Press "Enter" to skip to content

இலங்கை தேர்தல்: அறிவிக்கப்பட்ட பிறகு நடத்த முடியாது தவிக்கும் நிலை ஏன்? பொருளாதாரம் எப்படி உள்ளது?

  • ரஞ்சன் அருண்பிரசாத்
  • பிபிசி தமிழுக்காக

பட மூலாதாரம், Getty Images

எதிர்வரும் மார்ச் மாதம் 9ம் தேதி திட்டமிடப்பட்டுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான பணத்தை பெற்றுக்கொடுப்பதில் சிக்கல் காணப்படுவதாக நிதி அமைச்சின் செயலாளர் கே.எம்.மஹிந்த சிறிவர்த்தன தெரிவித்துள்ளார்.

நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை வழங்குவதில் சிக்கல் நிலைமை காணப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு, நிதி அமைச்சின் செயலாளர் இதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட நிதி அமைச்சின் உயர் மட்ட அதிகாரிகள், தேர்தல்கள் ஆணைக்குழு முன்னிலையில் வெள்ளிக்கிழமை பிரசன்னமாகியிருந்தனர்.

இதன்போதே நிதி அமைச்சின் செயலாளர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

நாட்டின் செலவினங்களை கட்டுப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிரூபத்திற்கு அமைய, நாட்டின் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ள முடியும் என நிதி அமைச்சின் அதிகாரிகள், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளனர்.

அத்தியாவசியமற்ற வேறு தேவைகளுக்கு செலவினங்களை மேற்கொள்ள வேண்டுமானால், நிதி அமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் சுற்றுநிரூபமொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், தேர்தலுக்கு தேவையான நிதியை பெற்றுக்கொடுப்பதில் பாரிய சிக்கல்கள் காணப்படுவதாகவும் நிதி அமைச்சின் செயலாளர், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.

தபால்மூலம் வாக்களிப்பு ஒத்தி வைப்பு

தபால்மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை ஒத்தி வைக்கப்பட்டது.

அரச ஊழியர்களுக்கான தபால்மூல வாக்களிப்பு நடவடிக்கைகளை எதிர்வரும் 22, 23, 24 மற்றும் 28ம் தேதிகளில் நடத்த முன்னர் திட்டமிடப்பட்ட போதிலும், தற்போது தேதிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

சஜித் பிரேமதாஸ

பட மூலாதாரம், சஜித் பிரேமதாஸ

வாக்குசீட்டுக்களை அச்சிடும் நடவடிக்கைகள் அரச அச்சகத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனினும், வாக்குசீட்டுக்களை அச்சிடுவதற்கு தேவையான நிதியை, நிதி அமைச்சு வழங்காமையினால், வாக்குசீட்;டுக்களை விநியோகிக்க அரச அச்சகத் திணைக்களம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதனால், தபால்மூல வாக்களிப்பு நடவடிக்கைகளை ஒத்தி வைக்க தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

போதிய அளவு காவல் துறை பாதுகாப்பு கிடையாது

தமக்கு தேவையான போதியளவு காவல் துறை பாதுகாப்பு இல்லாமையினால், தேர்தலுக்கு தேவையான அச்சிடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலைமை காணப்படுவதாக அரச அச்சகத் திணைக்களத்தின் அச்சகர் கங்கானி கல்பனி லியனகே தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடவடிக்கைகளுக்காக பிப்ரவரி 17 வரை இரண்டு காவல் துறை அதிகாரிகளே வழங்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறுகிறார்.

வாக்குசீட்டு அச்சிடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையினால், பாதுகாப்பு கடமைகளுக்காக 65 காவல் துறை அதிகாரிகளை கோரியதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

பல்வேறு சந்தர்ப்பங்களில் காவல் துறை பாதுகாப்;பு கோரப்பட்ட போதிலும், இதுவரை போதுமான அளவு பாதுகாப்பு தமக்கு கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவிக்கிறார்.

காவல் துறை பாதுகாப்பு இல்லாமல், வாக்குசீட்டு அச்சிடும் பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என தமது அலுவலகத்திலுள்ள அனைத்து ஊழியர்களும் தன்னிடம் கோரிக்கை விடுத்ததாகவும் அவர் கூறுகிறார்.

காவல் துறை தரப்பின் பதில்

நிதிப் பற்றாக்குறை காணப்படுகின்றமையினால், வாக்குசீட்டுக்களை அச்சிடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தமக்கு தகவல் கிடைக்கவில்லை எனவும், அவ்வாறு வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுப்பதாக காவல் துறை ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட காவல் துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார்.

நிஹால் தல்துவ

பட மூலாதாரம், MOD

”அரச அச்சகத் திணைக்களத்தினால் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளது. எனினும், நிதி பற்றாக்குறை காரணமாக வாக்குச்சீட்டு அச்சிடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கவில்லை. நிதி பற்றாக்குறை காரணமாக அந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்படவில்லை என்றே தகவல் உள்ளது. வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், தேவையான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மிக நீண்ட நாட்கள் அதிகாரிகளை அங்கு நிறுத்த வேண்டும். அதற்கான அதிகாரிகளைத் தேட வேண்டும். எமக்கு பொறுப்புள்ளது என்பது உண்மை. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரது ஆலோசனைக்கு அமைய நாம் செயற்படுவோம்” என நிஹால் தல்துவ தெரிவிக்கிறார்.

அரச அச்சகத் திணைக்களத்தின் அச்சகர் பதில்

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, வாக்குச்சீட்டு அச்சிடும் நடவடிக்கைகள் முடிவடையும் வரையான 28 முதல் 30 நாட்கள் வரை காவல் துறையினர் வழமையாக தமக்கு பாதுகாப்பு வழங்குவார்கள் என அரச அச்சகத் திணைக்களத்தின் அச்சகர் கங்கானி கல்பனி லியனகே தெரிவித்துள்ளார்.

”முழு அச்சகத்திலும் 25 வரையான பிரிவுகள் உள்ளன. அதற்கு முழுமையான பாதுகாப்பு 30 நாட்கள் வரை வழங்குவார்கள். ஏனைய வாக்குச்சீட்டுக்களை அச்சிடும் நடவடிக்கைகள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை. காவல் துறை பாதுகாப்பு இல்லாமல் அந்த வேலையை எம்மால் செய்ய முடியாது” என அவர் கூறினார்.

உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடத்துவதில் காணப்படுகின்ற சிக்கல்கள் தொடர்பில் விசேட மனுவொன்றின் ஊடாக உயர்நீதிமன்றத்தை தெளிவூட்ட நடவடிக்கை எடுத்து வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை, நிதி அமைச்சு வழங்காமை உள்ளிட்ட தேர்தலுக்கு தடையாக காணப்படுகின்ற விடயங்கள் குறித்து எதிர்வரும் சில தினங்களில் உயர்நீதிமன்றத்தை தெளிவூட்டவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கங்கானி கல்பனி லியனகே

பட மூலாதாரம், GOVERNMENT PRINTER

அத்துடன், அரச அச்சகத் திணைக்களத்தினால் அச்சிடும் நடவடிக்கைகளை தாமதப்படுத்துகின்றமை, பெட்ரோலிய கூட்டுதாபனத்தினால் உரிய வகையில் எரிபொருள் விநியோகிக்காமை, அச்சகத் திணைக்களத்திற்கு போதிய காவல் துறை பாதுகாப்பு வழங்காமை உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் விசேட மனுவொன்றின் ஊடாக உயர்நீதிமன்றத்திற்கு தெளிவூட்டவுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடத்துவதாக தேர்தல்கள் ஆணைக்குழு, உயர்நீதிமன்றத்திற்கு உறுதிமொழி வழங்கிய போதிலும், அதனை உரிய வகையில் முன்னெடுக்க முடியவில்லை என்பது குறித்தே, உயர்நீதிமன்றத்தை தெளிவூட்ட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்கட்சிகள் எதிர்ப்பு

உள்ளுராட்சி சபைத் தேர்தலை திட்டமிட்ட வகையில் நடத்தாத அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க எதிர்பார்த்துள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவிக்கிறது.

அனுரகுமார திசாநாயக்கே

பட மூலாதாரம், ANURAKUMARA DISANAYAKE

தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில், அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அதிகாரிகளின் கடமை என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தமது பொறுப்புக்களை தவறவிடும் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து, நீதிமன்றத்தில் அவர்கள் தவறிழைத்தவர்களாக உறுதிப்படுத்த முடியும் எனவும் அவர் கூறுகின்றார்.

மக்களுக்கான பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டியது அதிகாரிகளின் கடமை எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

தேர்தலுக்கு இடையூறு விளைவிக்கும் அனைவரும் சட்டத்திற்கு முன் நிறுத்தப்படுவார்கள் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து, தேர்தலை ஒத்தி வைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறுகிறார்.

இந்த செயற்பாடுகளை தாம் தோற்கடிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.

பிபிசி விளையாட்டு வீராங்கனை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »