Press "Enter" to skip to content

மதுரையில் ரூ.14 கோடி சொத்துகளை கல்விக்காக கொடுத்த முதியவர் – வியப்பூட்டும் காரணம்

பட மூலாதாரம், CMO TAMILNADU

  • எழுதியவர், கலைவாணி பன்னீர்செல்வம்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

“10 அணா சம்பளத்த வாங்கிட்டு வந்து மண்ணெண்ணெய் விளக்குள எண்ணி எண்ணி பாப்பாங்க எங்க அம்மா. அவங்க முதலாளி வெள்ளைச்சாமி நாடார் ஒரு கொடை வள்ளல்.

படிப்புக்குன்னு சொல்லிட்டா பணத்தை வாரிக் கொடுப்பாரு. அவரு பத்தின கதையெல்லாம் சொல்லித்தான் எங்கம்மா சோறூட்டுவாங்க.” என்று முதிர்ந்த குரலில் தன் கதையைச் சொல்லத் தொடங்கினார் அந்த முதியவர்.

மதுரை செல்லூரில் ‘வத்தல் தாத்தா’ என அன்போடு அழைக்கப்படுபவர் டி.பி.ராஜேந்திரன். அவர் தனது கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துகளை விற்று, அந்தப் பணத்தை அரசுப் பள்ளிகளுக்கு வாரி வழங்கி வருகிறார்.

மதுரையில் சம்பாதித்த பணம் மதுரைக்கே!

மதுரை பணம் மதுரைக்கே!

பட மூலாதாரம், RAJENDHIRAN

இன்று வத்தல் வியாபாரத்தில் கொடி கட்டிப் பறக்கும் இவருக்கு முத்துமாரி, மாரீஸ்வரி, மாரிக்கனி என மூன்றும் பெண் பிள்ளைகள். அவர்களுக்கு மணம் முடித்து, வாழ்க்கைக்குத் தேவையானதைச் செய்து கொடுத்தார்.

பேரக்குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்தார். அவர்களின் திருமணத்தையும் சிறப்பாக முன்னின்று நடத்திக் கொடுத்தார். அவர்களுக்குத் தேவையானவற்றைப் பரிசளித்தார்.

மனைவியும் 3வது மகளும் இறந்துபோது, வாழ்க்கையில் சற்று சலிப்பு தட்டியது. இருப்பினும் தனது சேவைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் எண்ணம் துளியும் அவருக்குத் தோன்றியதில்லை என்கிறார்.

“மதுரை மக்களிடம் சம்பாதித்த பணத்தை, மதுரை மக்களுக்கே செலவளிக்கப் போகிறேன்” எனக் கூறுகிறார். வத்தல் ஃபேக்டரி, வீடு, அலுவலகம் என அனைத்தையும் விற்று வரும் ரூ.14 கோடி பணத்தையும் மதுரை மக்களின் நல்வாழ்வுக்கும், மதுரை மாணவர்களின் கல்விக்கும் செலவளிக்கப் போவதாக பெருமிதத்துடன் கூறுகிறார்.

சொத்து இருந்தும் படிப்பின் மீது ஏக்கம்

சிறுவயதில் மிக மிக ஏழ்மையான குடும்பம். வறுமையைப் பார்த்து வளர்ந்த அவருக்கு 5ஆம் வகுப்புக்குப் பிறகு படிப்பைத் தொடர வாய்ப்பு கிடைக்கவில்லை.

உழைப்பால் கிடைத்த வெற்றியில் சொத்துகளைக் குவித்து, கார்களில் உலா வந்தாலும் ஏதேனும் பள்ளியைக் கடக்கும் போதெல்லாம், அங்கு பயிலும் பிள்ளைகளையும், அவர்களுக்குப் பாடம் நடத்தும் ஆசிரியர்களையும் பார்க்கும்போது ராஜேந்திரனுக்கு ஒரு ஏக்கம் வந்துள்ளது.

காமராஜர் பிறந்த விருதுநகர் மண்ணில் பிறந்த அவரை மதுரையும், அங்குள்ள கல்விக்கான சேவையும் எப்படி ஈர்த்தது?

அந்தக் கதையையும் அவரது நினைவுகளையும் பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார்.

ரூ.300 முதலீடு + 50 ஆண்டு கடின உழைப்பு = பல கோடி மதிப்பிலான சொத்து

வாழ வைத்த மதுரை

பட மூலாதாரம், RAJENDHIRAN

ரூ.25 சம்பளத்திற்கு 1950களில் பூண்டுக்கடையில் பணியாற்றிக் கொண்டிருந்தார் ராஜேந்திரன். திடீரென அவரது அப்பாவுக்கு வலிப்பு வந்து இறந்துவிட, அவரைக் காப்பாற்ற முடியாத சோகத்தில் தாயும் மரணமடைந்தார். ஒரே நேரத்தில் பேரிடியாய் வந்த இரு சோகமும் அவரை கையறு நிலைக்குத் தள்ளியது.

மொட்டை அடித்து ஈமச்சடங்கு முடித்து சோகமாய் அமர்ந்திருந்தார். மதுரைக்கு வந்து பிழைக்குமாறு மச்சானிடமிருந்து அழைப்பு வர, சம்பள பாக்கி, சேமிப்பு இரண்டையும் சேர்த்து ரூ.300ஐ கையில் எடுத்துக் கொண்டு மதுரைக்கு பஸ் ஏறினார் டிபி ராஜேந்திரன்.

செல்லூரில் 22 ரூபாய் வாடகைக்கு கடையோடு சேர்ந்த வீடு கிடைத்தது. பல்வேறு மளிகை, காய்கறிகளை தரமாகவும், மலிவான விலையிலும் தேடித் தேடி வாங்கி வந்து கடையில் வைப்பார்.

இதனால், பிற கடைகளைவிட 10 அணா முதல் காலணா வரை விலை குறைவாகக் கொடுக்க முடிந்தது. எனவே, செல்லூரில் பிரபலமானது “மொட்டையன் கடை”

அப்படி ஒருமுறை குறைந்த விலையில் அரிசியை வாங்கி வந்தபோது பெரியதொரு விபத்தில் சிக்க நேர்ந்தது பற்றி விவரித்தார்.

“முன்பு 1950-கள்ல அரிசி தங்கம் போல விலை. மதுரையில இருக்க ஒத்தக்கடைக்குப் போனா, ஒரு ரூவாக்கு ஒரு கிலோ அரிசி கிடைக்கும். ஆனா அதுவே பக்கத்து சந்தைல வாங்கினா கிலோக்கு ஒன்னே முக்கா ரூவா கொடுக்கனும். நாம கம்மி விலைக்கு வாங்குனா மக்களுக்கு கம்மி விலைக்கு கொடுக்கலாமேன்னு நினைப்பேன்,” என்று தனது தொழில் யுக்தியைப் பகிர்ந்தார்.

“எழுபது படி அரிசி வாங்கி மிதிவண்டி-ல வெச்சு கஷ்டப்பட்டு மிதிச்சு ஓட்டுவேன். ஒரு நாள் ரோட்ல வரும்போது, அரிசி மூடை சாய்ந்ததில் டிவிஎஸ் பேருந்தின் உள்ளே விழுந்துட்டேன். மிதிவண்டி நசுங்கிடுச்சு. அரிசியும் கொட்டிருச்சு. ஆனா நான் தப்பிச்சேன். பக்கத்துல இருந்த டீக்கடைக்காரங்க, அந்த பஸ் டிரைவர புடிச்சு அடிச்சுட்டாங்க.

சைக்கிளுக்கும் அரிசிக்கும் டிவிஎஸ் நிறுவனம் இழப்பீடு கொடுக்கனும்-னு டீக்கடைக்காரர் ஓட்டுநர் கிட்ட கேட்டாங்க. ஆனா, நான் ‘தப்பு என்மேல தான். நான்தான் அதிக பாரம் ஏத்திட்டு வந்து சாஞ்சு விழுந்துட்டேன்‘னு சொல்லி டிரைவர வழியனுப்பி வெச்சேன்,” என்று கூறுகிறார் ராஜேந்திரன்.

“இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்ட டிவிஎஸ் பஸ் நிறுவனம் குடும்பம், என்னோட வாடிக்கையாளர் ஆகிட்டாங்க” என்றும் தெரிவித்தார்.

இப்போது வத்தல் செய்யும் முறைகளைக் கேட்டு அவர்கள் தன்னிடம் கற்றுக்கொள்வதாகக் கூறும் அவர், இந்த நேர்மைதான் நமக்கு என்றைக்கும் மூச்சாக இருக்க வேண்டும் எனவும் சொல்கிறார்.

வத்தல் வியாபாரியானது எப்படி?

ராஜேந்திரன் வந்தல் வியாபாரியானது எப்படி ?

பட மூலாதாரம், RAJENDHIRAN

மளிகைக் கடைக்கு வாங்கி விற்காமல் போகும் காய்கறிகளில் முதலில் வத்தல் போட ஆரம்பித்தார். அரிசி, சீரகம் உள்ளிட்ட பொருட்களைப் போட்டு சுவையாக விற்க மக்களுக்கு வெகுவாகப் பிடித்துவிட்டது.

பிறகு, புதிய காய்கறிகளை வாங்கி வத்தல் போடும் தொழிலைக் கையில் எடுத்தார். இதற்கு தனது மனைவி, 3 மகள்கள் என குடும்பமே சேர்ந்து அயராது பாடுபட்டனர். கடின உழைப்பு, அதன் விளைவாக இன்று வத்தல் ஃபேக்டரியையே வைத்து, வெளிநாடுகளுக்கும் வத்தல் விற்று வருகிறார்.

நேர்மையும், சேமிப்பும், தான தர்மங்களால் மக்கள் தந்த நல்லாசியும்தான் தனது தொழில் முன்னேற்றத்திற்குக் காரணம் எனக் கூறுகிறார் டிபி ராஜேந்திரன்.

“கறி சீட்டு வாரம் 10 ரூபா. அப்புறம் கொஞ்சம் தொழில் வளர்ந்த பின் 25 ரூபா சீட்டு. இது மூலமாகத்தான் தொழிலைப் பெருக்கினேன். அப்படியொரு சிறுசேமிப்பு இல்லன்னா, இன்னைக்கு நானும் பூண்டுக் கடையிலயே வேலை செஞ்சு காலத்த கழிச்சிருப்பேன்,” என்றார்.

இவரது இந்த வெகுளியான அனுபவப் பேச்சு, தொழில் செய்யும் பலருக்கும் ஒரு மறைமுக உத்வேகத்தைத் தரும்.

கஜா புயலில் உதவி செய்ய வந்த தடைகள்

கஜா புலயின்போது உதவிய ராஜேந்திரன்

பட மூலாதாரம், RAJENDHIRAN

மக்கள் சேவையில் தன்னை எப்போதும் ஈடுபடுத்திக் கொள்வார். 2004இல் அரசுக்காக மதுரையின் பிரதான பகுதியில் உள்ள தனது நிலத்தை தானமாக வழங்கினார்.

கஜா புயலால் மக்கள் உறவுகளையும், உடைமைகளையும் ஒரு சேர இழந்து தவித்த செய்தி இவரை உலுக்கியது. “சில்வர் டம்ளர், தட்டு, அரிசி, பருப்பு, மளிகை, பிஸ்கட், வத்தல்” என மூட்டை மூட்டையாகக் கட்டிக் கொண்டு 2 வண்டிகளில் புறப்பட்டார்.

செல்லும் வழியிலேயே கட்சி ஸ்டிக்கர் ஒட்ட பலரும் போட்டி போட்டதாகவும், தான் வியாபாரத்திற்குக் கொண்டு செல்வதாகப் பொய் சொல்லி தப்பித்து பொருட்களைக் கொண்டு சென்றதாகவும் கூறுகிறார் ராஜேந்திரன்.

எந்த உதவியும் கிடைக்கப் பெறாத இடங்களைத் தேடித் தேடி உதவி செய்ய, “யோவ் பெருசு, உனக்கு எதுக்குயா தேவையில்லாத வேலை? சரியான தொல்லைய்யா நீ” என காவல் துறைகாரர் திட்டியிருக்கிறார்.

இதைப் பார்த்த அப்போதைய ஆட்சியர் ககன் தீப் சிங் பேடி போலீசாரை கண்டித்தார். நிவாரணம் செய்ய உதவுமாறு உத்தரவும் இட, யாருமே நிவாரணப் பொருள் கொண்டு செல்லாத ஊர்களுக்கு வழியில் முறிந்து கிடந்த மரங்களையும் கடந்து உரியவரிடம் உதவியைச் சேர்த்துள்ளார். அந்த மக்களின் கண்ணில் துளிர்த்த நம்பிக்கையும், ஒட்டிக்கிடந்த வயிறும் தன்னை மென்மேலும் உதவி செய்யத் தூண்டியதாகக் கூறுகிறார்.

ஏற்கெனவே செல்லூரில் தனது 9 சென்ட் நிலத்தில் ஒரு பள்ளிக்கூடம் கட்டித்தர அனுமதி கோரினார். ஆனால், அதைப் பின்னாளில் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுத்து பராமரிப்பது கடினம் என்று பதில் வரவே, மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தில் அவர்களின் அனுமதிக்கும், வேண்டுகோளுக்கும் இணங்க அங்கு 3 கோடி ரூபாய் செலவில் அருங்காட்சியகமும், சுமார் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் மண்டபமும் கட்டி வருகிறார்.

மதுரை திருவிக மேல்நிலைப் பள்ளியில், 10 வகுப்பறைகள், இறைவணக்கக் கூட்ட அரங்கம், வாகனம் நிறுத்துமிடம் உள்பட ரூ.1.10 கோடி செலவில் கட்டடங்களைக் கட்டிக் கொடுத்தார். கைலாசபுரம் ஆரம்பப் பள்ளியில் ரூ.71.45 லட்சம் மதிப்பீட்டில் 4 வகுப்பறைகளுடன், போர்வெல் வசதி, உணவுக்கூடம், கழிப்பறைகளைக் கட்டிக் கொடுத்திருக்கிறார்.

இத்தனையையும் துளியும் விளம்பரமின்றிச் செய்து வந்த அவர், கட்டடத்திற்கு அடிக்கல் பூஜை போடுவதற்காக மதுரை மாநகராட்சி ஆணையர் பிரவீன் குமாரை அழைக்கச் சென்ற போதுதான், அவரைப் பற்றி தெரிந்துள்ளது.

அப்போதுதான், ஆட்சியர் அவரை வெகுவாகப் பாராட்டி ஊடகங்கள் முன் அறிமுகப்படுத்தினார். ஏற்கெனவே சாலமன் பாப்பைய்யா, முன்னாள் மேயர் உள்ளிட்டோரும் இவரது சேவையைப் பாராட்டியுள்ளனர்.

இவரது உதவும் குணம் பற்றி அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை வந்தபோது டி.பி.ராஜேந்திரனை நேரில் அழைத்துப் பாராட்டினார்.

இந்த வயதிலும் கல்விக்காக செய்யும் சேவையைப் பாராட்டுவதாக குறிப்பிட்ட முதல்வர் மென்மேலும் மக்களுக்கான சேவையைத் தொடருமாறு கேட்டுக் கொண்டார். அத்துடன் மார்பளவு கலைஞர் சிலையைப் பரிசளித்து பொன்னாடை போற்றி வாழ்த்துகளைக் கூறினார்.

“எனக்கு தொழிலையும், வாழ்வையும் கொடுத்த மதுரை மக்களுக்கே தனது சொத்துகளை விற்று செலவளிப்பதில்” மன நிம்மதியடைவதாகக் கூறி புன்னகைக்கிறார் வத்தல் தாத்தா என அன்போடு டி.பி. ராஜேந்திரன்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »