Press "Enter" to skip to content

‘காந்தி சட்டம் பயிலவில்லை’ – ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா சொல்வது உண்மையா?

பட மூலாதாரம், Getty Images

ஜம்மு காஷ்மீரின் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, “மகாத்மா காந்தி எந்தப் பல்கலைக்கழக பட்டமும் பெறவில்லை, சட்டக்கல்வி பட்டம் பெற்றவர் இல்லை” என்றும் “உயர்நிலைப் பள்ளி டிப்ளமோ மட்டுமே முடித்துள்ளார்” என்றும் வியாழக்கிழமையன்று தெரிவித்தார்.

மேலும், காந்தி சட்டப்படிப்பு பயின்றவர் என்ற தவறான எண்ணம் படித்தவர்களிடம்கூட இருப்பதாகவும் ஆனால் காந்திஜியிடம் எந்தப் பட்டமும் இல்லை என்றும் அவர் கூறினார்.

குவாலியரில் உள்ள ஐடிஎம் பல்கலைக்கழகத்தில் மருத்துவர் ராம் மனோகர் லோஹியா குறித்த புத்தகத்தை வெளியிட்டுப் பேசியபோது ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா மகாத்மா காந்தி குறித்துப் பேசினார்.

அப்போது அவர், “காந்தி பல பெரிய விஷயங்களைச் செய்துள்ளார். அவை அனைத்தையும் சாதித்த அவரது வாழ்வின் மையமாக இருந்தது சத்தியம் மட்டுமே. வாழ்நாள் முழுவதும் அவர் சத்தியத்திற்குக் கட்டுப்பட்டிருந்தார். அவர் சத்தியத்திற்கு அடிபணிந்தார். அவருடைய வாழ்க்கையின் ஒவ்வோர் அம்சத்தையும் பார்த்தால் சத்தியம் மட்டுமே வேறு எதுவுமே இல்லை.

எவ்வளவு சவால்கள், சோதனைகள் வந்தபோதிலும் அவர் சத்தியத்தை ஒருபோதும் கைவிடவில்லை. அதன் விளைவாக அவர் தேசத்தின் தந்தை ஆனார்,” எனக் கூறிய மனோஜ் சின்ஹா மகாத்மா காந்தியின் கல்வித் தகுதி குறித்துக் கேள்வி எழுப்பினார்.

காந்தி

பட மூலாதாரம், KEYSTONE/GETTY IMAGES

காந்தி குறித்து துணை நிலை ஆளுநர் என்ன பேசினார்?

“இன்னொரு விஷயத்தையும் நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். காந்திஜி சட்டக்கல்வியில் பட்டம் பெற்றவர் என்றும் நாட்டில் படித்தவர்கள் உட்படப் பலருக்கும் தவறான எண்ணம் இருக்கிறது.

ஆனால் காந்திஜி எந்தப் பட்டமும் பெறவில்லை. நான் சொல்வதற்குச் சிலர் பதிலடி கொடுப்பார்கள். ஆனால், ஆதாரங்களுடன் பேசுகிறேன்.

காந்திஜி படிக்கவில்லை என்று சொல்ல யாருக்கும் தைரியம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆனால் நான் சொல்கிறேன், அவர் பல்கலைக்கழகப்பட்டம் ஒன்றுகூடப் பெறவில்லை தெரியுமா?” என்று கூறினார்.

மேற்கொண்டு பேசியவர், “அவர் சட்டக்கல்வியில் பட்டம் பெற்றவர் என்றும் நம்மில் பலரும் நினைக்கிறார்கள். ஆனால், அவர் அவ்வாறு பெறவில்லை. உயர்நிலைப் பள்ளி டிப்ளமோ மட்டுமே அவருடைய கல்வித் தகுதி,” என்றார்.

மேலும், “அவர் சட்டக்கல்விக்குத் தகுதியானவர். ஆனால், அவர் அதில் பட்டம் பெறவில்லை. இருந்தாலும் அவர் தேசத்தின் தந்தை ஆனார். அதற்கு எவ்வளவு படித்தார் என்பதைப் பாருங்கள்.

ஆகையால் நான் உங்களுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். பட்டம் பெறுவதை மட்டுமே கல்வியாகக் கருதும் சம்பிரதாயத்தைக் கடைபிடிக்காதீர்கள்,” என்று பேசினார்.

மனோஜ் சின்ஹா தனது உரையில் காந்தியின் பட்டங்களைப் பற்றி ஆதாரங்களுடன் பேசுகிறேன் என்று கூறினார். ஆனால், அவரது கூற்றுகளை உறுதி செய்வதற்குரிய எந்த ஆதாரத்தையும் அவர் வழங்கவில்லை.

ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா

ஆனால், மகாத்மா காந்தியின் கல்வி தொடர்பான ஆவணங்கள், மனோஜ் சின்ஹாவின் கூற்றுகளுக்கு நேர்மாறான உண்மைகளை முன்வைக்கின்றன.

தேசிய காந்தி அருங்காட்சியகத்தில் இருந்து பிபிசி ஹிந்திக்கு கிடைத்த ஆவணங்களின்படி, காந்தி லண்டன் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்ட சட்டக் கல்லூரியான இன்னர் டெம்பலில் சட்டக்கல்வியில் பட்டம் பெற்றார்.

காந்திக்கு 1891இல் சட்டத்தரணியாக(Bar-at-Law) சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்தச் சான்றிதழ் போக, மகாத்மா காந்தி கையெழுத்திட்ட ஆவணமும் பார் கவுன்சில் முன்பாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இன்னர் டெம்பலில் அவர் அனுமதிக்கப்பட்டதற்கான ஆவணம் உள்ளது. அந்த ஆவணத்தின் எண் 7910. அதில் இன்னர் டெம்பல் சட்டக்கல்லூரியில் அவரது சேர்க்கைக்கான அறிவிப்பு, சேர்க்கைக்கான செலவு, பதிவுக் கட்டணம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.

லண்டனில் சட்டம் படித்த பிறகு, காந்தி இந்தியாவுக்குத் திரும்பினார். பம்பாய் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். ஆனால், வக்கீல் தொழில் அங்கு அவருக்குச் சரியாக நடக்கவில்லை.

மகாத்மா காந்தி

பட மூலாதாரம், GANDHI NATIONAL MUSEUM

ஆவணங்கள் என்ன சொல்கின்றன?

தேசிய காந்தி அருங்காட்சியகத்தில் இருந்து பிபிசி பெற்ற ஆவணங்களில், 2020ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் ‘காந்தி ஆஸ் எ லாயர்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட பம்பாய் உயர்நீதிமன்றத்தில் சேர்வதற்கான காந்தியின் விண்ணப்பத்துடைய நகலும் அடக்கம்.

இந்த விண்ணப்பம் 1891இல் கொடுக்கப்பட்டது. மகாத்மா காந்தியின் கையெழுத்து அந்த ஆவணத்தில் உள்ளது.

ஆனால், மகாத்மா காந்தியால் பம்பாய் உயர்நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர் பணியைத் தொடர முடியாமல் போகவே, ராஜ்கோட் சென்று கத்தியவார் அரசியல் நிறுவனத்தில் பணியாற்றினார்.

ராஜ்கோட் அரசியல் அமைப்பின் அரசிதழில், அங்குள்ள நீதிமன்றங்களில் பணியாற்றுவதற்கான மகாத்மா காந்தியின் விண்ணப்பம் பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மகாத்மா காந்தி

பட மூலாதாரம், Getty Images

1891ஆம் ஆண்டின் அந்த ஏஜென்சியுடைய அறிவிப்பு எண் 16, சட்டத்தரணி எம்.கே.காந்தி கத்தியவார் அரசியல் ஏஜென்சியின் நீதிமன்றங்களில் பணியாற்ற அனுமதி கோரினார் என்பதைக் காட்டுகிறது.

இருப்பினும் கத்தியவாரில்கூட அவர் சட்டப் பணியில் சிறப்பான வெற்றியைப் பெறவில்லை.

1893இல் கத்தியவாரை சேர்ந்த தாதா அப்துல்லா என்ற இஸ்லாமிய வணிகர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை அணுகினார்.

தாதா அப்துல்லா தென்னாப்பிரிக்காவில் வெற்றிகரமான கப்பல் வணிகத்தை நடத்தி வந்தார். அங்கு தனது வணிகம் சார்ந்த வழக்குகளில் பணியாற்ற காந்தி அங்கு வர வேண்டும் என்று தாதா அப்துல்லா விரும்பினார்.

மகாத்மா காந்தி

பட மூலாதாரம், GANDHI NATIONAL MUSEUM

தாதா அப்துல்லாவின் தூரத்து உறவுக்கார சகோதரருக்கும் ஒரு வழக்கறிஞர் தேவைப்பட்டார். அதுவும் கத்தியவாரை சேர்ந்த வழக்கறிஞராக இருந்தால் நல்லது என்றும் கருதினார்.

தாதா அப்துல்லாவுடைய அழைப்பை ஏற்று காந்தி தென்னாப்பிரிக்கா சென்றார். அங்கு அவருடைய வழக்குகளில் வாதாட நடால் நகரில் ஓராண்டு தங்க வேண்டியிருந்தது. அப்போது தென்னாப்பிரிக்காவும் ஆங்கிலேயர்களின் காலனியாதிக்கத்தின் கீழ் இருந்தது.

ஏப்ரல் 1893இல், தனது 23 வயதில் காந்தி தென்னாப்பிரிக்காவிற்கு சென்று அப்துல்லாவின் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார்.

மகாத்மா காந்தி

பட மூலாதாரம், GANDHI RASHTRIYA SANGHRALYA

மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் என்ன சொல்கிறார்?

காந்தியின் பட்டங்கள் குறித்து மனோஜ் சின்ஹா கூறியதற்கு மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தியும் பதிலளித்துள்ளார்.

அவர் மனோஜ் சின்ஹாவின் கூற்றை மறுத்து அடுத்தடுத்து ட்வீட் செய்தார்.

ஒரு ட்வீட்டில், “எம்.கே.காந்தி இரண்டு முறை மெட்ரிகுலேஷன் படித்தார். முதல்முறை ராஜ்கோட் ஆல்ஃபிரட் உயர்நிலைப் பள்ளியில் படித்தார், இரண்டாவதாக அதற்கு இணையாக லண்டனில் உள்ள பிரிட்டிஷ் மெட்ரிகுலேஷனில் படித்தார். பிறகு லண்டன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிய சட்டக்கல்லூரியான இன்னர் டெம்பலில் சட்டம் பயின்ற்று, பட்டம் பெற்றார்,” என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர், “காந்திஜி லத்தீன் மொழியிலும் பிரெஞ்சு மொழியிலும் ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு டிப்ளமோக்கள் பெற்றார்,” என்று கூறினார்.

மற்றொரு ட்வீட்டில், “இதுகுறித்த அறிவை துணை நிலை ஆளுநர் பெற முடியும் என்ற நம்பிக்கையுடன் பாபுவின் சுயசரிதையை ஜம்முவிலுள்ள ராஜ் பவனுக்கு அனுப்பியுள்ளேன்,” என்றும் கூறினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »