Press "Enter" to skip to content

வன்கொடுமை மாவட்டம் என்றால் என்ன? சாதி பிரச்னைக்கு அது தீர்வாகுமா?

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், ச.பிரசாந்த்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த 17 வயது பட்டியல் சாதி மாணவர் சாதி ரீதியிலாக வன்கொடுமைக்கு உள்ளாகி, அவரையும் அவரது தங்கையையும், சக மாணவர்கள் 6 பேர் அரிவாளால் வெட்டிய சம்பவம் தமிழகத்தை பதைபதைக்கச் செய்துள்ளது.

இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க, ‘வன்கொடுமை மாவட்டங்கள்’ எனப்பெயரிட்டு, சமூக நீதியை காக்க தனிப்படை அமைக்க வேண்டுமென கோரிக்கையை முன்வைக்கின்றனர் சமூக செயற்பாட்டாளர்கள்.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே, அடுத்தடுத்து வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கடந்தாண்டு டிசம்பர் மாதம், புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூரில் தலித் மக்கள் வசிக்கும் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம், கிருஷ்ணகிரியில் சாதி மறுப்பு திருமணம் செய்வோருக்கு அபராதம் விதித்து ஊரை விட்டு தள்ளி வைப்பது, நாங்குநேரியில் ஆதிக்க சாதி பள்ளி மாணவர்களின் வெறிச்செயல் என, பல வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. குழாய் மற்றும் ஊர் கிணற்றில் குடிநீர் பிடிப்பது, மயானத்தில் சடலத்தை புதைப்பது துவங்கி பலவற்றிலும் சாதிய பாகுபாடு நிலவுகிறது. சாதியம் பள்ளி வரையிலும் பரவியதற்கு, நாங்குநேரியில் பட்டியல் சாதி மாணவரை ஆதிக்கசாதி மாணவர்கள் வெட்டியதே சாட்சியாகும்.

சமூக நீதியில் முன்னேறிய மாநிலம் தமிழகம் தான் எனக்கூறி அரசியல் கட்சிகள் மேடை தோறும் மார்தட்டும் நிலையில், மனதை பதைபதைக்க வைக்கும் வன்கொடுமைகள் அதிகரித்து வருவது, உண்மையில் தமிழகம் சமூகநீதிக்கான மாநிலமா? என்ற கேள்வியை எழுப்புகிறது.

இந்நிலையில், வன்கொடுமை சம்பவங்கள் அதிகம் நடைபெறும் பகுதிகளை வன்கொடுமை மாவட்டங்களாக அறிவித்து, சாதிய மதவாத சக்திகளை கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பல்வேறு தரப்பினரும் எழுப்பியுள்ளனர்.

வன்கொடுமை மாவட்டம் என்றால் என்ன?

வன்கொடுமை சம்பவங்கள் அதிகம் நடக்கும் மாவட்டங்களை கண்டறிந்து, ‘வன்கொடுமை மாவட்டங்கள்’ என அறிவிக்க வேண்டும் என்று கோருகின்றனர்.

அப்படி அறிவிக்கப்படும் மாவட்டங்களில் சாதி ரீதியில் செயல்பட்டு பாகுபாட்டை உருவாக்கி வருவோர், பிரச்சினைகள் செய்வோரை கண்காணித்து, அதன் மூலம் அவர்களின் செயல்பாட்டை தடுக்க முடியும்.

வன்கொடுமை மாவட்டமாக அறிவிக்கும் போது அங்கு அரசு சிறப்பு கவனம் செலுத்துவதுடன், சமூக நீதியை உருவாக்கவும், பாதிக்கப்படும் பட்டியலின மக்களை மேம்படுத்த கூடுதல் நிதியை செலவிட முடியும் என இந்த கோரிக்கையை வைப்பவர்கள் தெரிவிக்கிறார்கள்.

தமிழகத்தில் அதிகரிக்கும் வன்கொடுமைகள்! ‘வன்கொடுமை மாவட்டம்’ தான் தீர்வா? சமூகநீதியை காக்க அரசு செய்ய வேண்டியது என்ன?

நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், திருநெல்வேலி தூத்துக்குடி பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் 30 முதல் 40 வன்கொடுமை கொலைகள் நடப்பதால் அதை வன்கொடுமை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றார்.

“வள்ளியூர், நாங்குநேரி பகுதிகளில் சாதி வன்கொடுமைகள் அதிகம் நிகழ்கின்றன. கடந்த ஆண்டு ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த ஒருவர் மீது வேண்டுமென்றே மின்சாரம் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் ஆணவக் கொலைகளும் இப்பகுதியில் அதிகம் நடக்கின்றன. தூத்துக்குடி, திருநெல்வேலி பகுதிகளில் ஒடுக்கப்படுகின்ற மக்கள் 30 -40 பேர் ஒவ்வொரு ஆண்டும் சாதி கொடுமைகளால் உயிரிழக்கின்றனர். எனவே தீவிரவாத செயல்களை கண்காணிக்க எப்படி க்யூ பிராஞ்ச் செயல்படுகிறதோ, அது போல சாதி வன்கொடுமைகளை தடுக்க தனிப்பிரிவு அமைக்க வேண்டும். பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் தமிழ்நாட்டை குறி வைத்திருக்கும் நிலையில் தனிப்பிரிவு கண்டிப்பாக தேவை” என்றார்.

இதே கோரிக்கையை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும் முன் வைத்து வருகிறார் என அவர் சுட்டிக் காட்டினார்.

‘வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரிக்கின்றன’

தமிழகத்தில் அதிகரிக்கும் வன்கொடுமைகள்! ‘வன்கொடுமை மாவட்டம்’ தான் தீர்வா? சமூகநீதியை காக்க அரசு செய்ய வேண்டியது என்ன?

தமிழகத்தில் ஆண்டுதோறும் வன்கொடுமை சம்பவங்கள் குறையாமல், தொடர்ந்து அதிகரித்து வருவது அதிர்ச்சியளிப்பதாக பிபிசி தமிழிடம் பேசிய எவிடென்ஸ் அமைப்பின் செயல் இயக்குநர் கதிர் தெரிவித்தார்.

“தமிழகத்தின் 38 மாவட்டங்களில் கடந்த, 2019ல் பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்பாக, 1,144 வழக்குகளும், 2020ல் 1,274 வழக்குகளும் பதிவாகியுள்ளன. 2021ல் 1,377 வழக்குகள் பதிவாகியுள்ளன,’’ என்றார் கதிர்.

தமிழ்நாட்டில், 2021இல் 53 வன்கொடுமை படுகொலைகள் நடந்துள்ளன, 58 கொலை முயற்சி சம்பவங்களில், 61 பேர் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளனர்.

“தமிழகம் முழுவதிலும் உள்ள காவல் நிலையங்களில், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவான வழக்கு விபரங்களை நாங்கள் சேகரித்தோம். அதன்படி, கடந்தாண்டு டிசம்பர் முதல் இந்தாண்டு ஜனவரி வரையில் மட்டுமே, 417 வழக்குகள் பதிவாகியுள்ளன” என்று கதிர் தெரிவித்தார்.

தென் மாவட்டங்களான மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களிலும், வடக்கு மாவட்டங்களான தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலும், மேற்கு மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளிலும் அதிக வன்கொடுமைகள் நடைபெறுவதை காண முடிகிறது.

‘‘இது போன்ற மாவட்டங்களை கண்டறிந்து, வன்கொடுமை மாவட்டங்களாக அறிவித்து, முதல்வர் நேரடியாக தனிக்கவனம் செலுத்தி, கண்காணித்தால் மட்டுமே வன்கொடுமைகள் குறையும்” என்றார் அவர்.

“காவல்துறையே காரணம்”

தமிழகத்தில் அதிகரிக்கும் வன்கொடுமைகள்! ‘வன்கொடுமை மாவட்டம்’ தான் தீர்வா? சமூகநீதியை காக்க அரசு செய்ய வேண்டியது என்ன?

தமிகத்தில் நடைபெறும் கொடூரமான வன்கொடுமை சம்பவங்களுக்கு முதல் பொறுப்பு காவல்துறை தான் என குற்றம் சாட்டுகிறார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், “ தமிழக காவல்துறையில் பல மாவட்டங்களில், அந்தந்த மாவட்ட பகுதியை சேர்ந்த, கிராமத்தை சேர்ந்தவர்கள் தான், ஆய்வாளர், எஸ்.ஐ மற்றும் இதர நிலைகளில் நியமிக்கப்படுகின்றனர்.

குறிப்பாக அனைத்தையும் கண்காணிக்கக்கூடிய உளவுத்துறையில் உள்ள போலீஸார் அந்தந்த கிராமத்தை சேர்ந்தவர்களாக, அங்குள்ள பெரும்பான்மை சாதியை சேர்ந்தவர்களாக உள்ளதால், சாதியினருடன் சொந்தம் கொண்டாடிக்கொண்டு செயல்படுகின்றனர். இதனால், வன்கொடுமை சம்பவங்கள் மீதான நியாயமான விசாரணை நடப்பதில்லை. உளவுத்துறையில் வெளியூரில் உள்ளவர்கள் அல்லது மாற்று சாதியை சேர்ந்தவர்களை நியமிக்க வேண்டும்,’’ என்று வலிறுத்தினார்.

“கண்காணிப்புக் குழுக்களில் சமூக நீதிக்கான செயற்பாட்டாளர்கள் இல்லை”

தமிழகத்தில் அதிகரிக்கும் வன்கொடுமைகள்! ‘வன்கொடுமை மாவட்டம்’ தான் தீர்வா? சமூகநீதியை காக்க அரசு செய்ய வேண்டியது என்ன?

வன்கொடுமைகள் தடுக்க தற்போதும் காவல்துறையிலும், நிர்வாக அமைப்பிலும் சிறப்பு குழுக்கள் இருப்பதாகவும் அவை முறையாக செயல்படவில்லை என்று ஆவேசமாக குற்றம்சாட்டுகின்றார் சமூக சமத்துவ படையின் தலைவரும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான சிவகாமி. வன்கொடுமைகளை தடுப்பதற்கான குழுக்களில் சமூக நீதி செயற்பாட்டாளர்களுக்கு பதில் கட்சிக்காரர்களுக்கு சாதகமானவர்களே இருப்பதாக அவர் சாடுகிறார்.

“வன்கொடுமையை தடுக்க முதல்வர் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையிலான விழிப்பு கண்காணிப்புக் குழுக்களில், உண்மையில் சமூக நீதிக்காக செயல்படும் செயற்பாட்டாளர்கள் இல்லை. கட்சியினர் தங்களுக்கு தேவையான நபர்களையும், வன்கொடுமை குறித்து வாய்திறக்காத நபர்களையும் தான் நியமிக்கின்றனர்,’ என்றார்.

இதே போன்று காவல்துறையிலும் வன்கொடுமைகள் தடுக்க இப்போதே தனிக்குழு இருப்பதாகவும் அதுவும் முறையாக செயல்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

“தமிழக காவல்துறையில் வன்கொடுமைகளை தடுக்க, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவும், பிரத்தியேகமாக நான்கு நீதிமன்றங்களும் உள்ளன. ஆனால், வன்கொடுமை சம்பவங்களும் குறையவில்லை, வன்கொடுமை வழக்குகள் மீதான விசாரணைகளும் விரைவில் முடிவதில்லை”

எனவே வன்கொடுமை மாவட்டங்களாக அறிவிப்பது அவசியம் என சிவகாமி வலியுறுத்துகிறார். ‘‘வன்கொடுமை மாவட்டம் என அறிவிக்கும் போது, அந்தப்பகுதியில் நடக்கும் வன்கொடுமை தொடர்பான தகவல்கள் நேரடியாக மாவட்ட நிர்வாகத்துக்கும், அரசுக்கும் தெரியவரும். எளிதாக பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்” என்றார்.

பள்ளி, கல்லூரிகளில் சாதியை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

சாதி பெருமை, ஆண்ட வம்சம் என்று பேசுவது பிறர் சாதி வெறுப்பை உருவாக்குகிறது என திருமாவளவன் திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த போது தெரிவித்திருந்தார்.

“ பாரதிராஜா முப்பது ஆண்டுகளுக்கு முன் இயக்கிய ‘வேதம் புதிது’ என்ற திரைப்படத்தின் முடிவில் பிள்ளைகளையாவது சுதந்திரமாக சிந்திக்க விடுங்கள் என்று கூறியிருப்பார். அதையே தான் நானும் கூறுகிறேன். இளம் தலைமுறையினரிடையே சாதி பெருமை பேசுவது தடுக்கப்பட வேண்டும்” என்று கூறினார்.

பள்ளி, கல்லூரிகளுக்காக பிரத்தியேக காவல் தனிப்பிரிவு உருவாக்குவதன் மூலம், கல்வி நிலையங்களில் நாங்குநேரியில் நடந்ததைப்போன்ற சம்பவங்கள் நடக்காமல் நிச்சயம் தடுக்க முடியும் என்று சிவகாமி ஐ.ஏ. எஸ் ஆலோசனையை முன் வைத்தார்.

கல்வி நிலையங்களில் வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்ந்தால், அது குறித்து புகார் தெரிவிக்க , ‘டோல் ஃப்ரீ’ எண் உருவாக்க வேண்டும் என பிபிசி தமிழிடம் பேசிய வன்னி அரசு தெரிவிக்கிறார்.

மாணவர்களிடையே சாதி வன்கொடுமைகள் நிகழாமல் தவிர்க்க, வாரம் ஒரு முறையாவது பள்ளி, கல்லூரிகளில் சமூக நீதிக்கான வகுப்புகள் நடத்தி, கலை நிகழ்ச்சிகள் வாயிலாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கதிர் வலியுறுத்துகிறார்.

உதவி மையத்தை அரசு உருவாக்கும்

செயற்பாட்டாளர்களின் குற்றச்சாட்டுகள், கோரிக்கைகள் குறித்து, ஆதி திராவிடர் நலத்துறை இயக்குநர் ஆனந்திடம் விளக்கம் கேட்டோம். பிபிசி தமிழிடம் பேசிய அவர், ‘‘வன்கொடுமைகளை தடுப்பதற்கான தற்போதைய அமைப்புகள் தீவிரமாக செயல்படுகின்றன. போலீஸார் வன்கொடுமை வழக்குகள் மீது விசாரணை நடத்தி வருவதுடன், மாநில மற்றும் மாவட்ட அளவில் விழிப்பு கண்காணிப்புக்குழு கூட்டம் சரியாகத்தான் நடத்தப்பட்டு வருகிறது. பெரிய அளவில் நிலுவை வழக்குகள் ஏதும் இல்லை; Forensic ஆய்வு முடிவு, வழக்கு தொடர்பான சில விசாரணைகளால் தான் சில வழக்குகள் நிலுவையில் உள்ளன.

வன்கொடுமை சிறப்பு மாவட்டங்களாக அறிவிப்பதற்கு பதிலாகத்தான் தற்போது, வன்கொடுமை அதிகம் நடக்கும் கிராமங்கள் என அறிவித்து கண்காணிக்கிறோம். தமிழ்நாட்டில் 433 கிராமங்களை கண்டறிந்துள்ளோம்.

இந்த கிராமங்களுக்கு மத்திய அரசின் திட்டம் வாயிலாக, 21 லட்சம் ரூபாயும், மாவட்ட நிர்வாகம் வாயிலாக சிறப்பு நிதியும் ஒதுக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி பட்டியலின மக்களை பொருளாதார ரீதியில் மேம்படுத்தி வருகிறோம். மயானம், குடிநீர் குழாய், சாலை பயன்படுத்துவது என, பல வகைகளில் வன்கொடுமைகள் நடக்கின்றன,’’ என்றார்.

மேலும் பேசிய அவர், ’’பள்ளி, கல்லூரி மாணவர்கள் புகார் தெரிவிக்கவும், பாதிக்கப்படும் சாதாரண மக்கள் புகார் தெரிவிக்கவும் தனியாக உதவி மையம் துவங்கி, ‘டோல் ஃப்ரீ’ எண் அறிமுகம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது,’’ என்றார்.

‘உருவாக்குவது சுலபம்; செயல்படுத்துவது?’

தமிழகத்தில் அதிகரிக்கும் வன்கொடுமைகள்! ‘வன்கொடுமை மாவட்டம்’ தான் தீர்வா? சமூகநீதியை காக்க அரசு செய்ய வேண்டியது என்ன?

வன்கொடுமையை தடுக்க தனிப்படை உருவாக்குவது தீர்வாகுமா? என்ற கேள்வியை நாம் தமிழக காங்கிரஸ் குழு உறுப்பினரும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான சசிகாந்த் செந்திலிடம் முன்வைத்தோம். நம்மிடம் பேசிய சசிகாந்த் செந்தில், ‘‘தமிழக காவல் துறையில், வன்கொடுமைக்காக தனிப்பிரிவு, பள்ளிக் கல்லூரிகளுக்காக பிரத்தியேக படை என, அமைப்புகளை அரசு உருவாக்குவது சுலபம். ஆனால், அதை திறம்பட செயல்பட வைத்து நல்ல விளைவுகளை உருவாக்குவது தான் கடினம். ஏனெனில் இருக்கின்ற அமைப்புகளே முறையாக செயல்படாமல் உள்ளன.

வன்கொடுமை பிரச்சினைகளை தமிழக அரசு, மாநிலத்தின் முதன்மையான தீவிரமான பிரச்சினையாக கருதி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மாற்றம் ஏற்படும்,’’ என்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »