Press "Enter" to skip to content

தூத்துக்குடி: கிராமங்களில் சாதிய அடையாளங்களை அழிக்கும் மக்கள் – திடீர் மன மாற்றம் ஏன்?

  • எழுதியவர், சு.மகேஷ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

சிங்காத்தாகுறிச்சி, காசிலிங்கபுரம், ஆலந்தா இவை அனைத்தும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிராமங்கள். 1995ம் ஆண்டு திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் நடந்த கலவரத்தின் போது மோசமாக பாதிக்கப்பட்ட கிராமங்கள் தான் இவை.

தற்போது இந்த கிராமங்களில் நடைபெற்று வரும் மாற்றம் நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளது. இப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து பொது இடங்களில் உள்ள சாதிய அடையாளங்களை அழிக்க துவங்கியுள்ளனர் என்பதுதான் அந்த மாற்றம்.

பொது இடங்களில் சாதிய அடையாளங்கள்

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் பொது இடங்களில் உள்ள மின் கம்பங்கள், பொது குடிநீர் குழாய், தண்ணீர் தொட்டி, சிறிய பாலங்கள் உள்ளிட்டவற்றில் சாதி தொடர்புடைய வண்ணங்கள் பூசப்பட்டிருப்பதை பரவலாக காணமுடியும்.

அந்தந்த பகுதிகளில் பெரும்பான்மையாக வாழும் சாதியை சேர்ந்த மக்கள் இது தங்கள் பகுதி என்பதை உணர்த்தும் குறியீடாக இந்த வண்ணம் தீட்டுதலை செய்து வந்தனர்.

சாதிய அடையாளங்கள் அழிப்பு

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் முயற்சியால் பொதுமக்கள் தாங்களாகவே பொது இடங்களில் உள்ள சாதிய அடையாளங்களை அழிக்க துவங்கியுள்ளனர்.

“பொது இடங்களில் சாதி ரீதியிலான வண்ணங்கள் பூசி வைத்திருப்பதால், இளைஞர்களுக்கு ‘ இது எங்க ஏரியா, அது உங்க ஏரியா’ என்ற பிரிவினை எண்ணம் தோன்றுகிறது. இதன் காரணமாக ஒரு பகுதி இளைஞர்கள் மற்றொறு பகுதிக்கு போகும் போது, அவர்களை அங்குள்ள இளைஞர்கள் தடுத்து நிறுத்துவதும் அதனால் வீண் பிரச்சனைகளும் ஏற்படுகிறது. இது தான் இங்கு நடைபெறும் பெரும்பாலான மோதல்களுக்கும் காரணமாக அமைந்து விடுகிறது.

எனவே இதை களைவதற்கு பொது இடங்களில் உள்ள சாதிய அடையாளங்களை அழிக்க பொது மக்களே முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டேன். அதை ஏற்று பொது மக்களே சில இடங்களில் சாதிய அடையாளங்களை அகற்றியுள்ளனர். இது வரவேற்கத்தக்க விஷயம்” என்றார் பிபிசி தமிழிடம் பேசிய தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்.

சமூக நல்லிணக்கம் தொடர்பாக கூட்டம்

கடந்த 9ம் தேதி புளியம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காசிலிங்கபுரம், சிங்கத்தாகுறிச்சி, ஆலந்தா, அக்கநாயக்கம்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஊர் நாட்டாமைகள், முக்கியஸ்தர்களை அழைத்து மாவட்ட எஸ்.பி., பாலாஜி சரவணன் சமூக நல்லிணக்கம் தொடர்பாக ஒரு கூட்டத்தை நடத்தியுள்ளார்.

கூட்டத்தில், அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையுடன் வாழ பொது இடங்களில் வன்முறையை தூண்டக்கூடிய வகையில் உள்ள சாதிய அடையாளங்களை நீக்க பொது மக்களே முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

சாதிய அடையாளங்கள் அழிப்பு

நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் சாதிய அடையாளங்கள் அகற்றம்

இதையடுத்து ஆகஸ்ட் 15ம் தேதி ஆலந்தா, சிங்கத்தாகுறிச்சி, காசிலிங்காபுரம் உள்ளிட்ட கிராமங்களில் நடந்த நிகழ்வுகளின் போது 73 மின்கம்பங்கள், 16 நெடுஞ்சாலைத் துறை அடையாளப் பலகை (sign boards), 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, 4 அடிகுழாய், 2 மின்மாற்றிகள், 2 தரை பாலங்கள், குடிநீர் மோட்டர் மற்றும் பேருந்து நிறுத்தம் என 101 இடங்களில் இருந்த சாதிய அடையாளங்களை பொது மக்களே அழித்துள்ளனர்.

இதே போன்று ஸ்ரீ வைகுண்டம் மற்றும் குறும்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 37 இடங்களில் சாதிய அடையாளங்கள் அவ்வூர் பொது மக்களால் அழிக்கப்பட்டுள்ளன.

“எங்கள் ஊரில் சுமார் 400 வீடுகள் உள்ளன. எல்லா சாதியினரும் வாழ்கிறோம். நீங்களே முன்வந்து சாதிய அடையாளங்களை அழிக்க வேண்டும் என எஸ்.பி., கேட்டுக்கொண்டார். அதை ஏற்றுக்கொண்டு எங்கள் பகுதியில் பூசப்பட்டிருந்த சாதிய வண்ணங்களை அனைவரும் சேர்ந்து அழித்தோம்” என்கிறார் ஆலந்தா பஞ்சாயத்து தலைவரான சின்னத்துரை.

“சாதிய அடையாளங்களை அழிக்க வேண்டும் என முன்பும் இதுபோல் அரசு துறைகளிடமிருந்து உத்தரவு வரும். ஆனால் அதற்கு பொது மக்களிடம் எதிர்ப்பு வரும். ஆனால் இந்த முறை எஸ்.பி., அவ்வாறு கூறவில்லை.

சாதிய அடையாளங்கள் அழிப்பு

சாதி உணர்வை மின்கம்பங்களில் காண்பிக்க வேண்டாம். இந்த ஊரில் இந்த சாதியினர் தான் உள்ளனர் என்று நாம் ஏன் காட்டவேண்டும். சாதிய அடையாளங்களை எடுக்க சொல்லி நான் கட்டாயப்படுத்தவில்லை ஆனால் எடுத்தால் நல்லது என்று அவர் அன்போடு கேட்டுக்கொண்டார். அது எங்களுக்கு பிடித்திருந்தது அதனால் அதை ஏற்றுக்கொண்டோம் ” என்கிறார் சின்னத்துரை.

சில கிராமங்களில் சாதிய தலைவர்களின் புகைப்படங்கள் மற்றும் கொடி கம்பங்கள் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை அகற்றப்படவில்லை. அவற்றை அகற்றுவது அந்தந்த சாதி மக்களின் விருப்பம் என எஸ்.பி., கூறிவிட்டார்.

1995 கலவரத்துக்கு பிறகு தான் இவ்வாறு சாதிய வண்ணங்கள் பூசும் வழக்கம் தங்கள் பகுதியில் வந்ததாகவும் பிபிசி தமிழிடம் பேசியபோது சின்னத்துரை குறிப்பிட்டார்.

“சிங்கத்தாகுறிச்சி மற்றும் காசிலிங்காபுரம் கிராமங்களில் சுமார் 3,000 வாக்காளர்கள் உள்ளனர். 18 சாதியை சேர்ந்த மக்கள் இந்த இரண்டு கிராமங்களிலும் வாழ்கின்றனர். சாதிய அடையாளங்களை அழிப்பது குறித்த எஸ்.பி.,யின் வேண்டுகோளை ஊர் நாட்டாமை தெரிவித்ததும் அனைத்து தரப்பினரும் ஒப்புக்கொண்டனர் ” என்று சிங்கத்தாகுறிச்சி பஞ்சாயத்து தலைவர் முருகன் நம்மிடம் கூறினார்.

சாதிய அடையாளங்களை அழிக்கும் பொதுமக்கள்

மனமாற்றம் பொது மக்களிடமிருந்து வர வேண்டும்

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் இந்த மாற்றம் குறித்து பிபிசியிடம் பேசுகையில், “மனமாற்றம் என்பது பொது மக்களிடமிருந்து வர வேண்டும். அப்போது தான் அது நிரந்தரமானதாக இருக்கும் என்பது எனது நோக்கம். அதன் அடிப்படையில் ஒவ்வொரு இடமாக சென்று பொது மக்களிடம் இது குறித்து எடுத்துக் கூறி அவர்களாகவே சாதிய அடையாளங்களை அழிக்க முயற்சி எடுத்து வருகிறோம்” என்றார்.

சாதிய அடையாளங்கள் இருக்கும் போது பிரிவினை எண்ணங்கள் வந்து கொண்டே இருக்கும். சாதிய அடையாளங்களை அழித்து விட்டாலே போதும் நாம் அனைவரும் நண்பர்கள் சகோதரர்கள் என்ற எண்ணம் உருவாகி விடும் என கூறும் பாலாஜி சரவணன், “சாதிய அடையாளங்களை அழிப்பதற்கு நான் விடுத்த வேண்டுகோளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. அனைத்து சமூகத்தினரும் இதற்கு ஒத்துழைப்பு அளித்து அவர்களாகவே அழித்து வருகின்றனர். சில இடங்களில் பிளக்ஸ் பேனர்களை கூட அகற்றியுள்ளனர்.

இது போன்ற நடவடிக்கைகளால் தூத்துக்குடி மாவட்டத்தில் சாதிய பிரச்சனைகளும் பெரும் அளவிற்கு குறைந்துள்ளது” என தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »