Press "Enter" to skip to content

மோதியின் பிரான்ஸ் பயணம் – இரு நாடுகளுக்கிடையே வர்த்தக உறவுகளை மேம்படுத்த உதவுமா?

பட மூலாதாரம், Getty Images

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் பயணமாக பிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்கு வரும் வியாழக்கிழமை (ஜூலை 13ஆம் தேதி) செல்கிறார்.

அங்கு, பிரான்ஸ் நாட்டின் தேசிய நாளான ‘பாஸ்டில் டே’ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும் இரண்டாவது இந்தியப் பிரதமர் மோதி ஆவார். கடந்த 2009ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

இப்பயணத்தில், பாதுகாப்பு, மற்றும் மூலோபாய ஒப்பந்தங்கள், ரஷ்யா-யுக்ரேன் போர் மற்றும் இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து மோதியுடன் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோங், விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய-பிரான்ஸ் உறவுகள் எவ்வளவு வலுவானவை

பிரான்சின் வருடாந்திர நிகழ்ச்சியான பாஸ்டில் டேக்கு (Bastille Day) இந்தியத் தலைவர்களை மீண்டும் மீண்டும் அழைப்பது, இரு நாடுகளுக்கும் இடையேயான நெருங்கிய உறவை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, நான்கு தசாப்தங்களாக, ஐரோப்பாவில் இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாக பிரிட்டன் இருந்து வந்தது.

ஆனால் கடந்த மூன்று தசாப்தங்களில், கருத்துப் பரிமாற்றம் மற்றும் பரஸ்பர நலன்களின் மட்டத்தில் பிரான்ஸ் நெருங்கி வந்ததால், ஐரோப்பாவில் இந்தியாவின் வலுவான நட்பு நாடாக உருவெடுத்துள்ளது.

இது மட்டுமின்றி, ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவின் மிகப்பெரிய நட்பு நாடாகவும் பிரான்ஸ் உருவெடுத்துள்ளது. கடந்த 1998-ல் கையெழுத்திடப்பட்ட மூலோபாய கூட்டு ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மிகவும் வலுப்படுத்தியது.

மோதியின் பிரான்ஸ் பயணம்

பட மூலாதாரம், Getty Images

கடந்த 25 ஆண்டுகளில் இரு நாடுகளும் இந்த ஒப்பந்தத்தை கடைப்பிடித்து வருகின்றன. இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, 1998-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இந்தியா அணு ஆயுத சோதனை நடத்தியது. இதற்கு பதிலடியாக அனைத்து மேற்கத்திய நாடுகளும் இந்தியா மீது பல வகையான கட்டுப்பாடுகளை விதித்தன். ஆனால் பிரான்ஸ் இந்த தடை நாடுகளுடன் சேரவில்லை. இது மட்டுமின்றி, இந்தக் கட்டுப்பாடுகளை நீக்க இந்தியா மேற்கொண்ட முயற்சிகளுக்கு பிரான்ஸ் ஆதரவு அளித்தது.

இத்துடன் சில நாடுகள் இந்தியாவுக்கு ஆயுத ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்திருந்தன. ஆனால் பிரான்ஸ் அந்தச் சந்தர்ப்பத்திலும் தடை நாடுகளுடன் நிற்கவில்லை. இந்தக் காரணத்திற்காக, கடந்த 25 ஆண்டுகளில், விமானம் முதல் நீர்மூழ்கிக் கப்பல்கள் வரை பல்வேறு வகையான பாதுகாப்புப் பொருட்களை இந்தியாவிற்கு விற்பனை செய்யும் இரண்டாவது பெரிய நாடாக பிரான்ஸ் மாறியுள்ளது. இந்த விஷயத்தில் ரஷ்யா மட்டுமே பிரான்ஸை விட முன்னிலையில் உள்ளது.

ரஃபேல் விமானங்கள் குறித்த அறிவிப்பு

மோதியின் பிரான்ஸ் பயணம்

பட மூலாதாரம், Getty Images

இந்தச் சுற்றுப்பயணத்தில் இந்தியக் கடற்படையின் தேவைக்காகத் தயாரிக்கப்பட்ட 26 ரஃபேல் விமானங்களை பிரான்ஸிடம் இருந்து வாங்குவது குறித்து பிரதமர் மோடி அறிவிப்பார்.

இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் இந்தியாவின் புதிய விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்தை போர் விமானங்களுடன் பொருத்துவதாகும். இதனுடன், இரு நாடுகளும் பாதுகாப்புத் துறையில் இதுபோன்ற வேறு ஒப்பந்தங்களையும் அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பிரான்சிடமிருந்து பெறும் தொழில்நுட்பப் பரிமாற்றமும் அடங்கும்.

பிரான்ஸ் இந்தியாவிற்கு விற்க விரும்பும் பொருட்களின் பட்டியல் நீண்டது. ஸ்கார்பியன் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு புதிய வாங்குதல்கள் தருமாறு பிரான்ஸ் இந்தியாவை வலியுறுத்துகிறது. முந்தைய ஒப்பந்தத்தின்படி, கடைசி ஆறு நீர்மூழ்கிக் கப்பல்கள் மும்பையில் உள்ள மசாகன் கப்பல்துறையில் கட்டப்பட்டு வருகின்றன. மேலும் ஐந்து நீர்மூழ்கிக் கப்பல்கள் ஏற்கனவே கட்டப்பட்டுள்ளன.

மேலும், ஏர்பஸ் உலங்கூர்திஸ் என்ற நிறுவனத்தால் கடற்படைக்காக தயாரிக்கப்பட்ட NH90 உலங்கூர்திகளை இந்தியா வாங்க வேண்டும் என்றும் பிரான்ஸ் விரும்புகிறது. இதனுடன், மகாராஷ்டிராவில் முன்மொழியப்பட்ட ஜெய்தாபூர் அணுமின் நிலையத்திற்கான பிரெஞ்சு EPR அணு உலையை விற்கவும் பிரான்ஸ் முயற்சிக்கும்.

இது குறித்து இரு நாடுகளுக்கும் இடையே 15 ஆண்டுகளுக்கு முன் ஒப்பந்தமானது. ஆனால், உலகின் மிக விலையுயர்ந்த அணுமின் உலையின் பாதுகாப்பு மற்றும் நடைமுறைச் சாத்தியம் குறித்த பேச்சுக்களில் இன்னும் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்தப் பேச்சு வார்த்தைகள் முன்னேறாததற்கு ஒரு காரணம், பிரெஞ்சு நிறுவனமான EDF இன்னும் பிரான்சிலேயே முதல் EPR அணுஉலையை அமைப்பதில் வெற்றி பெறவில்லை. வரவு செலவுத் திட்டத்தை விட பல மடங்கு செலவு அதிகமாகி, இதை அமைப்பதற்கு கொடுக்கப்பட்ட காலக்கெடுவும் பத்தாண்டுகளுக்கும் மேலாக கடந்துவிட்டது.

முக்கியமான மூலோபாய பிரச்னைகள் என்னென்ன?

மோதியின் பிரான்ஸ் பயணம்

பட மூலாதாரம், Getty Images

பாதுகாப்பு ஒப்பந்தங்கள் தவிர, பிரான்ஸ் மற்றும் இந்தியா இடையே பல மூலோபாய விவகாரங்களும் விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில், இந்தோ-பசிபிக் பிராந்திய விவகாரம் மிக முக்கியமானது, ஏனெனில் சர்வதேச கடல் பகுதியில் வளர்ந்து வரும் சீனாவின் செல்வாக்கு குறித்து இரு நாடுகளும் கவலைப்படுகின்றன.

இதனுடன், தெற்காசியாவின் நிலைமை குறித்தும் விவாதிக்கப்படலாம். பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடி மற்றும் ஆப்கானிஸ்தானில் மனித உரிமை மீறல்கள் ஆகியவை இதில் அடங்கும்.

ரஷ்யா-யுக்ரேன் போர் விவகாரத்தையும் பிரெஞ்சு அதிபர் மக்ரோங் எழுப்பலாம். அமெரிக்க அதிபர் ஜோ பைடனைப் போலவே, பிரதமர் மோடியும் ரஷ்யாவுக்கு எதிராக மேற்கத்திய நாடுகளுடன் நின்று சில நடவடிக்கைகளை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கலாம்.

பொருளாதாரத் தடைகளை விதிப்பதில் மேற்கத்திய நாடுகளுடன் ஒத்துழைக்க விரும்பவில்லை என்றால், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதையாவது குறைக்க வேண்டும் என்று மோதியிடம் பிரெஞ்சு அதிபர் கூறலாம். செப்டம்பர் மாதம் டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டுக்குப் புதினை அழைக்கக்கூடாது என்று பிரதமர் மோடிக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சமிக்ஞை அனுப்பப்படலாம்.

மொழி, கலாசாரம் சார்ந்த உறவுகள்

மோதியின் பிரான்ஸ் பயணம்

பட மூலாதாரம், Getty Images

இரு நாடுகளுக்கு இடையே கலாச்சார மட்டத்திலும், மக்கள் மட்டத்திலும் நெருங்கிய உறவுகள் இருந்து வருகின்றன.

பிரெஞ்சுக்காரர்கள் நீண்ட காலமாக இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தால் ஈர்க்கப்பட்டுள்ளனர். இதில் யோகாவும் ஆயுர்வேதமும் முக்கியப் பங்காற்றியுள்ளன.

இது மட்டுமின்றி, இந்திய இலக்கியம், இசை, நடனம் ஆகிய கலைகளுடன் இந்தியத் திரைப்படங்களும் பிரான்சில் மிகவும் பிரபலமாக உள்ளன. காரமாக இருந்தாலும், இந்திய உணவு பிரான்சில் பிரபலமாகிவிட்டது.

இந்தியாவிலும் பிரெஞ்சு கலாச்சாரம் மிகவும் பிரபலமாகி வருகிறது. தற்போது, இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் பிரெஞ்சு மொழியை வெளிநாட்டு மொழியாகக் கற்கிறார்கள். இந்தியாவில் உள்ள பல பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பிரெஞ்சு மொழி வெளிநாட்டு மொழியாக கற்பிக்கப்படுகிறது. பிரெஞ்சு மொழி மற்றும் பிரெஞ்சுக் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக பிரான்சால் உருவாக்கப்பட்ட அலையன்ஸ் ஃபிரான்செய்ஸ், இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான கிளைகளைக் கொண்டுள்ளது. இருப்பினும், இந்திய மாணவர்களை பிரான்ஸ் தாமதமாகவே ஏற்றுக்கொண்டது.

ஆனால் இப்போது பிரான்ஸில் படிக்கச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கடந்த இருபது ஆண்டுகளில் பத்து மடங்கு அதிகரித்துள்ளது.

பருவநிலை மாற்றம் குறித்து விவாதிக்கப்படுமா?

மோதியின் பிரான்ஸ் பயணம்

பட மூலாதாரம், EUROPEAN PRESS PHOTO AGENCY

பருவநிலை மாற்றம் மற்றும் சர்வதேச வர்த்தகப் பாதைகள் போன்ற பலதரப்பு விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்படலாம்.

பருவநிலை மாற்றம் குறித்த பல விஷயங்களில் இந்தியாவும் பிரான்சும் உடன்படுகின்றன. ஆனால், சில விஷயங்களில் வேறுபாடுகளும் உள்ளன.

இந்தியாவும் பிரான்சும் 2015-ம் ஆண்டு சூரிய ஆற்றல் தொழில்நுட்பத்தை உலகம் முழுவதும் பரப்புவதற்காக சர்வதேச சோலார் கூட்டணி திட்டத்தை அறிமுகப்படுத்தின. கடந்த 8 ஆண்டுகளில், இந்தக் கூட்டணி பொருளாதார ரீதியாக நலிவடைந்த நாடுகளுக்கு சூரிய ஆற்றல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கார்பன் உமிழ்வைக் குறைக்க உதவியது.

ஆனால் வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 100 பில்லியன் டாலர்கள் கொடுப்பதில் இரு நாடுகளுக்கும் உடன்பாடு இல்லை. வளரும் நாடுகளிடம் இருந்து இந்தத் தொகை கோரப்படுகிறது, இதனால் அவர்கள் தங்கள் பொருளாதாரத்தை பசுமை எரிசக்திக்கு கொண்டு செல்ல முடியும்.

இந்திய-பிரெஞ்சு வணிக உறவுகள் வலுப்படுமா?

மோதியின் பிரான்ஸ் பயணம்

பட மூலாதாரம், Reuters

இந்தியாவுக்கும் பிரான்சுக்கும் இடையே இவ்வளவு நல்ல உறவு இருந்தும், வர்த்தகத்திலும் வணிகத்திலும் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு வணிக அளவில் செழுமையாக இல்லை.

வர்த்தகத்தில் இரு நாடுகளின் சிந்தனை ஒரே மாதிரியாக இல்லை. ஏனெனில், உலக வர்த்தக அமைப்பில், பல பிரச்சனைகளில் பிரான்சும் இந்தியாவும் வெவ்வேறு பிரிவுகளில் நிற்பதைக் காணலாம். காப்புரிமை, சந்தைகளை அணுகுவதை எளிதாக்குவது, மற்றும் விவசாயம் தொடர்பான பிரச்சினைகள் ஆகியவை இதில் அடங்கும்.

2010 முதல் 2021 வரை இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு வர்த்தகம் 4 பில்லியன் டாலர் மட்டுமே அதிகரித்துள்ளது.

2010-ம் ஆண்டில், பிரான்சுடனான இந்தியாவின் வர்த்தகம் 9 பில்லியன் டாலராக இருந்தது, இது 2021-ல் 13 பில்லியன் டாலரை எட்டியது.

ஐரோப்பிய நாடுகளிடையே, இந்தியாவுடன் மிகக் குறைந்த அளவே வர்த்தகப் பரிமாற்றம் மேற்கொள்ளும் நாடாக பிரான்ஸ் உள்ளது.

பிரான்சிடமிருந்து இந்தியா விமானம் முதல் செயற்கைக்கோள் வரை பல பொருட்களை வாங்கினாலும், இரு நாடுகளுக்கிடையேயான வணிக உறவு மிக மெதுவாகவே வளர்ந்து வந்திருக்கிறது. ஆனால், மற்ற ஐரோப்பிய நாடுகளுடன் இந்தியாவின் வர்த்தகம் விரைவாக வளர்ச்சி கண்டிருக்கிறது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே எல்லை மோதல்கள் இருந்தபோதிலும், 2010-ல் 58 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த இரு நாடுகளிடையேயான வர்த்தகம், 2021-ல் 117 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்தது. இதன் மூலம் இன்று இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக சீனா இருக்கிறது.

அதேபோல், 2010-ல் 45 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த அமெரிக்காவுடனான இந்தியாவின் வர்த்தகம், 2021ல் 110 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது.

அமெரிக்கா மற்றும் சீனா போன்ற பெரிய பொருளாதாரங்கள் மட்டுமல்ல, ஜெர்மனியுடனான இந்தியாவுடனான வர்த்தகமும் 2010-ல் 19 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 2021-ல் 27 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது.

இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையேயான வர்த்தகத்தில் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதனுடன், பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) முதல் வேறு ரயிலகள் வரையிலான ஒப்பந்தங்களை இந்திய அரசு செய்துள்ளது.

இந்த ஒப்பந்தங்களை நீங்கள் நீக்கினால், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் புள்ளிவிபரங்கள் வெகுவாகக் குறையும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் மிகவும் குறைவாகவும் ஆழமற்றதாகவும் இருக்கும்.

இரு நாட்டு அரசுகளும் மற்ற துறைகளைப் போல வர்த்தகத் துறையில் தங்கள் ஒப்பந்தங்களை வலுப்படுத்தத் தவறிவிட்டன. இரு நாடுகளின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களே இதற்குக் காரணம்.

இருதரப்பு வர்த்தகத்தில் அத்தகைய நிறுவனங்களின் பங்கு இல்லாததால், இரு நாடுகளின் நிறுவனங்களும் மற்றவருடைய சந்தையில் நுழைவது குறித்துச் சந்தேகம் கொள்கின்றன. இத்தகைய சூழ்நிலையில், இப்போது மோடியும் மக்ரோனும் பாரிஸில் சந்திக்கவிருக்கும் போது, இருதரப்பு வணிக உறவுகளை விரிவுபடுத்துவதும் ஆழப்படுத்துவதும், சிறு மற்றும் நடுத்தர வணிகங்களை இந்தக் கூட்டாண்மையில் சேர்ப்பதும் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்.

ஏனெனில், இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிப்பதே நாடுகளின் எதிர்காலத்திற்கான முதன்மை இருக்க முடியும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »