Press "Enter" to skip to content

பிரபாகரனின் மனைவி, மகள் உயிருடன் உள்ளதாக வெளியான காணொளி – மறுக்கும் இலங்கை அரசு

பட மூலாதாரம், FB VIDEO SCREEN SHOT

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்ற விஷயம் அண்மையில் பேசுபொருளாக மாறியது. அந்தப் பேச்சு தனிந்துள்ள நிலையில், தற்போது அவரது மனைவி மதிவதனியும் மகள் துவாரகாவும் உயிருடன் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மனைவி மதிவதனியின் சகோதரி எனத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் பெண் ஒருவர் இந்த விஷயத்தைத் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களின் மூலம் காணொளி ஒன்றை வெளியிட்டு, அவர் இந்தத் தகவலைக் கூறியுள்ளமை தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபாகனின் மனைவி, மகள் குறித்த காணொளியில் கூறப்பட்டது என்ன?

”கடந்த 2009ஆம் ஆண்டு நடந்த போரின் காரணமாக எனது தங்கை மதிவதனி, மகள் துவாரகா மற்றும் உறவினர்கள் இறந்துவிட்டதாக இலங்கை அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டு, ஊடகத்தில் செய்திகளை அறிந்துக்கொண்டேன்.

கடந்த சில தினங்களாக அவர்கள் உயிருடன் இருப்பதாகக் கூறி வருவதையும் செய்திகளில் அறிந்துகொண்டேன். பிறகு அவர்களை நேரில் சந்தித்து உரையாடி அவர்களுடன் உணவருந்தி விட்டு வந்துள்ளேன்.

இந்த செய்தியை மிகவும் மகிழ்ச்சியுடன் எனது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தெரிவிக்கின்றேன். உண்மையில் இந்தச் செய்தியை கடவுள் கொடுத்த கொடையாகவே நினைக்கின்றேன். நன்றி வணக்கம்!” என மதிவதனியின் சகோதரி என அடையாளப்படுத்திக் கொள்ளும் பெண் கூறியுள்ளார்.

இலங்கை உள்நாட்டுப் போர்

பட மூலாதாரம், Getty Images

இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டம்

இலங்கையில் முப்பது ஆண்டுக் காலமாக நடந்த உள்நாட்டுப் போர், 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் தேதி முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.

இந்த நிலையில், இறுதிக்கட்ட போரின்போது விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அவரது உறவினர்கள் உயிரிழந்ததாகவும் இலங்கை அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது.

இவ்வாறான பின்னணியில், போர் முடிவடைந்து 14 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், பிரபாகரன் மற்றும் அவரது உறவினர்கள் உயிருடன் உள்ளார்கள் எனப் பல செய்திகள் வெளிவருகின்றன.

வேலுப்பிள்ளை பிரபாகரனின் மனைவி மற்றும் மகள் உயிருடன் உள்ளதாக வெளியான செய்தி போலியானது என்று பாதுகாப்பு அமைச்சகத்தின் ஊடகப் பேச்சாளர் கேணல் நலின் ஹேரத் பிபிசி தமிழுக்குத் தெரிவித்தார்.

”இதுவொரு நாடகம். தமது கவனத்தை ஈர்ப்பதற்காக இதுபோன்ற செயல்களைச் செய்கின்றார்கள். இது நகைச்சுவையான விஷயம்,” என பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் கேணல் நலின் ஹேரத் குறிப்பிட்டார்.

பிரபாகரன் உயிருடன் உள்ளாரா?

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கடந்த பிப்ரவரி மாதம் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து கருத்து தெரிவித்திருந்தார்.

இலங்கை உள்நாட்டுப் போர்

பட மூலாதாரம், SRI LANKA ARMY

இந்தக் கருத்தானது அந்த சந்தர்ப்பத்தில் பேசுபொருளாக மாறியது. எனினும், வேலுப்பிள்ளை பிரபாகரன் இறுதிக்கட்ட போரின்போது உயிரிழந்ததாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது.

”கடந்த 2009ஆம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட யுத்தத்தில் பிரபாகரன் கொல்லப்பட்டார். டீ.என்.ஏ ஆதாரங்களையும் நாம் எடுத்துள்ளோம். 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி இறுதிக்கட்ட போரில் அவர் கொல்லப்பட்டார்.

குறித்த தேதியில் பிரபாகரன் உயிரிழந்தமைக்கான டி.என்.ஏ பரிசோதனை உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களையும் எடுத்துள்ளோம். போலியான தகவல்களை அவர்கள் வெளியிடுகின்றார்கள்,” என இலங்கை ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் பிபிசி தமிழுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி தெரிவித்திருந்தார்.

பிரபாகரனின் டி.என்.ஏ அறிக்கையை வெளியிட மறுத்த இலங்கை பாதுகாப்பு அமைச்சகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்குவதில் சிக்கல் நிலை காணப்படுவதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

பிரபாகரனின் மரண பரிசோதனை அறிக்கையை வழங்குவது, நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் பதிலளித்துள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் இறுதிப் போரில் கொல்லப்பட்டதாக இலங்கை அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட போதிலும், அதற்கான எந்தவித ஆதாரங்களையும் இலங்கை அரசாங்கம் இதுவரை வெளியிடவில்லை.

இந்த நிலையில், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் உள்ளார் என ஒரு தரப்பினர் கூறி வருகின்ற நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக மற்றுமொரு தரப்பு கருத்துகளை முன்வைத்து வருகின்றது.

இலங்கை உள்நாட்டுப் போர்

பட மூலாதாரம், MOD SRI LANKA

இவ்வாறான கருத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இலங்கை ஊடகவியலாளர் மிதுன் ஜயவர்தனவினால், தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ், பாதுகாப்பு அமைச்சகத்திடம் பிரபாகரனின் மரண பரிசோதனை அறிக்கை கோரப்பட்டுள்ளது.

பிரபாகரனின் பிரேத பரிசோதனை அறிக்கையை வெளியிட மறுப்பது ஏன்?

பிரபாகரனின் டி.என்.ஏ பரிசோதனை அறிக்கை, மரண பரிசோதனை அறிக்கை ஆகியவற்றை இலங்கை அரசாங்கம் வெளியிடாத பின்னணியிலேயே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே, அந்த அறிக்கையை வழங்க இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது.

எனினும், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறுதிக்கட்ட போரில் உயிரிழந்துவிட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதாலேயே, இந்தத் தகவல்களை வழங்க முடியாதுள்ளது என்று பாதுகாப்பு அமைச்சகத்தின் ஊடகப் பணிப்பாளரும், ஊடகப் பேச்சாளருமான கேணல் நலின் ஹேரத் ஜுன் மாதம் 22ஆம் தேதி பிபிசி தமிழுக்குத் தெரிவித்தார்.

”நாம் இதை உறுதி செய்துள்ளோம். இது பிரபாகரனின் உடல் என்பதை கருணா அம்மான், தயா மக்கள் விரும்பத்தக்கதுடர் ஆகிய இருவரும் உறுதிப்படுத்தினார்கள். டி.என்.ஏ பரிசோதனையை நாம் முன்னெடுத்துள்ளோம்,” என அவர் கூறினார்.

‘டி.என்.ஏ அறிக்கை உள்ளிட்ட தகவல்களை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியதில்லை. அவர் உயிரிழந்ததை பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. அப்படியென்றால், அது உறுதியாகின்றது,” என்று பாதுகாப்பு அமைச்சகத்தின் ஊடகப் பணிப்பாளரும், ஊடகப் பேச்சாளருமான கேணல் நலின் ஹேரத் பிபிசி தமிழுக்கு அளித்த பதிலில் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »