Press "Enter" to skip to content

ராகுல்காந்திக்கு எம்.பி. பதவி திரும்பக் கிடைக்க வாய்ப்புள்ளதா? அரசியல் சட்டம் என்ன சொல்கிறது?

பட மூலாதாரம், Getty Images

ராகுல்காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பு வெளியான மறுநாளே அவரது எம்.பி. பதவியைப் பறித்து மக்களவைச் செயலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல்காந்தியின் எம்.பி. பதவி தகுதி நீக்கம் செய்யப்படுகிறது, நீதிமன்ற தீர்ப்பு வெளியான மார்ச் 23-ம் தேதி முதலே இது அமலுக்கு வருகிறது என்று அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 102(1)-ன் படி இந்த தகுதிநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மோசடி குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகி நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற நீரவ் மோதி, லலித் மோதி உள்ளிட்ட சிலர் குறித்துப் பேசும் போது மோதி என்ற பின்னொட்டை குறிப்பிட்டு அவர் முன்வைத்த விமர்சனம் தொடர்பாக 2019-ம் ஆண்டு இந்த அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

2 ஆண்டுகள் சிறைத் தண்டனை எதிரொலியாக பதவியிழந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பலர் உண்டு. ஆனால், அவதூறு வழக்கிற்காக ஒருவரது எம்.பி. பதவி பறிக்கப்படுவது இதுவே முதல் முறை.

ஜெயலலிதா தகுதி நீக்கம்

ராகுல்காந்தி தகுதிநீக்கம் ரத்தாகுமா?

பட மூலாதாரம், Getty Images

2014-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி சொத்துக்குவிப்பு வழக்கில் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, முதலமைச்சர் பதவியில் இருந்து உடனே அவர் விலக நேரிட்டது.

அந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி ஜெயலலிதாவின் எம்.எல்.ஏ. பதவியைப் பறித்து அப்போதைய தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் தனபால் அறிவிப்பு வெளியிட்டார். ஜெயலிலதாவின் எம்.எல்.ஏ. பதவி தீர்ப்பு வெளியான நாள் முதலே ரத்தாகிவிட்டதாக அவர் அந்த அறிவிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்-1951, பிரிவு 8-ன் படி தண்டனைக் காலம் முடிவடைந்த பிறகு அடுத்து வரும் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் அந்த அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

குல்தீப் சிங் செங்கார் பதவி பறிப்பு

உத்தரபிரதேச மாநிலம் பங்கார்மாவ் தொகுதியில் இருந்து பா.ஜ.க. சார்பில் சட்டப்பேரவைக்குத் தேர்வான குல்தீப் சிங் செங்காருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து டெல்லியின் தீஸ் ஹசாரி நீதிமன்றம் 2019-ம் ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி தீர்ப்பளித்தது.

நீதிமன்ற தீர்ப்பு வெளியாகி 2 மாதங்கள் கழித்த பிறகே, 2020-ம் ஆண்டு பிப்ரவரி 25-ம் தேதியன்று அவரை தகுதிநீக்கம் செய்து உத்தரபிரதேச சட்டமன்ற செயலகம் அறிவிப்பு வெளியிட்டது.

ராகுல்காந்தி தகுதிநீக்கம் ரத்தாகுமா?

பட மூலாதாரம், Getty Images

தகுதிநீக்கம் ரத்தாகியுள்ளதா? வரலாறு என்ன சொல்கிறது?

குற்ற வழக்கில் சிறைத் தண்டனை பெற்றதால் பதவி பறிக்கப்பட்ட எம்.எல்.ஏ. ஒருவர் பதவியை திரும்பப் பெற்ற நிகழ்வும் நடந்தேறியுள்ளது. இதனால்தான், ஹரியாணா மாநிலம் கல்கா தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்குத் தேர்வான காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரதீப் சவுத்ரி குறித்து பேசுவது அவசியமாகிறது.

ஹிமாச்சல் பிரதேச மாநிலம் பட்டி நகர நீதிமன்றத்தால் 2021-ம் ஆண்டு ஜனவரி 28-ம் தேதி பிரதீப் சவுத்ரிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 2011-ம் ஆண்டு இளைஞர் உயிரிழப்பைத் தொடர்ந்து பட்டி சௌக் முற்றுகை, அரசுப் பணிகளை தடுத்தல் ஆகிய புகார்களில் அவரை குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்தது.

நீதிமன்ற தீர்ப்பு வெளியான 2 நாட்களுக்குப் பிறகு அவரை தகுதிநீக்கம் செய்து ஹரியாணா சட்டமன்றம் அறிவிக்கை வெளியிட்டது. இமாச்சல பிரதேச உயர்நீதிமன்றத்தில் பிரதீப் குமார் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட தீர்ப்புக்கு ஏப்ரல் 19-ம் தேதி நீதிபதிகள் தடை விதித்தனர்.

அதே ஆண்டு மே 20-ம் தேதி தகுதி நீக்கத்தை ரத்து செய்து பிரதீப் சவுத்ரியை மீண்டும் எம்.எல்.ஏ.வாக அங்கீகரித்து ஹரியாணா சட்டமன்ற சபாநாயகர் ஞான் குப்தா அறிவிப்பு வெளியிட்டார்.

பிபிசியிடம் பேசிய பிரதீப் சவுத்ரியின் மகன் அமன் சவுத்ரி, “என்னுடைய தந்தைக்கு விதிக்கப்பட்ட தீர்ப்புக்கு உயர்நீதிமன்றம் ஏப்ரல் மாதமே தடை விதித்துவிட்டது. அதற்கு ஒரு மாதத்திற்குப் பிறகே ஹரியாணா சபாநாயகர் அவரது தகுதிநீக்கத்தை ரத்து செய்தார்” என்று கூறினார்.

தகுதிநீக்க ரத்துக்காக காத்திருக்கும் தேசியவாத காங்கிரஸ் எம்.பி.

ஹரியாணாவில் கல்கா தொகுதி எம்.எல்.ஏ. பிரதீப் சவுத்ரிக்கு அவரது பதவி திரும்பக் கிடைத்துவிட்டது. ஆனால், லட்சத்தீவு தொகுதியில் இருந்து தேசியவாத காங்கிரஸ் சார்பில் மக்களவைக்கு தேர்வான முகமது ஃபைசல் அவரது பதவியைத் திரும்பப் பெற இன்னும் காத்திருக்கிறார்.

கடந்த ஜனவரி 11-ம் தேதி, கொலை முயற்சி வழக்கு ஒன்றில் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து லட்சத்தீவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2 நாட்கள் கழித்து அவரது எம்.பி. பதவியைப் பறித்து மக்களவை செயலகம் அறிவிக்கை வெளியிட்டது.

முகமது ஃபைசலுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறைத் தண்டனைக்கு கேரள உயர் நீதிமன்றம் ஜனவரி 25-ம் தேதியன்று தடை விதித்தது. அவரை மீண்டும் மக்களவை உறுப்பினராக அங்கீகரிக்க மத்திய சட்ட அமைச்சகம் பரிந்துரைத்திருக்கிறது, ஆனால் இன்னும் அது நடைமுறைக்கு வரவில்லை என்கிறது டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ்.

தகுதி நீக்கமும், பதவியை திரும்பப் பெறுவதும் எப்படி?

ராகுல்காந்தி தகுதி நீக்கம் ரத்தாகுமா?

பட மூலாதாரம், Getty Images

அரசியல் சட்டப்பிரிவு 102(1) மற்றும் 191(1)இன் படி, நாடாளுமன்றம் அல்லது சட்டமன்ற உறுப்பினர், லாபம் தரும் பதவியில் இருந்தாலோ, மனநலம் குன்றியவராக இருந்தாலோ, திவாலாக இருந்தாலோ அல்லது சட்டப்பூர்வ இந்தியக் குடிமகன் அல்லாதவராக இருந்தாலோ தகுதி நீக்கம் செய்யப்படுவார்.

தகுதி நீக்கத்தின் இரண்டாவது விதி அரசியலமைப்பின் பத்தாவது அட்டவணையில் உள்ளது. கட்சி மாறுவதன் அடிப்படையில் உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்வதற்கான விதிகள் இதில் உள்ளன.

இது தவிர, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்-1951ன் கீழ், எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. தனது உறுப்பினர் பதவியை இழக்கலாம். இந்த சட்டத்தின் மூலம் குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் உறுப்பினர் பதவியை ரத்து செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் பிரிவு 8(3) இன் கீழ், ஒருவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால், அவர் மக்களவை அல்லது சட்டமன்ற உறுப்பினராகத் தொடரும் தகுதியை இழக்கிறார்.

எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் மற்றும் பதவியை மீண்டும் திரும்பப் பெறுவது போன்றவற்றில் இறுதி முடிவு அவைத் தலைவர் வசமே இருக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »