Press "Enter" to skip to content

கள்ளக்குறிச்சி அருகே ‘போலி மதுபான ஆலை’ ரகசியமாக பல ஆண்டுகள் இயங்கியது எப்படி?

கடந்த சில நாட்களுக்கு முன்பாக கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் வருடக் கணக்கில் நடத்தி வந்த போலி மதுபான ஆலை கண்டுபிடிக்கப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

மலைவாழ் மக்கள் திணை, சாமை, வரகு, மரவள்ளி சாகுபடி மற்றும் தேன் எடுத்தல் உள்ளிட்ட தொழில் மூலம் வாழ்வாதாரத்தை மேம்படுத்திவந்தனர். சில இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டதை காவல்துறையினர் அவ்வப்போது கண்டுபிடித்து அழித்து வந்தனர். ஆனால் அங்கு போலி மதுபான ஆலை நடத்தும் அளவுக்கு நிலைமை மோசமானது எப்படி? பின்னணியில் யார் இருந்தது..? அதற்கு என்ன காரணம்..?

கல்வராயன் மலையில் 15 ஊராட்சிகள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் 177 சிறு, குறு கிராமங்களும் 15 ஊராட்சிகளும் உள்ளன. காலை 8 மணி அளவில் கள்ளக்குறிச்சியில் இருந்து இருசக்கர வாகனம் மூலமாக கச்சிராயபாளையம், எடுத்தவாய்நத்தம் வழியாக பயணித்தோம். கல்வராயன்மலை அடிவாரப் பகுதியில் பரிகம் கிராமத்தில் வனத்துறை வாகன பரிசோதனை மையத்தை அடுத்து மேல்பரிகம், பெரியார் நீர்வீழ்ச்சி பகுதிகளை தாண்டி பல்வகை மரங்கள் இயற்கை காற்றின் ஊடாக பயணித்தோம்.

கொடுந்துறை கிராமம் வழியாக செல்லும் பொழுது நன்கு விளைந்த மரவள்ளி கிழங்கை நிலத்திலிருந்து மக்கள் எடுத்துக் கொண்டிருந்தனர். தொடர்ந்து ஒரு சில இடங்களில் உழுது வைத்திருந்த நிலத்தில் நடுவதற்காக மரவள்ளி குச்சியை நறுக்கி விதைகளாக வைத்துக் கொண்டிருந்தனர். பெரும்பாலும் மலைவாழ் மக்கள் நடந்தே ஒரு கிராமத்திலிருந்து மற்றொரு கிராமங்களுக்கு செல்கின்றனர். குறிப்பாக ஒற்றையடி பாதைகளையே அவர்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள். மேலும் வனப்பகுதி என்பதால் சாலை வசதிகள் செய்ய முடியாத சூழல் இருப்பதாகவும் இளைஞர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து கரியலூர், வெள்ளிமலை பகுதியை தாண்டி நடுதொரடிப்பட்டு கிராமத்திற்குள் நுழைந்தோம். 30 வீடுகளை மட்டுமே கொண்ட அந்த குக்கிராமத்தில் உயர்ந்த மரங்கள் அடர்ந்து காணப்பட்டன. அங்கு சென்று போலி மதுபான ஆலை செயல்பட்ட இடம் பற்றி விசாரித்தால் பதில் கூற மறுத்தனர். என்ற போதிலும் வயதான பெரியவர்கள் மற்றும் பெண்மணிகளிடம் தொடர்ந்து விசாரித்தோம். வெங்கடேசன் பற்றி கேட்ட பொழுது வயதான பெண்மணி ஒருவர் எதற்கு கேட்கிறீர்கள் என்று கேட்டார். தொடர்ந்து அவரிடம் பேசிய பொழுது கண் கலங்கியவாறு பேசத் தொடங்கினார்.

மலைகாட்டின் உள்பகுதிக்கு சென்ற போது…

போலி மதுபான ஆலை

போலி மதுபான ஆலை வைத்து நடத்தியதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் வெங்கடேசனின் தாயார் சின்னத்தாயி தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசியதாவது..

“நாங்கள் கல்வராயன் மலையில் நடுத்தொரடிப்பட்டு கிராமத்தில் வசித்து வருகின்றோம். என் மகனுக்கு திருமணமாகி குழந்தைகளும் உள்ளன. அவன் கூலி வேலை சென்று தான் குடும்பத்தை பார்த்துக் கொண்டான். அவனது மனைவி தையல் கடை நடத்தி வருகிறார். நான் வீட்டில் இருக்கிறேன். என்னால் முடிந்த காட்டு வேலையும் செய்து வருகின்றேன்” என்று தொடர்ந்து அவர் நம்மிடம் அழுது கொண்டே பேசினார் .

“கடந்த சில தினங்களுக்கு முன்பாக காவல் துறையினர் எங்கள் வீட்டிற்கு வந்தனர். எனது மகனைப் பற்றியும் கேட்டனர். எனக்கு தெரியாது என்று கூறினேன். தொடர்ந்து அவர்கள் காட்டிற்கு சென்றனர். அங்கு சென்று எனது மகனையும் அவனது கூட்டாளிகளையும் கைது செய்தனர். அப்பொழுதுதான் எனக்கு முழுமையாக தெரியும். இங்கு இதுபோன்ற ஆலை இருப்பதே.

நீங்களும் வாருங்கள், அங்கும் அழைத்துச் செல்கிறேன் என்று நடந்து அழைத்துச் சென்றார். இரண்டு கிலோமீட்டர் தூரம் அடர்ந்த காட்டின் ஒற்றையடி பாதை வழியாக நடந்து சென்றோம்.

போலி மதுபான ஆலை

சிறிய கல்லாற்றின் சிற்றோடையைத் தாண்டி அவர்களது நிலத்திற்கு சென்றோம். அங்கு சிறிய தகரத்தால் செய்யப்பட்ட வீடு போன்ற அமைப்புடைய ஆலை காணப்பட்டது.

“எனது மகன் இந்த நிலைக்கு வந்ததற்கு வடலூர் பகுதியைச் சேர்ந்த குபேந்திரன் தான் காரணம். அவன்தான் அடிக்கடி இங்கு வந்து செல்வான். அவர்களுக்குள் ஏதேதோ பேசிக்கொள்வார்கள். ஆனால் எனக்கு அது பற்றி அதிகம் தெரியாது. ஏதோ தொழில் செய்கிறார்கள் என்று தான் நினைத்தேன். ஆனால் இந்த தொழில் என்று எனக்கு நிச்சயமாக தெரியாது என்று கூறினார். மேலும் எங்களுக்கு விவசாயம் மட்டும் தான் தெரியும். மரவள்ளிக்கிழங்கு பயிரிடுவோம். சில நேரம் காய்கறி செடிகளும் பயிர் செய்வோம். அதுதான் எனக்குத் தெரியும்” என்று கூறி அவர் நிலத்தையும் காண்பித்தார். மேலும் காவல் துறையினர் கடுமையாக நடந்து கொண்டதையும் கூறினார்.

இங்கு மலைப்பகுதியில் ஒரு சில இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவது உண்மைதான். ஆனால் தற்பொழுது அது குறைந்துவிட்டது. எனது மகன் தனியாக இதைச் செய்யவில்லை எங்கள் இடத்தை அவனுடன் பழகிய நண்பர்கள் தப்பாக பயன்படுத்திக் கொண்டார்கள் என்று முடித்துக் கொண்டார் .

“காவல் துறையினர், வனத்துறையினருக்கு மாமூல்”

போலி மதுபான ஆலை

நடுதொரடிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி பிபிசி தமிழிடம் கூறியதாவது…

“மலைவாழ் மக்களான நாங்கள் மிகுந்த கஷ்டப்படுகின்றோம். எங்களுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகின்றது. இங்கு பாதி நாட்கள் மட்டுமே வசிக்கின்றோம். இதோ தற்பொழுது மரவள்ளிக்கிழங்கு விளைந்துள்ளது அதை அறுவடை செய்து முடித்தவுடன் மீண்டும் பயிரிட்டு விட்டு பிழைப்புக்காக வெளியூர் சென்று விடுவோம். நான் மட்டுமல்ல இங்குள்ள பெரும்பாலான குடும்பங்கள் அப்படித்தான் என்று வேதனையுடன் பேசத் தொடங்கினார்.

எங்களுக்கு சரியான சாலை வசதி இல்லை, பஸ் வசதி கிடையாது .எந்த வங்கியும் எங்களுக்கு கடன் தருவதில்லை. நாங்கள் என்ன செய்வது பணத்திற்காக வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது. குறிப்பாக மைசூர், பெங்களூர், கேரளா மற்றும் காங்கேயம் பகுதிகளுக்கு அதிகமாக இங்கிருந்து வேலைக்கு செல்கின்றோம். அங்கு எங்களுக்கு ரூபாய் 800 முதல் 1000 வரை கூலி கிடைக்கும். அதை வைத்து எங்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றோம்” என்று கூறினார்.

மேலும் கல்வராயன் மலையில் சாராயம் காய்ச்சுவது உண்மைதான் அதற்கான மாமுல் அனைவருக்கும் பிரித்து வழங்கப்படுகின்றது. வனத்துறை பணியாளர்கள், கரியாலூர் காவல் நிலையம், தனிப்பிரிவு அதிகாரி, கலால் துறை அதிகாரிகள் என்று பத்தாயிரம், பதினைந்தாயிரம் என பணம் தரும் பட்டியலை கூறினார்.

எங்களுக்கு நல்ல வேலை வேலையும் உதவியும் செய்தால் நாங்கள் எதற்கு வெளி மாவட்டங்களுக்கு மாநிலங்களுக்கு வேலைக்கு செல்கின்றோம் எங்களுக்கு அரசாங்கம் வழங்கும் சலுகைகள் கிடைக்க அதிகாரிகள் உதவி செய்தால் பெரிய உதவியாக இருக்கும் ஆனால் யாரும் செய்யவில்லை என்று கண்கலங்கினார்.

“வேலைவாய்ப்பு இல்லாததே காரணம்”

போலி மதுபான ஆலை

கல்வராயன் மலை கருவேலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் வெங்கடேசன் பிபிசி தமிழிடம் பேசுகையில்,

“கல்வராயன் மலையில் படித்த இளைஞர்கள் அதிகமாக உள்ளனர். ஆனால் அவர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கப்படவில்லை. வேலைவாய்ப்புக்காக நாங்கள் வெளி மாநிலங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. இங்கிருக்கும் ஒரு சிலர் அவர்கள் குடும்பத்தை காப்பாற்ற கிடைக்கும் வேலையை செய்ய வேண்டி உள்ளது. சில நேரங்களில் சாராயம் காய்ச்சவும் செய்கிறார்கள். அவர்கள் வேண்டுமென்று அதைச் செய்வதில்லை வாழ்வதற்கு பணம் வேண்டும் அதற்கு வேறு வழி இல்லை என்ற நிலையில் தான் அதை செய்கின்றார்கள்” என்று கூறினார்.

“எங்கள் கிராமங்களுக்கு செல்வதற்கு மண் சாலைகள் தான் உள்ளது அதுவும் சரியாக இல்லை. அடிப்படை வசதிகள் அற்ற வாழ்க்கையை தான் நாங்கள் வாழ்கின்றோம். எங்களுக்கு இங்கு ஜவ்வரிசி தொழிற்சாலை, கடுக்காய் தொழிற்சாலை அமைத்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும் அதே போல் படித்த என்னை போன்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் தொழிற்சாலைகள் வந்தால் பயனடைவோம்” என்றும் அவர் கூறினார்.

எங்கள் மலையில் போலி மதுபான ஆலை இருந்தது எங்களுக்கும் அதிர்ச்சியாக தான் இருந்தது. இங்கு இருப்பவர்கள் அதிகமாக கள்ளச்சாராயத் தொழில் ஈடுபட்டு வருவதும் உண்மைதான் அதற்கு காரணம் அவர்களுக்கான மாற்று வழி உருவாக்கப்படாதே ஆகும் என்று அவர் முடித்துக் கொண்டார்.

தொடர்ந்து போலி மதுபான ஆலை வைத்து நடத்திய தொடர்பாக கைது செய்யப்பட்ட வெங்கடேசனின் மனைவி லலிதா பிபிசி தமிழிடம் கூறியதாவது “நான் வெள்ளிமலையில் நான் டெய்லரிங் கடை வைத்து நடத்தி வருகின்றேன். எனது கணவர் கைது செய்யப்பட்டது எனக்கு அதிர்ச்சியாக தான் இருந்தது ஆனால் எனது கணவர் இதை செய்யவில்லை அவரது நண்பரால் தான் இது நடந்தது” என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

போலி மதுபான ஆலை

“மலைவாழ் மக்களுக்கு மறு வாழ்வும் மாற்றுத்திட்டங்களும் வேண்டும்”

தமிழ்நாடு பழங்குடி நலச்சங்க மாவட்ட தலைவர் கஜேந்திரன் பிபிசி தமிழிடம் நேரடியாக பேசியதாவது..

“கல்வராயன் மலைவாழ் மக்கள் போதுமான அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களுடைய மேம்பாட்டிற்காக மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையையும் முன் வைத்தார். கல்வராயன் மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது என்பது இல்லை என்று கூற முடியாது. ஆங்காங்கே நடந்து கொண்டு தான் இருக்கின்றது. என்ற போதிலும் தற்பொழுது இருக்கின்ற மாவட்ட கண்காணிப்பாளர் மோகன்ராஜ் அதிரடியாக நடவடிக்கைகள் எடுத்து அதை அழிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றார் என்ற போதிலும் வனத்துறை மற்றும் சில காவல் அதிகாரிகளுக்கு தெரியாமல் இது நடப்பதில்லை.

போலி மதுபான ஆலை

கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களுக்கு மறு வாழ்வு அடிப்படையில் அவர்களுக்கான மாற்று தொழில் செய்வதற்கு வாய்ப்பு வழங்கிட வேண்டும். மேலும் சிலர் அந்த தொழிலில் இருந்து திருந்த நினைத்தாலும் ஒரு சிலரால் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டு மீண்டும் அதே தொழிலை செய்கின்ற சூழுல் உருவாக்கப்படுகின்றது” என்று வேதனையுடன் தெரிவித்தார்.

“அதேபோல் கரும்பு போன்ற பயிர்களும் இங்கு நன்கு விளைவதால் கரும்பை கள்ளக்குறிச்சி பகுதிக்கு எடுத்துச் செல்வதற்கு போதுமான வசதி இல்லை. எனவே கரும்பு மற்றும் மரவள்ளி கிழங்கு போன்ற பயிர்களை அறுவடை செய்து அதை மாற்றுப்பொருளாக உருவாக்கி எடுத்துச் செல்வதற்காகவாவது அரசாங்கம் தொழிற்சாலைகளை இங்கு அமைத்து தர வேண்டும். அதேபோல் படித்த இளைஞர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பையும் உருவாக்கி தரலாம். போதுமான சாலை வசதிகள் இல்லாத காரணத்தால் விளைவித்த பொருட்களையும் அவர்களால் உரிய இடத்திற்கு உரிய நேரத்திற்கு கொண்டு செல்ல முடியவில்லை” என்றும் கூறினார்.

கடலூர் காவல் துறையினர் கல்வராயன் மலையில் முகாம்

போலி மதுபான ஆலை
போலி மதுபான ஆலை

கல்வராயன் மலையில் செயல்பட்டு வந்த போலி மதுபான ஆலையை முதலில் கண்டுபிடித்தது கடலூர் மாவட்ட காவல் துறையினர் தான். இது தொடர்பாக கடலூர் மாவட்ட கலால் பிரிவு டி. எஸ். பி. விஜயகுமார் தொலைபேசியில் கூறியதாவது..

“கடலூர் மாவட்ட மதுவிலக்கு காவல் துறையினர், வடலூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மதுக்குவளைகள் விற்பனை செய்து கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் வைத்திருந்தது போலி மது பாட்டில்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அடுத்த கல்வராயன்மலையில் போலி மதுபானம் தயாரித்து பாட்டிலில் அடைத்து விற்பனை செய்வதாகவும், அதை வாங்கி வந்து விற்பனை செய்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து கடலூர் மாவட்ட காவல் துறை சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின்பேரில் 4 தனிப்படை காவல் துறையினர் கல்வராயன்மலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கல்வராயன்மலையில் உள்ள நடுதொரடிப்பட்டு பகுதியில் போலி மதுபானம் தயார் செய்யும் ஆலை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து காவல் துறையினர் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அதில் 20-க்கும் மேற்பட்ட அட்டை பெட்டிகளில் தயார் செய்யப்பட்ட 454 போலி மது பாட்டில்கள் இருந்தது.

மேலும் மதுபானம் தயாரிக்க பயன்படும் மூலப் பொருட்கள், பாட்டில் மூடிகள், பல்வேறு மதுபான நிறுவனங்களின் பெயர்கள் அச்சிடப்பட்ட போலி லேபிள்கள், மதுபானம் தயாரிக்கும் எந்திரங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த கடலூர் தனிப்படை காவல் துறையினர், அதை கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறை சூப்பிரண்டு மோகன்ராஜிடம் ஒப்படைக்கப்பட்டதனர். இதையடுத்து ஆலை நடத்தி வந்தது தொடர்பாக சேலம் மாவட்டத்தை சேர்ந்த 2 பேர், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கல்வராயன்மலையை சேர்ந்த வெங்கடேசன் என 4 பேரிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி கைது செய்தனர். இது பல மாதங்களாக செயல்பட்டு வந்துள்ளது என்று கூறினார். மேலும் இது எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது என்று அவர் கூடுதல் தகவலையும் தெரிவித்தார்.

கடலூர் மாவட்ட எஸ்பி ராஜாராம் அவர்கள் பழைய குற்றவாளிகள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை தொடர் கண்காணிப்பில் வையுங்கள் என்று கூறியதையடுத்து நாங்கள் ஒவ்வொரு மாதமும் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை விசாரித்து தெரிந்து கொள்வோம். அப்படித்தான் வடலூரைச் சேர்ந்த குபேந்திரனை தொடர்பு கொண்டு பேசும்போது அந்த சிக்னல் கல்வராயன் மலையில் அடிக்கடி இருந்ததற்கு உண்டான தடயங்களை கண்டுபிடித்தோம். தொடர்ந்து விசாரிக்கும் பொழுது அங்கு போலி மதுபான ஆலை செயல்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது” என்று கூறினார்.

கள்ளச்சாராயம் இல்லா மாவட்டமாக கள்ளக்குறிச்சியை மாற்ற உறுதி

போலி மதுபான ஆலை

கல்வராயன் மலை போலி மதுபான ஆலை விவகாரம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்பாளர் மோகன்ராஜ் பிபிசி தமிழிடம் பேசுகையில்,

“கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுவோர் மீது தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக கல்வராயன் மலையில் கள்ளச்சாராய ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு இதுவரையில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது .அதேபோல் சிறப்பு படைகள் அமைக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் கல்வராயன் மலை இருந்து வருகின்றது. மேலும் குண்டர் தடுப்புச் சட்டம் மூலம் கள்ளச்சாராயம் உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் வீட்டில் வைத்துக்கொண்டு கள்ளச்சாராயம் விற்பது சில்லறை மதுபான விற்பனை தொழிலில் ஈடுபடுவோர் மீதும் நடவடிக்கை கடுமையாக்கப்பட்டுள்ளது. கல்வராயன் மலையில் கள்ளச்சாராயத்தில் ஈடுபட்டு வரும் மலைவாழ் மக்களினுடைய மறு வாழ்விற்கான பணிகளை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து அவர்களுக்கான புதிய வேலைவாய்ப்பு உருவாக்கும் நோக்கில் காவல்துறையும் செயல்பட்டு வருவாதாகவும் தெரிவித்தார்.

கள்ளச்சாராய விற்பனைக்கு உதவுதல் மற்றும் சட்டத்திற்கு மாறாக பணியில் செயல்படும் காவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். கல்வராயன் மலையில் பணிபுரிந்த ஒரு காவலர் மீதும் தற்காலிக பணி நீக்கம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்தார். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை கள்ளச்சாராயம் இல்லாத மாவட்டமாக நிச்சயமாக விரைவில் மாற்றப்படும் என்றும் உறுதியுடன் பேசி முடித்துக் கொண்டார்.

மலைவாழ் மக்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க உறுதி

போலி மதுபான ஆலை

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரவன் குமார் ஜடாவத், பிபிசி தமிழிடம் நேரடியாக கூறியதாவது..

கல்வராயன் மலைவாழ் மக்களுக்கான வாழ்க்கை மேம்படுவதற்காக புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும் என்று தனது பேச்சை தொடங்கினார். கல்வராயன் மலையில் 177 சிறு, குறு கிராமங்கள் உள்ளன. இதில் வசிக்கும் பெரும்பான்மையான மக்கள் புலம்பெயர் தொழிலாளர்களாகவே உள்ளனர். அவர்களுக்கான வேலை வாய்ப்புகள் மலைப்பகுதியிலேயே உருவாக்கி தரப்படும். அதற்கான நடவடிக்கைகள் தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு திட்டங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மகளிர் திட்டம் மூலமாக மண்புழு வளர்த்தல், மஞ்சள் பைகள் தைத்தல், இயற்கை விலை பொருட்கள் விற்பனை, தேன் எடுத்தல் போன்றவைகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் கடுக்காய் தொழிற்சாலை சீரமைக்கப்பட்டு மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவருதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் கள்ளச்சாராய தொழிலில் ஈடுபடுபவர்கள் நல்வழிப்படுத்தும் நோக்குடன் காவல்துறையுடன் இணைந்து அவர்களை கண்டறிந்து அவர்களுக்காக கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

மலைப்பகுதியில் குறைந்து வரும் சிறுதானிய உற்பத்தியை பெருக்குவதற்கு வேளாண்மை மற்றும் தோட்டக்கலை மூலமாக சிறுதானியங்களை விலை இல்லாமல் வழங்கி ஊக்குவிக்கப்படுகின்றது. கடந்த ஆறு மாதங்களில் மலைவாழ் பழங்குடியின மக்கள் 3500 நபர்களுக்கு மலைவாழ் மக்களுக்கான ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 15 பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தி அரசு திட்டங்கள் அனைத்தும் மலைவாழ் மக்களுக்கு கிடைக்கும் வகையில் கண்காணித்து மாணவர்கள் கல்வி மேம்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

அதேபோல் கைபேசிகள் பயன்படுத்துவதற்கு பல்வேறு சிரமங்கள் அங்கு உண்டு. சிக்னல் பிரச்சனை மிக அதிகம் .அதை தவிர்க்கும் வகையில் கல்வராயன் மலையில் 38 முக்கிய இடங்களில் கைபேசி டவர்கள் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணிகள் முடியும் தருவாயில் உள்ளதாகவும் தெரிவித்தார். இது அமைக்கப்பட்டால் கள்ளச்சாராயம்தொலைபேசிற தவறான செயல்கள் உடனுக்குடன் தெரியும் நடவடிக்கை உடனடியாகவும் எடுக்கப்படும். இதனால் குற்றச்சம்பவங்களும் தடுக்கப்படும். அதேபோல் மலைவாழ் மக்கள் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக கூடுதல் சிறப்பு மருத்துவமனைகளும் உருவாக்கப்படும்” என்றும் கூறினார்..

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »