Press "Enter" to skip to content

தெற்கில் இருந்து தொடங்குகிறதா தமிழ்நாட்டின் நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரை?

பட மூலாதாரம், Dr.C.Vijayabaskar /Facebook

2024ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரைக் களம் தமிழ்நாட்டில் இப்போதே சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. இந்த முறை தென் மாவட்டங்களிலிருந்து தொடங்கியுள்ளது பரப்புரை.

பொதுவாகவே மேற்கு மாவட்டங்கள் அதிமுகவின் கோட்டையாகவும், மத்திய மற்றும் வடக்கு மாவட்டங்கள் திமுகவின் கோட்டையாகவும் கருதப்படுகிறது. ஆனால் தென் மாவட்டங்களின் வாக்கு வங்கி சற்று வித்தியாசமானது. அங்கே, காங்கிரஸ், பாஜக, இடதுசாரி, திமுக, அதிமுக என அனைத்து கட்சிகளுக்கும் இடம் உண்டு. எனவே இந்த முறை முழுமையாக வசப்படாத தென் தமிழ்நாட்டை கைப்பற்ற கட்சிகள் படையெடுத்துள்ளன என்று கூறலாம்.

பாஜக நடைபயணம்

தேர்தல் பிரச்சாரத்துக்கான தொடக்க மணியை எழுப்பியவர் பாஜக தலைவர் அண்ணாமலை. ‘என் மண், என் மக்கள்’ என்ற பாதயாத்திரையை ராமேஸ்வரத்திலிருந்து கடந்த மாதம் தொடங்கி தொடர்ந்து ஆறு மாதங்கள் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக மக்களை சந்திக்கிறார் அண்ணாமலை.

பரப்புரையைத் தொடங்கியது பாஜகவாக இருந்தாலும், அதிமுகவின் இரு பிரிவுகள் களத்தில் இறங்கிய பிறகு, அது சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

நாடாளுமன்ற பிரச்சாரம் தென் மாவட்டங்கள்

பட மூலாதாரம், O Panneerselvam/Facebook

கோடநாடு விவகாரத்துக்காக தேனியில் கூட்டம்

கோடநாடு விவகாரம் குறித்து கேள்வி எழுப்ப கோடநாட்டிலிருந்து சுமார் 300 கி.மீ தொலையில் உள்ள தேனியில் ஓ.பன்னீர்செல்வமும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் இணைந்து போராட்டம் நடத்தினர்.

‘தர்ம யுத்தம்’ காலத்தில் டிடிவி தினகரனை கடுமையாக சாடிவிட்டு தற்போது தேர்தல் காலத்தில் ஓ.பி.எஸ் அவருடன் ஒன்றாக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பொதுவெளியில் சில காலமாக அதிகம் பேசாமல் இருந்த டிடிவி தினகரன் முதல் முறையாக ஒரு பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அதிமுகவுக்குள் நிலவும் குழப்பம், அதிமுக-பாஜக கூட்டணியில் அவ்வபோது ஏற்படும் உரசல்கள் ஆகியவற்றுக்கு மத்தியில் இவர்கள் இருவரும் இணைந்து அதுவும் கோடநாடு விவகாரம் குறித்து கேள்வி எழுப்ப பொதுக்கூட்டம் நடத்தியது கவனம் பெறுகிறது.

ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனி, அவருக்கு செல்வாக்கு மிகுந்த மாவட்டமாக உள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற ஒரே தொகுதி தேனியாகும். அங்கு ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். தேனியில், ஓ.பி.எஸ் தனக்கான செல்வாக்கை தக்க வைத்துக் கொண்டு, டிடிவி தினகரனோடு இணைவது மூலம் முக்குலத்தோர் சமூகத்தினர் வாக்குகளையும் சிதறாமல் வென்றடுக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற பிரச்சாரம் தென் மாவட்டங்கள்

பட மூலாதாரம், Dr.C.Vijayabaskar/Facebook

அதிமுக ‘எழுச்சி’ மாநாடு

அதே போன்று வரும் 20ம் தேதி மதுரையில் பொன்விழா எழுச்சி மாநாட்டை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடத்தவுள்ளார். தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களை உள்ளடக்கிய, கொங்கு பகுதியில் செல்வாக்கு கொண்ட எடப்பாடி பழனிசாமி தெற்கில், ஓ. பன்னீர்செல்வத்தின் கோட்டையாக கருதப்படும் பகுதியில் தன்னால் ஆதரவு திரட்ட முடியும் என நிரூபிப்பதற்கான வாய்ப்பாக இந்த மாநாட்டை மாற்றி காட்ட விரும்புகிறார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு கொங்கு மண்டலத்தில் மட்டுமே சுருங்கி விட்டார் எடப்பாடி, அதை உடைக்காவிட்டால் எடப்பாடி பழனிசாமிக்கு பிரச்னை தான் என்கிறார், மூத்த பத்திரிகையாளர் விஜயசங்கர்.

2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு சில நிமிடங்கள் முன்பு வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை எடப்பாடி அறிவித்திருந்தார். ஆனால் உச்சநீதிமன்றம் இந்த இட ஒதுக்கீடு சட்ட ரீதியாக செல்லாது என கூறி சில மாதங்களில் ரத்து செய்து விட்டது. இதன் விளைவுகளையும் அவர் சந்திக்க வேண்டியிருக்கும் என விஜயசங்கர் கூறுகிறார்.

“பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் சற்று முன்னேறியவர்கள் வன்னியர்கள். எனவே 10.5% இட ஒதுக்கீடு அறிவிப்பின் காரணமாக, தென்மாவட்டங்களில் உள்ள மற்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் எடப்பாடி மீது அதிருப்தியில் உள்ளனர். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு, இந்த முறை வன்னியர்களும் எடப்பாடியுடன் நிற்பதற்கான சூழல் இல்லை.

எனவே கொங்கு மண்டலத்தில் மட்டுமே சுருங்கி விட்டார் எடப்பாடி. அதை உடைக்கவில்லை என்றால் எடப்பாடிக்கு பிரச்னை தான்”என விஜயசங்கர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற பிரச்சாரம் தென் மாவட்டங்கள்

பட மூலாதாரம், Jayakumar

“மதுரை- ஓபிஎஸ் கோட்டை அல்ல”

மதுரை ஒ.பன்னீர்செல்வத்தின் கோட்டை என்று தவறாக பரப்பி விடப்படுவதாகவும், எடப்பாடி பழனிசாமிக்கு அனைத்து இடங்களிலும் செல்வாக்கு இருப்பதாகவும் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவிக்கிறார்.

“ஓ.பி.எஸ் புறக்கணிக்கப்பட்ட, நிராகரிக்கப்பட்ட சக்தி ஆவார். அவர் பேசிய பேச்செல்லாம் காற்றோடு போய்விட்டது. டிடிவி தினகரனை கடுமையாக விமர்சித்து விட்டு தற்போது எப்படி அவருடன் கைகோர்க்க முடிகிறது? அம்மாவின் மரணம் குறித்து எழுப்பிய கேள்விகள் என்னவாயிற்று? இரட்டை இலை, எங்களிடம் இருக்கிறது, பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி. எனவே ஓபிஎஸ்-க்கு எங்கும் செல்வாக்கு இல்லை” என்றார் அவர். மேலும், மதுரை அனைவருக்கும் மையமான பகுதி என்பதாலேயே அங்கு மாநாடு நடத்துகிறோம் என்று குறிப்பிட்டார்.

“ஓ. பன்னீர் செல்வத்தின் இருப்பு தற்போது சாதி ரீதியிலான வாக்குகளை நம்பி மட்டுமே உள்ளது. அதனால் தான், அவரால் கடுமையான விமர்சனம் செய்தும் கூட டிடிவி தினகரனுடன் கை கோர்க்க முடிகிறது.” என்கிறார் பத்திரிகையாளர் விஜயசங்கர்.

மதுரை மாவட்டத்தில் போட்டி போட்டுக் கொண்டு கூட்டம் நடத்துவது, அதிமுகவுக்குள் இருக்கும் மோதல்களின் வெளிப்பாடே என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம்.

“அதிமுகவுக்குள் இருக்கும் போட்டி தான் ஓ.பி.எஸ்.க்கும் இ.பி.எஸ்.க்கும் இடையில் தெற்கிலும் தெரிகிறது. யாருக்கு அதிக செல்வாக்கு என்பதை இந்த பொதுக் கூட்டங்களின் மூலம் நிரூபிக்கவே நினைக்கிறார்கள். எனவே தான் பன்னீர்செல்வத்தின் இடமாக கருதப்படிடும் மதுரையில் எழுச்சி மாநாட்டை நடத்துகிறார் எடப்பாடி பழனிசாமி” என்றார் அவர்.

நாடாளுமன்ற பிரச்சாரம் தென் மாவட்டங்கள்

பல கட்சிகளுக்கு இடம் இருக்கும் தெற்கு

தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 12 தொகுதிகள் தென் மாவட்டங்களில் உள்ளன. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை என தென் தமிழகத்தில் உள்ள தொகுதிகளில் ஒரு குறிப்பிட்ட கட்சி ஆதிக்கம் செலுத்தும் நிலை தமிழ்நாட்டில் இருந்தது இல்லை.

உதாரணமாக, இந்த 12 தொகுதிகளில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், திமுக ஐந்து இடங்களிலும், காங்கிரஸ் மூன்று இடங்களிலும், அதிமுக ஒரு இடத்திலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி , இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. இவற்றை தவிர பாஜகவுக்கு கன்னியாகுமரியில் கணிசமான ஆதரவு உள்ளது என்பதும், 2014ம் ஆண்டு அக்கட்சியின் பொன்.ராதாகிருஷ்ணன் தான் அந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ராமேஸ்வரத்தில் பயணம் தொடங்கியது ஏன்?

இந்துக்களின் புனித தலங்களில் ஒன்று ராமேஸ்வரம் என்பதால், அங்கிருந்து தன் பயணத்தை அண்ணாமலை தொடங்கியிருக்கலாம் என்று பத்திரிகையாளர் ஜென்ராம் கூறுகிறார்.

“காசியும் ராமேஸ்வரமும் இந்துக்களுக்கு புனிதமான இடம். ராமேஸ்வரத்தில் பாஜகவில் முக்கிய நபர் போட்டியிடலாம் என எதிர்ப்பார்க்கப்படுவதாலும் பாஜக அந்த இடத்திலிருந்து பாத யாத்திரையை தொடங்கியுள்ளது. ராகுல் காந்தி தெற்கில் போட்டியிட்டு வென்றுள்ளதால் தாங்களும் தெற்கில் போட்டியிட்டு இந்தியா முழுமைக்குமானவர்கள் என்று கூற நினைக்கலாம்” என்கிறார் அவர்.

நாடாளுமன்ற பிரச்சாரம் தென் மாவட்டங்கள்

பட மூலாதாரம், K.Annamalai/Facebook

முதல் முறையாக ராமநாதபுரம் பயணம்

தென் தமிழ்நாட்டின் தேர்தல் களத்தில் திமுகவும் தன் இருப்பை காட்ட தவறவில்லை. தமிழக முதல்வரும் திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலின் தான் முதல்வராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக ராமநாதபுரம் மாவட்டத்துக்கு தற்போது பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், உள்ளிட்ட பத்து தென் மாவட்டங்களின் வாக்குச்சாவடி முகவர்களை சந்தித்து நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஆயத்தப் பணிகள் குறித்து பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடி, ராமநாதபுரத்திலிருந்து போட்டியிடலாம் என பேச்சுகள் இருப்பதாலேயே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரத்தில் தேர்தல் கூட்டம் நடத்துவதாக பாஜகவின் கரு.நாகராஜன் கூறுகிறார். “எங்கள் தலைவர் அண்ணாமலைக்கு ராமேஸ்வரத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. முதல்வர் தற்போது அங்கு செல்வதால் களத்தில் எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை” என்கிறார் அவர்.

மாநிலம் முழுவதும் முதல்வருக்கு செல்வாக்கு இருப்பதாகவும், எனவே அவரது ராமநாதபுர பயணம் வழக்கமானது என்றும் பிபிசியிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். “ வாக்குச்சாவடி முகவர்களை ஒவ்வொரு பகுதியாக சந்தித்து வருகிறார். அந்த வகையில் ராமநாதபுரம் பகுதிக்கு செல்கிறார். முதல்வருக்கு மாநிலம் முழுவதும் செல்வாக்கு இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல்களே அதற்கு சாட்சி. திமுகவை எதிர்த்து நிற்கும் எல்லா கட்சிகளுக்கும் வீழ்ச்சி தான்” என்றார்.

நாடாளுமன்ற பிரச்சாரம் தென் மாவட்டங்கள்

பட மூலாதாரம், sekar babu/Twitter

மாறிவரும் வாக்கு வங்கி

திமுகவுக்கு மாநிலம் முழுவதுமே ஆதரவு அதிகரித்துள்ளது என்றாலும் வாக்கு வங்கிகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்கிறார் பத்திரிகையாளர் ஜென்ராம்.

“திமுகவுக்கு மாநிலம் முழுவதுமே ஆதரவு அதிகரித்துள்ளது. பெரும்பாலான சாதிகளோடு திமுக இசைந்து உறவாடுவதால் எல்லா இடங்களிலும் ஆதரவு இருக்கிறது. ஆனால், அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இருந்த பழைய வாக்கு வங்கிகள் மாறி வருகின்றன. கருணாநிதி ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்ற நிலைமை தற்போது இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று அவர் தெரிவிக்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »