Press "Enter" to skip to content

சென்னையில் இளைஞரின் துண்டான கைவிரலுக்கு பதிலாக கால் விரலை பொருத்தியது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், சாரதா வி
  • பதவி, பிபிசி செய்தியாளர்

வலது கை கட்டைவிரலை இழந்த நபருக்கு அவரது காலிலிருந்து எடுக்கப்பட்ட விரல் பொருத்தப்பட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த 32வயது நபர் மூன்று மாதங்கள் முன் தொழிற்சாலை விபத்தில் தனது வலது கை கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரலை இழந்து விட்டார். துண்டிக்கப்பட்ட அவரது விரல்களின் பகுதியை மீண்டும் பொருத்த முடியவில்லை. எனவே, அவரது இடது காலில் உள்ள இரண்டாவது விரலை எடுத்து, கட்டை விரலாக பொருத்தியுள்ளனர் மருத்துவர்கள்.

காலில் உள்ள இரண்டாவது விரல், கை கட்டை விரலை போன்ற தோற்றம் அளிப்பதால் அந்த விரலை எடுத்து பொருத்தியுள்ளனர். காலில் உள்ள விரலை அகற்றுவதால் கால்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதும் என்றும், தோற்றத்திலும் சட்டென தெரியும் படி பெரிய வித்தியாசங்கள் இருக்காது என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர் .

சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையின் கை அறுவை சிகிச்சை மருத்துவக் குழுவினர் இந்த அறுவை சிகிச்சையை செய்துள்ளனர். முடநீக்கியல் துறையின் கை அறுவைச் சிகிச்சைத் துறையின் தலைவர் மருத்துவர் ஸ்ரீநிவாசன் ராஜப்பா பிபிசி தமிழிடம் பேசுகையில், “ விரல்களை ஒன்றாக பொருத்துவது சவாலான காரியமே. ஏனென்றால் சரியாக பொருத்தாவிட்டால், ஏற்கெனவே கை விரலை இழந்த நோயாளி கால் விரலையும் இழந்து விடுவார். இந்த அறுவை சிகிச்சை, இதயத்தில் செய்யப்படும் பைபாஸ் அறுவை சிகிச்சை போல் சவாலானதாகும்” என்றார்.

இரண்டு தலைமுடி சுற்றளவு கொண்ட ரத்த நாளம்

இழந்தது கட்டை விரலை, கிடைத்தது கால் விரல்

உடலில் ஓர் உறுப்பை எடுத்து மற்றொரு பகுதியில் ஒட்ட வைக்கும் போது அந்த உறுப்புக்கான ரத்த ஓட்டத்தை தரும் நாளங்கள், உணர்வுகளை தரும் நரம்புகள், அசைவுகளுக்கு தேவையான தசைகள், எலும்புகள் சரியாக பொருத்தப்பட வேண்டும்.

கட்டை விரலை பொருத்தும் போது ரத்த நாளங்களை பொருத்துவதே மிகவும் சவாலானதாக இருந்ததாக மருத்துவர் ஸ்ரீநிவாசன் தெரிவித்தார். “விரல்களில் உள்ள ரத்த நாளங்களின் சுற்றளவு 1.5 மி.மீ ஆகும். அதாவது இரண்டு தலைமுடிகளை சேர்த்து வைத்தால் அதன் சுற்றளவு 1.6 மி.மீ இருக்கும். அவ்வளவு சிறிய ரத்த நாளங்களை, நுண்ணோக்கி மூலம் 20 மடங்கு பெரிதாக்கி பார்த்து தையல் போட்டுள்ளோம். அந்த தையல் வெறும் கண்ணால் பார்த்தால் தெரியாது” என்றார். அதே போன்று எலும்புகளும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கம்பிக் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளன.

சுமார் எட்டு மணி நேரங்கள் நடைபெற்ற அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் சுபாஷினி, ஷோபனா, நெல்லையப்பன், ஜிதின் ஜோஸ் தாமஸ் ஆகியோர் மருத்துவர் ஸ்ரீநிவாசன் தலைமையில் செய்துள்ளனர்.

ஆனால், இது போன்ற அறுவை சிகிச்சைகள் குறித்த பயம் காரணமாக மக்கள் முன் வருவதில்லை என்று கூறுகிறார் மருத்துவர் ஸ்ரீநிவாசன் ராஜப்பன். “கால் விரலை வெட்டி எடுக்க வேண்டும் என்று கூறும் போதே நோயாளிகள் தயங்குகிறார்கள். இந்த அறுவை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு இல்லாததே இதற்கும் காரணம். இறந்தவரின் கைகளையும், விரல்களையும் எடுத்து நோயாளிக்கு பொருத்தலாம். ஆனால் அப்படி செய்தால், வாழ்நாள் முழுவதும், சில மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும், எளிதில் தொற்று ஏற்படக்கூடும்” என்றார்.

தற்போது அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நபரின் நண்பர் ஒருவருக்கு இதேபோன்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்ததால், இவர் தனது கால் விரலை எடுக்க தயக்கமில்லாமல் ஒப்புக் கொண்டுள்ளார்.

இழந்தது கட்டை விரலை, கிடைத்தது கால் விரல்

துண்டான உறுப்புகளை மருத்துவமனைக்கு எடுத்து செல்வது எப்படி?

உடலின் உறுப்புகள் பல்வேறு காரணங்களால் துண்டிக்கப்படலாம். அது போன்ற நேரங்களில், துண்டிக்கப்பட்ட உடல் பகுதிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்வது முக்கியம். அதே உறுப்புகளை மீண்டும் அதே இடத்தில் பொருத்துவது தான் மருத்துவ ரீதியாக சிறந்த தீர்வாக இருக்கும்.

அப்படி துண்டிக்கப்பட்ட உறுப்புகளை மருத்துவமனைக்கு செல்லும் போது, பொதுவாக ஐஸ்-ல் வைத்து எடுத்து செல்கின்றனர். ஆனால் அப்படி நேரடியாக உறுப்புகள் மீது ஐஸ் வைக்கக் கூடாது என்கிறார் மருத்துவர் ஸ்ரீநிவாசன் ராஜப்பா.

“துண்டிக்கப்பட்ட உறுப்புகளை ஒரு நெகிழி (பிளாஸ்டிக்) பையில் போட்டு மூடி விட வேண்டும். அந்த நெகிழி (பிளாஸ்டிக்) பையை தான் ஐஸ் பெட்டிக்குள், அல்லது ஐஸ் கட்டிகள் கொண்ட பாத்திரத்தில் வைக்க வேண்டும். துண்டிக்கப்பட்ட பகுதியை நேரடியாக ஐஸ் அல்லது தண்ணீர் படும் படி வைக்கக் கூடாது. அதீத குளிர்ச்சி என்பது அதீத வெப்பம் போல தான் செயல்படும். உறுப்புகளில் உள்ள திசுக்களை ஐஸ் கட்டிகள் அழித்து விடும். அதே போல், ஐஸ் பெட்டி தேடி அலைய வேண்டும். அருகில் உள்ள பழச்சாறு அல்லது குளிர்பான கடைகளில் கிடைக்கும் ஐஸ் -ஐ பயன்படுத்தலாம்” என்கிறார்.

கால் விரல்களை பொருத்துவது நல்ல மறுவாழ்வு

அன்றாடம் தொழிற்சாலைகள் மற்றும் சாலை விபத்துகளில் இதுபோன்று விரல்கள் துண்டிக்கப்படுபவர்கள் பலர் இருக்கிறார்கள். துண்டிக்கப்பட்ட விரல் பகுதிகளை மீண்டும் பொருத்த முடியவில்லை என்றால், அவர்கள் கவலைப்பட வேண்டும். கால் விரல்களை கைகளில் பொருத்துவது நல்ல மறுவாழ்வு அளிக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நோயாளி தற்போது மறுவாழ்வு மையத்தில் இருந்து வருகிறார். அவருக்கு அறுவை சிகிச்சை முடிந்து மூன்று வாரங்கள் ஆன நிலையில், விரல்களை அசைப்பதற்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இரண்டு மாதங்களில் விரல்களின் அசைவுகள் முழுமையாக திரும்பும், ஆறு மாதங்களில் விரல்களில் உணர்வுகள் தோன்றும்.

தமிழ்நாட்டில் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கை அறுவை சிகிச்சைக்கான சிறப்பு மையம் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »