Press "Enter" to skip to content

மத்திய அரசின் நிதியை பெற புதிய கல்வி கொள்கையை தமிழ்நாடு ஏற்க வேண்டிய நிர்பந்தமா?

பட மூலாதாரம், Getty Images

உயர் கல்விக்கு பெரிய அளவில் நிதியளிக்கக்கூடிய பிஎம் – உஷா திட்டத்தில் இணைய புதிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டுமென நிபந்தனை விதிக்கப்படுவதால் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் இன்னும் இதில் இணையவில்லை. இதனால், உயர் கல்விக்கான பெரும் தொகையை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

மாநிலங்கள் நடத்திவரும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு நிதியளிக்கும் வகையில் ஒரு மிகப் பெரிய திட்டத்தை Pradhan Mantri Uchchatar Shiksha Abhiyan (PM-USHA) என்ற பெயரில் மத்திய அரசு செயல்படுத்திவருகிறது.

அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தத் திட்டத்தில் சுமார் 13,000 கோடி ரூபாயை மத்திய அரசு செலவிடவிருக்கிறது. ஆனால், இந்த நிதியை மாநிலங்கள் பெற வேண்டுமானால், புதிய கல்விக் கொள்கையை ஏற்பது உள்ளிட்ட சில அம்சங்களை மாநிலங்கள் ஏற்க வேண்டுமெனக் கூறப்படுவதால், கேரளா, தமிழ்நாடு போன்ற பல மாநிலங்கள் இந்தத் திட்டத்தில் இன்னும் சேராமல் இருக்கின்றன.

முதலில் இந்தத் திட்டத்தைப் பற்றிப் பார்க்கலாம். இது புதிய திட்டமல்ல. 2013ஆம் ஆண்டில் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் Rashtriya Uchchatar Shiksha Abhiyan (RUSA) என்ற பெயரில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. மாநில உயர் கல்வி அமைப்புகளைத் திறம்படச் செயல்படச் செய்வதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கமாக இருந்தது.

புதிய கல்விக் கொள்கை - PM USHA

பட மூலாதாரம், Getty Images

இந்தத் திட்டத்தின் முதல் கட்டம் 2013லிருந்து 2018வரை செயல்படுத்தப்பட்டது. அதற்குப் பிறகு 2018ல் இரண்டாவது கட்டம் துவங்கப்பட்டது. 2020ல் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்திய நிலையில், இந்தத் திட்டத்தின் பெயர் Pradhan Mantri Uchchatar Shiksha Abhiyan (PM-USHA) என மாற்றப்பட்டது.

முந்தைய RUSA திட்டத்தின் கீழ் 2,500 கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் தேர்வுசெய்யப்பட்டு, 16 பிரிவுகளின் கீழ் அவற்றுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டன. இதன் காரணமாக மாணவர் சேர்க்கை, மாணவர் – ஆசிரியர் விகிதம் ஆகியவை மேம்பட்டன. அரசுக் கல்லூரிகளின் உள் கட்டமைப்பு வசதிகள் வெகுவாக மேம்படுத்தப்பட்டன.

ஆனால், இந்தத் திட்டத்தின் அடுத்த கட்டத்தை வடிவமைக்கும்போது 2020ஆம் ஆண்டின் தேசிய கல்விக் கொள்கையை ஒரு வழிகாட்டியாகக் கொண்டு, மத்திய அரசு வடிவமைத்தது. இந்தத் திட்டத்திற்காக 2023-24 முதல் 2025-26 வரை 12,926.1 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் ஒரு மாநிலம் இணைய மத்திய கல்வி அமைச்சகத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் செய்துகொள்ள வேண்டும். புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தில் பங்குபெற தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுச் செயல்படுத்த வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மத்திய கல்வித் துறையிலிருந்து என்ன வாக்குறுதிகள் அளிக்கப்படும், மாநில கல்வித் துறை என்ன வாக்குறுதிகள் அளிக்கப்பட வேண்டும் என்பது குறித்து விரிவாகப் பட்டியலிடப்பட்டிருக்கிறது.

புதிய கல்விக் கொள்கை - PM USHA

பட மூலாதாரம், Getty Images

அதன்படி, “2020ஆம் ஆண்டின் புதிய கல்விக் கொள்கையில் விவரிக்கப்பட்டிருக்கும் நிர்வாகரீதியான, கல்வி ரீதியான, ஆட்சி ரீதியான சீர்திருத்தங்களை மாநில அளவிலும் கல்லூரி/பல்கலைக்கழக மட்டத்திலும் செயல்படுத்த வேண்டும்” என்று கூறப்பட்டிருக்கிறது. அந்தச் சீர்திருத்தங்களில் Academic Bank of Credit எனப்படும் மாணவர்களின் கல்வி கற்றல் கணக்கை உருவாக்குவது, நான்காண்டு பட்டப்படிப்பில் எந்த ஆண்டிலும் சேர்வது அல்லது விலகுவதற்கான வாய்ப்பு, ஒரு பட்டப்படிப்பிற்குள்ளேயே, விரும்பிய பாடங்களைத் தேர்வுசெய்து படிக்க வாய்ப்பளித்தல் போன்றவை இதில் அடங்கும்.

மேலும், PM-USHA திட்டத்தின் வழிகாட்டும் சக்தியாக 2020ஆம் ஆண்டின் புதிய கல்விக் கொள்கையே இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசைப் பொறுத்தவரை முந்தைய திட்டத்தைவிட தற்போதுள்ள திட்டம் எளிமையாக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறது. அதாவது, எந்த மாவட்டத்தில் திட்டத்தைச் செயல்படுத்துவது என்பதை அந்தந்த மாநில அரசுகளை முடிவுசெய்யலாம். திட்டங்களை அடையாளம் காண்பதில், கூடுதல் நெகிழ்வுத் தன்மை இருப்பதால், விரும்பிய திட்டங்களைச் செயல்படுத்த நிதியைப் பெற முடியும் என்கிறது மத்திய அரசு.

ஆனால், இந்தத் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பங்குபெற வேண்டுமென்றால், புதிய கல்விக் கொள்கையில் கூறியுள்ளபடி நிர்வாக ரீதியிலும் பாடத் திட்டங்களிலும் மாற்றங்களைச் செய்ய வேண்டும்.

மத்திய பா.ஜ.க. அரசு அமல்படுத்திய 2020ஆம் ஆண்டின் புதிய கல்விக் கொள்கையை ஏற்காத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள், இந்த நிபந்தனைகளை சந்தேகத்துடன் பார்க்கின்றன. இதனால் கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட 14 மாநிலங்கள் இந்தத் திட்டத்தில் இன்னும் இணையவில்லை. 22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் இந்தத் திட்டத்தில் பங்குபெற கையெழுத்திட்டுள்ளன.

புதிய கல்விக் கொள்கை - PM USHA

பட மூலாதாரம், Getty Images

இந்தத் திட்டத்தின் கீழ் பங்குபெறும்போது, மத்திய அரசு 60 சதவீத நிதியையும் மாநில அரசு அல்லது யூனியன் பிரதேச அரசுகள் 40 சதவீத நிதியையும் செலவழிக்க வேண்டும்.

“கல்லூரிகளை தேவைக்கேற்ப துவங்கிவிட்டாலும், பல கல்லூரிகளில் ஆய்வகம், விளையாட்டுத் திடல், உள்கட்டமைப்பு போன்ற பல வசதிகள் குறைவாகவே இருந்தன. 2013- 14ல் இந்த ‘ரூசா’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகம் பெரிய அளவில் பயன்பெற்றது” என்கிறார் அந்த காலகட்டத்தில் தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் உறுப்பினர் – செயலராக இருந்த கரு. நாகராஜன்.

எல்லாப் பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள், கல்லூரி முதல்வர்கள் ஆகியோரை அழைத்துப் பேசி, என்னென்ன தேவைகள் இருக்கின்றன என்பதைப் பட்டியலிட்டு மத்திய அரசிடம் நிதி பெறப்பட்டது என்றும், அந்த சமயத்தில் நிபந்தனைகள் எல்லாம் திட்டத்தை செயல்படுத்துவது பற்றி இருந்தனவே அல்லாமல், கல்வித் திட்டம் குறித்து ஏதும் இல்லை என்கிறார் கரு. நாகராஜன்.

“தமிழ்நாட்டில் மிக அற்புதமாக இந்தத் திட்டத்தை செயல்படுத்தினோம். இதற்கென திட்ட அலுவலர்கள் நியமிக்கப்பட்டார்கள். தமிழ்நாட்டில் உள்ள அரசுக் கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் தற்போது பெருமளவுக்கு ஏற்படுத்தப்பட்டுவிட்டன என்றால் அதற்கு முக்கியக் காரணம் இந்தத் திட்டத்தின் மூலம் கிடைத்த நிதிதான். ஆனால், இந்தத் திட்டத்தில் இணைய கல்வி கொள்கை தொடர்பான நிபந்தனைகளை வைப்பதை ஏற்க முடியாது” என்கிறார் கரு. நாகராஜன்.

புதிய கல்விக் கொள்கை - PM USHA

பட மூலாதாரம், Getty Images

இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, மாநிலங்களில் உள்ள உயர் கல்விக் கட்டமைப்புகளை மேம்படுத்த இந்த விவகாரத்தில் என்ன செய்யப்போகிறோம் என்பது குறித்து தமிழ்நாடு அரசு விரைவில் முடிவெடுத்தாக வேண்டியது கட்டாயம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் முதன்மை அமைப்பாக (Nodal Agency) தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் இருக்கும். இந்தத் திட்டத்தில் இன்னும் தமிழ்நாடு இணையவில்லை என்றாலும் தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து மாநில அரசு என்ன செய்யப்போகிறது என்பது குறித்து, அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் எதுவும் பேச மறுக்கின்றனர்.

தமிழக அரசு வட்டாரங்களில் இது குறித்து கேட்டபோது, மத்திய – மாநிலப் பட்டியலில் உள்ள ஒரு துறைக்கு நிதி ஒதுக்கும்போது முன் நிபந்தனைகள் விதிப்பதை எப்படி ஏற்க முடியும் எனத் தெரிவித்தனர்.

“கல்வி என்பது பொதுப் பட்டியலில் உள்ளது. கல்விக்கென நிதி ஒதுக்கும்போது, புதிதாக கொள்கை சார்ந்த முன் நிபந்தனைகள் விதிப்பதை எப்படி ஏற்க முடியும்? புதிய கல்விக் கொள்கையை திணிப்பதற்கான ஒரு முயற்சியாகத்தான் இதனைப் பார்க்கிறோம். தமிழ்நாடு மட்டுமல்ல, வேறு பல மாநிலங்களும் இதனை ஏற்கவில்லை. விரைவில் இரு தரப்பும் பேசி இது குறித்து முடிவெடுப்போம்” என்று மட்டும் தெரிவித்தனர்.

தமிழக அரசு விரைவில் உயர் கல்வி தொடர்பாக பல விஷயங்களில் உடனடியாக முடிவெடுத்தாக வேண்டும் என்கிறார்கள் கல்வியாளர்கள்.

“மாநிலத்தில் உயர்கல்வி தொடர்பான கொள்கை குழப்பத்தில்தான் இருக்கிறது. இன்னும் மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்கவில்லை. அப்படி உருவாக்கினால்தான், தேசியக் கல்விக் கொள்கையோடு எந்த அளவுக்கு ஒத்துப்போகிறோம், எந்த அளவுக்கு விலகியிருக்கிறோம் என்பதை முடிவுசெய்ய முடியும்” என்கிறார் தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரான ராமசாமி.

புதிய கல்விக் கொள்கை - PM USHA

பட மூலாதாரம், Getty Images

தற்போதுள்ள நடைமுறையில் உள்ள மூன்றாண்டு கல்வி பட்டப்படிப்பிற்குப் பதிலாக நான்காண்டு பட்டப்படிப்பு வலியுறுத்தப்படுகிறது. “இதில் தமிழ்நாடு அரசு விரைவில் முடிவெடுத்தாக வேண்டும். காரணம், இதனை தனியார் பல்கலைக்கழகங்கள் ஏற்றுக்கொண்டுவிட்டன. தமிழ்நாட்டில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்களும் ஏற்றுக்கொண்டுவிட்டது. தமிழ்நாட்டில் மாநில அரசால் நடத்தப்படும் தொழில்சார் பல்கலைக்கழகங்கள் (மருத்துவம், விவசாயம், சட்டம், பொறியியல்) ஏற்கனவே நான்காண்டு அல்லது ஐந்தாண்டு பட்டப் படிப்புகளைத்தான் நடத்தி வருகின்றன. மீதமுள்ள 22 அரசுப் பல்கலைக்கழகங்கள்தான் எந்த முடிவும் எடுக்காமல் இருக்கின்றன. இது மாணவர்களைக் கடுமையாகப் பாதிக்கும்” என்கிறார் ராமசாமி.

கேரள உதாரணத்தை தமிழ்நாடு பின்பற்றலாம் என்கிறார் அவர். அதாவது, 4 ஆண்டு பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தியுள்ள கேரளா, 3 ஆண்டுகளில் வெளியேறும் வாய்ப்பையும் மாணவர்களுக்கு அளிக்கிறது. விரும்பியவர்கள் நான்காண்டுகள் படிக்கலாம். அவர்களுக்கு ‘ஹானர்ஸ்’ பட்டம் வழங்கப்படும். தமிழ்நாடும் அதே போலச் செய்யலாம் அல்லது ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுகலை படிப்பை நடத்தலாம் என்கிறார் ராமசாமி.

கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, வெளிநாட்டுக்குச் சென்று மேற்படிப்பு படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை இந்தியாவிலேயே ஆந்திர மாநிலத்திற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில்தான் அதிகம். “உயர்கல்வி விஷயத்தில் ஒரு முடிவெடுக்காமல் இருப்பது வெளிநாட்டில் படிக்கும் வாய்ப்புகளைக் கடுமையாக பாதிக்கும்” என்கிறார் அவர்.

அகில இந்திய உயர்கல்வி கணக்கெடுப்பு (AISHE)ன்படி இந்தியாவில் 12ஆம் வகுப்பை முடித்து கல்லூரிகளில் சேரும் விகிதம் 27.3 சதவீதமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் இது 46.9 சதவீதமாக இருக்கிறது.

இந்த நிலையில், PM – USHA திட்டத்தில் தமிழ்நாடு எடுக்கப்போகும் முடிவு, மிக முக்கியமானதாக மாணவர்களின் எதிர்காலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »