Press "Enter" to skip to content

விசாரணைக் கைதிகளின் பல்லைப் பிடுங்கி காவல் துறை கொடுமை: 2 தனிப்பிரிவு காவலர்கள் இட மாற்றம்

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக் கைதிகளை உதவிக் காவல் கண்காணிப்பாளர் (ஏ.எஸ்.பி.) பல்வீர் சிங், கொடூரமாகத் தாக்கி, பற்களைப் பிடுங்கியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தனிப்பிரிவு காவலர்கள் இருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக ஏ.எஸ்.பி. பல்வீர்சிங் இடைநீக்கம் செய்யப்பட்டு, இந்த விவகாரம் குறித்து சார் ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

அம்பாசமுத்திரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பல் பிடுங்கப்பட்டது குறித்த சார் ஆட்சியர் விசாரணை திங்கள்கிழமை முதல் நடைபெற்று வருகிறது.

காவல் துறை விசாரணையின்போது பல் பிடுங்கி கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக குற்றம்சாட்டுவோர் நேற்று சனிக்கிழமை உதவி ஆட்சியர் விசாரணையில் ஆஜராகி தங்களுக்கு நேர்ந்தது குறித்து விவரித்தனர்

இதனிடையே, பிபிசி தமிழிடம் இந்த விவகாரம் குறித்துப் பேசிய மனித உரிமை செயற்பாட்டாளரும் மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் செயல் இயக்குநருமான ஹென்றி டிஃபேன், முதல் முதலாக இந்த பல்பிடுங்கும் குற்றச்சாட்டை பொதுவெளியில் வைத்த ஒருவர் விவகாரத்தில் காவல் நிலையத்தில் இருந்த ரத்தக் கறைகள் கழுவி அகற்றப்பட்டதாகவும், ஆனால், இந்த விவகாரம் குறித்து தனிப்பிரிவு காவலர்கூட எஸ்.பி.க்கு தகவல் தரவில்லையா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில் விக்கிரமசிங்கபுரம் காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் போகன் மற்றும் கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் ராஜ்குமார் ஆகிய இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவிட்டுள்ளார்.

தனிப்பிரிவு காவலர் என்பவர் யார்?

பல்வீர் சிங்

ஒவ்வொரு மாவட்டப் போலீசிலும், தனிப்பிரிவு என்ற ஒன்று செயல்படும். ஆங்கிலத்தில் இது ‘சிறப்பு பிராஞ்ச்’ (SB) என்று அழைக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்தத் தனிப்பிரிவு ஒரு ஆய்வாளர் தலைமையில் செயல்படும். ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் ஒரு தனிப்பிரிவு காவலர் பொறுப்பாக இருப்பார். இந்தத் தனிப்பிரிவில் பணியாற்றும் ஆய்வாளர் முதல் காவலர்கள் வரை யாரும் காவல் துறை சீருடை அணியமாட்டார்கள்.

அந்தந்த காவல் நிலையத்தில், காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நடக்கும் முக்கிய விவகாரங்கள், பதிவு செய்யப்படும் வழக்குகள், போராட்டங்கள், முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் குறித்து அவர் தனிப்பிரிவு அலுவலகத்துக்கு உடனடியாக தகவல் அளிப்பார். எப்போதும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளருடன் நேரடித் தொடர்பில் இருக்கும் தனிப்பிரிவு ஆய்வாளர் முக்கியத் தகவல் எனில் உடனடியாக அதை காவல் கண்காணிப்பாளர் கவனத்துக்கு எடுத்துச் செல்வார்.

இந்த வகையில், தனிப்பிரிவு காவலர் என்பவர் ஒவ்வொரு காவல் நிலையப் பகுதியிலும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் கண்களும், காதுகளுமாக செயல்படுவார்.

எஸ்.பி.சி.ஐ.டி. எனப்படும் தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை என்பது இதில் இருந்து மாறுபட்டது. அவர்களுக்கு தனிப்பிரிவு போல பரவலான வலைப்பின்னல் இருக்காது. ஆனால், செயல்படும் முறை தனிப்பிரிவு பெரும்பாலும் தனிப்பிரிவு காவலரை ஒத்தே இருக்கும். ஒவ்வொரு காவல் உட்கோட்டத்திலும் (அதாவது டிஎஸ்பி எல்லைப் பகுதியிலும்) ஒரு எஸ்.பி.சி.ஐ.டி. காவலர் இருப்பார்.

அவர் அதிமுக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை அராசங்கத்தின் கவனத்துக்கு கொண்டுசெல்லும் வகையில் தகவல்களை அளிப்பார். இது அவர்களது மாவட்ட அலுவலகத்துக்கு சென்று உடனடியாக, சென்னைக்கும் அங்கிருந்து அரசாங்க மட்டத்துக்கும் தகவல்களை கொண்டு சேர்ப்பதாக இருக்கும். இப்போது நடவடிக்கைக்கு உள்ளாகியிருப்பவர்கள் தனிப்பிரிவை சேர்ந்தவர்கள்தான்.

அவர்கள் தற்போது மாற்றப்பட்டுள்ள ஆயுதப்படை என்பது, வழக்குப் பதிவு செய்யும் அதிகாரமோ, புலனாய்வு செய்யும் அதிகாரமோ இல்லாத காவல் துறை பிரிவு. அவசர காலத்தில், சட்டம் ஒழுங்கு சிக்கலாகும் நேரத்தில் அந்த இடத்தில் பாதுகாப்புக்காக மட்டும் இந்தப் பிரிவு அனுப்பப்படும். எனவே, ஆயுதப்படைக்கு அனுப்புவது என்பது அதிகாரத்தையும், முக்கியத்துவத்தையும் குறைப்பது ஆகும்.

மனித உரிமை ஆணையம் விசாரணை

இந்த பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக, மாநில மனித உரிமை ஆணையம், தேசிய மனித உரிமை ஆணையம் ஆகியவையும் விசாரித்து வருகின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »