Press "Enter" to skip to content

“சாலையில் நிலச்சரிவு, தாங்க முடியாத குளிர்”– அமர்நாத் யாத்திரையில் சிக்கிய தமிழர்கள் பகிர்ந்த அனுபவம்

பட மூலாதாரம், Getty Images

காஷ்மீரில் உள்ள அமர்நாத் கோவிலுக்கு யாத்திரை சென்ற தமிழர்கள், கன மழை காரணமாக சாலை அடித்துச்செல்லப்பட்டதால் அங்கிருந்து வெளியேற முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர்.

அமர்நாத்திலிருந்து திரும்பும் வழியில் என்ன நடந்தது?

இந்த ஆண்டின் அமர்நாத் யாத்திரை, கடந்த ஜூலை 1ஆம் தேதி துவங்கியது.

தமிழ்நாட்டின் தேனி, நெய்வேலி, நாகப்பட்டனம், தஞ்சாவூர், சென்னை பகுதிகளில் இருந்தும் பெங்களூரில் இருந்தும் மொத்தமாக 21 பேர் கடந்த ஜூலை 4ஆம் தேதியன்று அமர்நாத் யாத்திரைக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

சென்னையிலிருந்து ஜம்மு வரை தொடர் வண்டியில் சென்றவர்கள், ஜம்முவிலிருந்து ஸ்ரீ நகருக்குப் பேருந்தில் வந்தனர்.

அமர்நாத் கோவிலில் இருந்து 14 கி.மீ. கீழே உள்ள பால்டால் என்ற இடத்தில் முகாம் அமைத்து இவர்கள் தங்கினர். ஜூலை 7ஆம் தேதியன்று அமர்நாத் குகைக்குச் சென்று லிங்கத்தை பார்வை செய்தனர்.

இதையடுத்து ஜூலை 8ஆம் தேதி காலையில் பால்டாலில் இருந்து இந்தக் குழு புறப்பட்டது.

“வரும் வழியெல்லாம் மழைதான். நாங்கள் வந்த பேருந்து பால்டாலில் இருந்து மணிகம் என்ற இடத்தைக் கடக்க முயன்றபோது சிஆர்பிஎஃப் வீரர்கள் எங்களைத் தடுத்தி நிறுத்தினர். பேருந்து முகாமுக்குள் கொண்டுசெல்லப்பட்டது. ஏன் எங்கள் பேருந்து நிறுத்தப்பட்டது எனக் கேட்டபோது, ஸ்ரீ நகர் – ஜம்மு சாலையில் ரம்பன் என்ற இடத்தில் இரு சிகரங்களுக்கு நடுவில் அமைந்திருந்த சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டிருப்பதாகச் சொன்னார்கள்.

நாங்கள் அந்த வழியாகத்தான் செல்லவேண்டியிருந்தது. அந்தச் சாலை மூடப்பட்டுவிட்டதால் எங்களை அங்கிருந்த சிஆர்பிஎஃப் முகாமில் தங்கச் சொன்னார்கள். அங்கிருந்த கூடாரத்தில், ஒரு கூடாரத்திற்கு 8 பேர் என்ற வகையில் தங்கினோம். அங்கிருந்த கடுமையான மழையும் குளிரும் எங்களை உலுக்கி எடுத்துவிட்டது,” என்கிறார் அமர்நாத்தில் சிக்கிக்கொண்ட தேனியைச் சேர்ந்த செல்லப்பாண்டியன்.

ஜம்மு

பட மூலாதாரம், ANI

பூஞ்ச் வழியாகச் செல்லும் மற்றொரு பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவிட்டதால், அந்த வழியாகவும் செல்ல முடியவில்லை. தற்போது ரம்பனில் உள்ள சாலை சரிசெய்யப்பட்டுவிட்டதால் தமிழ்நாட்டைச் சேர்ந்த குழு இன்று காலையில் ஜம்முவை நோக்கிப் புறப்பட்டுள்ளது.

ஆனால், அவர்கள் வேறு ஒரு பிரச்னையை எதிர்கொண்டிருக்கிறார்கள்.

“பிரச்னை இல்லாமல் திரும்பிவிடுவோம் என்ற நம்பிக்கையில், 11ஆம் தேதி ஜம்முவிலிருந்து தில்லி செல்லவும் பிறகு தில்லியிலிருந்து சென்னைக்கும் தொடர் வண்டியில் அனுமதிச்சீட்டு பதிவுசெய்திருந்தோம். ஆனால், நாங்கள் இங்கே சிக்கிக்கொண்டதால், அந்த ரயிலைத் தவறவிட்டுவிட்டோம். இப்போது ஜம்மு சென்ற பிறகு எப்படி தில்லி திரும்புவது என்பது தெரியவில்லை. இந்தக் குழுவில் உள்ள பெரும்பாலானவர்கள் வசதியில்லாதவர்கள். தமிழ்நாடு அரசு எங்களுக்கு ஏதாவது உதவிசெய்ய வேண்டும்” என்கிறார் செல்லப்பாண்டியன்.

அமர்நாத் யாத்திரைக்குச் செல்வது எப்படி, அது எவ்வளவு ஆபத்தானது?

ஜம்மு – காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் தாசிலில் அமைந்திருக்கிறது இந்த அமர்நாத் கோவில்.

இது ஒரு குகைக் கோவில். அனந்த்நாக் நகரில் இருந்து 168 கி.மீ. தூரத்தில் 3,888 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது இந்தக் கோவில்.

இதனைச் சுற்றியுள்ள மலைச் சிகரங்கள் அனைத்தும் வருடத்தின் பெரும்பாலான நாட்களில் பனியால் மூடப்பட்டிருக்கும். கோடை காலத்தில் பனி உருகும்போது, யாத்ரீகர்கள் இங்கே அனுமதிக்கப்படுகிறார்கள்.

பருவ நிலையைப் பொறுத்து, வருடத்திற்கு 20 முதல் 60 நாட்களுக்கு யாத்ரீகர்கள் இங்கே வர அனுமதிக்கப்படுவார்கள். 1995ல் 20 நாட்களுக்கு மட்டுமே யாத்ரீகர்கள் அனுமதிக்கப்பட்டனர். 2004ல் இருந்து 2009வரை 60 நாட்களுக்குக் கோவில் திறந்திருந்தது. அடுத்தடுத்த வருடங்களில் 40 முதல் 60 நாட்களுக்குத் திறந்திருந்தது. 2019ல் 46 நாட்கள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

அமர்நாத்

பட மூலாதாரம், ANI

இந்தக் கோவிலைப் பொறுத்தவரை, அமர்நாத் மலையில் 40 மீட்டர் உயரமுள்ள ஒரு குகையே கோவிலாகக் கருதப்படுகிறது. இந்த குகையில் நீர் மேலேயிருந்து சொட்டுவதால் உருவாகும் பனி லிங்கமே கடவுளாகப் பார்க்கப்படுகிறது. அருகிலேயே சிறிய வடிவில் உருவாகும் பனி லிங்கங்கள் பார்வதியாகவும் விநாயகராகவும் பார்க்கப்படுகின்றன. மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை இந்த லிங்கத்தை பார்க முடியும்.

12ஆம் நூற்றாண்டில் கலஹனர் எழுதிய ராஜதரங்கினி, 16ஆம் நூற்றாண்டில் அபுல் ஃபாசல் எழுதிய அயினி அக்பரி ஆகிய நூல்களில் இந்தக் கோவில் குறிப்பிடப்படுகிறது.

அமர்நாத் யாத்திரையில் பங்கேற்க விரும்புபவர்கள் சில மாதங்களுக்கு முன்பே பதிவுசெய்ய வேண்டும். ஸ்ரீ அமர்நாத் ஜி ஷ்ரைன் போர்ட் இந்த யாத்திரையை அரசுடன் சேர்ந்து ஒழுங்குபடுத்துகிறது.

ஆனால், இந்தப் பயணம் ஆபத்தானதும்கூட. 1969ல் திடீரென மேகவெடிப்பு நிகழ்ந்து பெருமழை கொட்டியதில் 40 யாத்ரீகர்கள் உயிரிழந்தனர். 1996ல் மோசமான பருவ நிலையின் காரணமாக 263 பேர் உயிரிழந்தனர். 2012ல் ஏற்பட்ட விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். அந்த ஆண்டில் மட்டும் இந்த யாத்திரையின் போது பல்வேறு காரணங்களால் 130 பேர் உயிரிழந்தனர். 2015ல் ஏற்பட்ட மேகவெடிப்பில் 3 பேர் உயிரிழந்தனர். 2017ல் யாத்ரீகர்களைச் சுமந்து சென்ற பேருந்து 150 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 18 பேர் உயிரிழந்தனர். 2022ல் மேகவெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர்.

இதுதவிர, பயங்கரவாத தாக்குதல்களிலும் அமர்நாத் யாத்ரீகர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 2000வது ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி பஹல்காம் முகாமல் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டனர். 2001ஆம் ஆண்டு ஷேஷ்நாக் முகாம் மீது நடத்தப்பட்ட கையெறி குண்டு தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர். 2002ல் 11 பேரும் 2017ல் எட்டுப் பேரும் கொல்லப்பட்டனர்.

இமாச்சலப் பிரதேசத்தில் சிக்கிய மாணவர்களின் கதி என்ன?

இந்தியாவின் வட மாநிலங்களில் பெய்துவரும் கன மழையின் காரணமாக, இமாச்சலப் பிரதேசமும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், அந்த மாநிலத்திற்குச் சுற்றுலா சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 கல்லூரி மாணவர்கள் வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் அங்கேயே சிக்கிக்கொண்டனர்.

பெற்றோரால் இவர்களைத் தொலைபேசியிலும் தொடர்புகொள்ள முடியவில்லை. இந்த மாணவர்களை மீட்டுத் தர வேண்டுமென கோரிக்கை எழுந்த நிலையில், தமிழ்நாடு பேரிடர் அவசரகால செயல்பாட்டு மையத்தைச் சேர்ந்தவர்கள், இமாச்சலப் பிரதேச பேரிடர் மீட்புப் படையைத் தொடர்பு கொண்டனர்.

அடைமழை (கனமழை) மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக போக்குவரத்து முற்றிலும் தடைபட்டிருப்பதாகவும் சுற்றுலா பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக விடுதிகளில் தங்கவைக்கப்பட்டிருப்பதாகவும் மின்சார விநியோகம் முற்றிலும் தடைபட்டுள்ளதால் தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியவில்லை எனவும் நிலைமை சரியானவுடன் அவர்கள் தமிழகத்திற்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என்றும் இமாச்சலப் பிரதேச மாநில நிர்வாகம் தெரிவித்தது.

நேற்று மாலை போக்குவரத்து மீண்டும் துவங்கி உள்ள நிலையில், குலு, மண்டி மாவட்டங்களில் இருந்து 4,500 வாகனங்கள் சண்டீகருக்கு புறப்பட்டன. தற்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 கல்லூரி மாணவர்களும் சண்டீகருக்குத் திரும்பியுள்ளனர் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »