Press "Enter" to skip to content

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி அளித்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

பட மூலாதாரம், Getty Images

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய அனுமதியை எதிர்த்து இந்திய உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

இந்த தகவலை உறுதிப்படுத்திய தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் அரிஸ்டாட்டில், உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தடை செய்ய உச்ச நீதிமன்றத்திடம் நாங்கள் வழிகாட்டுதலைக் கோருகிறோம் என்று தெரிவித்தார்.

“இதுபோன்ற அணிவகுப்பை அனுமதிப்பது சட்டம் – ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும். பொது ஒழுங்கை பராமரிக்க அரசு கடைப்பிடிக்கும் நடவடிக்கை நியாயமான கட்டுப்பாடு தான்” என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர் மகாதேவன், நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த சமீபத்தில் அனுமதி அளித்தது.

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்கப்படும் அதே வேளையில், பொதுமக்களின் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான உரிமையை அரசு நிலைநாட்ட வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் அந்த உத்தரவில் கூறியிருந்தது.

மூன்று வெவ்வேறு தேதிகளில் ரூட் மார்ச் எனப்படும் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடத்துவதற்கு அந்த அமைப்பு புதிய விண்ணப்பங்களை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பொதுச் சாலைகளில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த அனுமதிக்குமாறும் தமிழ்நாடு காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

பின்னணி

காந்தி பிறந்த நாளான அக்டோர் 2ஆம் தேதியன்று தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அணிவகுப்பு ஒன்றை நடத்தத் திட்டமிட்டிருந்தது. ஆனால், அதற்கு தமிழ்நாடு காவல்துறை அனுமதி மறுத்தது. இதனை எதிர்த்து அந்த அமைப்பைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நவம்பர் ஆறாம் தேதியன்று ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்குமாறு காவல்துறைக்கு செப்டம்பர் 30ஆம் தேதி உத்தரவிட்டது.

கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று இடங்களில் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் மற்ற இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி வழங்க மறுப்பதாகக் கூறி அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் காவல்துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தனர்.

அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், கோயம்புத்தூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், பல்லடம், அருமனை, நாகர்கோவில் ஆகிய இடங்களைத் தவிர மற்ற இடங்களில் அனுமதி வழங்கலாம் என உத்தரவிட்டார். ஆகவே, ஏற்கனவே காவல்துறை அனுமதி வழங்கியிருந்த மூன்று இடங்களுடன் சேர்த்து மொத்தமாக 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். தங்களது அணிவகுப்பை நடத்தலாம். உள்ளரங்கு கூட்டமாக பரிந்துரைக்கப்பட்ட இடங்களில் அரங்குகளில் இல்லாமல் விளையாட்டு திடல்களை தேர்வு செய்யலாம் என்றும் உத்தரவிட்டார்.

ஆனால், ஆர்.எஸ்.எஸ். இதனை ஏற்கவில்லை. “ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தை உள் அரங்கிலோ நான்கு சுவர்களுக்கோ நடத்துமாறு கூறியிருப்பது எங்களுக்கு ஏற்புடையதல்ல. காஷ்மீர், கேரளம், வங்காளம் போன்ற எல்லா இடங்களிலும் அணிவகுப்பு பொதுவெளியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த தீர்ப்பை நாங்கள் சட்ட ரீதியாக எதிர்த்து மேல்முறையீடு செய்வோம். அதனால் நவம்பர் 6ஆம் தேதி நடக்கவிருந்த ஊர்வலத்தை இத்தகைய காரணங்களால் நடத்த இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று அந்த அமைப்பு அறிவித்தது.

கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய மூன்று இடங்களில் மட்டும் நவம்பர் ஆறாம் தேதி ஊர்வலம் நடைபெற்றது. அதே நேரம் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை வெளியில் நடத்த அனுமதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு

பட மூலாதாரம், Getty Images

அந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. சுற்றுச்சுவருடன் கூடிய மைதானத்தில் ஊர்வலம் நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்துசெய்து நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கில் காவல்துறையின் சார்பில் வாதிடும்போது, சட்டம் – ஒழுங்கு பிரச்சனை வராமல் தடுக்கும் பொறுப்பு தங்களுக்கு இருப்பதாகவும் உள்ளரங்கக்கூட்டமாக நடத்த விருப்பமில்லை என்று கூறிவிட்டு, மேல் முறையீடு செய்திருப்பது ஏற்கத்தக்கதல்ல என்று கூறினர்.

உள்ளரங்கக் கூட்டமாக நடத்த தங்களுக்கு விருப்பமில்லை என்றும், நிபந்தனைகளுக்கு உட்பட்டு பேரணி நடத்தவே விரும்புவதாகவும், அதனால் மேல் முறையீடு செய்ததாகவும் ஆர்.எஸ்.எஸ். தரப்பு வாதிட்டது.

நீதிமன்றம் அரசுக்குத் தந்த அறிவுரை

இதையடுத்து, இது தொடர்பாக தொடரப்பட்ட 50 மனுக்களிலும் பேரணிக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது நீதிமன்றம். . யார் மனதையும் புண்படுத்தும் வகையில் பேசக்கூடாது, யாரையும் தூண்டும் வகையில் கோஷங்களை எழுப்பக்கூடாது என சில நிபந்தனைகளையும் நீதிமன்றம் விதித்துள்ளது

காவல்துறை சட்டம் – ஒழுங்கைப் பாதுகாக்கும் அதே நேரத்தில் குடிமக்களின் பேச்சுரிமை, கருத்துரிமை ஆகியவற்றைத் தடுக்கும் வகையில் செயல்படக்கூடாது என்றும் நீதிபதிகள் கூறினர். ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்த புதிதாக அனுமதி கோரினால், அதனைப் பரிசீலித்து அனுமதி வழங்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு முடித்துவைக்கப்பட்டது.

பிபிசி விளையாட்டு வீராங்கனை

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »