Press "Enter" to skip to content

12 மணி நேர வேலை: சட்டத்திருத்தத்தை நிறுத்திவைக்க தமிழக அரசு சொல்லும் காரணங்கள் என்ன?

தமிழ்நாட்டில் தொழில்நிறுவனங்களில் ஊழியர்களுக்கு தினமும் 12 மணி நேர வேலை வழங்கும் வகையில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திருத்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆளும் திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணியில் அங்கும் பெரும்பாலான கட்சிகளும் ஆட்சேபம் தெரிவித்த நிலையில், தொழிற்சங்க நிர்வாகிகளுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மூத்த அமைச்சர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் துறைமுருகன், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர், தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தொழிலாளர் நலத் துறை ஆணையர் ஆகியோர் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

இந்த கூட்டத்தில், தொழிலாளர்களின் நலன்களில் எக்காரணத்தைக் கொண்டும் தமிழக அரசு சமரசம் செய்து கொள்ளாது என்று தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் அமைச்சர்கள் உறுதியளித்தனர். இந்த நிலையில், 12 மணி நேர வேலைக்கு வகை செய்யும் சட்டத்திருத்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது.

முன்னதாக, சட்டப்பேரவையின் சமீபத்திய கூட்டத்தொடரின் கடைசி நாளான ஏப்ரல் 21ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டபோது, பேரவையில் இருந்து முதல் முறையாக ஆளும் திமுகவின் கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், மார்ச்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், மதிமுக ஆகியவற்றின் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக ஏப்ரல் 24ஆம் தேதி இந்த சட்டத்திருத்தத்தை அரசு கைவிடக் கோரி கம்யூனிஸ்ட் கட்சிகள் சென்னையில் ஆர்ப்பாட்டம் செய்தன.

அரசின் சட்டத்திருத்த நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்திரராசன், வேலை நேரத்தை அதிகரித்தால் தொழிலாளர்களின் ஆயுட்காலம் குறையும். எனவே, தமிழ்நாடு முதல்வர் இச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கூட்டத்தில் என்ன விவாதிக்கப்பட்டது?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்

இந்த நிலையில், நடைபெற்ற இன்றைய ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து தமிழக அரசு ஐந்து பக்க செய்திக்குறிப்பை வெளியிட்டிருக்கிறது. அதன் முக்கிய அம்சங்களை இங்கே வழங்குகிறோம்.

1) 2023ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்திருத்த முன்வடிவின் முக்கியமான பிரிவுகளில் குறிப்பாக தொழிலாளர் நலன் சார்ந்து அவர்கள் பணிபுரிவதற்கான உகந்த பணிச்சூழல், தொழிலாளர்களுக்கு போக்குவரத்து வசதி உள்ளிட்ட தொழிலாளர் நலன்கள் குறித்தும் இச்சட்டத்தில் வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகள் குறித்தும் விரிவாக தொழிற்சங்கப் பிரதிநிதிகளிடம் எடுத்துக் கூறி, தமிழ்நாட்டில் உள்ள மிகச் சில குறிப்பிட்ட வகை தொழிற்சாலைகளுக்கு மட்டுமே நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் அரசின் பரிசீலனைக்குப் பிறகே பணி நேரம் குறித்த விதிவிலக்கு வழங்கப்படும் என்றும் எந்த சூழ்நிலையிலும் தொழிலாளர்களின் நலனில் சமரசம் செய்து கொள்ளப்பட மாட்டாது என்றும் அமைச்சர்கள் எடுத்துரைத்தனர்.

2) தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, இளைஞர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் பற்றியும் அரசு அக்கறை கொண்டுள்ளதால், தொழிலாளர் நலன்கள் காக்கப்பட வேண்டும் என்பதிலும் அதே அளவுக்கு அக்கறையும் கொண்டுள்ளது என்றும் அமைச்சர்கள் குறிப்பிட்டனர்.

3) இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய தொழிற்சங்க பிரதிநிதிகள், இச்சட்ட முடிவிவை நடைமுறைப்படுத்தினால் தொழிலாளர்களுக்கு ஏற்படக் கூடிய சிக்கல்கள், சிரமங்கள் குறித்து விவரமாக எடுத்துரைத்தனர். இந்த விஷயத்தில் தங்களுடைய கருத்துக்களை அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் கேட்டுக் கொண்டனர்.

4) இதைத்தொடர்ந்து தொழிலாளர் நலன்களுக்காக ஆளும் திமுக ஆட்சியில் இருந்தபோதெல்லாம் எவ்வாறு நடவடிக்கை மேற்கொண்டது என்பதை பட்டியலிட்ட அரசு, இந்த அரசு ஒரு சட்ட முன்வடிவை எந்த அளவு உறுதியுடன் கொண்டு வருகிறதோ அது குறித்து மக்களிடம் ஏதேனும் மாற்றுக் கருத்துக்கள் வரப்பெற்றால் அவற்றை சீர்தூக்கி ஆராய்ந்து அவர்களின் கருத்துகளுக்கு இணங்க, அவற்றுக்கு மதிப்பளிக்கும் வகையில் நடந்து கொள்வதிலும் உறுதியாக இருக்கும்.

5) அந்த வகையில், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவின் மீது பல்வேறு தொழிற்சங்க பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், 2023ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் திருச்ச சட்ட முன்வடிவு மீதான நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுகிறது என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் சந்தித்த கடும் அரசியல் நெருக்கடி

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழக அரசின் இந்த அறிவிப்பு குறித்து மூத்த பத்திரிகையாளர் லட்சுமணனிடம் கேட்டபோது, ஒரு சட்ட மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றிய பிறகு அதை கூட்டத்தொடருக்கு வெளியே திரும்பப் பெற வழியில்லை. ஒரு அறிக்கை மூலம் அதை செய்ய முடியாது. அதனால் தான் அந்த சட்டத்திருத்தத்தின் அமலாக்கத்தை அரசு நிறுத்தி வைப்பதாக அறிவித்திருக்கிறது என்று கூறினார்.

அரசின் முடிவு தமக்கு ஆச்சரியமிளிக்கவில்லை என்று கூறிய அவர், “தன்னோடு கூட்டணி அரசியலில் இல்லாத கட்சிகள் மட்டுமின்றி , தேர்தல் அரசியலில் ஈடுபடாத ஆசிரியர் வீரமணி போன்றோர் கூட தமிழக அரசின் 12 மணி நேர சட்டத்திருத்தத்தை கடுமையாக எதிர்த்து கருத்து தெரிவித்துள்ளனர். அதனால் முதல்வர் ஸ்டாலினுக்கு இது அரசியல் ரீதியாக கடும் நெருக்கடியை கொடுத்திருக்கிறது என்றும் லட்சுமணன் சுட்டிக்காட்டினார்.

“மக்கள்தொகையில் சரிபாதி இருக்கக் கூடிய தொழிலாளர் வர்க்கம் சம்பந்தப்பட்ட இதுபோன்ற விஷயத்தில் முதல்வர் கொஞ்சம் முழு ஈடுபாடு காட்டி இந்த சட்டத்திருத்தத்தின் தாக்கம் அல்லது பின்விளைவை முன்கூட்டியே யோசிக்கத் தவறி விட்டார். அத்தகைய தவறு எதிர்காலத்தில் நிகழாமல் அவர் பார்த்துக் கொள்வது நல்லது,” என்றும் லட்சுமணன் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »