Press "Enter" to skip to content

ஈபிஎஸ் வசமானது அதிமுக; ஓபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு – உச்சநீதிமன்ற தீர்ப்பு விவரம்

பட மூலாதாரம், Getty Images

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சஞ்சய் குமார் ஆகியோர் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார்கள். இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்தத் தீர்ப்பால் அதிமுகவின் கட்டுப்பாடு எடப்பாடி பழனிசாமி வசமாகிறது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதரவாளர்கள், வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அசம்பாவிதங்களைத் தடுப்பதற்காக அதிமுக தலைமை அலுவலகம், தேனியில் உள்ள ஓ பன்னீர் செல்வம் இல்லம் ஆகிய இடங்களில் பலத்த காவல் போட்டப்பட்டிருக்கிறது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்ன சொல்கிறது?

அதிமுக

பட மூலாதாரம், Getty Images

அதிமுகவில் நிலவிய ஒற்றைத் தலைமை பிரச்சனை குறித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வெளியிட்டுள்ளது.

ஜூலை 11ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக் குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக ஓபிஎஸ் உள்ளிட்டோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சஞ்சய் குமார் அமர்வு இந்த தீர்ப்பை வெளியிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு கடந்த ஆண்டு செப்டெம்பர் 2ஆம் மாதம் தேதி வெளியிட்ட தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் வெளியிட்டுயிருந்த அந்த தீர்ப்பில், “பெரும்பான்மை பொதுக் குழு உறுப்பினர்களின் தேர்வு செல்லும்” என்று தெரிவித்து இருந்தது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் அந்த பொதுக் குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்பது உறுதியாகியிருக்கிறது. மேலும் அந்த பொதுக்குழுவின் போது அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் நீக்கமும் உறுதியாகி இருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி தரப்பு வரவேற்பு

எடப்பாடி பழனிசாமி

பட மூலாதாரம், Twitter/ADMK

“அதிமுகவுக்கு இது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.

“உச்ச நீதிமன்ற தீர்ப்பை தலைவணங்கி வரவேற்கிறோம். இப்போது பொதுக் குழு செல்லும் என்று மட்டும்தான் தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. முழு தீர்ப்பையும் படித்த பின்பு எங்கள் தரப்பு கருத்தை பதிவு செய்கிறேன்” என ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

வழக்கின் பின்னணி என்ன?

அதிமுக உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அத்துடன் ஒரு சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டனர்.

இந்த பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை நடத்தி ஜூலை மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டத்தை ரத்து செய்து தனி நீதிபதி தீர்ப்பு வெளியிட்டார்.

தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு, இரு நீதிபதிகள் அமர்வில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், அதிமுக பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வழங்கினர்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.

அதிமுக பொதுக் குழு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

வழக்கு விசாரணை

அதிமுக உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம், Twitter/ADMK

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஒபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் அமா்வு விரிவாக விசாரணை நடத்தியது.

இரட்டை தலைமை தொடர்பாக நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

“ஜூலை 11ஆம் தேது கூடிய பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும், 2017-ம் ஆண்டில் அசாதாரண சூழலின்போது பொதுக்குழு கூடி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியது. பொதுக்குழு கூட்டத்தை கூட்ட அவைத் தலைவருக்கு அதிகாரம் இல்லை” என்று ஓபிஎஸ் தரப்பு வாதங்களை முன்வைத்தது.

எடப்பாடி பழனிசாமி தரப்பில், “அவைத்தலைவர் தலைமையில் பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்பட்டு, பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவோடு தான் இடைக்கால பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார்” என்று வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் ஜனவரி 11ம் தேதி நிறைவடைந்தது. பின்னர் எழுத்துப்பூர்வ வாதங்களை சமர்ப்பிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் வைத்திருந்தனர்.

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்

அதிமுக உச்ச நீதிமன்றம்

தமிழ்நாட்டின் அண்மையில் காலியானதாக அறிவிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், இந்த தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை கட்சியின் அவைத்தலைவர் தலைமையில் கூட்டப்படும் பொதுக்குழுவில் தேர்தெடுக்க வேண்டும் என்றும், இறுதி தீர்ப்பை இந்த பொதுக்குழுவின் முடிவுகள் கட்டுப்படுத்தாது என்றும் அறிவித்தனர்.

மேலும் இந்த பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு ஏற்ப தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினர்.

அதிமுகவின் 99 விழுக்காடு பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு அதிமுக இடைக்கால பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் தென்னரசுக்கு இருப்பதாக அவைத் தலைவர் தமிழ் உசேன் தேர்தல் ஆணையத்தில் ஆவணங்களை சமர்ப்பித்தார்.

இதை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியது.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் தனது வேட்புமனுவை திரும்பப் பெற்றுக் கொண்டார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »