Press "Enter" to skip to content

ஜஞ்ஜிரா: இந்த ஒரு கோட்டையை மட்டும் சத்ரபதி சிவாஜியால் கைப்பற்ற முடியாமல் போனது ஏன்?

22 ஏக்கர் பரப்பளவில், 22 பாதுகாப்பு நிலைகளோடு பரந்து விரிந்திருக்கும் ஜஞ்ஜிரா கோட்டையை கட்ட 22 ஆண்டுகள் எடுத்துகொண்டது. சத்ரபதி சிவாஜி, சாம்பாஜி மன்னர், போர்த்துகீசியர்கள், ஃபிரஞ்ச், பிரிட்டீஷ் என பலரும் இந்த கோட்டையை கைப்பற்ற முயன்றனர்.

ஆனால், யாராலும் ஜஞ்ஜிரா கோட்டையை வசப்படுத்த முடியவில்லை. 350 ஆண்டுகளுக்கும் மேலாக யாராலும் வெல்ல முடியாததாக இக்கோட்டை திகழ்ந்தது.

சத்ரபதி சிவாஜி இந்த கோட்டையை வெல்வதற்காகவே அதன் அருகில் ஒரு கோட்டையை கட்டினார். ஆனாலும் அவரால் ஜஞ்ஜிராவை கைப்பற்ற முடியவில்லை.

வலிமையான கட்டுமானம், பொறியியலில் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துதல், அழகான கட்டிடக்கலை, மிகத் தந்திரமான இடம்… இப்படி எல்லாத் தன்மைகளையும் கொண்ட இந்தக் கோட்டை மும்பையிலிருந்து தெற்கே 165 கி.மீ தொலைவில் கடலில் அமைந்துள்ளது.

ஜஞ்ஜிரா கோட்டை

பட மூலாதாரம், Getty Images

முருத் ஜஞ்ஜிரா கோட்டை பல தாக்குதல்களை பார்த்துள்ளது. ஆனாலும், வெல்ல முடியாததாக இன்றும் நிலைத்து நிற்கிறது.

அரபிக்கடலை ஒட்டியுள்ள ராய்காட் மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் உள்ள முருத் தாலுகாவில் முருத் என்ற கிராமம் உள்ளது. ராஜ்புரி கிராமம் முருத்தில் இருந்து நான்கைந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த கிராமத்தின் மேற்கே கடலில் உள்ள ஒரு தீவில் முருத் ஜஞ்ஜிரா அமைந்துள்ளது.

இந்த கோட்டை சித்திகளால் (Siddhis) கட்டப்பட்டது.

ஜஞ்ஜிரா என்ற சொல் ‘ஜசிரா’ என்ற அரபு சொல்லில் இருந்து வந்தது. இதற்கு தீவு என்று பொருள்.

கட்டிடக்கலையின் அற்புதம்

ஜஞ்ஜிரா கோட்டை 22 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. கோட்டையை சுற்றி 40 அடி உயர அரண் உள்ளது. கற்களை ஒன்றாக இணைக்க மணல், சுண்ணாம்பு, வெல்லம் மற்றும் உருகிய ஈயம் பயன்படுத்தப்பட்டதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

மும்பையைச் சேர்ந்த கே.ஜெ. சௌமய்யா கல்லூரியின் உதவி பேராசிரியர் கௌரவ் காட்கில் இது தொடர்பாக கூறுகையில், “ஜஞ்ஜிரா கோட்டை பிரபஞ்சத்தின் சிறந்த உருவாக்கமாக கருதப்படுகிறது. இத்தனை வருடங்களுக்குப் பிறகும் இக்கோட்டை உள்ளது. பல ஆட்சியாளர்கள் ஜஞ்ஜிராவைக் கைப்பற்றுவதற்காக தாக்கினார்கள், ஆனால் இந்தக் கோட்டை அப்படியே இருக்கிறது. கோட்டையின் கட்டுமானத்தைப் பார்த்தால், இதற்கான காரணங்கள் தெளிவாகத் தெரியும்” என்றார்.

ஜஞ்ஜிரா கோட்டை

“தூரத்தில் இருந்து பார்க்கும்போது கோட்டையின் நுழைவு வாயில் எங்கு இருக்கிறது என்பதை உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது. ஒருவேளை நுழைவாயில் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தாலும் கூட படகில் அங்கு செல்வது கடினமானது. ஏனென்றால், நீங்கள் படகில் இருந்து இறங்குவதற்கு என்று எந்த இடமும் கிடையாது. நேராக நுழைவுப் படிகளுக்குதான் செல்ல வேண்டும்.

எதிரிகள் இந்த கோட்டைக்கு செல்வதற்கு முன், பீரங்கிகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இந்த கோட்டையில் பல்வேறு கொத்தளங்கள் உள்ளன. இந்த கோபுரங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு பீரங்கி இருந்தது. அவைகளில் சில பத்து கிலோமீட்டர் வரை தாக்கும் திறன் கொண்டவை” என அவர் கூறுகிறார்.

இந்த பீரங்கிகளில் ஒன்றின் பெயர் ‘கலல் பங்டி’. பங்கி என்றால் வளையல் என பொருள். இதனை பயன்படுத்தும்போது எழும் அதிர்வலையால் அதனை சுற்றி வளையல் போன்ற அமைப்பு ஏற்படுமாம்.

இந்த கோட்டையில் எதிரிகள் நுழைவதைத் தடுக்க ஒரு நல்ல அமைப்பு இருந்தது. அது, அதன் கட்டுமானம் மற்றும் ஆயுத பாதுகாப்பு தொடர்பானது. அதே நேரத்தில் இந்த கோட்டையை பாதுகாப்பதில் இயற்கைக்கும் பங்கு உண்டு. கடல் அலைகள் குறைந்த நேரத்தில் கூட, இப்பகுதியில் 30 அடி ஆழம் வரை தண்ணீர் இருக்கும். இது கோட்டையின் பாதுகாப்பையும் அதிகப்படுத்தியது.

பொறியியல் முறைகள் மட்டுமல்ல, கோட்டையின் உள் பாதுகாப்பும் கூட அசைக்க முடியாத அளவுக்கு சிறப்பாக இருந்தது. கோட்டையின் பாதுகாப்பு விதிகளை யாராவது பின்பற்றத் தவறினால், அவர்களுக்கு கிடைக்கும் ஒரே தண்டனை மரணம்தான்.

ஜஞ்ஜிரா கோட்டை

பட மூலாதாரம், Getty Images

சித்தி வம்சாவளியைச் சேர்ந்தவரும் கோட்டையின் வழிகாட்டியுமான முயின் கோகேதர் ஜஞ்ஜிரா கோட்டையின் பாதுகாப்பு குறித்து பேசும்போது, “ கோட்டையில் உள்ள ஒருவர் வெளியே செல்லும் போதெல்லாம், அவர்களுக்கு சிறப்பு முத்திரை வழங்கப்படும். திரும்பி வரும்போது அதை காட்டினால் மட்டுமே கோட்டைக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்.யாரேனும் முத்திரையை தொலைத்துவிட்டாலோ அல்லது எங்காவது விட்டுசென்றாலோ, அந்த நபர் எதையும் கேட்காமல் கொல்லப்படுவார் ” என்று தெரிவித்தார்.

இந்த தீவில் தங்கள் ஆட்சியை நிறுவும் போது சித்திகள் மிகவும் கடுமையான அமைப்புகளை உருவாக்கினர்.

கோட்டை, மது மற்றும் துரோகம்

சித்திகள் இந்தியாவுக்கு ஏழாம் நூற்றாண்டில் வந்ததாக நம்பப்படுகிறது. சித்திகளின் மூதாதையர்கள் கிழக்கு ஆப்பிரிக்காவின் ‘பாண்டு’ பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். சித்திகள் அரபு வணிகர்களுடன் அடிமைகளாக இந்தியாவிற்கு வந்தனர்.

இந்திய மன்னர்கள் அவர்களின் ஒல்லியான, வலுவான உடலமைப்பு, துணிச்சல் மற்றும் விசுவாசம் காரணமாக அவர்களை தங்கள் சேவையில் வைத்திருக்கத் தொடங்கினர்.

அகமதுநகரின் நிஜாம்ஷா பதவியையும் சித்திகள் வகித்தனர். அவர்களில் சுபேதார் பீரம் கானுக்கு ஜஞ்ஜிராவைக் கைப்பற்றும் பொறுப்பு நிஜாமால் வழங்கப்பட்டது.

ஜஞ்ஜிராவின் அறியப்பட்ட வரலாறு 1490ஆம் ஆண்டிலிருந்து தொடங்குவதாக ஷரத் சித்னிஸ் தனது ஜஞ்ஜிரா மாநிலத்தின் வரலாறு என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.

அந்த நேரத்தில் ராஜ்புரியில் கோழி சமூக மக்கள் அதிகளவு வசித்து வந்தனர். மீன் பிடிப்பதை பிரதான தொழிலாக கொண்ட இவர்களின் தலைவராக ராம் பாட்டீல் இருந்தார். கடற்கொள்ளையர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக அவர்கள் மெதேகோட்டை கட்டினர். மெதேகோட் என்பது பெரிய மரக் கட்டைகளை அருகருகே நட்டு கட்டப்பட்ட அரண் ஆகும்.

ஜஞ்ஜிரா கோட்டை

இந்த மேதேகோட்டைக் கட்டுவதற்கு அந்த நேரத்தில் நிஜாமி தானேதாரின் அனுமதி பெற வேண்டும். மெதேகோட் கட்டப்பட்ட பின்னர் ராம் பாட்டீல் தானேதாரின் மீது காதல் வயப்பட்டார்.

எனவே, ராம் பாட்டீலை தீர்த்துகட்டிவிட்டு ஜஞ்ஜிராவை கைப்பற்ற பிரம் கானை நிஜாம் நியமித்தார்.

கோட்டையை கைப்பற்ற படைக்கு பதிலாக தந்திரத்தை பிரம்கான் பயன்படுத்தினார்.

அலிபாபாவும் நாற்பது திருடர்களும் கதை நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும். திருடர்களின் தலைவன் தன்னை எண்ணெய் வியாபாரி என்று கூறிக்கொண்டு மாறுவேடத்தில் அலிபாபா வீட்டுக்கு வருவார். அவர் கொண்டு வந்த பெரிய பெரிய பீப்பாய்களில் மற்ற திருடர்கள் ஒளிந்து இருப்பார்கள் அல்லவா? ஜஞ்ஜிராவிலும் அப்படிதான் நடந்தது.

இந்த சுவாரஸ்ய நிகழ்வு குறித்து காட்கில் கூறும்போது, “பிரம்கான் தன்னை ஒரு வியாபாரி போல் காட்டிக்கொண்டு ராம் பாட்டீலிடம் சென்றார். கடலில் அலைகள் சீற்றமாக இருப்பதாகவும் தன்னிடம் விலையுயர்ந்த பொருட்கள் இருப்பதாகவும் கூறி தங்குவதற்கு அனுமதி கோரினார். அவர்களும் தங்குவதற்கு அனுமதி கொடுத்தனர்.

இதற்கு தனது நன்றியை தெரிவிக்கும் வகையில், பிரம்கான் ராம் பாட்டீலுக்கு தரமான மதுவை பரிசாக வழங்கினார். அனைவரும் மது அருந்திவிட்டு மயக்கத்தில் இருந்தபோது, கல்பட்டாவில் இருந்து வீரர்களை வரவழைத்த பிரம்கான் அனைவரையும் படுகொலை செய்து மேதேகோட்டாவைக் கைப்பற்றினார். ” என விவரித்தார்.

ஏகாந்த் என்ற நிகழ்ச்சியில் இது குறித்து காட்கில் குறிப்பிட்டுள்ளார்.

பாம்பே பிரசிடென்சியின் அரசிதழில் உள்ள பதிவின்படி: குலாபா மற்றும் ஜஞ்ஜிரா (பக்கம் 435-436) அன்சார் புர்ஹான் ஷா (1508-1553) ஆட்சியின் போது ஜஞ்ஜிரா கோட்டையின் கட்டுமானம் தொடங்கியது.

1636 இல் அகமதுநகர் வீழ்ந்தபோது, சித்தி அம்பர் ஜஞ்ஜிராவின் கோட்டைத் தலைவராக இருந்தார். நிஜாம்ஷாஹியை வீழ்த்திய பிறகு, அவர் பிஜாப்பூர் சுல்தான்களுக்கு விசுவாசமாக இருந்தார். ஜஞ்ஜிராவின் கோட்டைத் தலைவர் என்பதால் அந்த வழியாக செல்லும் வணிகர்கள் மற்றும் யாத்ரீகர்களின் பாதுகாப்பிற்கு அவர் பொறுப்பேற்றார்.

ஜஞ்ஜிரா கோட்டை

பட மூலாதாரம், Getty Images

ஜஞ்ஜிரவை கைப்பற்ற முயன்ற சத்ரபதி சிவாஜி

ஜஞ்ஜிரா கோட்டையின் முக்கியத்துவத்தை அறிந்த சிவாஜி அதனை கைப்பற்ற முயன்றார். சிவாஜி முதன்முதலில் 1657 ஆம் ஆண்டில் ரகுநாத் பல்லால் சப்னிஸ் தலைமையில் கோட்டையை கைப்பற்றும் முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அது வெற்றி பெறவில்லை.

இதையடுத்து, 1669ஆம் ஆண்டு மே மாதம், சிவாஜியே ஜஞ்ஜிரா கோட்டையை கைப்பற்றும் முயற்சியில் இறங்கினார். அந்த நேரத்தில் ஃபத்தே கான் ஜஞ்சிராவின் ஆட்சி அதிகாரத்தில் இருந்தார். அவரது அதிகார வரம்பிற்கு உட்பட்ட பிரதேசத்தில் மேலும் ஏழு கோட்டைகள் இருந்தன. இந்த கோட்டைகளை மராட்டியர்கள் கைப்பற்றினர். ராஜ்புரியும் கைப்பற்றப்பட்டது.

ஃபத்தேகான் இக்கட்டான நிலையில் இருப்பதை உணர்ந்த சிவாஜி அவரிடம் ஜஞ்ஜிராவை ஒப்படைக்குமாறு கூறினார். அதற்கு பதிலாக இழப்பீடு வழங்கப்படும் என்றும் சுயராஜ்யத்தில் உரிய மரியாதையை தருகிறோம் என்றும் சிவாஜி கூறினார். ஃபத்தே கானும் இதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால், அவருக்கு எதிராக கிளர்ச்சி ஏற்பட்டு ஃபத்தே கான் சிறையில் அடைக்கப்பட்டார். சித்தி சம்பூல் ஜஞ்ஜிராவின் ஆட்சியாளராக மாறினார்.

அவர் நேரடியாக ஔரங்கசீப்பின் உதவியை நாடினார். ஔரங்கசீப் சூரத்தில் இருந்து அவருக்கு உதவியாக படையை அனுப்பினார். இதையடுத்து ஜஞ்ஜிராவை கைப்பற்றும் சிவாஜியின் நேரடி முயற்சியும் தோல்வியில் முடிந்தது.

இதை தொடர்ந்து சித்திக்கு யாகுத் கான் என்ற பட்டத்தை ஔரங்கசீப் வழங்கினார்.

ஜஞ்ஜிரா கோட்டை

பட மூலாதாரம், Getty Images

கடற்படை மற்றும் ஆயுதங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்த சிவாஜி மீண்டும் இரண்டு ஆண்டுகளுக்கு பின் 1671ஆம் ஆண்டு ஜஞ்ஜிராவை கைப்பற்றும் முயற்சியை தொடங்கினார். இம்முறையும் தோல்வியே ஏற்பட்டது. சித்தி காசிம் மராட்டியர்களிடமிருந்து தண்டா ராஜ்புரியையும் கைப்பற்றினார்.

இதற்கிடையே, கோட்டைக்கு அப்பால் உள்ள தீவில் பத்மதுர்க் என்ற புதிய கோட்டையை கட்டும் பணியை சிவாஜி மேற்கொண்டார். ஆனாலும், ஜஞ்ஜிராவில் இருந்து பொழிந்த பீரங்கி குண்டு மழை அவர்களுக்கு இடையூறாக இருந்தது.

முடிசூடிக்கொண்ட பிறகு, மோரோபந்தின் தலைமையில் 1676ஆம் ஆண்டில் மீண்டும் ஜஞ்ஜிராவை தாக்க சிவாஜி முடிவு செய்தார். ஜஞ்ஜிராவின் கரையில் ஏணிகளை வைத்து ராணுவத்தை தரையிறக்கும் துணிச்சலான நடவடிக்கைக்கு சிவாஜி திட்டமிட்டார். ஆனால், இந்த திட்டத்தில் நடந்த தவறால் சிவாஜியின் திட்டம் இம்முறையும் தோல்வியில் முடிந்தது.

சிவாஜிக்கு பிறகு சாம்பாஜியும் 1682ல் ஜஞ்சிராவைக் கைப்பற்ற முயன்றார். அதற்காக கடலில் பாலம் கட்டவும் அவர் முயற்சி செய்தார். ஜஞ்ஜிராவை கைப்பற்ற சாம்பாஜி திட்டமிட்ட அதே நேரத்தில் ஹாசன் அலி தலைமையில் 40 ஆயிரம் வீரர்களை ஔரங்கசீப் சுயராஜ்யத்துக்கு அனுப்பினார். இதனால், சாம்பாஜி தனது திட்டத்தை பாதியிலேயே கைவிட வேண்டியதாயிற்று.

ஜஞ்ஜிரா கோட்டை

பட மூலாதாரம், Getty Images

கோட்டையில் கட்டப்பட்டு இடிக்கப்பட்ட வீடுகள்

இந்த தீவில் நிலவும் இயற்கை சூழலும் மிகவும் ரம்மியமானது. நான்கு பக்கங்களிலும் கடல் நீரால் சூழப்பட்டு இருந்தாலும் கோட்டைக்குள் நன்னீரும் கிடைக்கிறது. கோட்டைக்குள் இரண்டு நன்னீர் ஏரிகள் உள்ளன.

நாடு சுதந்திரம் அடைந்த போது, இக்கோட்டையில் 500 குடும்பங்கள் வசித்து வந்தன. இவர்களை விவசாயம் செய்வதற்காக சித்திக்கள் அழைத்து வந்ததாக அங்கிருந்தவர்களின் வம்சாவளியினர் தெரிவிக்கின்றனர். அவர்களுக்கு உடைகள், உணவு போன்றவை வழங்கப்பட்டன. இங்கு ஒரு பள்ளிக்கூடமும் இருந்துள்ளது. இதில் மராத்தி, உருது மொழியில் கல்வி கற்பிக்கப்பட்டது.

சுதந்திரத்திற்குப் பிறகு, சித்தியர்கள் கோட்டையை இந்திய அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டு மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரில் குடியேறினர். அவரது உறவினர்களில் ஒருவரான சித்தி முகமது கான் அங்கு வசித்து வந்தார்.

சர்தார் வல்லபாய் படேலின் செயலாளர் வி.பி. மேனன் எழுதிய ‘தி ஸ்டோரி ஆஃப் இன்டகிரேஷன் ஆஃப் இந்தியன் ஸ்டேட்ஸ்’ என்ற புத்தகத்தில் இது எழுதப்பட்டுள்ளது.

அவர் எழுதியுள்ள புத்தகத்தின் பக்கம் எண் 141 இல், “ஜஞ்ஜிரா கோட்டை பம்பாய் மாகாண அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. முழு அமைப்பையும் பம்பாய் அரசு கையகப்படுத்தும் வகையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட நவாப்பைக் கேட்டோம். அவர் ஏற்றுக்கொண்டார்

மார்ச் 8, 1948 இல், டெக்கான் மாகாணம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. மொத்தம் 815 சதுர கிலோமீட்டர் பரப்பளவு இந்தியாவில் சேர்க்கப்பட்டுள்ளது. இங்கு வசிக்கும் குடிமக்களின் எண்ணிக்கை சுமார் 17 லட்சம்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

ஜஞ்ஜிரா கோட்டை

ஆனால் பின்னர் கோட்டையில் குடியிருப்போர் வாழ்வது கடினமாகிவிட்டது. இதனால் அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று தஞ்சம் புகுந்தனர்.

அந்தக் காலத்தில் அந்தி சாயும் பொழுது கடலில் பயணம் செய்வது மிகவும் கடினமாக இருந்தது. மழைக்காலத்தில், வானிலை மோசமாக இருக்கும். இத்தகைய சூழலில், நீர் போக்குவரத்து மிகவும் ஆபத்தானது.

இதுபோன்ற காரணங்களால், கோட்டையில் குடியிருந்தவர்கள் படிப்படியாக வெளியேறினர். கோட்டையை விட்டு வெளியேறும் போது அங்கிருந்த மக்கள் தாங்களாகவே கட்டிய வீடுகளை இடித்து தள்ளினர்.

இந்த வீடுகளுக்குப் பயன்படுத்தப்பட்ட கட்டுமானப் பொருட்களை மீண்டும் பயன்படுத்துவதற்காகவே அவற்றை இடித்ததாக கூறப்படுகிறது.

1980 வரை, இங்குள்ள அனைத்து குடிமக்களும் கோட்டையிலிருந்து பெருநிலப்பரப்பில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு வந்தனர். காலப்போக்கில், இந்த கோட்டை வெறிச்சோடிய இடமாக மாறியது.

தற்போது, ஜஞ்ஜிரா கோட்டை ‘இந்திய தொல்லியல் துறை’யின் கட்டுப்பாட்டில் உள்ளது. அனுமதியின்றி யாரும் கோட்டைக்குள் நுழையக் கூடாது என்ற அறிவிப்பு கோட்டைப் பகுதியில் தெரிகிறது. கடந்த சில நாட்களாக இக்கோட்டை சுற்றுலா பயணிகளிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »