Press "Enter" to skip to content

நீட் தேர்வு ரத்து குறித்து ஆளுநரிடம் கேள்வி கேட்ட பெற்றோர் மீது பாஜக புகார் – என்ன நடந்தது?

தமிழக ஆளுநரிடம் நீட் தேர்வு குறித்து கேள்வி எழுப்பிய சேலம் இரும்பு ஆலை ஊழியர் அம்மாசையப்பன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சேலம் இரும்பாலை நிர்வாகத்திடம் பாஜக.வினர் மனு அளித்தனர்.

அந்தப் புகாரில், மத்திய சிவில் சர்வீஸ் நடத்தை விதிகளை அம்மாசையப்பன் மீறியுள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ.க.வின் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் கூறியுள்ளார்.

ஆளுநருடனான பெற்றோர் சந்திப்பில் என்ன நடந்தது?

தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் ஆளுநரின் ‘தின்க் டூ டேர்’ (Think to Dare) தொடரின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 12ஆம் தேதி நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுடனான கலந்துரையாடல் மற்றும் பாராட்டு விழா நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருந்த மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் பங்கேற்றிருந்தனர். நிகழ்ச்சியின் முடிவில் மாணவர்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் கேட்கலாம் என ஆளுநர் கூறினார்.

அப்போது, மாணவர்கள் யாரும் கேள்வி கேட்க முன்வராதபோது, சேலம் இரும்பாலையில் பணியாற்றி வரும் அம்மாசையப்பன் என்பவர் கேள்வி கேட்டார்.

“நீட் விலக்கு மசோதாவுக்கு எப்போது ஒப்புதல் கொடுப்பீர்கள்?” எனக் கேட்டார் அம்மாசையப்பன்.

அதற்கு ஒருபோதும் நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் கொடுக்க மாட்டேன் என்று ஆளுநர் கூறியுள்ளார்.

மத்திய அரசுப்பணி நடத்தை விதிகளை மீறியுள்ளார்: பாஜக

ஆளுநர் ஆர்.என்.ரவி

பட மூலாதாரம், RAJ BHAVAN

இந்நிலையில், நிகழ்ச்சி முடிந்த பிறகு அம்மாசையப்பன் ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார். ஊடகங்களிடம், தான் சேலம் இரும்பாலையில் பணியாற்றி வருவதாக அறிமுகப்படுத்திக் கொண்ட அம்மாசையப்பன், ஒரு மாணவியின் பெற்றோராக தனக்கிருந்த ஆதங்கத்தை ஆளுநரிடம் கேள்வியாக முன் வைத்ததாகக் கூறினார்.

நிகழ்ச்சியில் ஆளுநர் அளித்த பதில் தமிழ்நாடு அரசியலில் பேசு பொருளாகியுள்ள நிலையில், மத்திய அரசுப் பணியில் உள்ள ஒருவர் ஆளுநரை குற்றம் சாட்டுவது நடத்தை விதிமீறல் என பாஜக., சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சேலம் இரும்பாலை பொது மேலாளர் மானஸ் ராத், செயல் இயக்குநர் வி.கே.பாண்டே ஆகியோரிடம் சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் சண்முகநாதன் புகார் மனு அளித்தார்.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய பாஜக மாவட்ட தலைவர் சண்முகநாதன், “அவர் தனிப்பட்ட முறையில் எந்த அரசியல் கட்சியை சார்ந்திருந்தாலும் எங்களுக்கு பிரச்னை இல்லை. ஆனால், அவர் ஒரு மத்திய அரசு ஊழியராக, மத்திய அரசிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு ஆளுநரை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது மத்திய அரசுப்பணியின் நடத்தை விதிகளை மீறுவதாகும்,” என்றார்.

இரும்பாலையில் பாஜக புகார்

பட மூலாதாரம், SHANMUGANATHAN/FACEBOOK

மேலும், இது முதல்முறை அல்ல. கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்தே அவர் தொடர்ச்சியாக பாஜக.வுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுகிறார். தேர்தல் பிரசாரத்தின்போது ஒருமுறை பிரதமர் மோதி சேலம் வருவதாக இருந்தது.

அதற்கு, சேலம் இரும்பாலையில் தான் ஹெலிபேட் அமைப்பதாக இருந்தது. அப்போதும், அவர்தான் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து புகார் மனு கொடுத்தார்,” என்றார்.

இதைத் தவிர, அம்மாசையப்பன் போலியான இருப்பிட சான்று கொடுத்து பணியில் சேர்ந்ததாகவும் சண்முகநாதன் அவரது புகார் மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.

“இரும்பாலை இங்கு(சேலம்) நிறுவப்பட்டபோது, அந்த ஆலைக்காக நிலம் கொடுத்தவர்களுக்குப் பணி வழங்கப்பட்டது. அம்மாசையப்பன் கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர்.

ஆனால், அவர் போலியாக இருப்பிடச் சான்று பெற்று பணி பெற்றுள்ளார். இதுகுறித்தும் ஆலை நிர்வாகத்திடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்,” என்றார் சண்முகநாதன்.

புகார் மனுவின் நகலை மத்திய அரசுக்கும் அனுப்பியுள்ளதாக சண்முகநாதன் கூறினார்.

இரும்பாலையில் புகார்

பட மூலாதாரம், SHANMUGANATHAN/FACEBOOK

சட்டரீதியாக எதிர்கொள்வேன்: அம்மாசையப்பன்

இதுகுறித்து பேசுவதற்காக பிபிசி தமிழ் அம்மாசையப்பனை தொடர்புகொண்டது. அப்போது அவர், தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் எனக் கூறினார்.

“ஒரு மத்திய அரசுப்பணியில் அவ்வளவு எளிதாக சேர்ந்துவிட முடியாது. அவர்களுக்கு மத்திய அரசுப் பணியில் சேர்வதற்கான வழிமுறைகள் கூடத் தெரியவில்லை என நினைக்கிறேன். என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய், அவற்றை நான் சட்டரீதியாக எதிர்கொள்வேன். அரசியல் அமைப்புக்கு உட்பட்டு நான் செயல்படுகிறேன்,” எனக் கூறினார்.

மேலும் பேசிய அவர், “ஆளுநரிடம் கேள்வி கேட்டால் பாஜக.வினருக்கு என்ன பிரச்னை வந்தது. நான் ஒரு குடிமகனாக, ஒரு மாணவரின் பெற்றோராக, தமிழகத்தின் குரலாக எனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன்.

இதில், பாஜக.வினர் ஏன் உள்ளே வருகிறார்கள் என எனக்குத் தெரியவில்லை. பாஜக.வினரின் இந்த தலையீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆலை நிர்வாகத்திடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது,” என்றார்.

இதுகுறித்து சேலம் இரும்பாலையின் மக்கள் தொடர்பு அதிகாரிகளிடம் கேட்டபோது, “புகார் மனு பெற்றுள்ளோம். அதன் மீது இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை,” என்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »