Press "Enter" to skip to content

பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? புலிகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சொல்வது என்ன? #Exclusive

பட மூலாதாரம், STR/AFP VIA GETTY IMAGES

கடந்த வாரம் “பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்” என பழ. நெடுமாறனும் கவிஞர் காசி ஆனந்தனும் அறிவித்தது இந்தியாவிலும் இலங்கையிலும் தமிழர்கள் புலம் பெயர்ந்த நாடுகளிலும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இந்த அறிவிப்பிற்கான பின்னணி என்ன என்பது குறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மட்டக்கிளப்பு – அம்பாறை மாவட்ட அரசியல் துறையின் முன்னாள் பொறுப்பாளரும் தற்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான தயா மோகன் பிபிசி தமிழ் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார்.

பல அதிரவைக்கும் தகவல்களை தனது பேட்டியில் அவர் வெளிப்படுத்தினார். அந்தப் பேட்டியிலிருந்து:

கே. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாக சில நாட்களுக்கு முன்பாக பழ. நெடுமாறன், காசி ஆனந்தன் ஆகியோர் ஒரு ஊடக சந்திப்பில் தெரிவித்திருக்கின்றனர். இது குறித்து என்ன கருதுகிறீர்கள்?

ப. இது மக்களை குழப்புவதற்கான அறிவிப்பு. சமீபத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது சில நாடுகள் விதித்திருக்கின்றன. தடையை நீட்டிப்பதற்கான முன் முயற்சியாகத்தான் இதை நான் பார்க்கிறேன். 13 ஆண்டுகளுக்கு முன்பாக, பிபிசியின் மூலமாக பிரபாகரன் இறந்ததை நாங்கள் உறுதிசெய்தோம். பிரபாகரன் இருப்பதாக இப்போது ஊடகங்களுக்கு தகவல் கொடுக்கும் இவர்கள்தான் அப்போதும் அவரது வீர மரணம் குறித்து அறிவிப்பதை தடுத்தார்கள். இப்போது இதை சொல்வதற்கான தேவை என்ன?

அவர் மே 17ஆம் தேதி இறந்துவிட்டார் என்ற நிலையில், அதைக் கையாள்வது குறித்து தாயகத்தில் வேறு வேறு இடங்களில் இருந்த பொறுப்பாளர்கள், தளபதிகள், போராளிகள், வெளிநாடுகளில் இருந்த போராளிகள், பொறுப்பாளர்கள் ஆகியோர் விவாதித்தோம். அதில் ஒரு பகுதியினர் வீர மரணத்தை அறிவிக்க வேண்டும் என்றார்கள்.

ஒரு பகுதியினர் அறிவிக்க வேண்டாம் என்றார்கள். இப்போது காசி ஆனந்தனுக்கும் பழ. நெடுமாறனுக்கும் பின்னால் இருந்து செயல்படுபவர்கள், முதலில் அறிவிக்க ஒப்புக்கொண்டார்கள். பிறகு, அடுத்த நாள் “தலைவர் இருக்கிறார். இதை அறிவிக்க வேண்டாம்” என்றார்கள்.

நாங்கள் போர்க்களத்தில் இருந்தோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணி நேரமும் தொடர்பில் இருந்தோம். எங்களுக்குத் தெரியாத செய்தி, இந்தியாவில் இருந்த இவர்களுக்கு எப்படித் தெரியுமெனத் தெரியவில்லை.

பிறகு நான் பிபிசி மூலம் அந்தச் செய்தியை அறிவித்தேன். இப்போது அவர்கள் செய்வது மக்களைக் குழப்பும். எதிரியைத் தூண்டிவிடும். இப்போதுதான் கொஞ்சம் மீண்டு, புனர்வாழ்வு பெற்றிருக்கும் அவர்கள் மீது எதிரிப் படையின் கண்காணிப்பை தொடர்ந்து தக்கவைக்கும். அதுதான் இந்த அறிவிப்பின் மூலம் நடந்திருக்கிறது.

அந்த சமயத்தில் புலனாய்வாளர்கள் போராளிகளின் வீடுகளைத் தொடர்ந்து கண்காணிப்பார்கள். சில போராளிகளிடம் இங்கிருப்பதைவிட, வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதுதான் நல்லது என்பார்கள். அப்படி ஒரு அஞ்சத்தக்க சூழலை மீண்டும் உருவாக்கியிருக்கிறார்கள் இவர்கள்.

கே. பிரபாகரன் இறந்து விட்டார் என்றால், வருடாந்திர அஞ்சலி நிகழ்வை புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களோ, இயக்கத்தின் ஆதரவாளர்களோ நடத்தாதது ஏன்?

ப. இதற்கான முயற்சிகளை 2009ஆம் ஆண்டு மே மாதத்திலேயே எடுத்தோம். சில புலம் பெயர்ந்த அமைப்புகள் அதைச் செய்யக்கூடாது என விடாப்பிடியாக இருந்தன. அதற்குப் பல காரணங்கள் இருந்தன. அந்தக் காரணங்கள் எதையும் களத்தில் இருந்த போராளிகளான எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்தது. அதனால் சில அமைப்புகளோடு உரையாடல்களையே நிறுத்தியிருந்தோம். ஒரு தருணம் வரும்போது அதைச் செய்யலாம் என இருந்தோம். ஆனால், சிலர் தடுத்துக் கொண்டேயிருந்தார்கள்.

தயா மோகன்

கே. ஒரு வருடம் நடத்த முடியாவிட்டால் பரவாயில்லை. அடுத்த வருடம் நடத்தியிருக்கலாம். அடுத்தடுத்த வருடங்களில் நடத்தியிருக்கலாம்…

ப. உலகில் வலியவர்கள் வாழ்வார்கள். அதுபோல, எங்கள் மக்களின் பிரதிநிதிகளாக இருந்த அமைப்புகள் பலம் பொருந்தியவையாக இருந்தன. புலம்பெயர்ந்த இடங்களில் அவர்கள் செல்வாக்குச் செலுத்தினார்கள். அதனால், எங்களைப் போன்ற பிரபாகரனின் வீர மரணத்தை அறிந்தவர்கள், உலகிடம் எங்களுடைய நியாயமான கோரிக்கையை அழுத்தமாக முன்வைக்க முடியாத குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது. ஒரு லட்சியத்திற்காக வாழ்வேன். இல்லாவிட்டால் அந்த மக்களோடு சேர்ந்து சாவேன் என்று வாழ்ந்த ஒரு தலைவரை கொச்சைப்படுத்தும் இடத்திற்கு கொண்டு வந்து விட்டார்கள்.

ஆகவே, இந்த ஆண்டில் இல்லாவிட்டாலும் அடுத்த ஆண்டிலாவது பெரிய திட்டமிடலோடு அந்த நிகழ்வை நாங்கள் செய்வோம்.

கே. இந்த அறிவிப்பு புலிகள் இயக்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்கிறீர்கள். ஆனால், நெடுமாறனைப் பொறுத்தவரை, அவர் நீண்ட காலமாகவே புலிகள் இயக்க ஆதரவாளர். அவர் எதற்காக அப்படி நெருக்கடி ஏற்படக்கூடிய காரியத்தைச் செய்ய வேண்டும்?

ப. அவருக்குப் பின்னால் உள்ள சிலருடைய நிலைப்பாடுதான் அதற்குக் காரணம். நெடுமாறனை 100 சதவீதம் இதற்குக் குற்றம்சாட்ட முடியாது. 2009ல் பிரபாகரன் மரணமடைந்தபோது அவர் யாரோடு தொடர்பில் இருந்தாரோ, அவர்களோடுதான் இப்போதும் தொடர்பில் இருந்து கொண்டிருக்கிறார்கள். புலம்பெயர் தேசங்களில், பிரபாகரன், அண்ணி (மதிவதனி), மகள் (துவாரகா) ஆகியோர் உயிரோடு இருப்பதாக சில பிம்பங்களை உருவாக்கி நிதி வசூலிக்கிறார்கள். அதைச் செய்வது யாரென்றால் 2009ல் யார் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக நெடுமாறனை நம்ப வைத்தார்களோ, அவர்களேதான் இப்போதும் நம்ப வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு முழுக்க முழுக்க அவரைக் குற்றம்சொல்ல முடியாது என்றாலும், கடந்த 13 ஆண்டுகள் அவர் நடந்தது என்ன என்பதை பகுத்தறிந்திருக்க வேண்டும்.

தலைவர் வருவார் என அவர் இத்தனை ஆண்டு காலமாக சொல்லிக் கொண்டிருந்தபோது நாங்கள் பொறுமையாகவே இருந்தோம். ஏனென்றால், பிரபாகரன் இருக்க வேண்டுமென அவர் விரும்புகிறார், அதனால் அப்படிச் சொல்லிக்கொண்டிருக்கிறார். நீண்ட காலமாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்காகவும் தமிழீழ விடுதலைக்காக பாடுபட்டவர் அவர் என்ற முறையில் அதைக் கடந்து சென்றோம்.

ஆனால், இப்போது செய்திருப்பது, பிரபாகரனின் பெயரையே (Legacy) இல்லாமல் செய்வதற்கான ஒரு முயற்சியாகத்தான் இதைப் பார்க்கிறோம். பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என யார் சொன்னால் நம்புவார்களோ, அவரை வைத்து சொல்ல வைத்திருக்கிறார்கள்.

பழ. நெடுமாறன்

கே. பிரபாகரன் இறந்து 13 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், திடீரென இப்படி ஒரு ஊடக சந்திப்பை நடத்தி, அவர் உயிரோடு இருப்பதாக அறிவிக்க சிறப்புக் காரணம் ஏதாவது இருக்கிறதா?

ப. இந்த முயற்சியை எடுத்தவர்களின் பிம்பங்கள் புலம்பெயர் தேசங்களில் உடைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பரிலேயே இதற்கான முயற்சியை மேற்கொண்டார்கள்.

சிலரை ஏமாற்றி நிதியும் பெற்றார்கள். அது இங்குள்ள சில அமைப்புகளாலும் தனி போராளிகளாலும் அம்பலப்படுத்தப்பட்டது. அந்த செய்தியை இப்போது நம்ப வைக்க வேண்டுமென்றால், அதை ஒரு நம்பிக்கைக்குரிய ஒருவரை வைத்து சொல்ல வேண்டும் என்பதற்காக இதைச் செய்திருக்கிறார்கள். வேறு எந்தக் காரணமும் இல்லை.

ஆனால், இதற்குப் பின்னால் உள்ள ஆபத்தை காசி ஆனந்தனும் நெடுமாறனும் உணரவில்லை.

கே. இதற்குப் பின்னால் சிலர் இருப்பதாகச் சொல்கிறீர்கள். அவர்கள் யார்? முன்னாள் உறுப்பினர்களா, ஆதரவாளர்களா?

ப. முன்னாள் உறுப்பினர்கள். ஆதரவாளர்களும் இருக்கிறார்கள்.

கே. புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் தமிழீழ ஆதரவாளர்களும் தம் கொள்கையில் தீவிரமானவர்களாக அறியப்படுபவர்கள். பணத்திற்காக பிரபாகரன் உயிரோடு இருப்பதாக ஒரு பொய்யைச் சொல்லும் அளவுக்குச் செல்வார்களா?

ப. நிச்சயமாக செல்வார்கள். சென்றிருக்கிறார்கள். இது தொடர்பான சில உரையாடல்கள் இப்போது வலம்வர ஆரம்பித்துள்ளன.

கே. உங்களைப் பொறுத்தவரை பிரபாகரன் தவிர்த்து, பொட்டு அம்மான், பிரபாகரனின் மனைவி, மகள் ஆகியோரின் நிலை என்ன?

ப. பொட்டு அம்மானும் பிரபாகரனின் கடைசி மகன் தவிர்த்த மக்கள் இருவரும் போராடி வீரச் சாவு அடைந்துவிட்டார்கள். ஆனந்தபுரம் போர்க்களத்தில் இருந்தே ஒவ்வொரு தளபதியாக கொல்லப்பட்டார்கள். சூசை இறுதியாக வீரச்சாவடைந்தார். இவர்கள் தியாகங்களை கொச்சைப்படுத்துபவர்களை நாங்கள் ஏற்க முடியாது.

கே. பிரபாகரனின் மனைவி, மகள், பொட்டு அம்மான் ஆகியோரது உடல்கள் காண்பிக்கப்படாத நிலையில், அவர்கள் உயிரோடு இருப்பதாக சொல்லப்படுகிறதே..

ப. மகள் பிரபாகரனுக்கு முன்பே இறந்துவிட்டார். அவர் உரிய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டார். ஆகவே அவரது உடலைக் காட்ட முடியாது. அண்ணியைப் பொறுத்தவரை, பிரபாகரன் கொல்லப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்போ, சில மணி நேரங்களுக்கு முன்போ அவரும் கொல்லப்பட்டார். பாலச்சந்திரன் மட்டும்தான் ஒரு சில போராளிகளுடன் போய் சரணடைந்தார். அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

கே. பிரபாகரன் உயிரிழந்து விட்டார் என நீங்கள் சொல்லும் நிலையில், உங்களைப் பொறுத்தவரை கடைசி கட்டத்தில் என்ன நடந்தது?

ப. போர்க்களம் என்பது வெளியில் இருந்து பார்த்தால் விளையாட்டாக இருக்கும். களச்சூழல் அப்படியிருக்காது. நவீன இயந்திரங்களைப் பயன்படுத்தித்தான் போர் நடந்தது. முள்ளிவாய்க்கால் களத்தில் நான் இல்லை. காயமடைந்திருந்ததால் ஓரிடத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டிய சூழல் இருந்தது. ஆனால், செயற்கைக்கோள் தொலைபேசி மூலம் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். கிளிநொச்சி வீழ்ந்த பிறகு, ஒவ்வொரு நாளும் ராணுவத்தில் முன்னேற்றம் கண்டது. எங்கள் அணிகளுக்கு வெடிபொருள் விநியோகம் தடைபட்டது. அப்போதுதான் ஆனந்தபுரம் சமர் நடந்தது. அதில் பல போராளிகள், தளபதிகள் கொல்லப்பட்டார்கள்.

அதன் பிறகு, முள்ளி வாய்க்கால், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு பகுதிகளில் பெரும் ராணுவப் படைகள் இறக்கப்பட்டு தாக்குதல் நடந்தது. தன் மக்களைவிட்டு வெளியேறப்போவதில்லை என பிரபாகரன் அப்போது சொன்னார். அதன்படியே அவர் வீரச்சாவடைந்தார். புலம் பெயர்ந்த தேசத்தில் உள்ள உறவுகளிடம் பிரபாகரன் வீரச்சாவடைந்ததை சொல்லிவிட்டுத்தான் சூசையும் வீரச்சாவடைந்தார். பிரபாகரன் கொல்லப்பட்டதைச் சொன்ன சில மணி நேரத்தில் அவர் இருந்த இடத்தில் ராணுவம் நெருங்கியது. அவரும் கொல்லப்பட்டார்.

இந்தச் சூழலை வைத்துத்தான் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்ற முடிவுக்கு நாங்கள் எல்லோரும் வந்தோம்.

பிரபாகரன்

பட மூலாதாரம், Getty Images

கே. பிரபாகரன் இறந்த பிறகும் சூசை இருந்தார் என்றால், பிரபாகரனின் உடலை சூசையால் கைப்பற்ற முடியவில்லையா?

ப. அந்த சூழல் அப்படியில்லை. அவர் இருந்த இடம் வேறு, பிரபாகரன் இருந்த இடம் வேறு. ஆனால், கிலோமீட்டர் கணக்கிலான தூரமில்லை. எல்லாம் கண்ணுக்குத் தெரிந்த தூரம்தான். ஆனால், கிட்டே செல்ல முடியாது. பத்து மீட்டர் தூரத்தில் இருந்தாலும் தொலைத் தொடர்பு சாதனத்தை வைத்துதான் தொடர்புகொள்ள வேண்டிய சூழல்தான் இருக்கும்.

கே. நெடுமாறனின் இந்த அறிவிப்பை இலங்கை அரசு எப்படி எடுத்துக்கொள்ளுமென நினைக்கிறீர்கள்?

ப. தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத்திட்டத்தை கொடுப்பதற்கான அழுத்தம் வருகின்றபோது, இதைக் காரணம் காட்டி இயக்கத்தின் மீதான தடையை நீட்டிப்பார்கள். சிங்கள கடும்போக்காளர்களிடம் கொதி நிலையை ஏற்படுத்தி, குறைந்தபட்ச அதிகாரம் கொண்ட தீர்வுத் திட்டத்தைக்கூட தமிழ் மக்களுக்குத் தர மாட்டார்கள். அங்குள்ள தமிழ் மக்களுக்கு இது ஒரு பாதிப்பான விஷயம்தான்.

கே. நெடுமாறன் நெடுங்காலமாகவே இதைச் சொல்லி வருகிறார். இந்த முறை அவர் இப்படிச் சொன்னவுடன் இலங்கை ராணுவம் உடனடியாக மறுத்துவிட்டது. ஆகவே, நெடுமாறனின் மற்றொமொரு அறிவிப்புதானே இது… எதற்காக இலங்கை அரசு இந்த முறை மட்டும் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்போகிறது?

ப. முந்தைய தடவைகளுக்கும் இந்த முறைக்கும் வித்தியாசம் இருக்கிறது. பிரபாகரன் பெயரைச் சொல்லி பணம் வசூல் செய்வதைத் தடுத்த பிறகு, இதைப் பற்றியெல்லாம் வெளியில் சொல்லி மக்களைக் குழப்ப வேண்டாம் என்றுதான் இருந்தோம். ஆனால், அவர்கள் விடாமல் இப்படிச் செய்வது ஆபத்தானது. அந்த ஆபத்து எப்படியானது என்றால், இப்போது இவர்கள் பிரபாகரனின் மனைவி, மகள் ஆகியோரின் படங்களை உருவாக்கியிருக்கிறார்கள். அவற்றை உண்மை எனக் காட்டி வருகிறார்கள். அதே நேரம், பிரபாகரன் நோய் வாய்ப்பட்டிருப்பதாகவும் ஒரு கருத்தைப் பரப்பிவருகிறார்கள். அவருடைய சிகிச்சைக்கு நீங்கள் போதுமான பணம் தரவில்லை, ஆகவே அவர் இறந்துவிட்டார் என்ற செய்தியைப் பரப்பப்போகிறார்கள்.

அந்தத் தலைவரின் பெரும் பிம்பத்தை மக்கள் வெறுக்கும் அளவுக்கான சூழலை உருவாக்க முயற்சிக்கிறார்கள். எதிர்காலத்தில் அப்படியான செய்திதான் வரப்போகிறது. அதற்குத் தயார் படுத்திவிட்டார்கள்.

ஒளி – ஒலி வடிவங்களையெல்லாம் தயார் செய்துவைத்துவிட்டார்கள். எந்தெந்த நேரத்தில் எந்தெந்தப் படங்களை, குரல்களை வெளியிடுவது என்பதையெல்லாம் தயாரித்துவிட்டார்கள். அவருடைய பெருமைக்கும் கௌரவத்திற்கும் ஆபத்து வரப்போகிறது என்பதால்தான் வெளியில் வந்து பேச வேண்டியிருக்கிறது.

பணம் வசூலிப்பவர்கள் பிரபாகரனை சிறுமைப்படுத்துவதற்கான முயற்சி இது. இந்த நேரத்தில் இன்னும் ஒரு விஷயத்தையும் புலம்பெயர்ந்த மக்களுக்கு சொல்ல வேண்டியிருக்கிறது. விடுதலைப் புலிகள் பெயரைச் சொல்லி பணம் கேட்பவர்கள் யாரையும் நீங்கள் ஏற்காதீர்கள். ஊக்கப்படுத்தாதீர்கள். விடுதலைப் புலிகள் இனிமேல் நிதி சேகரிப்பில் ஈடுபட மாட்டார்கள்.

போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய நிதி கோரினால், அது தவிர்க்க முடியாதது. ஆனால், அப்படி உதவிசெய்ய விரும்பினால், உங்கள் நணபர்கள் வாயிலாக பாதிக்கப்பட்ட மக்களுடன் நேரடியாகப் பேசிவிட்டு அந்த உதவிகளைச் செய்யுங்கள்.

பிரபாகரன்

பட மூலாதாரம், Getty Images

கே. பிரபாகரன் மனைவி, மகள் போல வேறு சிலரை அடையாளம் காட்டப்போவதாக சொல்கிறீர்கள்.. அப்படிச் செய்ய முடியுமா?

ப. அப்படி செய்யக்கூடிய தொழில்நுட்பம் இப்போது வந்திருக்கிறது. இவற்றை வைத்து அதைச் செய்வார்கள்.

கே. படங்களை, காணொளி் காட்சிகளை உருவாக்கலாம். ஆனால், நேரில் ஆட்களைக் கொண்டுவர முடியாதல்லவா?

ப. நேரில் நிறுத்த முடியாது என்பது உண்மைதான். அதற்காகத்தான், நான் முன்பே சொன்னதுபோல நோயால் இறந்தது போன்ற சூழலை உருவாக்குவார்கள். இதுதான் மிகப் பெரிய ஆபத்து.

கே. எதற்காக இதைச் செய்கிறார்கள் என பல விஷயங்களை நீங்கள் பகிர்ந்துகொண்டீர்கள். இந்த விஷயங்கள் எல்லாம் நீண்ட காலமாக புலிகள் இயக்கத்துடன் தொடர்பில் உள்ள காசி ஆனந்தனுக்கும் நெடுமாறனுக்கும் தெரியாதா? அவர்கள் எப்படி இதற்கு முன்வருவார்கள்?

ப. அவர்களைப் பொறுத்தவரை, 90ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த போராட்ட வடிவங்கள், போராட்ட மாறுதல்கள் பெரிதாகத் தெரியாது. சில அரசியல் நிகழ்வுகள் சார்ந்து, தகவல்களை பிரபாகரன் சில போராளிகள் மூலம் சொல்லி இருப்பார். அதற்கேற்றபடி சில விஷயங்களை அவர் செய்திருக்கலாம். அதைத் தவிர, போர்க்களம் தொடர்பாக இருவருக்குமே எதுவுமே தெரியாது.

இதற்காக, நெடுமாறனின் அர்ப்பணிப்பை நாங்கள் குறைத்து மதிப்பிட மாட்டோம்.

கே. பிரபாகரன் இறந்த தருணத்திலோ, அதற்குச் சில ஆண்டுகளுக்குப் பிறகோ உங்களுக்கு ஆதரவான தலைவர்களைக் கொண்டு ஒரு ஊடகச் சந்திப்பை ஏற்பாடு செய்து பிரபாகரனின் மரணத்தை அறிவித்திருக்கலாமே… அப்படிச் செய்திருந்தால், இப்போதுவரை இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காதல்லவா? ஏன் செய்யவில்லை?

ப. அது எங்கள் தவறுதான். ஆனால், இங்கே இருந்த சூழல் அப்படி. நாங்கள் புலம்பெயர் தேசத்தில் எங்களைப் பாதுகாத்துக் கொள்ள, நாங்கள் வாழ ஒரு இயல்பான சூழலைப் பெற நீண்ட காலமானது. அதே நேரத்தில் எங்களைப் பற்றி தவறான ஒரு பிம்பத்தையும் ஏற்படுத்தி வைத்தார்கள். அவர்களுக்குப் புரிய வைக்கவும் நீண்ட காலமானது.

தற்போதைய உலக ஒழுங்கிற்கு ஏற்ப எங்கள் லட்சியத்தை நோக்கி நாங்கள் நகர வேண்டும். ஜனநாயக வழிமுறையில் என்ன சாத்தியம் இருக்கிறது என்பதை நாங்கள் ஆராய வேண்டியிருந்தது. இடைப்பட்ட காலத்தில் நிறைய விஷயங்களைச் செய்து முடித்திருக்கிறோம். அதை இப்போது வெளியில் சொல்ல முடியாது.

பல முறை பிரபாகரனின் பெயரைச் சொல்லி பணம் வசூலிக்கப்பட்டது. அப்போதெல்லாம் அதைக் கடந்துபோனோம். ஆனால், இந்த முறை அவருடைய பெயருக்கே இழுக்கு ஏற்படும் சூழல் ஏற்பட்டதால் வெளிப்படையாக பேச வேண்டியதாயிற்று.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »