Press "Enter" to skip to content

ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம்: காரணம் என்ன?

தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக இரண்டாவது முறையாகத் தீர்மானம் நிறைவேற்றம். மசோதாக்களுக்கு அனுமதி வழங்க ஆளுநருக்கு உரிய காலக்கெடுவை நியமிக்க மத்திய அரசுக்கு கோரிக்கை. பிரதமருடன் நெருக்கம் காட்டியதாக எழுந்த விமர்சனங்களால் எழுந்த நடவடிக்கையா?

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநர் உரிய காலக்கெடுவுக்குள் முடிவெடுக்க வேண்டுமென மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று நடந்ததென்ன?

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரம் முடிந்த உடன் தனித் தீர்மானம் தாக்கல் செய்யப்படவிருந்தது. அப்போது, எதிர்க்கட்சி துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து ஓ. பன்னீர் செல்வத்தை நீக்க வேண்டும் என கவன ஈர்ப்புத் தீர்மானம் ஒன்றை அ.தி.மு.கவின் சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி கொண்டு வந்தார்.

அப்போது, முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வரவுள்ள தனி தீர்மானத்தை இன்று நிறைவேற்றி விட்டு நாளை உங்களுடைய தனித் தீர்மானம் குறித்து விவாதிப்போம் என்று சபாநாயகர் கூறினார். இதனை ஏற்காத அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். பிறகு அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதற்குப் பிறகு, ஆளுநர் குறித்து பேசக்கூடாது என்று உள்ள விதியைத் தளர்த்துவதற்கான தீர்மானத்தை அவை முன்னவர் துரைமுருகன் கொண்டு வந்தார். அந்தத் தீர்மானத்திற்கு மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும் என்பதால், சட்டப்பேரவையில் கதவுகள் மூடப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவையில் இது போன்று வாக்கெடுப்பு நடத்தப்படுவது இதுவே முதல் முறை.

ஆதரவு வாக்குகள் 144

தமிழ்நாடு முதல்வர்

அப்போது தீர்மானத்திற்கு ஆதரவாக 144 வாக்குகளும் எதிராக இரண்டு வாக்குகளும் (பா.ஜ.கவின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள்) பதிவாயின.

இதற்குப் பிறகு, ஆளுநர் ஆர்.என். ரவி தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனித் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார்.

அதன் மீது பேசிய முதலமைச்சர், ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக இது போன்ற தீர்மானத்தைக் கொண்டு வரும் நிலையை ஆளுநர் ஏற்படுத்தியிருப்பதாகக் கூறினார்.

“இந்த ஆண்டு ஆளுநர் உரை கூட்டத் தொடர் நடத்தி முடிக்கப்பட்டு, இன்னும் நிதிநிலை அறிக்கை மற்றும் மானியக் கோரிக்கை தொடர்பான சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிவதற்குள், இரண்டாவது முறையாக ஆளுநர் பற்றி தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய விரும்பத்தகாத ஒரு சூழலை, இந்த அரசு உருவாக்கவில்லை. ஆனால் ஆளுநர், அரசியல் சட்டத்தை கடந்து ஓர் அரசியல் கட்சியின் கண்ணோட்டத்துடன் செயல்படுவதால் இப்படியொரு தீர்மானத்தை இரண்டாவது முறையாக நான் முன்மொழிய வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை

அனுமந்தய்யா நிர்வாக சீர்திருத்த ஆணையம் 1969-ல், “கட்சி அரசியல் வேறுபாடு மற்றும் ஒருதலைபட்சமான செயல்பாடுகளின்றி, நம்பிக்கை வைக்கக் கூடியவராக ஆளுநர் இருக்க வேண்டும்” என்று கூறியது.

சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தலைமையிலான “ராஜமன்னார் குழு” ஒன்றிய-மாநில அரசு உறவுகள் பற்றி அளித்த அறிக்கையில், “ஆளுநர் பதவியை ஒழிக்க மிக உகந்த தருணம் இது” என்று பரிந்துரைத்தது. அந்த அறிக்கை மற்றும் பரிந்துரைகள் 5 நாட்கள் விவாதிக்கப்பட்டு, மாநில சுயாட்சித் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்பது வரலாறு.

ஒன்றிய அரசு – மாநில அரசு உறவுகள் பற்றி ஆராய நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சர்க்காரியா தலைமையிலான கமிஷன், “ஆளுநர் என்பவர் பற்றற்ற அடையாளம் உள்ளவராக இருக்க வேண்டும்” என்று பரிந்துரைத்தது.

அரசியல் சட்டத்தை மறுஆய்வு செய்ய பிரதமராக இருந்த வாஜ்பாய் அவர்கள் 2000ஆவது ஆண்டு நியமித்த உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற மாண்புமிகு தலைமை நீதிபதி வெங்கடாசலய்யா அறிக்கையும் இதே கருத்தை வலியுறுத்தியது.

இன்னும் சொல்லப்போனால், குடியரசு தலைவரைப் பதவி நீக்க “இம்பீச்மென்ட்” அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இருப்பது போல, ஆளுநர்களை நீக்க சட்டமன்றத்திற்கும் “இம்பீச்மென்ட்” அதிகாரம் வழங்கலாமா என ஒரு கலந்தாலோசனையையே அப்போது வெளியிட்டு, கருத்து கேட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆளுநர் ஆர்.என். ரவி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், அந்த அரசு உள்ள மாநில மக்களுக்கும் வழிகாட்டுபவராகவும், நண்பராகவும் ஆளுநர் இருக்க வேண்டும்” என்று எத்தனையோ உச்சநீதிமன்ற தீர்ப்புகளில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் நமது ஆளுநர், தமிழ்நாடு அரசுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் “நண்பராக” இருப்பதற்குத் தயாராக இல்லை என்பதை அவர் பதவியேற்றதிலிருந்து செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் வெளிப்படுத்தி வருகின்றன. இந்த அரசின் கொள்கைகளை, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை, இந்தச் சட்டமன்றத்தின் இறையாண்மையை, தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாக்களைக் கொச்சைப்படுத்தி பொதுவெளியில் பேசுகிறார். அதுவும் குறிப்பாக, மாண்புமிகு பிரதமர் அவர்கள் தமிழ்நாடு வரும்போதோ அல்லது பிரதமரைச் சந்திக்க நான் டெல்லி செல்லும்போதோ, தமிழ்நாடு அரசுக்கு எதிராகப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அதற்கு மேல் சென்று, “withhold” என்றால் நிராகரிக்கப்பட்டதாகப் பொருள் என்று ஆளுநர் விதண்டாவாதமாக பேசுகிறார். இந்த “withhold” அதிகாரத்தை ஆளுநருக்கு வழங்கவே கூடாது என்று சர்க்காரியா அறிக்கை கூறியதைக் கூட அறியாதவர் போல் பேசுகிறார்.

அரசியல் சட்டப்பிரிவு 200-இன்கீழ் “ஆளுநரால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட மசோதாவைச் சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றி அனுப்பி விட்டால், அந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பதைத் தவிர வேறு வழி ஆளுநருக்கு இல்லை” என்பதே தெளிவு.

சட்டத்தை உருவாக்கி நிறைவேற்றும் அதிகாரத்தை, மக்கள் பிரதிநிதிகள் அவையாக இருக்கக்கூடிய சட்டமன்றங்களுக்கு வழங்கிவிட்டு, அதற்கு ஒப்புதல் கையெழுத்து போடும் உரிமையை ஒரு நியமன ஆளுநருக்கு வழங்கியது மக்களாட்சி மாண்பு ஆகாது என்பதால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தும் முன்னெடுப்புகளை நாம் எடுக்க வேண்டும் எனக் கருதுகிறேன்.

அரசியல் சட்டம் ஆளுநருக்குத் தெரியவில்லை என்று நான் கூறமாட்டேன். ஆனால் அவருக்கு இருக்க வேண்டிய அரசியல் சட்ட விசுவாசத்தை, ‘அரசியல் விசுவாசம்’ அப்படியே விழுங்கி விட்டது என்றே இந்த அவையில் பதிவு செய்ய விரும்புகிறேன்.

பார்த்துப்பார்த்து உருவாக்கிய சட்டத்தை, தன்னுடைய விருப்பு வெறுப்பால் தடை போட்டுவிட்டு, உண்மைக்கு மாறான காரணங்களைச் சொல்லி மழுப்பி வந்தால், அதை நம்பும் அளவுக்கு தமிழ்நாடு, ஏமாந்தவர்கள் இருக்கக்கூடிய மாநிலம் அல்ல.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், அரசின் ஆளுநர் உரையில் இருந்த சில பகுதிகளை, சொற்களைத் தவிர்த்து விட்டு ஆளுநர் உரையாற்றியதை திருத்துவதற்காகவும், அரசின் ஆளுநர் உரையை முழுமையாக பதிவு செய்வதற்காகவும், நானே முன்மொழிந்து இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரில் 9-1-2023 அன்று ஒரு தீர்மானம் நிறைவேற்றினோம்.

இன்று, இதே மாமன்றத்தில், உங்கள் முன் ஒரு தீர்மானத்தை மொழிகிறேன்” என்று கூறிய முதலமைச்சர் தீர்மானத்தை வாசித்தார்.

“தமிழ்நாட்டு மக்களின் பேராதரவைப் பெற்று, ஆட்சிப்பொறுப்புக்கு வந்துள்ள தமிழ்நாடு அரசுக்கு, தமது மக்களின் எதிர்பார்ப்புகளையும், தேவைகளையும் நிறைவேற்ற வேண்டிய அரசமைப்புச் சட்டத்தின்படியான பொறுப்பும், ஜனநாயகரீதியான கடமையும் உள்ளது. இவற்றைக் கருத்தில்கொண்டு, மாண்புமிக்க இந்தச் சட்டமன்றப் பேரவைக்கு உள்ள இறையாண்மை மற்றும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படியான சட்டமியற்றும் பொறுப்புகளின் அடிப்படையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிறைவேற்றி அனுப்பியுள்ள பல்வேறு மசோதாக்களை மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் அனுமதி அளிக்காமல் காலவரையின்றி கிடப்பில் போட்டு, தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு எதிராகச் செயல்பட்டு வருவதை இப்பேரவை மிகுந்த வருத்தத்துடன் பதிவு செய்கிறது.

அதுமட்டுமின்றி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்கள் குறித்து பொதுவெளியில் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் தெரிவிக்கும் சர்ச்கைக்குரிய கருத்துகள், அவர் வகிக்கும் பதவி, எடுத்துக் கொண்ட பதவிப் பிரமாணம் ஆகியவற்றுக்கும், மாநிலத்தின் நிர்வாக நலனுக்கும் ஏற்புடையதாக இல்லை என்பதோடு, அரசமைப்புச் சட்டத்திற்கும், கடைப்பிடிக்கப்பட்டு வரும் மரபுகளுக்கு எதிராகவும், இப்பேரவையின் மாண்பைக் குறைத்து, நாடாளுமன்ற ஜனநாயகத்தில் சட்டமன்றத்தின் மேலாண்மையை (Supremacy of Legislature) சிறுமைப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.

எனவே மாநில மக்களின் குரலாக விளங்கும் சட்டமன்றங்களில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு அந்தந்த மாநில ஆளுநர்கள் ஒப்புதல் வழங்க குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசையும், மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களையும் வலியுறுத்துவது என்றும் மக்களாட்சி தத்துவம் மற்றும் மாட்சிமை பொருந்திய இச்சட்டமன்றத்தின் இறையாண்மை ஆகியவற்றிற்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து தமிழ்நாடு மக்களின் நலனுக்கு எதிராகச் செயல்படுவதைத் தவிர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் சட்டமியற்றும் அதிகாரத்தை நிலைநாட்டும் வகையில், இப்பேரவை நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு உரிய காலத்திற்குள் ஒப்புதல் அளித்திட வேண்டுமென்று, ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை ஒன்றிய அரசும், மாண்புமிகு குடியரசுத் தலைவரும் உடனடியாக வழங்கிட வேண்டும் என்றும் இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது,” எனும் தீர்மானத்தை நான் மொழிகிறேன்” என்று முதல் அமைச்சர் ஸ்டாலின் தமது தீர்மான விவரத்தை நிறைவுி செய்தார்.

இதற்குப் பிறகு, ஒவ்வொரு கட்சிக்கும் இந்தத் தீர்மானம் குறித்து பேசுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டது. வேல்முருகன், ஜவாஹிருல்லா, கோ.க. மணி, கு. செல்வப் பெருந்தகை உள்ளிட்டவர்கள் இந்தத் தீர்மானம் குறித்து பேசிய பிறகு, தி.மு.கவின் சார்பில் அவை முன்னவரான துரைமுருகன் பேசினார்.

அதற்குப் பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.

ஆளுநருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ஏன்?

தமிழ்நாடு அரசுக்கும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் இடையில் மோதல் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான் என்றாலும், ஒரே ஆண்டில், அதுவும் ஜனவரி முதல் ஏப்ரல் மாதத்திற்குள் ஆளுநருக்கு எதிராக இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பது இந்த மோதல் எவ்வளவு மோசமானதாக இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

இந்த சமீபத்திய தீர்மானத்திற்கு அடிப்படையாக அமைந்தது, சில நாட்களுக்கு முன்பு யுபிஎஸ்சி மாணவர்களிடம் பேசிய ஆளுநர், ஒரு மசோதாவை ஆளுநர் நிறுத்தி வைக்கிறார் என்றால் அந்த மசோதா இறந்துவிட்டதாகத்தான் அர்த்தம் என்று கூறியதுதான்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு 14 சட்டங்கள் தற்போது ஆளுநரால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அவரது இந்தக் கருத்து தமிழ்நாட்டில் பெரும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சட்டமன்றத்தை விட உயர்ந்த அதிகாரம் கொண்டவராக ஆளுநர் தன்னைக் காட்டிக்கொள்வதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

அடுத்த சில நாட்களில் பல்வேறு திட்டங்களைத் துவக்கி வைக்க தமிழ்நாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோதி வரவிருந்த நிலையில், ஆளுநர் இவ்வாறு வேண்டுமென்றே பேசியதாக ஆளும் தரப்பு கருதியது.

பிறகு கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து ஏப்ரல் 12ஆம் தேதி ஆளுநர் மாளிகைக்கு முன்பாக ஒரு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோதியின் வருகையின்போது, முதல்வருடன் பிரதமர் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியானதும் தி.மு.க. மத்தியில் ஆளும் பா.ஜ.கவிற்கு பணிந்து விட்டது என்ற விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் எழுந்தன.

“ஆளுநருக்கு எதிரான தனது நிலைப்பாட்டை மிக உறுதியாக முதலமைச்சர் இதற்கு முன்பே எங்காவது பதிவுசெய்திருக்க வேண்டும். பிரதமர் வந்தபோது பல்லாவரத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில்கூட அவர் பேசியிருக்கலாம்.

பிரதமர், ஆளுநர் ஆகியோர் இருக்கும் மேடையிலேயே, ஆளுநரை மாற்ற வேண்டும் என மு.க. ஸ்டாலின் பேசியிருக்க வேண்டும். அப்படி பேசியிருந்தால், அது அகில இந்திய அளவில் செய்தியாகியிருக்கும்.

கருணாநிதியாக இருந்திருந்தால் இதைக் கண்டிப்பாகச் செய்திருப்பார். மு.க. ஸ்டாலின் அமைதியானவராக இருக்கலாம். ஆனால், ஆளுநர் விஷயத்தில் சற்று கடுமை காட்டியிருக்கலாம். ஆகவே, இப்போதாவது இதைச் செய்திருக்கிறார்கள் என்றுதான் பார்க்க வேண்டியிருக்கிறது” என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன்.

தி.மு.க. பா.ஜ.கவுடன் நெருங்குகிறது என்ற தோற்றத்தை நாம் தமிழர் கட்சியினர் இணையவெளியில் ஏற்படுத்தி வருகிறார்கள்; ஆனால், அது உண்மையில்லை என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.

“பா.ஜ.கவை சித்தாந்த ரீதியில் எதிர்ப்பதில் தி.மு.க. உறுதியாக இருக்கிறது. ஏனென்றால் இதில் கொஞ்சம் நழுவினாலும் சிறுபான்மையினர் வாக்கு இல்லாமல் போய்விடும். சிறுபான்மையினர் வாக்கைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் தி.மு.கவிற்கு இருக்கிறது. மு.க. ஸ்டாலின் போதுமான அளவுக்கு பா.ஜ.கவை எதிர்க்கவில்லை என்ற கருத்தில் உண்மையில்லை. இப்போது ஆளுநருக்கு எதிராக நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானம் என்பது மத்திய அரசுக்கு எதிரான தீர்மானம்தான். அதைத் துணிச்சலாகத்தான் செய்திருக்கிறார்கள். மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையில் ஒரு ஒத்துழைப்பு இருக்கலாம். ஆனால், பா.ஜ.க. என்ற கட்சியோடு தி.மு.க ஒத்துழைக்கும் வாய்ப்பே இல்லை” என்கிறார் அவர்.

தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என். ரவி நியமிக்கப்பட்ட பிறகு, பல்வேறு மசோதாக்களை நிறுத்தி வைத்ததும், பல்வேறு இடங்களில் அவர் பேசும் பேச்சுகளும் தொடர்ந்து சர்ச்சை ஏற்படுத்திவருகின்றன.

ஆளுநர் ரவி

“சனாதன தர்மத்தால் ஆனது இந்தியா”, “திருக்குறள் உரையின் ஆன்மீக நீக்கம் செய்யப்பட்டிருக்கிறது”, தமிழ்நாடு என்று சொல்வதைவிட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும்” என்று பேசி சர்ச்சைகளைச் சந்தித்தவர், ஊட்டியில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டை தன்னிச்சையாக நடத்தினார்.

பிறகு, தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் குறித்து துறைரீதியாக தனக்கு பவர் பாயிண்ட் பிரஷண்டேஷன் நடத்த வேண்டுமெனக் கேட்டார். கோவையில் நடந்த தேர் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கு மிகத் தாமதமாக என்.ஐ.ஏவுக்கு மாற்றப்பட்டது என்றார்.

இதன் உச்சகட்டமாக, தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில், தமிழக அரசு தயாரித்துக் கொடுத்த உரையில் சில வார்த்தைகளைச் சேர்த்தும் சில வாக்கியங்களை நீக்கியும் வாசித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். இதனால், ஆளுநர் பேசியதே அவைக்குறிப்பில் இடம்பெறாமல், அரசு தயாரித்தளித்த அறிக்கை மட்டும் இடம்பெறும்வகையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டிவந்தது.

இந்த ஒட்டுமொத்த சர்ச்சைகளில், தமிழ்நாட்டின் பெயர் தமிழகம் என இருக்க வேண்டும் என்ற விவகாரத்தில் மட்டும் பெரும் எதிர்ப்பு எழுந்ததால் ஆளுநர் பின்வாங்கினார்.

“எனது கண்ணோட்டம் தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை அல்ல. எனது பேச்சின் அடிப்படை புரியாமல் விவாதமாகி விட்டது” என்று குறிப்பிட்டார்.

இவற்றின் உச்சகட்டமாக, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களை கிடப்பில் போட்டது மட்டுமல்லாமல், அவை இறந்து விட்டன என்றும் கூறியிருப்பதுதான் பெரும் ஆவேசத்தை ஆளும்கட்சி தரப்பில் ஏற்படுத்தியிருக்கிறது.

மற்றொரு பக்கம், ஆளுநர் விவகாரத்தை முன்னிறுத்தி வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை தி.மு.க எதிர்கொண்டால், அதை பா.ஜ.க எப்படி சமாளிக்கும் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. ஆகவே, தற்போது ஆளுநர் ஆர்.என். ரவி உருவாக்கியிருக்கும் நெருக்கடி, தி.மு.க அரசுக்கு மட்டுமல்லாமல் பா.ஜ.கவையும் ஒரு இக்கட்டான நிலையில் வைத்திருப்பதாக கருதப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »