Press "Enter" to skip to content

பிகாரில் எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்பட்டு விட்டதாக பிரதமர் கூறியது உண்மையா? கள நிலவரம் என்ன?

நாட்டின் பல்வேறு இடங்களில் புதிய அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனங்கள் அதாவது ‘எய்ம்ஸ் மருத்துவமனைகள்’ திறக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோதி கடந்த வாரம் கூறியிருந்தார்.

இதுதொடர்பாக பிரதமர் மோதி பேசியபோது, “அசாமின் கௌஹாத்தி முதல் மேற்கு வங்க மாநிலம் கல்யாணி வரையிலும், ஜார்கண்டில் உள்ள தியோகர் முதல் பிகாரில் உள்ள தர்பங்கா வரையிலும் சிறந்த சுகாதார வசதிகளுடன், மக்கள் சிகிச்சை பெறும் வகையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளன. எனவே, நோயாளிகள் மருத்துவ சிகிச்சைக்காக நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் செல்ல வேண்டியதில்லை” என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பிகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பான அரசியல் சூடுபிடித்துள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக பிரதமர் மோதி தவறான தகவலை கூறியிருப்பதாக ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், “பிரதமரிடம் இருந்து நாடு உண்மையை எதிர்பார்க்கின்றது, ஆனால் அவர் பொய் சொல்கிறார்,” என்று ட்வீட் செய்துள்ளார்.

பிகார் எய்ம்ஸ்

பட மூலாதாரம், TEJASHWI YADAV TWITTER

எய்ம்ஸ் குறித்த மத்திய அரசின் வாதம்

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிகார் அரசு நிலம் வழங்கும் இடம் ஏற்றதாக இல்லை என மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் ராஜேஷ் பூஷன் கடந்த மே 26ஆம் தேதி பிகார் அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

‘சம்பந்தப்பட்ட நிலம், சாலையில் இருந்து மிகவும் தாழ்வாக இருப்பதாகவும், அதைச் சமன் செய்ய தரமான மண் தேவைப்படுவதாகவும், இது தர்பங்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிடைக்காமல் போகலாம்’ என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தேஜஸ்வி யாதவின் ட்வீட்டை தொடர்ந்து, மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பிரதமர் மோதிக்கு ஆதரவாக, பிகார் அரசே இதில் தாமதம் ஏற்படுத்துவதாகக் குற்றம்சாட்டி உள்ளார்.

தர்பங்காவில் எய்ம்ஸ் அமைப்பதற்கான ஒப்புதல் செப்டம்பர் 19, 2020 அன்று, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தின் கீழ் பிகார் இருந்தபோது பெறப்பட்டது. அப்போது பாஜக தலைவர் மங்கள் பாண்டே மாநில சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தார்.

பிகார் எய்ம்ஸ்

பட மூலாதாரம், ANI

கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி பிஹார் அரசாங்கம் முதல் முறையாக நிலத்தை வழங்கியதாகவும் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.

அந்த நேரத்தில் பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இருந்தது; மங்கள் பாண்டே சுகாதார அமைச்சராக இருந்தார்.

தர்பங்காவில் எய்ம்ஸ் தொடர்பான அரசியல் சூடுபிடித்துள்ள நிலையில், அதன் உண்மையை அறிய, பிகார் அரசு எய்ம்ஸ் அமைப்பதற்கு நிலம் கொடுக்க முன்வந்த இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தோம்.

பிகார் எய்ம்ஸ்

பிகாரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக வழங்கப்பட்ட நிலத்தின் கள நிலவரம் என்ன?

இந்த இடம் தர்பங்கா நகரத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் ஷோபன்-பரௌல் புறவழிச் சாலையில் அமைந்துள்ளது. அத்துடன், இந்த நிலம் தர்பங்கா விமான நிலையத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவிலும், நான்கு வழி பிரதான சாலையில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலம், சாலையில் இருந்து மிகவும் தாழ்வாக இருப்பதால், மழை காரணமாக நிலத்தின் பெரும்பாலான பகுதி தண்ணீரில் மூழ்கியுள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிலம் வழங்கிய பஞ்சோப் கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் ராஜீவ் சௌத்ரி இதுகுறித்து பிபிசியிடம் பேசியுள்ளார்.

பிகார் எய்ம்ஸ்

எய்ம்ஸ் அமைக்க மொத்தம் 151 ஏக்கர் நிலம்

‘ஷோபனில் எய்ம்ஸ் அமைக்க மாநில அரசுக்கு பரிந்துரைத்தவர்கள் கிராம மக்களே’ என்று ராஜீவ் சௌத்ரி கூறுகிறார்.

ஏனெனில் இங்கு அரசாங்கத்திற்குப் பெரிய அளவில் நிலம் உள்ளது மற்றும் கிராம மக்களும் சொந்தமாக நிலம் கொடுக்கத் தயாராக உள்ளனர். இதிலிருந்துதான் 151 ஏக்கர் நிலம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசிடம் கொடுக்கப்பட்டது.

மொத்த நிலத்தில் 131 ஏக்கர் நிலம் மாநில அரசுக்குச் சொந்தமானது. 20 ஏக்கர் நிலம் உள்ளூர் விவசாயிகளுக்குச் சொந்தமானது. அதாவது, இங்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை.

பிகார் எய்ம்ஸ்

பட மூலாதாரம், ANI

திட்டத்தை நிராகரித்த மத்திய அரசு

எய்ம்ஸ் மருத்துவமனைக்குப் பரிந்துரைக்கப்பட்ட நிலம் தொடர்பான பிரச்னைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் குறிப்பிட்டுள்ள அதே கடிதத்தில் நிலத்தை மேடாக்குவதற்கான செலவு போன்றவை குறித்தும் பேசப்பட்டுள்ளது.

அப்படி நிலத்தை மேடாக்கினால் கட்டுமானச் செலவு கணிசமாக அதிகரிக்கும் என்று பூஷன் எழுதியிருந்தார்.

இருப்பினும் பிகார் அரசு 151 ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்குவதற்கான முன்மொழிவை அனுப்பியது மட்டுமல்லாமல், தனது சொந்த செலவில் நிலத்தை மேடாக்கும் பணியையும் தொடங்கியுள்ளது என்று தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.

மறுபுறம், ராஜீவ் சௌத்ரி, ‘நாட்டில் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனைகளில் இதுவே சிறந்த இடம் என்று இங்கு வந்த மத்திய குழு முதலில் கூறியது. நெடுஞ்சாலை மற்றும் விமான நிலையத்திற்கு அருகில் இந்தப் பகுதி அமைந்திருப்பதுதான் மத்திய குழு அவ்வாறு கூறியதற்கு முக்கிய காரணம்.

மேலும் இந்த நிலம் திறந்த மற்றும் பசுமையான பகுதியில் உள்ளது. அங்கு கட்டுமானப் பணிகளைச் சிறப்பாகவும் வேகமாகவும் செய்ய முடியும். அத்துடன் இந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் போன்ற பிரச்னைகள் இல்லை,’ என்று ராஜீவ் சௌத்ரி தெரிவித்திருந்தார்.

இதுபோன்ற தாழ்வான பகுதியில் மண் நிரப்பி நிலத்தை சமன் செய்து, பிகார் பொறியியல் கல்லூரி கட்டப்பட்டுள்ளது என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது. இதுதவிர, இதுபோன்ற நிலத்தில் பல தனியார் கட்டடங்கள், மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளன.

தர்பங்காவின் தேகுலி பஞ்சாயத்துத் தலைவர் ஷியாமனந்தன் பிரசாத், “நிலம் தாழ்வான பகுதியில் அமைந்திருப்பது ஒரு காரணமல்ல. மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான அரசியல் மோதலால் இந்தப் பணி முடங்கியிருக்கிறது,” என்று கூறுகிறார்.

பிகார் எய்ம்ஸ்

நிதிஷ் குமாருக்கு நற்பெயர் கிடைப்பதை மத்திய அரசு விரும்பவில்லையா?

இங்கு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டால் அதன் பெருமை பிகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு வந்துவிடும் என மத்திய அரசு கருதுவதாக ராஜீவ் சௌத்ரி குற்றம்சாட்டியுள்ளார்.

இதனிடையே, பிகார் அரசு மருத்துவக் கல்லூரிகளை அனைத்து இடங்களிலும் கட்டி வருவதாக முதலமைச்சர் நிதிஷ்குமார் கூறியுள்ளார். ‘பாட்னா மற்றும் தர்பங்காவிலேயே எய்ம்ஸ் கட்டப்பட வேண்டும்; இது எங்கள் விருப்பம்’ என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் குடியாரி பஞ்சாயத்து தலைவரான சுரேஷ் பிரசாத் சிங், “அரசுகளுக்கு இடையேயான பூசல் காரணமாக இங்கு பணிகள் முடங்கியுள்ளன. இது முற்றிலும் தவறானது,” என்று குற்றம் சாட்டுகிறார்.

“தர்பங்காவின் அண்டை மாவட்டங்களான மதுபனி, சமஸ்திபூர், முசாபர்பூர், சீதாமர்ஹி, ஷிவர் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த நோயாளிகள்கூட இங்கு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டால், அதன் மூலம் பலன் அடைவார்கள்,” என்று அருகிலுள்ள குடைலா பஞ்சாயத்துத் தலைவர் ராம் ஜி ராம் கூறுகிறார்.

பிகார் எய்ம்ஸ்

எய்ம்ஸ் குறித்த அரசியல்

எய்ம்ஸ் தொடர்பான பிரதமரின் கூற்றைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் இது பொய் என்று கூறி, நாடு முழுவதும் உள்ள எய்ம்ஸில் உள்ள ஏராளமான காலிப் பணியிடங்களைக் குறிப்பிட்டு வெளியாகியிருக்கும் செய்திகளைப் பகிர்ந்துள்ளார்.

எய்ம்ஸ் கட்டுவது தொடர்பான சர்ச்சை ஓரிடத்தில் எழுவது அரசியலில் புதிதில்லை. முன்னதாக, தமிழகத்தில் மதுரையில் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக அரசியல்ரீதியாக சர்ச்சை ஏற்பட்டது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் 95% பணிகள் முடிவடைந்துள்ளதாக கடந்த ஆண்டு மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் பாஜக தலைவர் ஜேபி நட்டா கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நட்டாவின் இந்தக் கூற்றுக்குப் பிறகு, ஒரு படம் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது, அதில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி எம்.பி.க்கள் மதுரையில் 95% எய்ம்ஸ் பணிகள் முடிந்ததாகக் கூறப்பட்ட காலி நிலத்தைக் காட்டுகிறார்கள்.

அதுமட்டுமின்றி, கடந்த வாரம் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரமும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது உண்மைக்குப் புறம்பானது என்று தெரிவித்திருந்தார்.

மேலும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் எந்தப் பணியும் நடைபெறவில்லை என்றும், இது சரியான நேரத்தில் முடிக்கப்படும் வாய்ப்பும் தென்படவில்லை எனவும் அவர் கூறியிருந்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »