Press "Enter" to skip to content

கொடநாடு கொலை வழக்கை கையில் எடுக்கும் ஓ.பி.எஸ்: காரணம் என்ன?

கொடநாடு கொலை வழக்கு விவகாரத்தை தமிழ்நாடு அரசு தீவிரமாக விசாரிக்க வேண்டுமெனக் கோரி போராட்டம் நடத்தப்போவதாக ஓ. பன்னீர்செல்வம் தரப்பு அறிவித்திருக்கிறது.

செவ்வாய்க்கிழமையன்று காலையில் அ.தி.மு.கவின் ஒ.பி.எஸ். தரப்பினர் திடீரென சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். இந்த செய்தியாளர் சந்திப்பில் ஓ. பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்தச் செய்தியாளர் சந்திப்பில், முதலில் வைத்தியலிங்கம் ஒரு அறிக்கையை வாசித்தார். அதில் கொடநாடு வழக்கின் பின்னணியைத் தீவிரமாக விவரித்ததோடு, அதில் உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி ஆகஸ்ட் 1ஆம் தேதி போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்தார்.

“ஜெயலலிதா மறைவிற்கு பிறகு 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதியன்று இரக்கமற்ற ஓர் அரக்கர் கூட்டம் கொடநாடு தோட்டத்திற்குள் புகுந்து அங்கே காவல் காத்து வந்த ஓம்பகதூர் என்கிற காவலாளியை கொலைசெய்து, கிருஷ்ண பகதூர் என்னும் காவலாளியை கொடுமைப்படுத்தி, கொலை – கொள்ளையை நிகழ்த்தியது.

கோடநாடு எஸ்டேட்

இதற்குப் பிறகு, இந்த சம்பவத்தை திட்டமிட்டு நடத்தியதாக சந்தேகிக்கப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் தேர் ஓட்டுநர் கனகராஜ், கொடநாடு பங்களாவில் சி.சி.டி.வி. மற்றும் கணினி உள்ளிட்ட பொறுப்புகளை நிர்வகித்து வந்த தினேஷ் என்ற இளைஞர், இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்களை ஏற்பாடு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட சயான் என்பவரின் மனைவி, அவரது மகள், மேலும் இந்தச் சம்பவம் நடந்த காலத்தில் கொடநாடு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருந்தவர் உள்பட 6 பேர் சந்தேகமான முறையில் மரணமடைந்தனர்.

இந்தக் கொடூரம் நடைபெற்று ஏறத்தாழ 6 ஆண்டுகள் ஆகிவிட்டபோதும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, தண்டிக்கப்படவில்லை, இந்தக் குற்றத்திற்கான நோக்கம், இதனைப் பின்னிருந்து இயக்கியவர்கள் யார் என்பதையெல்லாம் கண்டறிவதற்கும், அவர்களை கடுமையாக தண்டிப்பதற்கும் முறையான நடவடிக்கைகள் இதுவரை உறுதியோடு மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டுவிட்டன.

விசாரணை மாடங்களும் விசாரிக்கப்படும் அமைப்புகளும் மாறுகின்றனவே தவிர இந்த வழக்கின் சூத்திரதாரி யார் என்பதும், இந்தக் குற்றத்தை முன்னின்று நடத்தியவர் யார் என்ற முடிச்சும் இன்றுவரை அவிழ்க்கப்படவில்லை. செய்தித் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று, கொடநாடு கொலை, கொள்ளையில் ஈடுபட்டதாக, கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்திருக்கும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்களை அவர்களது வசிப்பிடங்களுக்கே சென்று கலந்துரையாடியதில் இந்த வழக்கை நீர்த்துப் போகச் செய்ய ஒருவர் தங்களிடம் வந்து பேரம் பேசியதாக அவர்கள் புகைப்படத்தைக் காட்டி அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டது. அதற்குப் பிறகும்கூட இன்று வரை எந்தவிதமான தொடர் நடவடிக்கைகளும், விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இச்சம்பவத்தில் தொடர்புடைய பல உயிர்கள் பறிபோன நிலையிலும், அந்தக் கொடூர நிகழ்வில் உயிரோடு தப்பித்து நேபாளத்திற்குச் சென்ற கிருஷ்ண பகதூர் என்கிற காவலாளியை அழைத்து வந்து, அவர் கண்ணால் கண்ட சம்பவம் குறித்து விசாரணை ஏதும் காவல் துறையால் நடத்தப்படாமல் இருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.

ஓ.பன்னீர்செல்வம்- முன்னாள் முதலமைச்சர்

பட மூலாதாரம், Getty Images

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வரை சட்டமன்றத்திலும் பொது வெளியிலும் 2021 தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும் இச்சம்பவம் குறித்து பல சந்தேகங்களை மக்கள் முன் வைத்து பேசியவர் இன்றைய முதல்வரும், அன்றைய எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின். ஆட்சிக்கு வந்து 90 நாட்களுக்குள் கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை சட்டத்தின் முன்நிறுத்தி தண்டிப்போம் என்று மு.க. ஸ்டாலின் மக்களிடம் வழங்கிய வாக்குறுதியையும் நாடறியும்.

அப்படி பேசியது மட்டுமல்ல, தி.மு.கவின் தேர்தல் அறிக்கையிலும் இதனை பிரதான வாக்குறுதியாக அச்சிட்டு வழங்கியது. ஆனால், ஆட்சிக்கு வந்து ஏறத்தாழ இரண்டரை வருடங்களை தொடும் நிலையில், இன்று வரை இந்த வழக்கின் முடிச்சு அவிழ்க்கப்படவில்லை, உண்மைக் குற்றவாளிகளும், அதற்கு காரணமான குற்றவியல் பேர்வழிகளும் தண்டிக்கப்படவும் இல்லை. இது தி.மு.கவின் மீதும் கடுமையான கோபத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கொடநாடு கொலை, கொள்ளை குறித்து ஆளும் தி.மு.க. அரசு கூடுதல் கவனமும் முக்கியத்துவமும் கொடுக்காமல் தூங்கி வழிவதைக் கண்டித்தும், இந்த வழக்கினை விரைந்து விசாரித்து குற்றவாளிகளை தண்டிக்க நடவடிக்கை எடுக்குமாறு திமுக அரசை வலியுறுத்தியும் அ.தி.மு.கவின் சார்பில் எல்லா மாவட்டங்களிலும் ஆகஸ்ட் 1ஆம் தேதி காலை பத்தரை மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று தெரிவித்தார்.

எடப்பாடி கே.பழனிசாமி- அதிமுக பொதுச் செயலாளர்

பட மூலாதாரம், Getty Images

இதற்குப் பிறகு செய்தியாளர்கள் சில கேள்விகளை எழுப்பினர். குறிப்பாக, இந்த வழக்கில் சேலம் இளங்கோவன் விசாரிக்கப்பட்டார். ஆகவே எடப்பாடி கே. பழனிசாமிக்கு இதில் தொடர்பு இருக்கும் என கருதுகிறீர்களா எனக் கேட்டபோது, “சட்டத்தின் மூலம் காவல்துறை செய்ய வேண்டிய வேலை அது. சட்டப்படி தீவிரமாக விசாரித்து அதில் சம்பந்தப்பட்டவர்களைக் கைதுசெய்ய வேண்டும். இதில் சம்பந்தப்பட்டவர்களை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்” என்று பதிலளித்தார் ஓ. பன்னீர்செல்வம்.

நீங்கள் துணை முதல்வராக இருந்தபோது ஏன் விசாரணை நடத்தவில்லை என செய்தியாளர்கள் கேட்டபோது, “துணை முதலமைச்சருக்கு அரசில் எந்த அதிகாரமும் இல்லை. நான் வகித்த துறையில் மட்டுமே அதிகாரம் இருந்தது. சட்டம் – ஒழுங்கில் எனக்கு அதிகாரம் இருக்கவில்லை. முதலமைச்சருக்குத்தான் அந்த அதிகாரம் இருந்தது. எங்களுக்கு எந்தவித உண்மையான தகலும் கிடைக்கவில்லை” என்றார் ஓ. பன்னீர்செல்வம்.

தி.மு.க. ஆட்சி வந்துவுடன் இந்த விவகாரத்தை விசாரிக்க ஆரம்பித்தபோது, அதற்கு எதிராக நீங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினீர்களே எனக் கேட்டபோது, “அன்றைய சூழல் அப்படி இருந்தது. அதனால் ஆர்ப்பாட்டம் செய்தோம்” என்றார் ஓ. பன்னீர் செல்வம்.

ஓ.பி.எஸ். தரப்பு செய்தியாளர்களைச் சந்தித்த சிறிது நேரத்திலேயே அ.தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். “கொடநாட்டில் கொலை, கொள்ளை நடந்தவுடன் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து சிறையில் அடைத்தோம். இது குறித்து வழக்கும் நடந்தது. கொரோனா காலகட்டத்தில் வழக்கு விசாரணை நடப்பது தாமதமானது. இருந்தாலும் சாட்சிகளின் விசாரணை நடந்தது.

பிறகு, தீர்ப்பு வழங்கவிருந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தி.மு.க. ஆட்சியில் மேற்கு மண்டல காவல்துறை ஐ.ஜி. தலைமையில் விசாரணை நடந்தது. 90 சதவீத விசாரணை முடிந்துவிட்டதாக அவர் தனது அறிக்கையை செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசம் மாற்றப்பட்டது. இப்போது ஏ.எஸ்.பி. அந்தஸ்துள்ள அதிகாரி விசாரித்து வருகிறார். 90 சதவீதம் விசாரணை முடிந்த வழக்கை மீண்டும் தி.மு.க. அரசு விசாரிக்க ஆரம்பித்தது ஏன்?” என அவர் கேள்வி எழுப்பினார்.

கோடநாடு எஸ்டேட்

பட மூலாதாரம், Getty Images

கொடநாடு விவகாரத்தை கையில் எடுத்ததற்காக மறியலில் ஈடுபட்ட ஓ. பன்னீர்செல்வம்

2021ஆம் ஆண்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்து சில மாதங்களில், ஆகஸ்ட் மாதம் சட்டமன்றம் நடந்துகொண்டிருந்தபோது, கொடநாடு விவகாரத்தை மீண்டும் தி.மு.க. விசாரணை நடத்துவதைக் கண்டித்து ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் வெளிநடப்புச் செய்தனர். சாலை மறியலிலும் ஈடுபட்டனர். “அதிகாரத்தின் மூலம் பொய் வழக்குகளைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளை முடக்க முயற்சி நடக்கிறது” என்றும் ஓ. பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார்.

இதற்கு சில மாதங்களுக்குப் பிறகு எடப்பாடி கே.பழனிசாமி தரப்பும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் பிரிந்துவிட்ட நிலையில், இப்போது தி.மு.க. இந்த வழக்கை சரியாக விசாரிக்கவில்லை எனக் கூறி போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறார் ஓ. பன்னீர்செல்வம். கொடநாடு விவகாரம் குறித்து ஓ.பி.எஸ். திடீரென கவனம் செலுத்த என்ன காரணம்?

“வேறென்ன காரணம்? தி.மு.க. தூண்டுதல்தான் காரணம். அ.தி.மு.க. குறித்து மக்கள் மனதில் தவறான எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இதைச் செய்கிறார். அவரால் அ.தி.மு.கவை நேரடியாக எதிர்க்க முடியாது என்பதால் தி.மு.கவின் பின்னால் ஒளிந்துகொண்டு இதைச் செய்கிறார்” என பிபிசியிடம் தெரிவித்தார் ஜெயக்குமார்.

வேறு சில காரணங்களும் சொல்லப்படுகின்றன. கடந்த ஆண்டு இதே நாளில் அதாவது, ஜூலை 11ஆம் தேதி அ.தி.மு.கவின் பொதுக்குழு கூடி, எடப்பாடி கே. பழனிசாமியை இடைக்காலப் பொதுச்செயலாளராக நியமித்தது. ஓ. பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் கட்சியைவிட்டு நீக்கப்பட்டனர். ஆகவேதான் இந்த நாளில், எடப்பாடி தரப்புக்கு நெருக்கடி கொடுக்க இந்த விவகாரத்தை அவர் கையில் எடுத்திருக்கலாம் என்கிறார்கள் சிலர். தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாக, எடப்பாடி கே. பழனிசாமி ஜூலை 10ஆம் தேதியன்று அறிக்கை வெளியிட்ட நிலையில், அதற்கு அடுத்த நாளே எடப்பாடி தரப்பு மீது பரவலான சந்தேகம் விழுந்திருக்கும் ஒரு சம்பவத்தை ஓ.பி.எஸ். கையில் எடுத்திருப்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கோடநாடு எஸ்டேட்

பட மூலாதாரம், Kodanad Estate

தொடர் பின்னடைவு காரணமா?

“கடந்த ஒரு வருடமாகவே ஓ. பன்னீர்செல்வம் தரப்பு அமைப்பு ரீதியாக பின்னடைவைச் சந்தித்து வருகிறது. அவர் கட்சியைவிட்டு நீக்கப்பட்ட இந்த ஒரு வருடத்தில், எடப்பாடி தரப்பிலிருந்து பெரிய எண்ணிக்கையில் யாரும் இவர் பக்கம் வரவில்லை. இந்த நிலையில், இந்த வழக்கு துரிதப்படுத்தப்பட்டு, அதன் மூலம் எடப்பாடி தரப்புக்கு சிக்கல் வந்தால், ஆட்கள் தன் பக்கம் வரலாம் எனக் கருதுகிறார் ஓ. பன்னீர்செல்வம். ஆனால், அந்த வழக்கும் அவ்வளவு விரைவாக நகர்வதைப் போலத் தெரியவில்லை. தி.மு.க. தூண்டுதலில் இந்த விஷயத்தை ஓ. பன்னீர்செல்வம் கையில் எடுத்திருக்க மாட்டார். ஆனால், ஒரு அழுத்தம் கொடுத்து அதனால், வழக்கு துரிதமடைந்தால் நல்லது என்று அவர் கருதியிருக்கக்கூடும்” என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.

பத்திரிகையாளர் ப்ரியன் சொல்வதைப் போல ஓ. பன்னீர்செல்வம் தரப்பைப் பொறுத்தவரை, தொடர்ந்து பின்னடைவையே சந்தித்துவருகிறது. அ.தி.மு.க. மீதான உரிமை விவகாரத்தில், ஒரே ஒரு உரிமையியல் வழக்கைத் தவிர, மற்ற வழக்குகள் அனைத்தும் எடப்பாடி தரப்புக்கே சாதகமாக முடிந்திருக்கின்றன.

மேலும், எடப்பாடி தரப்பு அறிவித்த அ.தி.மு.க. நிர்வாகிகள் பட்டியலை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டிருக்கும் செய்திகளும் தற்போது வெளியாகியிருக்கின்றன. மேலும், ஜூலை 15ஆம் தேதி நடக்கவுள்ள பா.ஜ.கவின் கூட்டணிக் கட்சிகள் கூட்டத்திற்கு எடப்பாடி தரப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. ஓ. பன்னீர்செல்வம் தரப்புக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. கிட்டத்தட்ட பா.ஜ.கவும் தன்னைக் கைவிட்டுவிட்டதாக பன்னீர்செல்வம் தரப்பு கருதுகிறது. இந்தப் பின்னணியில்தான் செய்தியாளர்களைச் சந்தித்து, கொடநாடு விவகாரத்தைக் கையில் எடுத்திருக்கிறார் ஓ.பி.எஸ்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »