Press "Enter" to skip to content

நேபாளத்தில் சீனாவுடனான எல்லைக்கு அருகே இந்தியா சொன்ன திட்டம் சர்ச்சை ஆனது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

நேபாளத்தில் தற்போது ஒரு புதிய அரசியல் சர்ச்சை எழுந்துள்ளது.

அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தின் சமீபத்திய முன்மொழிவு வெளிப்படையாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த சர்ச்சை தொடங்கியுள்ளது.

சீனாவை இணைக்கும் எல்லை பகுதியில் உள்ள இமயமலை மாவட்டமான முஸ்டாங்கில் ஒரு பெளத்த கல்லூரியை கட்டும் நேபாளத்துக்கு இந்தியா நிதி உதவி வழங்க யோசனை கூறியுள்ளதாக உள்ளூர் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.

வெளிநாட்டினர் நடமாட தடை செய்யப்பட்ட அந்த இடத்தில் நேபாளம் கட்டும் கல்லூரிக்கு இந்தியா முதலீடு செய்வது பற்றியும் அந்த நாளிதழ் கேள்வி எழுப்பியிருந்தது.

நேபாளத்தில், எதிர்க்கட்சியான நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் (ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) தலைவரும், முன்னாள் பிரதமருமான கே.பி. ஷர்மா ஓலி, அத்தகைய கட்டுமானம் தேசிய சுதந்திரத்துடன் தொடர்புடையது என்று கூறி அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். அப்போது முதல் இந்த திட்டம் நேபாளத்தில் சர்ச்சையானது.

இந்த விவகாரத்தில் இந்தியாவின் முன்மொழிவை நேபாள அரசு ஏற்கெனவே நிராகரித்துவிட்டது.

இருந்தபோதும் நேபாளத்தில் இது தொடர்பான விவாதங்கள் தொடர்கின்றன.

நேபாளத்தின் புவிசார் அரசியல் சூழ்நிலையின் அடிப்படையில் இந்த விவகாரம் மிகவும் நுட்பமானது என்று பலர் கூறி வருகின்றனர்.

நேபாளம் தனது நிலத்தில், அண்டை நாடுகளின் உணர்வுபூர்வமான நடவடிக்கைகள் குறித்து எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் சில வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

சர்ச்சை தொடங்கியது எப்படி

நேபாள், இந்தியா, சீனா, எல்லை பிரச்னை

பட மூலாதாரம், Getty Images

கடந்த வாரம் நேபாளத்தின் தினசரி நாளிதழான ’காந்திபூர் டெய்லி,’ கட்டுப்பாடுகள் நிலவும் பகுதியில் கல்லூரியைத் திறப்பதில் இந்தியாவின் ஆர்வம் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டது.

வெளிநாட்டவர்கள் செல்வதற்கு தடைசெய்யப்பட்டுள்ள ஒரு பகுதியில், இந்திய அரசின் முதலீட்டில் நேபாளம் ‘முஸ்டாங் பெளத்த கல்லூரியை’ திறக்கப் போவதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் சீனாவுக்கு எதிராக திபெத்திய கம்பாக்கள் கிளர்ச்சி செய்த பகுதி என்பதால், முஸ்டாங்கின் சில பகுதிகள் வெளிநாட்டினர் செல்ல தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் அத்தகைய பகுதியின் உள்கட்டமைப்பில் இந்தியா முதலீடு செய்யப் போகிறது என்றும் செய்தித்தாள் தெரிவித்தது.

ஓலி சொன்னது என்ன?

நேபாள், இந்தியா, சீனா, எல்லை பிரச்னை

பட மூலாதாரம், RSS

இந்தியாவின் உதவியுடன் முஸ்டாங்கில் ஒரு கல்லூரி திறக்கப்படுவதாகவும், அந்த பகுதி வெளிநாட்டினரின் விளையாட்டு மைதானமாக மாறும் என்றும் கடந்த சனிக்கிழமை ஒரு நிகழ்ச்சியில் ஓலி கூறினார்.

“முஸ்டாங்கில் பெளத்த கல்லூரி என்றால் என்ன? முஸ்டாங்கில் பெளத்த கல்லூரி என்பது ஒரு வகையான வெளிநாட்டு தரகு. அது நமது நட்பு நாடான சீனாவுக்கு எதிராக போவதுடன் நமது தேசியத்துவம் மீதான தாக்குதலாகும். இதுவும் ஒரு வகை தேச துரோகம்” என்று ஓலி கூறினார்.

நேபாள அரசை தாக்கிய அவர்,”தேசத்தின் இறையாண்மையை அவர்கள் புறம் தள்ளி விட்டார்கள். சுதந்திரத்தை காயப்படுத்தி விட்டார்கள். நீங்கள் பௌத்த கல்லூரியை கட்ட முயற்சிக்கிறீர்களா? அல்லது கல்லூரியின் பெயரில் பணம் சம்பாதிக்க முயற்சிக்கிறீர்களா?”

நீங்கள் வெளிநாட்டினருக்கு ஒரு விளையாட்டு மைதானத்தை உருவாக்க முயற்சிக்கிறீர்கள்,” என்றார் அவர்.

1974ஆம் ஆண்டு அந்த பகுதியில் சீனாவுக்கு எதிராக கம்பாக்கள் ஆயுதமேந்திய கிளர்ச்சியைத் தொடங்கியதை அவர் மேற்கோள் காட்டினார்.

இப்பகுதியில் யுரேனியம் கிடைப்பதை சுட்டிக்காட்டிய அவர் இதன்காரணமாக வெளிநாட்டவர்கள் முஸ்டாங்கில் முதலீடு செய்ய முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

அரசின் மறுப்பு

நேபாள், இந்தியா, சீனா, எல்லை பிரச்னை

பட மூலாதாரம், MOT

இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்த நேபாள அரசின் செய்தித் தொடர்பாளரும், தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சருமான ரேகா ஷர்மா, இந்த விஷயம் ஆதாரமற்றது என்று அறிவித்தார்.

“ஒரு நாட்டின் முன்மொழிவின் பேரில், மற்றொரு நாட்டை குறிவைத்து, முஸ்டாங்கின் கட்டுப்பாடுகள் நிறைந்த கிராம நகராட்சியில் அரசு ஒரு கல்லூரியை நிறுவத் தொடங்கியுள்ளது என்ற அறிக்கை முற்றிலும் தவறானது. இதை நாங்கள் தெளிவுபடுத்துகிறோம்,” என்று ஞாயிறன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக நேபாள அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

” முஸ்டாங்கின் வார்காங் கட்டுப்படுத்தப்பட்ட கிராம உள்ளாட்சி அமைப்பு ஒரு கல்லூரியை நிறுவுவதற்கு உதவி கோரி இந்திய தூதரகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. இது குறித்து அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. எனவே நன்கு ஆய்வு செய்து உண்மைகளின் அடிப்படையில் மட்டுமே குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டும்” என்றார் அவர்.

‘வெளியுறவு கொள்கைக்கு கேடு விளைவிக்கும் வகையில் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவது ஏற்புடையது அல்ல’ என்றும் ரேகா ஷர்மா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

”நேபாள அரசு நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, தேசிய நலன், சுதந்திரமான மற்றும் சமநிலையான தூதாண்மைக்கு ஆதரவாக உறுதியாக நிற்கிறது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த பிராந்தியத்தில் உள்கட்டமைப்பு முதலீட்டுக்கான இந்தியாவின் முன்மொழிவு பற்றி அறிய பிபிசி நியூஸ் நேபாளி, சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் பேசியது.

அப்போது, முஸ்டாங் கிராம உள்ளாட்சி அமைப்பின் வார்டு எண் ஐந்தில் அமைந்துள்ள ‘வார்குங்’ தடை செய்யப்பட்ட பகுதியில் பௌத்த சங்கத்தின் முஷ்டாங் கிளை, மத கல்லூரி ஒன்றை நடத்தி வருவதும் தெரிய வந்தது.

பௌத்த சங்கத்தின் முஸ்டாங் கிளை தலைவர் கென்போ டென்சிங் சங்போ இப்போது தைவானில் இருக்கிறார்.

“இரண்டு ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து கல்லுாரி இயங்கி வருகிறது,” என்று அவர் கூறினார்.

இத்தகைய மத கல்வி நிறுவனங்களின் கல்வி, முறையான கல்வியாக அங்கீகரிக்கப்படா விட்டாலும், சமய கல்விக்கு அங்கீகாரம் வழங்கப்படுவதாகவும், அந்த பாடத்திட்டமே அங்கு கற்பிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

யார் உதவி கேட்டது?

உள்ளூர் மக்கள் நிலம் கொடுத்ததாகவும், அதனால் கல்லூரிக்கு கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டதாகவும், வரவு செலவுத் திட்டம் இல்லாததால், இந்திய தூதரகத்திடம் உதவி கேட்டதாகவும் அவர் விளக்கினார்.

”அப்பகுதி மக்கள் மத உயர் கல்விக்காக காத்மாண்டுவிற்கோ, இந்தியாவிற்கோ செல்லாமல் இருக்க கல்லூரியை தொடங்கியுள்ளோம். கிராம உள்ளாட்சி அமைப்பின் பரிந்துரையின் பேரில் அதற்கு ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது. இதில் எந்த அரசியலும் இல்லை. இது முற்றிலும் மத போதனைக்கான கோரிக்கையாகும்,” என்கிறார் கென்போ டென்சிங் சங்போ.

இந்த கல்லூரி தொடர்பாக சர்ச்சை எழுந்ததும், அதை ஓலி விமர்சித்ததும் தன்னை மிகவும் வேதனைப்படுத்தியதாக அவர் கூறினார்.

நேபாள அரசியலமைப்பின்படி, உள்ளூர் நிலையிலான அல்லது எந்தவொரு அமைப்பும் மத்திய அரசின் மூலம் மட்டுமே வெளிநாட்டு உதவியைப் பெற முடியும்.

இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “இந்திய தூதரகம் கடந்த காலங்களில் கூட இந்த பகுதியில் உள்ள மடங்களுக்கு உதவி இருக்கிறது. நாங்களும் இதே கோரிக்கையை வைத்துள்ளோம். அதன் பிறகு அரசுடன் தூதரகம் ஆலோசித்து முடிவு எடுக்கிறது. இந்த ஆண்டும் தூதரகம் அரசிடம் அனுமதி கோரியது,” என்றார்.

ஆனால் கிராம ஆட்சி அமைப்பின் பரிந்துரையின் பேரில் அத்தகைய உதவி கோரப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.இதற்கான பதிலை அறிய பிபிசி நேபாளி, கிராம உள்ளாட்சி அமைப்பின் தலைவர் ரிங்ஜின் குருங்கை தொடர்பு கொண்டது.

நேபாள், இந்தியா, சீனா, எல்லை பிரச்னை

பட மூலாதாரம், Getty Images

கோரிக்கையின் அடிப்படையில், உள்ளூர் மட்டத்தில் நிலத்தை ஒதுக்கி, உதவிக்காக பரிந்துரை செய்ததாக அவர் கூறினார். கட்டடம் கட்டுவதற்கு, 70 கோடி ரூபாய்க்கு மேல் உதவி கேட்டு, உள்ளாட்சி அமைப்பும் பரிந்துரை செய்தது என்று அவர் குறிப்பிட்டார்.

ரிங்ஜின், சிபிஎன்- யுஎம்எல் சார்பாக கிராம நகராட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தனது கட்சியின் மேலிட தலைவர், கல்லூரி குறித்து ‘உண்மை தெரியாமல்’ அறிக்கை அளித்துள்ளதாக அவர் கூறினார்.

எங்கள் தலைவர் பேசிய விதம், விஷயமே புரியாமல் அறிக்கை விடுவது போல் உள்ளது. இது குறித்து மாவட்ட குழுயில் ஏற்கெனவே பேசியுள்ளோம் என்றார் அவர்.

உள்ளாட்சி அமைப்பின் பரிந்துரையுடன் கல்லூரி கட்டடம் கட்ட நிதி உதவி கோரியதை அடுத்து, இந்திய தூதரகம் நேபாள வெளியுறவு அமைச்சகம் மூலம் அனுமதி கோரியது என்று பல நேபாள அதிகாரிகள் பிபிசி நேபாளி சேவையிடம் தெரிவித்தனர்.

முஸ்டாங் ஒரு நுட்பமான பகுதி

இருப்பினும், கட்டுப்பாடுகள் நிறைந்த பகுதிகளில் உள்கட்டமைப்பில் ’70 கோடி ரூபாய்க்கு மேலான முதலீடு’ திட்டத்தை ஏற்க வேண்டாம் என்று வெளியுறவு அமைச்சகம் ஏற்கெனவே முடிவு செய்துள்ளது,” என்று நேபாளத்தின் தற்போதைய வெளியுறவு அமைச்சர் பிபிசி நேபாளியி சேவையிடம் தெரிவித்தார்.

கடந்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு உருவான UML-மாவோ கூட்டணி அரசில், UML-ன் விமலா ராய் பெளடெல் வெளியுறவு அமைச்சரானார். UML மற்றும் மாவோயிஸ்டுகளுக்கு இடையேயான கூட்டணி முறிந்த பிறகு, மற்ற UML அமைச்சர்களுடன் சேர்ந்து பெளடெலும் ராஜிநாமா செய்தார்.

முஸ்டாங்கில் கல்லூரி கட்டடம் கட்டுவதற்கு இந்தியா உதவி செய்ய விரும்புவதாக, வெளியுறவு அமைச்சகம் மூலம் இந்திய தூதரகம், நிதி அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் ராஜிநாமா செய்வதற்கு முன்பு இது குறித்து முடிவு எடுத்துவிட்டதாகவும், காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு இது தொடர்பான கடிதங்களை அனுப்புமாறு அறிவுறுத்தியிருப்பதாகவும் பெளடெல் கூறினார்.

”தற்போதைய அரசியலமைப்பின்படி கூட்டாட்சி கட்டமைப்பில் உள்ளூர் மட்டத்தில் இருந்து வெளிநாட்டு உதவி பெற முடியாது. இரண்டாவதாக இந்த இடம் சிறிது நுட்பமானது. இதை கருத்தில்கொண்டு முடிவு எடுக்கப்பட்டது. கடிதம் அனுப்பப்பட்டதா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஏனென்றால் நான் ராஜிநாமா செய்துவிட்டேன்,” என்று அவர் மேலும் கூறினார்.

1970 களில் இப்பகுதியில் காம்பாக்களின் கிளர்ச்சிக்குப் பிறகு இந்த விதிகள் செயல்படுத்தப்பட்டன. சீனாவுக்கு எதிரான ஆயுதமேந்திய கிளர்ச்சிக்கு அமெரிக்கா ஆதரவளித்தது என்று அந்தக்கால புத்தகங்களிலும் செய்தித்தாள்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவுக்கு எதிராக திபெத்திய கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஆயுத போராட்டம் பின்னர் நேபாள பாதுகாப்புப் படையினரால் ஒடுக்கப்பட்டது. அன்றிலிருந்து முஸ்டாங் மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு அனுமதி பெறாமல் வெளிநாட்டினர் செல்ல முடியாது என்ற கட்டுப்பாடு நிலவுகிறது.

நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

நேபாள், இந்தியா, சீனா, எல்லை பிரச்னை

பட மூலாதாரம், Getty Images

சீனாவின் எல்லையில் உள்ள முஸ்டாங் உள்ளிட்ட நேபாளத்தின் இமயமலை மாவட்டங்களில் நிலவும் கட்டுப்பாடுகள் தொடர்பாக சீனாவுக்கு அதன் சொந்த பாதுகாப்பு கவலைகள் உள்ளன.

முஸ்டாங்கில் இந்தியாவின் இருப்பு சீனாவுடனான நேபாளத்தின் உறவுகளை பாதிக்கலாம் என்றும் சீனாவின் எல்லைக்கு அருகில் இருப்பது மட்டுமல்லாமல் யுரேனிய படிமங்களின் தேடலும் இந்தப் பகுதியை பதற்றமானதாக மாற்றி விட்டது என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர்.

இப்பகுதியில் யுரேனியம் படிமங்கள் இருப்பது 2013 இல் நடத்தப்பட்ட நேபாளத்தின் சுரங்கங்கள் மற்றும் புவியியல் துறையின் பூர்வாங்க ஆய்வில் தெரியவந்தது.

முஸ்டாங்கில் குறைந்தது 10 கிலோமீட்டர் நீளம் மற்றும் மூன்று கிலோமீட்டர் அகலத்தில் யுரேனியம் படிமங்கள் இருப்பது, இந்தத்துறை பின்னர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

யுரேனியம் சுரங்கத்தில் தங்கள் செல்வாக்கைத் தக்கவைக்க வெளிநாட்டு சக்திகள் போட்டியிடுவதாக தெரிகிறது என்றும் கூறப்படுகிறது. ஓலியும் அதையே குறிப்பிட்டு, இப்பகுதி “வெளிநாட்டவர்களின் விளையாட்டு மைதானமாக” மாறக்கூடும் என்று கூறினார்.

முஸ்டாங் மற்றும் பிற இடங்களில் யுரேனியம் சுரங்கங்கள் இருப்பதைப் பற்றிய உண்மைகள் மற்றும் விவரங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டபோது, நேபாளம் 2020 இல் கதிரியக்கப் பொருட்களின் பயன்பாடு குறித்த சட்டத்தை இயற்றியது.

நாட்டில் கிடைக்கும் கதிரியக்க மூலங்களின் மீதான உரிமையை இந்தச்சட்டம் அரசுக்கு வழங்குகிறது. இருப்பினும், கதிரியக்க மூலங்கள் தொடர்பான நடைமுறை மற்றும் செயல்பாடுகளை, அமைதி நோக்கங்களுக்காக உரிமம் பெறுவதன் மூலம் மேற்கொள்ள முடியும் என்றும் இந்தச்சட்டம் கூறுகிறது.

இந்த ஏற்பாட்டை கடைப்பிடித்து அமைதியான நோக்கம் என்ற பெயரில் வெளிநாட்டு சக்திகள் முஸ்டாங்கில் ஒத்துழைப்பை முன்மொழியலாம் என்று சிலர் கூறுகின்றனர்.

இருப்பினும், யுரேனியம் சுரங்கத்தின் மீது அவர்களுக்கு கண் இருக்கலாம்.யுரேனியத்தில் ஆர்வமுள்ள நாடுகள் ஏதாவது ஒரு சாக்குப்போக்கு சொல்லி முஸ்டாங்கிற்குள் நுழைய முயற்சிக்கின்றன என்று சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இருப்பினும் அரசு அதிகாரிகள் அத்தகைய அச்சங்களை மறுக்கின்றனர்.

நேபாளத்தின் பிரச்னை

நேபாள், இந்தியா, சீனா, எல்லை பிரச்னை

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே இருப்பதால் நேபாளத்தின் புவியியல் மற்றும் பாதுகாப்பு நிலை சவாலானது என்று சில பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

“நேபாளத்தின் சில பகுதிகள் பதற்றமானவை. வடக்கில் உள்ள முஸ்டாங் அத்தகைய ஒரு பகுதி, தெற்கிலும் மற்ற முக்கிய பகுதிகள் உள்ளன. அப்படிப்பட்ட பகுதிகளில், நமது தேசிய நலன்களை கருத்தில்கொண்டே முடிவுகளை எடுக்கவேண்டும்,” என்று நிபுணர்களில் ஒருவரான இந்திரா அதிகாரி கூறுகிறார்.

தற்போதைய முஸ்டாங் விவகாரத்தில் அரசியலமைப்பானது, உள்ளூர் அமைப்புகளுக்கு வெளிநாட்டு உதவியை முடிவு செய்யவோ அல்லது முன்மொழியவோ அதிகாரம் அளிக்கவில்லை. எனவே இது மிகவும் தீவிரமான விஷயம் என்று அவர் கூறுகிறார்.

இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம் என்று அவர் கூறுகிறார்.

“உள்ளாட்சி அமைப்பு அதன் அதிகார வரம்பைப் புரிந்து கொள்ளவில்லை அல்லது அவர்கள் மற்ற நாடுகளின் செல்வாக்கின் கீழ் அதைச் செய்கிறார்கள் என்று தெரிகிறது,”என்று இந்திரா அதிகாரி தெரிவித்தார்.

நேபாளத்தில் வடக்கு நோக்கி அதாவது சீன எல்லைப் பகுதியில் முதலீடு செய்ய வேண்டும் என்பது இந்தியாவின் பழைய கொள்கை என்றும், தெற்கில் அதாவது இந்திய எல்லைப் பகுதியில் முதலீடு செய்வதே சீனாவின் உத்தி என்றும் அவர் கூறினார்.

“தற்போதைய நெருக்கடிக்கும் இந்தக் கொள்கையே காரணம். இதுபோன்ற விஷயங்களில் விழிப்புணர்வுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இரு நாடுகளின் உணர்வுகளை மனதில் கொண்டு செயல்பட வேண்டும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதே நேரத்தில், சீனாவுக்கான நேபாளத்தின் முன்னாள் தூதர் மருத்துவர் மகேஷ் மக்கள் விரும்பத்தக்கதுகே, நேபாள அரசும் நேபாள அமைப்புகளும் ‘உதவி கேட்பது தொடர்பாக கவனமாக இருக்க வேண்டும்’ என்று பரிந்துரைக்கிறார்.

“தற்போது முஸ்டாங்கின் யுரேனியம் சுரங்கம் தொடர்பாக அரசியல் விமர்சனம் உள்ளது. சுரங்கம் அல்லது செயலாக்கத்தை அனுமதிக்கும் மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டவுடன், இயற்கையாகவே வெளி நாடுகள் அதன்பால் ஈர்க்கப்படும். இது நேபாளத்தை புவிசார் அரசியல் நெருக்கடியில் தள்ளி விடக்கூடும்,” என்று அவர் கூறினார்.

“ஆரம்பத்தில் இதை அரசு பரிசீலித்திருக்க வேண்டும். இப்போதும் அதை செய்ய வேண்டும். யுரேனியம் சுரங்கத்தை ஊக்குவிக்கும் வகையில் எந்த மசோதாவையும் கொண்டு வரக்கூடாது. நேபாள அமைப்புகள் யாரிடம், எந்த இடத்தில் உதவி பெற வேண்டும் என்ற உணர்வை மனதில் வைத்து உதவி கேட்க வேண்டும் அல்லது பெற வேண்டும்,” என்கிறார் அவர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »