Press "Enter" to skip to content

இலங்கை: முல்லைத்தீவில் இந்துக்கள் – பௌத்தர்கள் இடையே அமைதியின்மை தொடர்வது ஏன்?

  • எழுதியவர், ரஞ்ஜன் அருண் பிரசாத்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

முல்லைத்தீவு – குருந்தூர்மலை பகுதியில் இந்துக்களுக்கும், பௌத்தர்களுக்கும் இடையே அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் என்ன?

குருந்தூர்மலையில் பௌத்த விகாரை மற்றும் இந்து ஆலயம் ஆகியன ஒரே இடத்தில் காணப்படுகின்றன. இந்தp பகுதி, பௌத்தர்களுக்கு சொந்தமானது என பௌத்தர்கள் கூறுகின்ற நிலையில், அதே பகுதி தமிழர்களுக்குச் சொந்தமானது எனக் கோரி பல ஆண்டு காலமாக பிரச்னை தொடர்ந்த வண்ணம் காணப்பட்டது.

இந்த நிலையில், குறித்த பகுதி தொடர்பில் நீதிமன்ற விசாரணைகள் இடம்பெற்று வந்த பின்னணியில், வழிபாடுகளில் ஈடுபட இரண்டு தரப்பிற்கும் முல்லைத்தீவு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

இதன்படி, குருந்தூர்மலையில் உள்ள ஆதிசிவன் ஐய்யனார் ஆலயத்தில் கடந்த மாதம் 14ஆம் தேதி பொங்கல் பொங்கி, வழிபாடுகளில் ஈடுபட இந்துக்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது, அங்கு வருகை தந்த பௌத்த தேரர்கள் தலைமையிலான குழு, பொங்கல் நிகழ்வை நடத்துவதற்கு இடையூறு விளைவித்திருந்தது.

அதையடுத்து, அந்தப் பகுதியில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக அன்றைய தினம் பொங்கல் பொங்குவதற்கு முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நடந்த விசாரணை

இலங்கை இந்து-பௌத்தர் பிரச்னை

தொல்பொருள் பெறுமதிமிக்க பகுதி மற்றும் பௌத்த மக்களுக்கு சொந்தமான பகுதி என்பதால், அங்கு தீ மூட்டி பொங்கல் பொங்குவதற்கு அனுமதிக்க முடியாது என பௌத்தர்கள் கூறியிருந்தனர்.

எனினும், தாம் திட்டமிட்டதன் பிரகாரம் பொங்கலை பொங்கி வழிபாடுகளை நடத்த போவதாக தமிழர்கள் கூறிய போதிலும், பாதுகாப்பு பிரிவு அதற்கு அனுமதி வழங்கவில்லை.

இரண்டு பிரிவுகளுக்கு இடையில் அமைதியின்மை ஏற்படும் என்பதைக் காரணம் காட்டி, அன்றைய தினம் பொங்கல் பொங்கி வழிபாடுகளை நடத்த பாதுகாப்பு பிரிவு அனுமதி வழங்கவில்லை.

எனினும், சிவன் ஆலயத்தில் வழிபாடுகளை நடத்துவதற்கு மாத்திரம் தமிழர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

அதற்கும் பௌத்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அன்றைய தினம் வழிபாடுகளை மாத்திரம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

இதையடுத்து, குருந்தூர்மலை பகுதியில் வழிபாடுகளை நடத்துவது தொடர்பாக மீண்டும் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் விசாரணைகள் இடம் பெற்றதுடன், வழிபாடுகளை நடத்த இரண்டு தரப்பிற்கும் அனுமதி வழங்கப்பட்டது.

இந்து மக்களுக்கும் பௌத்த மக்களுக்கும் இடையே நடந்த ‘வழிபாடு மோதல்’

இலங்கை இந்து-பௌத்தர் பிரச்னை

இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி மீண்டும் பொங்கல் பொங்கி வழிபாடுகளை நடத்த இந்து மக்களுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், குருந்தூர்மலையை பாதுகாக்க அனைத்து பௌத்த மக்களையும் ஒன்றிணையுமாறு கோரி பௌத்தர்கள் பகிரங்க அழைப்பு விடுத்திருந்தனர்.

இதன்படி, குருந்தூர்மலைக்கு பல பேருந்துகளில் பெருமளவான பௌத்த மக்கள் அன்று அதிகாலை முதல் வருகை தர ஆரம்பித்திருந்தனர்.

குருந்தூர்மலையிலுள்ள பௌத்த விகாரைக்கு வருகைத் தந்த பௌத்த மக்கள், அங்கு பௌத்த முறைப்படி வழிபாடுகளை நடத்தியிருந்தனர்.

போலீஆர், விசேஷ அதிரடிபடை, கலகத்தடுப்பு பிரிவு உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகள், குறித்த பகுதிக்கு வரவழைக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.

பௌத்த வழிபாடுகள் நடந்துகொண்டிருந்த தருணத்தில், இந்து மக்கள் பொங்கல் பொங்கி வழிபாடுகளை நடத்துவதற்கான பொருட்களுடன் அங்கு வருகை தந்தனர்.

இவ்வாறு வருகை தந்த இந்து மக்கள், இந்து ஆலயம் அமைந்துள்ள பகுதிக்குச் சென்று பொங்கல் பொங்கி வழிபாடுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்திருந்தனர்.

இலங்கை இந்து-பௌத்தர் பிரச்னை

இதன் பிரகாரம், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் வழிகாட்டலுக்கு அமைய, குறித்த பகுதியில் பொங்கல் பொங்கி வழிபாடுகளை நடத்த ஆரம்பித்த நிலையில், மற்றுமொரு தரப்பு இரண்டு இடங்களில் பொங்கல் பொங்க அனுமதி வழங்குமாறு கோரியிருந்தனர்.

எனினும், தொல்பொருள் பெறுமதிமிக்க பகுதி என்பதால், அங்கு தீ மூட்ட அனுமதி வழங்க முடியாது என தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் கூறியிருந்தனர்.

எனினும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பிரதிநிதிகள் மற்றும் மேலும் பலர் தமக்கும் பொங்கல் பொங்கி வழிபாடுகளை நடத்த அனுமதிக்குமாறு கோரியிருந்தனர்.

இறுதி வரை இரண்டு இடங்களில் பொங்கல் பொங்கி வழிபாடுகளை நடத்த அனுமதிக்க முடியாது என தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் கூறியிருந்தனர்.

இதையடுத்து, தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் இந்து மக்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்ட போதிலும், இரண்டு இடங்களில் பொங்கல் பொங்குவதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை.

இந்த நிலையில், ஒரே இடத்தில் இரண்டு தடவை பொங்கல் பொங்கி இந்துக்கள் வழிபாடுகளை நடத்தியிருந்தனர்.

இந்துக்கள் கூடிய இடத்திற்கு வர முயன்ற பௌத்த பிரிவினர்

இலங்கை இந்து-பௌத்தர் பிரச்னை

இவ்வாறு பொங்கல் பொங்கி வழிபாடுகளை நடத்தும் தருணத்தில், அங்கு பௌத்த பிக்கு ஒருவர் வருகைத் தந்து, தமது எதிர்ப்பை வெளியிட்டார்.

தொல்பொருள் பெறுமதிமிக்க இடத்தில், தொல்பொருள் விதிமுறைகளை மீறி இந்துக்கள் வழிபாடுகளை நடத்துவதாக, குறித்த பௌத்த பிக்கு எதிர்ப்பை வெளியிட்டார்.

இதன்போது, அந்த இடத்தில் கூடியிருந்த இந்துக்கள், பௌத்த பிக்குவிற்கு தமது எதிர்ப்பை வெளியிட்ட நிலையில், பௌத்த பிக்குவை அந்த இடத்திலிருந்து வெளியேற்ற பாதுகாப்பு பிரிவினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

அதையடுத்து, இந்துக்கள் பொங்கல் பொங்கி, ஆலயத்திற்கு முன்பாக கடவுளுக்கு படைத்து தமது வழிபாடுகளை நடத்தியிருந்தனர்.

இந்துக்கள் கூடியிருந்த இடத்திற்கு பௌத்த மக்கள் வருகை தர பல தடவைகள் முயன்ற போதிலும், அதற்கு பாதுகாப்பு பிரிவினர் அனுமதி வழங்கவில்லை.

வழிபாடுகளை நிறைவு செய்துக்கொண்ட இந்துமக்கள் அங்கிருந்து வெளியேறியிருந்தனர். இதன்போது யாழ்ப்பாணம் சிவகுரு ஆதினத்தின் ஸ்தாபகர் தவத்திரு வேலன் சுவாமி மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் அங்கு பிரசன்னமாகி வழிபாடுகளை நடத்தினர்.

இலங்கை இந்து-பௌத்தர் பிரச்னை

பௌத்த மக்கள் இந்து ஆலயம் அமைந்துள்ள இடத்திற்கு வருகை தந்து, வழிபாடுகளை நடத்த வேண்டும் என பாதுகாப்பு பிரிவிடம் கோரிய நிலையில், அனைத்து இந்து மக்களும் அங்கிருந்து வெளியேறியதை அடுத்தே அனுமதி வழங்க முடியும் எனக் கூறியிருந்தனர்.

எனினும், பௌத்த மக்கள் வழிபாடுகளை நிறுத்த வேண்டும் எனவும், பௌத்த விகாரையை பார்வையிட தமக்கும் அனுமதி வழங்க வேண்டும் எனவும் வேலன் சுவாமி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் கோரியிருந்தனர்.

இதன்போது, பாதுகாப்பு பிரிவிற்கும், பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டு, பின்னர் பல்கலைக்கழக மாணவர்கள் அங்கு அமர்ந்தவாறு வழிபாடுகளை நடத்த ஆரம்பித்தனர்.

இதையடுத்து, பௌத்த மக்களை குறித்த பகுதிக்குள் பாதுகாப்பு பிரிவினர் அனுமதித்து, வழிபாடுகளை நடத்த அனுமதி வழங்கியிருந்தனர்.

பௌத்த மக்கள் இந்து ஆலயம் அமைந்துள்ள பகுதிக்கு வருகைத் தந்து வழிபாடுகளில் ஈடுபட்டு அங்கிருந்து வெளியேறிய பின்னர், வேலன் சுவாமி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் பௌத்த விகாரை அமைந்துள்ள பகுதிக்குள் சென்று பௌத்த விகாரையை பார்வையிட்ட நிலையில், அங்கும் அமைதியின்மை ஏற்பட்டது.

தொடரும் அமைதியின்மை

இலங்கை இந்து-பௌத்தர் பிரச்னை

இந்துக்களை அங்கிருந்து வெளியேற்றுமாறு பௌத்த மக்கள் கோஷங்களை எழுப்பியிருந்தனர்.

இதன்போது, தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுக்கும், பௌத்த மக்களுக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டு, பின்னர் நிலைமை வழமைக்கு கொண்டு வரப்பட்டது.

இந்துக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறிய போதிலும், பௌத்த மக்கள் குருந்தூர்மலை பகுதிக்கு பிற்பகல் வரை பேருந்துகளில் வருகைத் தந்ததை காணக்கூடியதாக இருந்தது.

யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் குருந்தூர்மலையில் தொடர்ச்சியாக பொங்கல்பொங்கி வழிபாடுகளை நடத்திய போதிலும், யுத்தம் நிறைவடைந்த 2009ஆம் ஆண்டுக்கு பின்னரான காலத்தில் தமக்கு அந்த சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என தமிழர்கள் கூறுகின்றனர்.

எனினும், 14 வருடங்களில் பின்னர் இவ்வாறான சந்தர்ப்பம் கிடைத்தமை தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், ஆலயத்தை சூழு பல இடங்களில் பொங்கல் பொங்கி வழிபாடுகளை நடத்த அனுமதி வழங்கினால் சிறந்தது எனவும் இந்துக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »