Press "Enter" to skip to content

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஏந்தியுள்ள பிரசார ஆயுதம் – பிபிசி கள நிலவரம்

  • மோகன்
  • பிபிசி தமிழ்

ஒரு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு அரசியலின் மையப்புள்ளியாக மாறியுள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருமகன் ஈ.வே.ரா உடல்நலக் குறைவால் மறைந்தார். இதனால் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே ஈரோடு கிழக்குத் தொகுதி பரபரப்புடன் காணப்படுகிறது. தற்போது இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரசாரம் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டு அரசியலின் தற்போதைய மையப்புள்ளி போல இயங்கி வரும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரசாரம் எவ்வாறு நடைபெறுகிறது? என்னென்ன பிரச்னைகள் விவாதிக்கப்படுகின்றன? விவரம் அறிய பிபிசி தமிழ் கள ஆய்வு மேற்கொண்டது.

திமுக – காங்கிரஸ் கூட்டணி சார்பில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். கடந்த தேர்தலில் இந்தத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட்டு 8,900 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றிருந்தது. ஆனால் இம்முறை அதிமுக நேரடியாகக் களம் காண்கிறது. அதிமுக கூட்டணி சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.தென்னரசு போட்டியிடுகிறார்.

ஓ.பி.எஸ் தரப்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும் டிடிவி தினகரன் தரப்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் குக்கர் சின்னம் கிடைக்காததாலும் பின்வாங்கினார்கள். தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். நான்கு பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 77 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டத்தில் இருந்தே ஈரோடு கிழக்கு சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. ஆளும் திமுக – காங்கிரஸ் கூட்டணி சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படும் முன்னரே கூட்டணிக்காக தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டனர். அதிமுக கூட்டணி தரப்பில் வேட்பாளர் அறிவிக்கப்படுவது சற்று தாமதமானாலும் தற்போது முழு வீச்சில் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திமுக தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டது. திமுக அமைச்சர்கள் பகுதி வாரியாக முகாமிட்டு தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிமுக தரப்பில் சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் முன்னாள் அதிமுக அமைச்சர்களும் ஈரோடு கிழக்கில் முகாமிட்டு பகுதி வாரியாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

தனித்து தேர்தலைச் சந்திக்கும் நாம் தமிழர், தேமுதிக ஆகிய கட்சிகளும் தங்கள் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். கட்சிகளின் தொண்டர்களும் தலைவர்கள் போல வேடமணிந்து தனித்துவமான வழிகளில் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

ஈரோடு கிழக்குத் தொகுதி –சில அடிப்படைத் தகவல்கள்

ஈரோடு மாநகராட்சியின் 60 வார்டுகளில் 33 வார்டுகள் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு கீழ் வருகின்றன.

ஜவுளித் துறை சார்ந்து இயங்கும் பல்வேறு தொழில்களின் மையமாகவும் இந்தத் தொகுதி உள்ளது. மஞ்சள் போன்ற வேளாண் சார்ந்த தொழில்களும் இங்கு கணிசமாக உள்ளன.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் மொத்தம் 2,26,898 வாக்காளர்கள் உள்ளனர். மாநகர் சார்ந்த தொகுதி என்பதால் மாநகரின் பிரச்னைகள், கோரிக்கைகள்தான் பிரதானமாகத் தாக்கம் செலுத்துகின்றன.

தேர்தல் பிரசாரம் எவ்வாறு உள்ளது?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்

இடைத்தேர்தலில் களம் காணும் பிரதானமான இரு கூட்டணிகளுக்கும் திமுகவின் தேர்தல் அறிக்கைதான் முக்கிய பிரசார கருவியாக உள்ளது.

திமுக, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கடந்த இரண்டு ஆண்டு திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட இலவச பேருந்து பயணம் போன்ற புதிய திட்டங்கள் மற்றும் நிறைவேற்றப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை மையப்படுத்தியே தங்களின் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன.

அதேநேரம் அதிமுகவின் தேர்தல் பிரசாரம் திமுக அரசு நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதிகளை மையப்படுத்தியே உள்ளன. ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், கேஸ் சிலிண்டருக்கு மானியம் போன்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் அதிமுகவின் தேர்தல் பிரசாரத்தில் அதிகம் எழுப்பப்படுகின்றன.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுகவின் தேர்தல் அறிக்கையை கையில் வைத்துக்கொண்டேதான் பிரசாரத்தை மேற்கொண்டார். ஒரு பிரசார கூட்டத்தில் பேசிய அவர், “திமுக ஆட்சிக்கு வந்து 21 மாதங்கள் ஆகிவிட்டன. மாதம் 1,000 ரூபாய் வழங்குவதாக கூறினார்கள். 21 மாதங்கள் ஆகியும் இன்னும் வழங்கவில்லை.

முதல்வர் ஸ்டாலின் பிரசாரத்துக்கு வருகிறபோது 21,000 ரூபாய் எங்கே எனக் கேளுங்கள்,” என்றார். இவை ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் அதிமுக தரப்பினராலும் ட்ரெண்ட் செய்யப்பட்டன.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்

திமுக கூட்டணியின் பிரசாரங்களை காங்கிரஸ், திமுகவின் முக்கிய தலைவர்கள் பெரும்பாலான இடங்களில் இணைந்தே மேற்கொள்கின்றனர். திமுக அமைச்சர்கள் அக்கூட்டணியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அதிமுகவின் பிரசாரத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களை அதிகம் பார்க்க முடிவதில்லை. இரட்டை இலை சின்னம் மற்றும் எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தியே தற்போது வரை அதிமுகவின் பிரசாரம் கட்டமைக்கப்பட்டு வருகிறது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அடுத்த வாரத்தில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக கோவையில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் பதிலளித்த பாஜக தலைவர் அண்ணாமலை, “பாஜக தலைவர்கள் அதிமுக தலைவர்களுடன் பேசி வருகின்றனர். விரைவில் ஈரோட்டில் இரு கட்சித் தலைவர்களும் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறும்,” என்றார்.

உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு அமல்படுத்தப்பட்ட சொத்து வரி உள்ளிட்ட வரி உயர்வு மற்றும் மின் கட்டண உயர்வும் தேர்தல் பிரசாரத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன. அதிமுகவினர் தங்களுடைய பிரசாரத்திலும் இதைத் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.

வரி உயர்வின் தாக்கம்

பாரதி

ஈரோடு வரி செலுத்துவோர் சங்கத்தின் செயலாளர் பாரதி பிபிசி தமிழிடம் பேசுகையில், “இந்தத் தொகுதியில் பல இடங்களில் சாலை மற்றும் பாதாள சாக்கடை பணிகள் நிறைவு பெறாமல் உள்ளன. தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு பல இடங்களில் அவசரமாகப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மழை நீர் வடிகால் மாநகராட்சி பகுதியில் பெரும் பிரச்னையாக உள்ளது. மழை அதிகமாகச் செய்தால் பல இடங்களில் தண்ணீர் தேங்கிவிடுகிறது. சில மாதங்களுக்கு முன்பு கன மழையின்போது அதன் பாதிப்புகளைப் பார்த்தோம். வரியை உயர்த்தமாட்டோம் என்கிற வாக்குறுதிக்கு எதிராக வரி உயர்த்தப்பட்டது.

சென்னை, கோவையை விட ஈரோட்டில் சொத்து வரி அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது, குப்பை வரியும் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. இவை குறைக்கப்பட வேண்டும். போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க வாக்குறுதி அளிக்கப்பட்ட புதிய மேம்பால பணிகளை விரைவாகத் தொடங்க வேண்டும். இதுதான் ஈரோடு கிழக்குத் தொகுதி மக்களின் முக்கியமான எதிர்பார்ப்பாக உள்ளது,” என்றார்.

மின் கட்டண உயர்வின் தாக்கம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்

விசைத்தறியைச் சார்ந்திருப்பவர்கள் கணிசமான வாக்கு வங்கியாக உள்ளனர். ஈரோடு கிழக்குத் தொகுதியில் மட்டும் 18,000 விசைத்தறிகள் இயங்குகின்றன என்கிறார் விசைத்தறியாளர் சங்கத்தின் கந்தவேல், “விசைத்தறியை நம்பி மட்டும் 5,000 குடும்பங்கள் உள்ளன. 20,000 பேர் நேரடியாக இதைச் சார்ந்துள்ளனர். ஜவுளித்துறையில் விசைத்தறி மட்டுமில்லாமல், டையிங், ப்ராசஸிங், சில்லறை வணிகம் எனப் பல பிரிவுகள் உள்ளன. மின் கட்டண உயர்வால் ஜவுளி உற்பத்தி கடுமையாகப் பாதித்துள்ளது.

மின் கட்டண உயர்வுக்குப் பிறகு விசைத்தறியாளர்கள் தற்போது வரை மின் கட்டணம் செலுத்தவில்லை. விசைத்தறியாளர்களின் கோரிக்கையை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால் ஜவுளித்துறையின் இதர சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களையும் இது கடுமையாகப் பாதித்துள்ளது. எனவே மின் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்து குறைக்க வேண்டும்,” என்றார்.

நீண்ட கால நிலுவையில் உள்ள திட்டங்கள்

ராஜமாணிக்கம்

ஈரோடு கிழக்குத் தொகுதியில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் மற்றும் முக்கிய கோரிக்கைகள் அனைத்து வணிக சங்க கூட்டமைப்பின் சார்பில் இரண்டு வேட்பாளர்களிடமும் கொடுக்கப்பட்டுள்ளது.

அக்கூட்டமைப்பின் தலைவர் ராஜமாணிக்கம் பிபிசி தமிழிடம் பேசுகையில், “எங்கள் கூட்டமைப்பில் 75க்கும் மேற்பட்ட சங்கங்கள் உள்ளன. தற்போது தேர்தல் களம் காணும் இரண்டு வேட்பாளர்களிடமும் எங்களுடைய கோரிக்கையை முன்வைத்துள்ளோம்.

சமீபத்திய மின் கட்டண உயர்வில் பல்வேறு அம்சங்கள் தொழில்துறைக்குப் பாதகமாக உள்ளன. அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மஞ்சள் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் ஈரோட்டில் முறையான குளிர்பதன கிடங்குகள். அதை அமைத்துத் தர வேண்டும். கனி மார்க்கட்டில் உள்ள வியாபாரிகளுக்குப் புதிதாக கட்டப்பட்டுள்ள வணிக வளாகத்தில் முன்னுரிமை அடிப்படையில் கடைகளை ஒதுக்கவேண்டும். ஜவுளித்துறை சார்ந்த கழிவு நீர் மறு சுழற்சி மையங்கள் அதிக அளவில் இல்லை. அதை நிறுவ வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை கடலுக்கு எடுத்துச் செல்லும் திட்டம் 15 ஆண்டுகளாகப் பெயரவிலேயே உள்ளது. அதையும் விரைந்து செயல்படுத்த வேண்டும்,” என்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு கிழக்கில் மூன்று நாள் பிரசார பயணம் மேற்கொண்டார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இரு நாட்கள் பிரசாரம் மேற்கொண்டார். திமுகவின் கனிமொழி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். முதல்வர் ஸ்டாலின், பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களும் இனி வரும் நாட்களில் தான் பிரசாரம் மேற்கொள்ள இருக்கின்றனர்.

ஆளும் கட்சியான திமுகவிற்கும் அதன் கூட்டணிக்கும் 21 மாத கால ஆட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாட்டை மதிப்பிடும் ஒரு தேர்வுக் களமாகவே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பார்க்கப்படுகிறது.

அதேநேரம் அடுத்தடுத்த தேர்தல் தோல்வி, கூட்டணியிலிருந்து கட்சிகள் விலகல் மற்றும் உட்கட்சி சிக்கல்களைச் சந்தித்து வரும் அதிமுகவிற்கு இந்தத் தேர்தல் தன் பலத்தையும் தன் கூட்டணி பலத்தையும் பரிசோதித்துப் பார்க்கும் சோதனை களமாகவும் இந்த இடைத்தேர்தல் அமைந்துள்ளது.

தேர்தல் முடிவுகள் எவ்வாறாக இருந்தாலும் அடுத்த ஆண்டு வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2026 ஆம் சட்டமன்ற தேர்தலில் தாக்கம் செலுத்தவதாகவே அமையும் நிலை உள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 27ஆம் தேதியும் வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

பிபிசி விளையாட்டு வீராங்கனை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »