Press "Enter" to skip to content

அதிமுகவில் ஓபிஎஸ் – இபிஎஸ்: இதுவரை நடந்த பிளவுகள் – என்னென்ன?

  • ஜோ மகேஸ்வரன்
  • பிபிசி தமிழ்

இப்போது மட்டுமல்ல, இதற்கு முன்பும் பல முறை அதிமுகவில் பிளவும் இதையடுத்து தனிக்கட்சிகளும் தொடங்கப்பட்டுள்ளன. எஸ்.டி.எஸ் முதல் ஓ.பி.எஸ் வரை நடைபெற்ற பிளவுகள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.

அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஆண்டு நடைபெற்ற போது, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையிலேயே கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் ஒற்றைத் தலைமை(இபிஎஸ்) பற்றி ஆவேசமாக பேசினர். ஒருகட்டத்தில், கூட்டத்தில் இருந்து ஆதரவாளர்களுடன் வெளியேறினார் ஓபிஎஸ்.

ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் சசிகலா – ஓபிஎஸ் பின்னர் இபிஎஸ் – ஓபிஎஸ் என ஏற்பட்ட பிளவுதான் பலருக்கும் நினைவிற்கு வரும். ஆனால், கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ராமச்சந்திரன் இருக்கும் போதே அதிமுக பிளவை சந்தித்துள்ளது. இது குறித்து விரிவாக இங்கு பார்க்கலாம்.

எம்.ஜி.ஆர் கட்சி தொடக்கம்

அதிமுக பிளவுகள்

பட மூலாதாரம், Twitter

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அண்ணா 1949ம் ஆண்டு திமுகவைத் தொடங்கினார். அக்கட்சியில், எம்.ஜி.ஆர் 1953ம் ஆண்டு இணைந்து, பொருளாளர் பதவி வரை உயர்ந்தார். அண்ணா மறைவுக்கு பிறகு, மு.கருணாநிதியுடன் ஏற்பட்ட மோதலால், கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, 1972ம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார்.

தனது புதிய கட்சி அண்ணாவின் கோட்பாடுகளை பின்பற்றும் என்றும் அறிவித்தார். கட்சி தொடங்கிய பின்னர் திண்டுக்கலில் நடைபெற்ற முதல் இடைத்தேர்தலில் மாயத்தேவர் வெற்றி பெற்று எம்.ஜி.ஆருக்கு நம்பிக்கையளித்தார். இதே நம்பிக்கையோடு 1977ம் ஆண்டு முதல் பொதுத் தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தார். தொடர்ந்து மறையும் வரை அவரே முதலமைச்சராக இருந்தார்.

நமது கழகம்

எஸ்.டி.எஸ்

பட மூலாதாரம், ADMK

இதற்கிடையில், எம்ஜிஆருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தவர் எஸ்.டி.எஸ் என்கிற எஸ்.டி.சோமசுந்தரம். தமிழ்நாடு சார்ந்த பல்வேறு செயல்பாடுகளில் எஸ்.டி.எஸ் முக்கியத்துவம் பெற்றிருந்தார். இருவருக்கும் இடையில் பிணக்கு ஏற்பட, 1984-ஆம் ஆண்டு அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார் எஸ்.டி.எஸ்.

இதையடுத்து, எஸ்.டி.சோமசுந்தரம், அதே ஆண்டில் ‘நமது கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார். தொடர்ந்து, 1984ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றம் மற்றும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நமது கழகம் தராசு சின்னத்தில் போட்டியிட்டது. தேர்தலில் தாக்கத்தை தந்தாலும் நமது கழகத்திற்கு தோல்வியே ஏற்பட்டது.

பின்னர் 1987ஆம் ஆண்டு எம்ஜிஆர் அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து திரும்பினார். அவரது அழைப்பை ஏற்று எஸ்.டி.எஸ் நமது கழகத்தை அதிமுகவுடன் இணைத்தார். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் சட்டத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளின் அமைச்சராக இருந்தார்.

எம்.ஜி.ஆர் மறைவு

எம்.ஜி.ஆர் மறைவு

பட மூலாதாரம், TWITTER

முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர், உடல்நலக்குறைவால் 1987ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன், பி.எச்.பாண்டியன் உள்ளிட்டோரைக் கொண்ட ஜானகி அணி, அதிமுகவிலும் இரண்டாம் இடத்தில் இருந்த நாவலர் நெடுஞ்செழியன், எஸ்.திருநாவுக்கரசர் உள்ளிட்டோரைக் கொண்ட ஜெயலலிதா அணி என்று இரண்டாக பிளவு பட்டது.

இரு அணிகளும் போட்டி பொதுக் குழு கூட்டங்களை அறிவித்தன. மொத்தமுள்ள 130 எம்.எல்.ஏக்களில் 33 பேர் மட்டுமே ஜெயலலிதா அணியில் இருந்தனர். ஆனாலும், அப்போதைய ஆளுநர் ஜானகிக்கு முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்க்கட்சியான திமுக மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியும் புறக்கணித்தது.

எம்.ஜி.ஆர் - ஜானகி

பட மூலாதாரம், MGR Fans Club

அப்போதைய சபாநாயகர் பி.எச்.பாண்டியன் ஜெயலலிதா ஆதரவு எம்.எல்.ஏக்களை பதவி நீக்கம் செய்தார். வாக்கெடுப்பில் ஜானகி அணி வெற்றி பெற்றதாக அறிவித்தார். சட்டப்பேரவை சண்டைக் களமாகியது. இதையடுத்து ஆட்சி கலைக்கப்பட்டது.

இரட்டைப்புறா – சேவல்

அதிமுக பிளவுகள்

பட மூலாதாரம், Jayalalitha

அதிமுகவிற்கு ஜானகி – ஜெயலலிதா இருவருவே உரிமை கொண்டாடினர். இதனால், 1989ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. அதிமுக ஜானகி அணி இரட்டைப் புறா சின்னத்திலும் அதிமுக ஜெயலலிதா அணி சேவல் சின்னத்திலும் போட்டியிட்டன.

இரண்டு அணிகளும் தோற்று, திமுக ஆட்சியைப் பிடித்தது. ஜெயலலிதா அணி 20க்கும் மேற்பட்ட இடங்களும் ஜானகி அணி ஒரு இடத்திலும் வென்றதால், கட்சியை ஜெயலலிதாவிடம் ஒப்படைத்து விட்டு, அணிகளை இணைத்து ஜானகி அரசியலில் இருந்து ஒதுங்கினார்.

ஆர்.எம்.வீரப்பன் தனிக்கட்சி

கடந்த 1995ம் ஆண்டு ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்த பாட்ஷா பட வெள்ளி விழாவில், நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், வெடிகுண்டு கலாசாரம் பற்றியும், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி குறித்தும் விமர்சனம் செய்தார்.

அந்த மேடையில் அமர்ந்திருந்தும் மவுனமாக இருந்த ஆர்.எம்.வீரப்பன் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, எம்ஜிஆர் கழகம் என்ற கட்சியை ஆர்.எம்.வீரப்பன் தொடங்கினார். திமுக கூட்டணியில் தேர்தல்களை சந்தித்தார்.

எஸ்.திருநாவுக்கரசர் கட்சிகள்

சு.திருநாவுக்கரசர்

பட மூலாதாரம், Su.Thirunavukkarasar

ஆர்.எம்.வீரப்பனுக்கு எதிராக ஜெயலலிதா அணியில் இருந்தவர் அறந்தாங்கி எஸ்.திருநாவுக்கரசர். ஆனால், அவரே ஜெயலலிதாவுடன் முரண்பட்டு, கடந்த 1990ம் ஆண்டு ‘அண்ணா புரட்சித் தலைவர் தமிழக முன்னேற்றக் கழகம்’ என்று தனிக்கட்சி ஆரம்பித்தார்.

இதையடுத்து நடைபெற்ற 1991ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அறந்தாங்கியில் திருநாவுக்கரசரும் சாத்தூரில் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரனும் வெற்றி பெற்றனர்.

கடந்த 1996-ல் மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்பட்டார். அடுத்து, நீக்கப்பட்டார். பின்னர் எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கினார். கடந்த 2004ம் ஆண்டு அந்த கட்சியை பாஜகவுடன் இணைத்தார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து மாநிலத் தலைவரனார். தற்போது திருச்சி மக்களவைத் தொகுதி எம்.பியாக உள்ளார்.

சசிகலா – ஓபிஎஸ்-இபிஎஸ்

கடந்த 1991ம் ஆண்டு தொடங்கு 2016ம் ஆண்டு இறுதி வரை அக்கட்சியின் பொதுச் செயலாளராக ஜெயலலிதாவே தொடர்ந்தார். ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.

சசிகலா

பட மூலாதாரம், PTI

அவர்தான் முதலமைச்சரும் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓபிஎஸ் தர்ம யுத்தம், ஆளுநரின் வருகை தாமதம், ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு என அடுத்தடுத்த திருப்பங்களால், எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக தேர்வு செய்தார் சசிகலா.

அடுத்த சில மாதங்களில் ஓபிஎஸ் – இபிஎஸ் அணிகள் இணைப்பு, சசிகலா, டிடிவி தினகரன் அதிமுகவில் இருந்து நீக்கம், அமமுக என்கிற புதிய கட்சியைத் தொடங்கிய டிடிவி தினகரன் எதிர்பாராத வகையில் களம் மாறியது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »