Press "Enter" to skip to content

ஆளுநர் ரவி அரசு நிதியை பயன்படுத்துவதில் விதிமீறலில் ஈடுபட்டதாக நிதியமைச்சர் குற்றச்சாட்டு

ஆளுநர் ஆர்.என். ரவி விருப்புரிமை நிதியை பயன்படுத்துவதில் விதிமீறலில் ஈடுபட்டதாக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டியுள்ளார். விதிகளுக்கு உட்பட்டே இனிமேல் ஆளுநர் மாளிகை செலவழிக்க முடியும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார்.

முதலமைச்சர் தீர்மானத்தை வாசித்ததும் இந்தத் தீர்மானம் மீது உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். அப்போது காங்கிரஸ் கட்சியின் சார்பில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கு. செல்வப்பெருந்தகை, ஆளுநர் மாளிகை நிதியை தவறாகக் கையாளுவது குறித்து நிதியமைச்சர் பேசுவார் என எதிர்பார்த்தேன் என்று கூறினார்.

இதையடுத்து, அந்த விவகாரம் குறித்து நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் விரிவான விளக்கத்தை முன்வைத்தார். அந்த விளக்கத்தில் ஆளுநர் மீது பல நிதி விதி முறை மீறல் குற்றச்சாட்டுகளை அவர் சுமத்தினார்.

“ஆளுநருக்கு மூன்று தலைப்புகளில் அரசு நிதி ஒதுக்குகிறது. ஒன்று ஆளுநரின் செயலகத்திற்கானது. அடுத்ததாக ஆளுநரின் ஹவுஸ்ஹோல்ட். இதில் இரண்டு ராஜ்பவன்களின் வீட்டுச் செலவுகள் செலவழிக்கப்படும். அடுத்ததாக, விருப்புரிமை நிதி (Discretionary grants). 2.41 கோடி ரூபாயாக இருந்த நிதி ஒதுக்கீட்டை கடந்த ஆண்டு 2.86 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டு 3.63 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. ஆளுநரின் ஹவுஸ்ஹோல்ட் செலவு 11.6 கோடி ரூபாயாக இருந்ததை கடந்த ஆண்டு 15.93 கோடியாக உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டு 16.63 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது” என்றார் நிதியமைச்சர்.

இந்தத் தருணத்தில் குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, செல்வப்பெருந்தகை குறிப்பிட்ட விவகாரம் தொடர்பாக மட்டும் பதில் அளித்தால் பொருத்தமாக இருக்கும் என்றார். இதற்குப் பிறகு தொடர்ந்து பேசிய நிதியமைச்சர், “விருப்புரிமை நிதி எதற்காக வழங்கப்படுகிறது?

1937ல் உருவாக்கப்பட்ட நிதி நெறிமுறைகளின்படி இது வழங்கப்படுகிறது. 2011-12ல் 8 லட்ச ரூபாய் வழங்கப்பட்டது. அதற்கடுத்தடுத்த ஆண்டுகளில் இது எட்டு லட்ச ரூபாயாகவே தொடர்ந்தது. 2016-17ல் இது 5.44 லட்ச ரூபாயாக இருந்தது. 2017-18ல் இது 1.57 லட்ச ரூபாயாக ஆகக் குறைந்தது. இப்படி ஒரு லட்சத்து 57 ஆயிரம் ரூபாயாக இருந்த விருப்புரிமை நிதியை மூன்றே மாதத்தில் 50 லட்ச ரூபாயாகவும் பிறகு, ஐந்து கோடியாகவும் மாற்றியிருக்கிறார்கள்.

இதனை petty grant என்பார்கள். அதாவது இந்த ஆளுநரின் விருப்புரிமை நிதி என்பது பொதுத் துறை அல்லது அரசு – தனியார் பங்களிப்பில் செல்படும் நிறுவனங்களுக்கும் அரசின் நிதியைப் பெறத் தகுதியான தனி நபர்களுக்கும் ஆளுநர் அளிக்கும் நிதி நல்கை ஆகும். இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, எல்லா மாநிலங்களிலும் இதுதான் விதி. உத்தரப்பிரதேசம் நம்மைவிட குறைவான நிதியை ஒதுக்கினாலும் ஏழைகளின் மருத்துவ, கல்யாண உதவி, வாழ்வாதார உதவிகளை மட்டுமே செய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

விதிமீறல்கள் என்ன?

தமிழ்நாடு சட்டப்பேரவை

எப்போதுவரை இது ஒரு லட்சமாக, ஐந்து லட்சமாக, எட்டு லட்சமாக இருந்ததோ அப்போதுவரை பிரச்னை இல்லை. இந்த நிதி ஐந்து கோடி ரூபாய் ஆக இருக்கும் நிலையில், விதி தொடர்ந்து மீறப்பட்டு வருகிறது.

இதற்கு முன்பாக அவையில் நான் சொன்ன தகவலை திரும்பப்பெற வாங்குகிறேன். இரண்டு, இரண்டு கோடியாக அக்ஷய் பாத்ராவுக்கு வழங்கப்பட்டதாக அப்போது சொன்னேன்.

ஆனால், அக்ஷயபாத்ரா என்ற காரணத்தைச் சொல்லி ஆளுநரின் ஹவுஸ்ஹோல்ட் வங்கிக் கணக்கிற்கு பணம் மாற்றப்பட்டுள்ளது. பிறகு, அந்தப் பணம் அக்ஷய பாத்ராவுக்கும் வேறு நபர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆளுநரின் விருப்புரிமை செலவு 50 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டதிலிருந்து ஆளுநருக்கான மொத்த செலவு 18 கோடியே 38 லட்சம் ரூபாய். அதில் 11 கோடியே 32 லட்ச ரூபாய் அவர்களது கணக்குக்கு மாற்றப்பட்டு, எங்கே செலவிடப்பட்டது என்பது அரசுக்குத் தெரியாது. இது ஒரு விதிமுறை மீறல்.

petty என்றால் சிறு தொகை. அது ஐந்தாயிரமாக இருக்கலாம், ஐம்பதாயிரமாக இருக்கலாம். ஒரு லட்சமாக இருக்கலாம். ஆனால் நிச்சயமாக ஒரு கோடி ரூபாய், இரண்டு கோடி ரூபாயெல்லாம் வராது. எல்லா மாநிலங்களிலும் இந்த விருப்புரிமை நிதி மிகக் குறைவாகத்தான் வழங்கப்படுகிறது. பா.ஜ.க. ஆளும் கர்நாடகத்தில் 25 லட்ச ரூபாய், கேரளாவில் 25 லட்ச ரூபாய், மேற்கு வங்கத்தில் 25 லட்ச ரூபாய் என வழங்கப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தில் ஐந்து லட்சமாக வைத்திருக்கிறார்கள். ஆனால், அதை எப்படி செலவழிக்க வேண்டுமென்பதில் விதிகளை வகுத்திருக்கிறார்கள்.

வருந்தத்தக்க செலவினம்

நிதித் துறையின் சார்பில் ஒரு வருந்தத்தக்க தகவலைச் சொல்ல வேண்டியிருக்கிறது. 2021 செப்டம்பருக்குப் பிறகு இந்தத் தலைப்பில் வந்திருக்கும் பில்களைப் பார்த்தால், யுபிஎஸ்சி மாணவர்கள் கூட்டத்திற்கு ஐந்து லட்ச ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது.

தேநீர் விருந்துக்கு 30 லட்ச ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் கலாச்சார நிகழ்ச்சிக்கு 3 லட்ச ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. இந்தச் செலவுகள் எல்லாம் இந்தத் தலைப்பில் வந்திருக்கவே கூடாது. அதேபோல, ஒரே நபருக்கு திரும்பத் திரும்ப பணம் கொடுக்கக் கூடாது. ஆனால், ஒரே நபருக்கு ஆறு மாதங்களுக்கு ஐம்பத்தெட்டாயிரம் என்ற வகையில் சுமார் 3 லட்சம் ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பணியார்களுக்கு கூடுதலான ஆக ஒரு முறை 18 லட்சம் ரூபாயும் மற்றொரு முறை 14 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. நிதி நெறிமுறைகள் சொல்வதை மீறி அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு, நிதி அளிக்கப்பட்டுள்ளது. இது ஒரு வருந்தத்தக்க நிகழ்வு.

இனிமேல் இந்தத் தலைப்புக்கு பொருத்தமான நிதியை மட்டுமே செலவழிக்க முடியும் என நான் உறுதிமொழி அளிக்கிறேன். முன்பு அளித்த தகவல், அப்போது கிடைத்த விவரங்களின் அடிப்படையில் தரப்பட்டது. ஆனால் இப்போது பார்த்தால் வேறு கணக்கிற்கு நிதி மாற்றப்பட்டுள்ளது தெரிய வந்திருக்கிறது” என கூறினார் பழனிவேல் தியாகராஜன்.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் இந்தக் குற்றச்சாட்டுகள் மிகக் கடுமையானவையாகப் பார்க்கப்படுகின்றன.

குறிப்பாக அக்ஷய பாத்ரா அமைப்புக்கு நிதி ஒதுக்குவதாகச் சொல்லி, ஆளுநரின் ஹவுஸ்ஹோல்ட் கணக்கிற்கே நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது எனவும் எதற்குச் செலவழிக்கப்பட்டது என்றே தெரியாமல் சுமார் 11 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறியிருப்பதும் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »