Press "Enter" to skip to content

பாகிஸ்தானில் மக்கள் தொகை கணக்கெடுப்பு: இந்து மக்களை கணக்கெடுப்பது குறித்து எழுந்த சர்ச்சை என்ன?

பட மூலாதாரம், Getty Images

பாகிஸ்தானில் ஏழாவது மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்த ஆண்டு தொடங்கியுள்ளது.

நாட்டின் மக்கள் தொகை மற்றும் அது தொடர்பான பிற போக்குகளை அறிய கணினி மயமான தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது பாகிஸ்தான் வரலாற்றில் இதுவே முதல் முறை.

வரலாற்று ரீதியாக பாக்கிஸ்தானில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக எப்போதுமே சர்ச்சை இருந்து வந்துள்ளது. ஏழாவது மக்கள் தொகை கணக்கெடுப்பும் இதற்கு விதிவிலக்கல்ல.

தற்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பில் பிற விஷயங்கள் தொடர்பான சர்ச்சைகள் இருப்பதோடு கூடவே அந்நாட்டு இந்து மக்களிடையேயும் இது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி பாகிஸ்தான் புள்ளியியல் அலுவலகத்தின் கீழ் உள்ளது.

புள்ளியியல் அலுவலகம் வழங்கிய படிவங்களில் இந்துக்கள் மற்றும் பட்டியல் சாதியினர் என்று தனித்தனியாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்பும் பாகிஸ்தானில் இந்துக்கள் கணக்கெடுப்பு இந்த அடிப்படையில்தான் நடந்துள்ளது. ஆனால் இம்முறை எல்லா சாதியினரையும் சேர்த்து கணக்கெடுக்க வேண்டும் என இந்து தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினர், மக்கள்தொகையின் அடிப்படையில் வசதிகள் மற்றும் இடஒதுக்கீட்டை பெறுகின்றனர். நாடாளுமன்றத்தில் இட ஒதுக்கீடு மற்றும் அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு ஆகியவை இதில் அடங்கும். பாகிஸ்தானின் உயர்சாதி இந்துக்கள், பட்டியல் சாதியினருடன் சேர்த்து எண்ணப்பட்டால் சமூகம் பயனடையும் என்பதே இந்தக்கோரிக்கைக்கான காரணமாக சொல்லப்படுகிறது.

பிற சமூகங்களை விட பட்டியல் சாதி இந்துக்களின் தொகை அதிகம். அத்தகைய சூழ்நிலையில் இரு சமூகத்தினரும் ஒன்றாக இணையும்போது இந்துக்களின் குரல் வலுவாக இருக்கும் என உயர் சாதி இந்துக்கள் நம்புகிறார்கள்.

இந்த இரு சமூகத்தையும் வெவ்வேறு பிரிவுகளில் வைத்திருப்பது பாகிஸ்தானின் இந்துக்களுக்குப் பயனளிக்காது. இந்துக்கள் மட்டுமல்லாது எல்லா சிறுபான்மை சமூகங்களின் ஒற்றுமையையும் தான் ஆதரிப்பதாக பாகிஸ்தான் இந்து கவுன்சில் தலைவர் ரமேஷ் வான்க்வானி பிபிசியிடம் கூறினார்.

இதற்கு முன் 2017 ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது நாடு முழுவதிலும் இந்துக்களின் தொகை 45 லட்சமாக இருந்தது.

இருப்பினும் உண்மையான எண்ணிக்கை 80 லட்சத்திற்கு அருகில் இருக்கும் என்று வான்க்வானி கூறுகிறார். மக்கள் பதிவு செய்யப்படாததால் அதிக எண்ணிக்கையிலானவர்கள் இதில் கணக்கிடப்படவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

இந்துக்களிடையே வேறுபாடுகள்

”இந்துக்கள் கூட்டாக ஒன்றிணைந்து தங்களை பதிவு செய்யும் வகையில் விழிப்புணர்வு பிரசாரத்தை நடத்தி வருகிறோம். இது அவர்களின் வலிமையை உயர்த்தும்” என்றார் அவர்.

ஆனால் மற்ற சமூகங்களுடன் சேர்த்து இந்துக்களைக் கணக்கிடுவதை பட்டியல் சாதியைச் சேர்ந்த சிலர் எதிர்க்கின்றனர்.

பட்டியல் சாதிகளில் மேக்வார், கோலி, பீட், உட், பாக்டி மற்றும் வால்மீகி ஆகியோர் அடங்குவர்.

இந்தக் குழு தனக்கென தனி அடையாளத்தை விரும்புகிறது. இதன் மூலம் இடஒதுக்கீட்டில் தங்களுடைய பங்கு பராமரிக்கப்படும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

தாங்கள் பெரும்பான்மை சமூகமாக இருக்கும்போதிலும், கடந்த காலத்தில் பிராமணர்களாலும் தாக்கூர்களாலும் ஆளப்பட்டதாகவும் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்டதாகவும், மக்கள்தொகை கணக்கெடுப்பை எதிர்க்கும் பட்டியல் சாதி மக்கள் நம்புகிறார்கள்.

தாங்கள்தான் சிந்து நாகரிகத்தின் உண்மையான வாரிசுகள் என்று இந்த இந்துக்கள் நம்புகிறார்கள். தங்கள் ஆதிக்கத்தை தொடரும்பொருட்டு உயர்சாதி இந்துக்கள்,மக்கள்தொகை கணக்கெடுப்பில் பட்டியல் சாதியினரை தனியாகக் கணக்கிடுவதில் சர்ச்சையை உருவாக்குகிறார்கள் என்று இந்தப்பிரிவு மக்கள் கூறுகின்றனர்.

இவ்விரு பிரிவையும் ஒன்றாகக் கலப்பதால் எந்தப் பலனும் கிடைக்காது என்று இவர்கள் நம்புகிறார்கள்.

லாஜ்பத் பேல், தார்பார்க்கரைச் சேர்ந்த சமூக ஆர்வலர். அவர் பாகிஸ்தானின் பட்டியல் சாதி இந்துக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தி வருகிறார். உயர் சாதி இந்துக்களிடமிருந்து தங்கள் அடையாளத்தைப் பிரித்துச்சொல்லும்படி அவர்களுக்கு புரியவைத்து வருகிறார்.

woman

பட மூலாதாரம், Getty Images

‘உரிமையை பறிக்க முயற்சி’

“உயர்சாதி இந்துக்கள் அரசில் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் இடஒதுக்கீட்டின் பயனைப்பெறுகிறார்கள். மறுபுறம், பட்டியல் இனத்தவர்களான எங்களுக்கு வேலையோ, கல்வியோ, பிற வளங்களோ இல்லை. இரு பிரிவுகளையும் ஒன்றாக இணைத்து மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதன் மூலம் எங்கள் உரிமையை பறிக்க முயற்சி நடக்கிறது. பட்டியல் சாதிகளைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். ஆனால் நிலப்பிரபுக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் ஆலோசகர்கள் என்ற உயர்பதவிகளை பார்க்கும்போது உயர்சாதியை சேர்ந்தவர்களின் ஆதிக்கமே உள்ளது,” என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு அரசு வேலைகளில் ஐந்து சதவிகித இட ஒதுக்கீடு உள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பத்து இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தின் மேலவையில் நான்கு இடங்களும், பாகிஸ்தானின் மாகாண சட்டப்பேரவைகளில் மொத்தம் 23 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்த பட்டியல் சாதி மக்களின் கருத்தும் லாஜ்பத் பேலின் கருத்தும் ஒத்துப்போகவில்லை.

“பல பட்டியல் சாதி இந்துக்கள் தனி அடையாளத்துடன் உடன்படவில்லை,” என்று தார்பார்க்கரின் மற்றொரு ஆர்வலர் நந்த் லால் பிபிசியிடம் தெரிவித்தார்.

அரசு அளித்துள்ள விருப்பத்தேர்வு

கல்வி மற்றும் விழிப்புணர்வு காரணமாக பட்டியல் பிரிவினர், சமூகத்தின் முக்கிய நீரோட்டத்திலிருந்து வெகுவாக பின்தங்கி இல்லை. எனவே சாதி அடையாளம் அர்த்தமற்றது என்று இந்த மக்கள் நம்புகிறார்கள். அத்தகைய அடையாளத்தை பெரும்பாலானோர் வெளியில் சொல்லவும் விரும்பவில்லை. எனவே இந்த மக்கள் தங்களை இந்துக்களாக பதிவு செய்ய விரும்புகிறார்கள்.

இரு சமூகத்தினரும் தங்கள் விருப்பப்படி தங்கள் வகுப்பைத் தேர்ந்தெடுக்கலாம் என்று ஒரு விருப்பத்தேர்வை பாகிஸ்தான் அரசு வழங்கியுள்ளது.

வரலாற்று ரீதியாக சுதந்திரத்திற்கு முன், இரண்டு வகுப்புகளும் தனித்தனியாக கணக்கிடப்பட்டன, எனவே மக்கள்தொகை கணக்கெடுப்பு படிவத்தில் இரண்டு வகுப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்துக்கள் தங்கள் விருப்பப்படி தேர்வுசெய்யும் உரிமையை பெற்றுள்ளனர்.

பாகிஸ்தானின் கடைசி மக்கள் தொகை கணக்கெடுப்பு 2017 இல் நடைபெற்றது, அப்போது நாடு முழுவதும் முஸ்லிம்களின் எண்ணிக்கை 96.2 சதவிகிதமாக இருந்தது. பாகிஸ்தானில் சிறுபான்மையினர் மக்கள் தொகையில் இந்துக்கள்தான் அதிகம்.

இந்துக்களின் எண்ணிக்கை மொத்த மக்கள்தொகையில் 1.6 சதவிகிதம். அவர்களுடன் பட்டியல் பழங்குடி மக்களையும் சேர்த்தால் மொத்த மக்கள் தொகையில் இது இரண்டு சதவிகிதத்துக்கும் அதிகமாக இருக்கும்.

women

பட மூலாதாரம், Getty Images

மற்றவர்கள் எழுப்பும் கேள்விகள்

இது குறித்து சிந்து மாகாண அரசியல்வாதிகளும் கேள்வி எழுப்பியுள்ளனர். பாகிஸ்தானின் முக்கிய நகரமான கராச்சி இந்த மாகாணத்தில்தான் உள்ளது.

பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) தலைவர் பிலாவல் புட்டோ சர்தாரி, முழு செயல்முறையையும் கேள்விக்குள்ளாக்கியவர்களில் முக்கியமானவர். அவரது கட்சி சிந்து மாகாணத்தில் பல தசாப்தங்களாக ஆட்சி செய்து வருகிறது.

“மக்கள் தொகை கணக்கெடுப்பில் உள்ள தகவல்கள் தானாக நிரப்பப்பட வேண்டும். ஆனால் அதை எப்படி செய்வது என்று மக்களுக்குத் தெரியாவிட்டால், அது தொடர்பான தகவல்கள் நாட்டின் தொலைதூர கிராமங்களை சென்றடையாவிட்டால் அவர்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பில் எப்படி இணைய முடியும்?,” என்று பிலாவல் புட்டோ கேள்வி எழுப்பினார்.

வரலாற்று ரீதியாக கராச்சியில் அதிக இடங்களை பெறும் முத்தாயித்தா குவாமி இயக்கமும் இந்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கை தொடர்பாக அதிருப்தி வெளியிட்டுள்ளது.

கட்சி இதுவரை எந்த விஷயத்தையும் விமர்சிக்கவில்லை என்றாலும், கராச்சியின் மக்கள் தொகை குறைவாகக் காட்டப்படும் என்றும் இதன் காரணமாக வளங்களில் குறைந்த பங்கே கிடைக்கும் என்றும் அது அச்சம் வெளியிட்டுள்ளது.

கிராமப்புறங்களின் மக்கள்தொகை புள்ளிவிவரங்களில் குளறுபடி ஏற்படக்கூடும் என்று சிந்து தேசியவாதக் கட்சியும் கூறியுள்ளது.

முந்தைய மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, கராச்சியில் குடியேறிய வங்காள மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகள், எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை. இவர்களிடம் தேசிய அடையாள அட்டை கூடக்கிடையாது. இருப்பினும், இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில், பாகிஸ்தானில் வசிக்கும் வங்காளம், ஆப்கானி மற்றும் சீன மக்கள், பாகிஸ்தானியர் அல்லாதவர்களாக கணக்கிடப்படுவார்கள்.

இதன் காரணமாக கராச்சியின் மக்கள்தொகையைக் குறைத்து மதிப்பிடுவதற்கான சாத்தியக்கூறுகள் ஓரளவு அகற்றப்படலாம் என்று சிலர் நம்புகிறார்கள்.

மக்கள்

பட மூலாதாரம், Getty Images

மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான உண்மைகள் மற்றும் புள்ளிவிவரங்கள்

உலகின் ஐந்தாவது பெரிய மக்கள் தொகை கொண்ட நாடு பாகிஸ்தான்.

2017 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பாகிஸ்தானின் மக்கள் தொகை 20 கோடியே 70 லட்சமாகும். ஆயினும் உண்மையான மக்கள் தொகை இதை விட அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

நாடு முழுவதும் ஏழாவது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. இந்த செயல்முறை 2023 மார்ச் 1 ஆம் தேதி தொடங்கியது.

பாகிஸ்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பில் முதல் முறையாக கணினி மயமான தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதில் டேப்லெட்கள் மற்றும் கணினிமய வின்ணப்பங்கள் மூலம் தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

ஏழாவது மக்கள்தொகை கணக்கெடுப்பின் மதிப்பிடப்பட்ட செலவு 34 பில்லியன் பாகிஸ்தான் ரூபாய் ஆகும்.

இந்தப்பணி ஏப்ரல் 10ம் தேதிக்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான தகவல்கள் ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று பாகிஸ்தான் புள்ளியியல் அலுவலகம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் தரவுகளை சேகரிக்கும் பணியில் 95 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானின் 2017 மக்கள் தொகை கணக்கெடுப்பில், மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 2.4% ஆக பதிவாகியிருந்தது.

மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது கேட்கப்பட்ட கேள்விகள்

• வீட்டின் அடையாளம் தொடர்பான கேள்விகள் – அறைகளின் எண்ணிக்கை, கட்டுமானப் பொருட்கள், குடிநீர் ஆதாரம், கழிப்பறை மற்றும் பிற வசதிகள்.

• தகவல் மற்றும் தொடர்பாடல் வழிமுறைகள்- வீட்டில் இருக்கும் வானொலி, டிவி, கைபேசி, மடிக்கணினி மற்றும் கணினியின் எண்ணிக்கை.

• தொழில் மற்றும் வேலைவாய்ப்பு பற்றிய தகவல்கள்.

• கல்வி, திருமண நிலை, வயது, தேசியம், பாலினம், வீட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கை மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் தேசிய அடையாள அட்டை எண் பற்றிய தகவல்கள்

• மக்கள் தொகை கணக்கெடுப்பில் மக்களின் தாய்மொழி பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

•மதம் பற்றிய தகவல்களை வழங்குவது கட்டாயமாகும். இந்தத்தகவல் முஸ்லிம், கிறிஸ்தவர், இந்து, அஹ்மதி, பட்டியல் சாதி மற்றும் பிற வகுப்புகளின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும்.

இந்த முறை என்ன சிறப்பு

பாகிஸ்தானின் முதல் கணினி மயமான மக்கள் தொகை கணக்கெடுப்பு இதுவாகும். டேப்லெட்டுகளும், செயலிகளும், தரவுகளை சேகரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

பாகிஸ்தானில் முதன்முறையாக திருநங்கைகள் கணக்கெடுக்கப்படுகிறார்கள்.

முதன்முறையாக மக்கள் தங்கள் தகவல்களை போர்ட்டலில் நிரப்பும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களும் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றனர்.

முதன்முறையாக, எல்லா கட்டடங்களிலும் ஜியோ-டேக்கிங் செய்யப்படுகிறது. இதன் மூலம் எதிர்காலத்தில் பொருளாதார மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான கட்டமைப்பை தயாரிக்க முடியும். பாகிஸ்தானில் இதற்கு முன்பு பொருளாதாரக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டதில்லை.

தரவு சேகரிப்பாளர்களுடன் ராணுவ வீரர்கள் வராதது இதுவே முதல் முறை. இருப்பினும், பதற்றமான பகுதிகளில் தகவல் சேகரிப்பாளர்களுடன் காவல் துறை படை நிறுத்தப்பட்டுள்ளது.

மக்கள்

பட மூலாதாரம், ANADOLU AGENCY

கணினி மயமான மக்கள் தொகை கணக்கெடுப்பு செயல்முறை

முழு நாடும் 1,85,509 ப்ளாக்குகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, ஒரு ப்ளாக்கில் 200 முதல் 250 வீடுகள் வைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு தரவு சேகரிக்கும் ஊழியருக்கும் இரண்டு ப்ளாக்குகளில் இருந்து தரவு சேகரிக்கும் பொறுப்பு ஒதுக்கப்பட்டது.

தரவு சேகரிப்பு குழு வீடு வீடாகச் சென்று, தரவுகளைச் சேகரித்து, டேப்லெட்டில் உள்ளிட்டு, போர்ட்டலில் தகவல்களை நிரப்புமாறு மக்களைக் கேட்டுக்கொண்டது.

மக்கள் தகவலை நிரப்பிய பிறகு ஒரு குறியீடு உருவாக்கப்படுகிறது.

தகவல் சேகரிப்பாளர்கள் மீண்டும் வரும்போது இந்தக் குறியீட்டை மக்கள் அவர்களிடம் பகிர வேண்டும்.

இணையம் பிரச்னை பல பகுதிகளில் காணப்பட்டது. பல டேப்லெட்களை பிரதான சிஸ்டத்துடன் இணைக்க முடியவில்லை. பாகிஸ்தான் புள்ளியியல் பணியகம் இஸ்லாமாபாத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறையை அமைத்தது. அங்கு ஆஃப்லைன் டேப்லெட்டில் பதிவு செய்யப்பட்ட தரவுகள் உள்ளிடப்பட்டன.

ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் முடிவுகள் வெளியிடப்படும் என்று பாகிஸ்தான் புள்ளியியல் பணியகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் தாமதத்திற்கான சாத்தியத்தை நிராகரிக்க முடியாது.

மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் எதிர்கொண்ட சவால்கள்

மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஈடுபட்ட ஊழியர்கள் பல இடங்களில் மக்களின் எதிர்ப்பை சந்தித்துள்ளனர். அவர்கள் மீது மக்களிடையே நிறைய அவநம்பிக்கை இருந்தது. தாங்கள் செய்யும் வேலை என்ன, மக்கள் ஏன் அவர்களுக்கு உதவ வேண்டும் என்பதை அந்த ஊழியர்கள் மக்களுக்கு பல முறை விளக்க வேண்டியிருந்தது.

பாதுகாப்பு தொடர்பாகவும் பல சவால்கள் காணப்பட்டன. கைபர் பக்துன்க்வா மாகாணத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியாளர்களின் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்ட இரண்டு காவல் துறையினர் கொல்லப்பட்டனர்.

இணைய இணைப்பிலும் பல சிக்கல்கள் காணப்பட்டன. நாட்டின் சில பகுதிகளில் இணைய சேவை இல்லாததால் பணியாளர்கள் பல சிரமங்களை எதிர்கொண்டனர்.

பாகிஸ்தான் புள்ளியியல் பணியகத்தின் சிஸ்டம் மெதுவாக இயங்கியதாக சில பணியாளர்கள் புகார் கூறினர்.

ஊழியர்களுடன் தொலைபேசி எண்களைப் பகிர்வதில் பொதுமக்களுக்கு தயக்கம் காணப்பட்டது. மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியாளர்களை மார்க்கெட்டிங் ஊழியர்களாக கருதி பலர் வீடுகளின் கதவுகளை திறக்கவில்லை.

சிறு வணிகர்கள் மற்றும் கடைக்காரர்கள் எதிர்காலத்தில் வரி செலுத்தும் பயத்தில் அரசு புள்ளி விவரங்களில் பதிவு செய்யப்படுவதை எதிர்த்தனர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »