. அவர்கள் சொன்னார்களாக இருந்தால், அதனை நம்பலாம்.

அரசியல் சாசனத்தில் காவல் துறை, காணி அதிகாரங்கள் மாகாணத்திற்கு வழங்க வேண்டும் என எழுதப்பட்டுள்ளன. உலக நாடுகளும் அதனையே தான் கூறுகின்றன. இலங்கையில் ஸ்திரமான அரசாங்கம் அமைக்கப்பட்டு, இனப் பிரச்னை தீர்க்கப்பட வேண்டும் என உலக நாடுகள் கூறுகின்றன.

மாகாணங்களுக்கு காவல் துறை ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு, அவை மத்தியிலிருந்து நிர்வகிக்கும் வகையில் அமைய வேண்டும் என சில எதிர்கட்சிகள் கூறுகின்றன. பிரபாகரன் இருக்கின்றார் என கூறிய பின்னரும், ஜனாதிபதிக்கு 13வது திருத்தத்தை அமல்படுத்த முடியும். ஆனாலும், அவரால் அதனை அமலுக்கு கொண்டு வர முடியாது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவிலேயே ரணில் விக்ரமசிங்க ஆட்சி அமைத்துள்ளார். அந்த கட்சியைச் சேர்ந்தவர்கள் 13வது திருத்தத்தை கொண்டு வர எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

மொட்டு கட்சியே ரணில் விக்ரமசிங்கவை இயக்குகின்றது. 13ஐ கொடுக்க கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே பொதுஜன பெரமுன இருக்கின்றது. சிங்கள பேரினவாதம் ஒருபோதும் இதனை கொடுக்க போவதில்லை. அது நடக்க போவதும் இல்லை. பிரபாகரன் இருக்கின்றார் என கூறுவதன் ஊடாக நாட்டில் பாதுகாப்பு பிரச்சனை வராது.

30 வருட யுத்தத்தில் நடந்தது ஒன்றும் இல்லை. இழந்தது தான் அதிகம். பிரபாகரன் இருந்தாலும், இல்லாவிட்டாலும் 13வது திருத்தம் அமல்படுத்தப்படாது.” என சிரேஷ்ட ஊடகவியலாளர் இரா.செல்வராஜா பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

பிபிசி விளையாட்டு வீராங்கனை

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »