Press "Enter" to skip to content

என்சிஇஆர்டி பாடநூல்களுக்கு சவால் விடும் கேரளா – துணைப் பாடநூல்களை அறிமுகப்படுத்தி பதிலடி

பட மூலாதாரம், Getty Images

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் (NCERT) 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி கற்பதற்காக வழங்கும் பாடநூல்களில் மனிதநேயம் குறித்து அளிக்கப்பட்டுள்ள தவறான தகவல்களைச் சரிசெய்யும் விதத்தில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக கேரளா துணைப் பாடநூல்களை வழங்கவுள்ளது.

தற்காலத் தேவைகளுக்குப் பொருந்தாது என்ற காரணத்தைக் கூறி என்சிஇஆர்டி நீக்கியுள்ள அனைத்துப் பாடங்களையும் இந்த துணைப் பாடநூல்களில் கேரள அரசு அளித்துள்ளது. அவற்றை வரும் 23ஆம் தேதியன்று அறிமுகம் செய்து இந்தக் கல்வி ஆண்டிலேயே மாணவர்கள் அந்தப் பாடநூல்களைப் பயன்படுத்த வழிவகைகளை ஏற்படுத்தியுள்ளது.

“வரலாறு, அரசியல் அறிவியல், பொருளாதாரம், சமூக அறிவியல் போன்ற பாடநூல்களில் முக்கிய பகுதிகளை என்சிஇஆர்டி நீக்கம் செய்துள்ளதை கல்வியாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால்தான் கேரளா கூடுதலாக துணைப் பாடநூல்களை அறிமுகப்படுத்த முடிவெடுத்துள்ளது.

இதன் மூலம் தேசிய முக்கியத்துவத்தையும், கல்வி அறிவின் தேவைக்கான முக்கியத்துவத்தையும் முதலில் மாணவர்களிடையே போதிக்க விரும்புகிறது,” என்கிறார் பிபிசியுடன் பேசிய கேரள மாநில கல்வி அமைச்சர் வீ. சிவன்குட்டி.

குறிப்பாகச் சொல்லப்போனால், 2005 முதல் என்சிஇஆர்டியின் பாடத்திட்டங்களில் இடம்பெற்றிருந்த பாடங்களில் சிலவற்றை மீண்டும் கேரள அரசு அறிமுகப்படுத்துகிறது.

என்சிஇஆர்டி பாடநூல்களுக்கு சவால் விடும் கேரளா - துணைப் பாடநூல்களை அறிமுகப்படுத்தியது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

கேரளாவில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை தனிப்பட்ட பாடத் திட்டம் இருந்தாலும், 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு என்சிஇஆர்டிசியின் பாடத் திட்டமே பின்பற்றப்படுகிறது.

இதற்கிடையே, 6 முதல் 10ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கான பாடத் திட்டத்தையும் என்சிஇஆர்டி கடந்த ஜுன் மாதம் மாற்றியது. ஆனால், கேரளாவில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பாடத் திட்டங்கள் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் (SCERT) மூலம் உருவாக்கப்படுவதால் அந்த மாற்றங்கள் கேரளாவில் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை.

“என்சிஇஆர்டி இதுபோல் பல பாடங்களை நீக்கியதற்கு, கொரோனா பாதிப்பின் காரணமாக ஏற்பட்ட மாணவர்களின் பாட சுமையைக் குறைப்பதே நோக்கம் எனக் கூறப்பட்டது. ஆனால், இதை ஊன்றிக் கவனித்தால், மாணவர்களின் பாடச் சுமையைக் குறைப்பது இதன் நோக்கம் அல்ல என்பதும், உள்நோக்கத்துடன் சில பகுதிகளை நீக்குவதே காரணமாக இருக்கிறது என்பதும் புலப்படும்,” என சிவன்குட்டி தெரிவித்தார்.

என்சிஇஆர்டி மேலும் மூன்று காரணங்களையும் கூறியிருந்தது. அவை, “6ஆம் வகுப்பில் இடம்பெற்றிருந்த பாடங்களே உயர் வகுப்புகளிலும் இடம்பெற்றிருந்தன, மாணவர்களின் புரிந்துகொள்ளும் அளவு மற்றும் மூன்றாவதாக சில பாடங்கள் இந்தியாவில் தற்காலத் தேவைகளுக்கு எந்த விதத்திலும் தொடர்புடையவை அல்ல.”

மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள்

என்சிஇஆர்டி பாடநூல்களுக்கு சவால் விடும் கேரளா - துணைப் பாடநூல்களை அறிமுகப்படுத்தியது ஏன்?

பட மூலாதாரம், NCERT

இந்த முடிவுகளின்படி, மகாத்மா காந்தியின் தியாகங்கள் குறித்த பாடங்களில்கூட வரலாற்று உண்மைக்குப் புறம்பான பல்வேறு கருத்துகள் இடம்பெற்றுள்ளன.

எடுத்துக்காட்டாக, “தீம்ஸ் இன் இண்டியன் ஹிஸ்டரி – 3” என்ற பாடத்தில் மகாத்மா காந்தியின் தேசிய இயக்கம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில், “மகாத்மா காந்தி வழக்கம்போல ஜனவரி 30ஆம் தேதி தனது பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்றபோது இளைஞர் ஒருவர் அவரைச் சுட்டுக் கொன்றுவிட்டார். அதன் பிறகு நாதுராம் கோட்சேவை அங்கிருந்த மக்கள் சூழ்ந்துகொண்டனர்,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2005ஆம் ஆண்டு பாடத்திட்டத்தில் அது வேறு மாதிரியாக இருந்தது. அதாவது, “மகாத்மா காந்தியை ஒரு இளைஞர் சுட்டுக்கொன்றார். புனேவில் இருந்து வந்த அவருடைய பெயர் நாதுராம் கோட்சே. அவர் தீவிரவாதப் போக்கை வலியுறுத்திய ஹிண்டு என்ற பத்திரிகையின் ஆசிரியராக இருந்தது மட்டுமின்றி முஸ்லிம்களுக்கு காந்தி ஒரு சமாதானத் தூதுவராகச் செயல்பட்டதைத் தொடர்ந்து எதிர்த்து வந்தார்,” என்று குறிப்பிட்டிருந்தது.

இதேபோல் புதிய பாடத்திட்டத்தில் வரலாற்று நிகழ்வுகள் பல எந்த வித ஆதாரமும் இன்றி வழங்கப்பட்டுள்ளன.

“வரலாற்றுப் பாடத்தில் முகலாயர்கள் வரலாறு, தொழிற்புரட்சி, இந்தியப் பிரிவினையின் வரலாறு போன்ற தகவல்கள், அரசியல் அறிவியலில் மகாத்மா காந்தியின் தியாகம், ஐந்தாண்டுத் திட்டங்கள், அவசரநிலைப் பிரகடனம், மக்கள் அனுபவித்த பல்வேறு துயரங்கள் போன்ற தகவல்கள், சர்வதேச அளவில் அரசியல் மாற்றங்கள் போன்றவை, பொருளாதாரம் தொடர்பாக அமெரிக்காவின் தாக்கம், வறுமை குறித்த தகவல்கள், சமூக அறிவியலில் சாதிகள் மற்றும் பிற தகவல்கள் போன்றவற்றில் பல உண்மைகள் மறைக்கப்பட்டிருந்தன,” என்றார் சிவன்குட்டி.

கல்வியாளர்களின் மாறுபட்ட விமர்சனங்கள்

என்சிஇஆர்டி பாடநூல்களுக்கு சவால் விடும் கேரளா - துணைப் பாடநூல்களை அறிமுகப்படுத்தியது ஏன்?

“வரலாறு என்பது கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொண்டு எதிர்காலத்தை வடிவமைப்பதற்கான ஒரு வழிகாட்டியாக உள்ளது. வரலாற்று உண்மைகள் என்பது நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் கற்பிக்கப்படுகின்றன,” என்றார் பிபிசியிடம் பேசிய கல்வியாளரும், பேராசிரியருமான விபி நிரஞ்சநாராத்யா.

அரசியல் விஞ்ஞானிகள் சுகாஸ் பல்ஷிகர், யோகேந்திர யாதவ் ஆகியோர் கடந்த ஜுன் மாதம் 9ஆம் தேதி எழுதிய வெளிப்படையான கடிதத்தில், என்சிஇஆர்டியின் அரசியல் அறிவியல் பாடநூல்களில் உள்ள தங்கள் பெயர்களை நீக்கவேண்டும் எனக் கோரியிருந்தனர்.

அவர்கள் இருவரும் என்சிஇஆர்டியின் மூத்த ஆலோசகர்களாக இருந்தனர். ஆனால் அவர்கள் என்சிஇஆர்டியுடன் ஒத்த கருத்துகளைக் கொண்டிராததால் அந்த பாடங்களை நீக்கக் கோரிக்கை விடுத்திருந்தனர்.

“இதுபோன்ற தவறான மாற்றங்களைக் கொண்டுள்ள நூல்களின் தலைமை ஆலோசகர்களாக எங்கள் பெயர்கள் இடம்பெறுவதை நாங்கள் விரும்பவில்லை,” என அவர்கள் தெரிவித்தனர்.

ஆனால், இந்திய வரலாற்று ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் உறுப்பினரான பேராசிரியர் ஈசாக் பிபிசியிடம் பேசியபோது, “முகலாயர்கள் பல நிலைகளில் பின்னடைவைச் சந்தித்திருந்தாலும் அது குறித்த தகவல்கள் நமது பாடநூல்களில் இடம்பெறவில்லை. இருபுறமும் எந்தவித பாகுபாடும் இல்லாமல் வரலாற்று உண்மைகள் பாடநூலில் இடம்பெற வேண்டும்,” என்றார்.

மேலும், “மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக முறையாக விசாரணை நடைபெறவில்லை. இப்போது நாம் தெரிந்துகொள்ள வேண்டியது, ஜவஹர்லால் நேரு மற்றும் முகமது அலி ஜின்னா ஆகிய இருவரும் அதிகாரம் மிக்கவர்களாக இருந்தனர். ஆனால், இது பற்றி எதுவும் நமக்குப் போதிக்கப்படுவதில்லை,” என்றார்.

என்சிஇஆர்டி பாடநூல்களுக்கு சவால் விடும் கேரளா - துணைப் பாடநூல்களை அறிமுகப்படுத்தியது ஏன்?

பட மூலாதாரம், NCERT

பேராசிரியர் நிரஜனராத்யா கூறுகையில், “எந்தவித ஆதாரமும் இல்லாமலோ, உண்மைகளை மாற்றியமைத்தல் மூலமோ எந்த மாற்றங்களையும் கொண்டுவர முடியாது.

நமக்குக் கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் கேரளா சில மாற்றங்களைச் செய்துள்ளது. யாராவது ஒருவருக்கு புதிய உண்மைகளும் அவற்றுக்கான ஆதாரங்களும் கிடைத்தால், பின்னர் தற்போதைய வரலாற்று உண்மைகளில்கூட மாற்றம் வரும்,” என்றார்.

‘என்சிஇஆர்டியின் புதிய பாடத்திட்டம் அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டதாக இல்லை’

சிவன்குட்டி தொடர்ந்து பேசுகையில், “வரலாற்று நிகழ்வுகளை இப்படி முறையற்று மறைப்பதை கல்வியாளர்கள் ஏற்கமாட்டார்கள். இதேபோல் அரசியல் அறிவியல், பொருளாதாரம், சமூக அறிவியல் போன்ற பாடங்களிலும் உண்மைகள் அகற்றப்பட்டுள்ளன. அதனால்தான் இந்த பாடங்களில் கேரள அரசு துணைப் பாடநூல்களை வெளியிட முடிவெடுத்துள்ளது,” என்றார்.

“ஆனால் என்சிஇஆர்டியுடன் ஓர் உடன்படிக்கை மேற்கொண்டுள்ள எஸ்சிஇஆர்டி, தனது தேவைக்கு ஏற்ப பாடநூல்களை மாற்றியமைக்க முடியாது. அதனால்தான் துணைப் பாடநூல்கள் வெளியிட முடிவெடுக்கப்பட்டது,” என்று ஊடகத்திடம் பேசுவதற்கு அனுமதியற்ற அதிகாரி ஒருவர் விளக்கினார்.

மேலும், “அடிப்படையில் அரசமைப்பு சட்டத்துக்கு எந்த விதத்திலும் ஒத்துவராத வகையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் மட்டுமே மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அவை மதச்சார்பற்ற தன்மைக்கு எந்த விதத்திலும் எதிரானவை அல்ல. இந்த நோக்கத்தின் அடிப்படையில்தான் இதுபோன்ற துணைப் பாடநூல்கள் வெளியிடப்படுகின்றன,” என்றார் அவர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »