Press "Enter" to skip to content

எடப்பாடி கே. பழனிசாமிக்கு இனி காத்திருக்கும் சவால்கள் என்ன?

உச்ச நீதிமன்றம் இன்று அளித்திருக்கும் தீர்ப்பின் மூலம், அ.தி.மு.க. முழுமையாக எடப்பாடி கே. பழனிசாமியின் கட்டுப்பாட்டில் சென்றிருப்பதாக தோற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், மேலும் சில சட்ட சவால்களும் வேறு பல சவால்களும் அவருக்குக் காத்திருக்கின்றன.

ஜூலை 11ஆம் தேதி சென்னையில் நடந்த அ.தி.மு.கவின் பொதுக் குழு செல்லும் என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பின் மூலம், அன்றைய தினம் நடந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லும் என்ற கருத்தின் அடிப்படையில் எடப்பாடி கே.பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதும் செல்லும் என கூறப்பட்டு, கட்சி முழுமையாக எடப்பாடி கே. பழனிசாமி வசம் வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இது எடப்பாடி கே. பழனிசாமி தரப்பைப் பொறுத்தவரை மிகக் குறிப்பிடத்தக்க வெற்றிதான். ஆனால், இந்த வெற்றியோடு எல்லாம் சவால்களும் முடிந்துவிடப் போவதில்லை என்பதும் அவருக்குத் தெரியும். குறிப்பாக சட்டரீதியான சவால்கள் இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை என்பதுதான் உண்மை.

“அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர் பதவி குறித்து ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்த உரிமையியல் வழக்கு இன்னமும் நிலுவையில்தான் இருக்கிறது. இன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூட, இந்தத் தீர்ப்பின் தாக்கமின்றி, அந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்கலாம் என உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.

மேலும், ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லும் என்று சொன்னதாலேயே, அந்தப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லும் என சட்டரீதியாகப் பொருள் கொள்ள முடியாது.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் அமர்வு வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. ஆகவே உரிமையியல் வழக்கு தொடர்ந்து நடைபெறும்” என்கிறார் ஓ. பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த வழக்கறிஞர்களில் ஒருவரான திருமாறன்.

ஆகவே பன்னீர்செல்வம் தொடர்ந்த உரிமையியல் வழக்கு தொடர்ந்து நடக்கவிருக்கிறது. அதேபோல, வி.கே. சசிகலா 2017ஆம் ஆண்டில் தொடர்ந்த உரிமையியல் வழக்கும் இன்னும் நிலுவையில் உள்ளது. இவை சட்டரீதியாக எடப்பாடி கே. பழனிசாமி முன்பாக உள்ள சவால்கள்.

இதே கருத்தையே முன்வைக்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஷ்யாம். “உயர்நீதிமன்ற டிவிஷன் அமர்வு வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்திருக்கிறது. ஆகவே அந்தத் தீர்ப்பில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் குறித்து இந்த வழக்கு முடிவு செய்யாது என்பதையும் உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதாகத்தான் அர்த்தம்.

மேலும், இடைக்காலப் பொதுச் செயலாளர் என்பது தற்காலிகப் பதவி. அந்தக் காலக்கெடுவும் முடிந்துவிட்டது. இது ஒரு விசித்திரமான நிலை. தீர்ப்பின் முழு விவரம் வெளியாகும் பல விஷயங்கள் புலப்படும்” என்கிறார் ஷ்யாம்.

இந்த வழக்குகள் ஒருபுறமிருக்க, அ.தி.மு.கவின் கட்சிக் கட்டமைப்பைப் பொறுத்தவரை, கிட்டத்தட்ட முழுக் கட்சியுமே எடப்பாடி கே. பழனிசாமி வசம்தான் இருக்கிறது. மிகச் சொற்ப எண்ணிக்கையிலான நிர்வாகிகளே ஓ. பன்னீர்செல்வம் வசம் உள்ளனர். ஓ. பன்னீர்செல்வத்திற்கு அடுத்தபடியாக, முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம், ஜேசிடி பிரபாகரன், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோரைத் தவிர்த்து சொல்லும்படியான தலைவர்கள் யாரும் அவர் பக்கம் இல்லை. இது எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு வலுவான தோற்றத்தை வழங்கும்.

மேலும், ஈரோடு கிழக்குத் தொகுதியின் இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடக்கவிருக்கும் நிலையில், இந்தத் தீர்ப்பு வந்திருப்பது அ.தி.மு.கவின் வேட்பாளருக்கு நிச்சயமாக கூடுதல் வாக்குகளைப் பெற்றுத்தரும். தவிர, தேர்தல் பிரசாரத்தை எடப்பாடி தரப்பு உற்சாகத்துடன் முன்னெடுத்துச்செல்லவும் இந்தத் தீர்ப்பு நிச்சயம் உதவும்.

கட்சி இருதரப்பாக இருப்பதால், இருதரப்பிற்கும் சம மரியாதை தருவதைப்போல மத்தியில் ஆளும் பா.ஜ.க. நடந்துவந்த நிலையில், இந்தத் தீர்ப்பு அந்தச் சமன்பாட்டை மாற்றியெழுதக்கூடும். தமிழகத்தில் மிகப் பெரிய கூட்டணிக் கட்சியாக அ.தி.மு.கவுக்குத் தர வேண்டிய முழு மரியாதையை தன் தரப்பிற்கே தர வேண்டும் என்பதில் இனி எடப்பாடி மிக உறுதியாக நடந்து கொள்வார்.

அதேபோல, தி.மு.கவை எதிர்க்க வேண்டிய தருணங்களில் கட்சியின் உரிமை தொடர்பான சிக்கல்களோடு போராடி வந்ததால், சரியான எதிர்க்கட்சியாக செயல்படவில்லை என்ற பெயரைத் துடைக்கும் பொறுப்பும் எடப்பாடிக்கு இருக்கிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு பல தருணங்களில் பாரதீய ஜனதா கட்சியின் பல நிர்வாகிகள் தாங்களே பிரதான எதிர்க்கட்சி என பல சந்தர்ப்பங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பேசிவந்திருக்கின்றனர். அம்மாதிரியான ஒரு தோற்றத்தை மாற்ற வேண்டிய கட்டாயமும் எடப்பாடிக்கு இருக்கிறது.

அரசியல் கட்சிகளைப் பொருத்தவரை, ஒருவர் தன்னைத் தலைவராக நிலைநிறுத்திக்கொள்வது என்பது, அவர்கள் பெரும் தேர்தல் வெற்றிகள் மூலமே சாத்தியமாகிறது. இதுதான் எடப்பாடி முன்பாக இருக்கும் மிகப் பெரிய சவால். எடப்பாடி கே. பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில், எதிர்க்கட்சியாக இருந்த தி.முக. குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதிவு செய்தது. அதற்குப் பிறகு, 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவுக்கு எதிராக மிகப் பெரிய வெற்றியைப் பதிவுசெய்தது தி.மு.க. அதேபோல, 2021ல் சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. தோல்வியைச் சந்தித்தது. அதற்குப் பிறகு நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.க. தோல்வியையே சந்தித்தது.

இந்தத் தேர்தல்கள் அனைத்தும் நடக்கும்போது ஓ. பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும் எடப்பாடி கே. பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தனர். ஆகவே. தோல்விக்கான பாதிப் பொறுப்பை ஓ. பன்னீர்செல்வத்தின் மீது சுமத்த முடியும். ஆனால், இனி அதற்கு வாய்ப்பில்லை.

“இன்றைய தீர்ப்பு சட்டப் போராட்டத்தில் எடப்பாடி கே. பழனிசாமிக்குக் கிடைத்திருக்கும் மிக முக்கியமான வெற்றி என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர் அரசியல் தளத்தில் அங்கீகாரம் பெற வேண்டும். ஒரு பெரிய தேர்தலில், அதாவது பொதுத்தேர்தல் போன்ற ஒரு தேர்தலில் வெற்றிபெற்றுக் காண்பிக்கும்போதுதான் மக்களின் அங்கீகாரம் அவருக்குக் கிடைத்ததாகச் சொல்ல முடியும்.

கட்சி அவருக்குக் கீழ் வந்திருக்கிறது. அது முக்கியமானது. சந்தேகமில்லை. ஆனால், இது ஒரு முதல்படி மட்டுமே. தேர்தலில் அவர் நிரூபிக்காவிட்டால் எல்லாம் சிக்கலாகிவிடும்” என்கிறார் மூத்த பத்திரிகையாளரான டி. ராமகிருஷ்ணன்.

எடப்பாடி பழனிசாமி

ஆனால், பா.ஜ.கவை எதிர்கொள்வதில் எடப்பாடியின் போக்கில் பெரிய மாற்றமிருக்காது என்கிறார் அவர். “பா.ஜ.க. மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சி. அ.தி.மு.க. தற்போது ஆட்சியில் இல்லை. அதைப் புரிந்துகொண்டு நெளிவு சுளிவோடுதான் எடப்பாடி நடந்துகொள்வார்” என்கிறார் ராமகிருஷ்ணன்.

இது தவிர, சசிகலா, டிடிவி தினகரன், ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.கவில் இல்லை என்பதால், அக்கட்சியின் முக்கிய வாக்குவங்கிகளில் ஒன்றான முக்குலத்தோர் வாக்குவங்கி, என்ன ஆகும் என்ற கேள்வியும் இருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் 160 தொகுதிகளில் போட்டியிட்ட டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 10,85,985 வாக்குகளை பெற்றது. ஓ. பன்னீர்செல்வம் தனித்துச் செயல்பட்டால், முக்குலத்தோர் வாக்குகள் யாருக்குக் கிடைக்கும் என்பது கேள்விக்குறிதான். அதேபோல, அவர் டிடிவி தினகரனுடன் இணைந்தால், இந்த வாக்கு எண்ணிக்கை சற்று உயரலாம்.

ஆனால், முக்குலத்தோர் வாக்குவங்கி என்பது வெறும் டிடிவி தினகரன் – ஓ. பன்னீர்செல்வம் சார்ந்ததாக மட்டும் எடப்பாடி கே. பழனிச்சாமி கருதவில்லை. ஆர்.பி. உதயகுமார், ராஜன் செல்லப்பா, செல்லூர் ராஜு ஆகியோர் மூலம் அந்த வாக்குகளை தென் மாவட்டங்கள் பெரும்பாலும் கவர்ந்துவிட முடியுமென அவர் நினைக்கிறார். இது தவிர, வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொடுத்த விவகாரத்திலும் முக்குலத்தோர் எடப்பாடி கே. பழனிச்சாமி மீது கோபத்தில் இருக்கின்றனர். அதனை எப்படி அவர் சரிசெய்வார், என்ன வாக்குறுதிகளைக் கொடுப்பார் என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

ஆகவே, மீதமிருக்கும் சட்ட சவால்கள், தி.மு.கவை எதிர்ப்பதில் காட்டும் தொடர்ச்சியான செயல்பாடு, தேர்தல் வெற்றி, கட்சியில் அனைத்துத் தரப்பினரையும் தன்னை முழுமையாக ஏற்கச்செய்வது ஆகிய சவால்கள் இன்னமும் எடப்பாடி கே. பழனிச்சாமி வசம் இருக்கின்றன. இந்தச் சவால்கள் எல்லாவற்றிலும் அவர் வெற்றிபெறுவாரா என்பதை இப்போது சொல்ல முடியாது. ஆனால், அவர் கடந்துவந்த பாதையைப் பார்க்கும்போது, இந்தச் சவால்களை எதிர்கொள்ள அவர் தீவிரமாகப் போராடுவார் என்பது மட்டும் உறுதி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »