Press "Enter" to skip to content

திருப்பதி நடைபாதையில் சிறுத்தை தாக்கி சிறுமி பலி: வேலி அமைப்பது தீர்வாகுமா? கள நிலவரம்

திருப்பதி தேவஸ்தானத்திற்கு நடந்து செல்லும் பாதையில் சிறுத்தை தாக்கி குழந்தை உயிரிழந்த சம்பவம் சமூக ஊடகங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

தென் இந்தியாவில் உள்ள பிரசித்திப் பெற்ற கோவில்களில் திருமலா திருப்பதி தேவஸ்தானத்திற்கு முக்கிய இடம் உண்டு. நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்குச் சென்று வருகின்றனர். கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சேஷாசலம் மலையில் திருமலை அமைந்துள்ளது. மலை மீது வெங்கடேச பெருமாளை நடந்து சென்றும் வாகனங்களில் சென்றும் பார்கலாம்.

இந்நிலையில், அலிபிரி வழியாக திருமலைக்கு நடந்து சென்ற சிறுமியை சிறுத்தை ஒன்று தாக்கியுள்ளது. சமீப நாட்களில் காட்டுயிர்களால் திருமலையில் நிகழ்ந்த இரண்டாவது சம்பவம் இது.

இந்த ஆண்டின் ஜூன் மாதத்தில் இதேபோல், 5 வயது சிறுவன் ஒருவன் காட்டுயிர் தாக்குதலுக்கு உள்ளானது. தற்போது ஆகஸ்ட் 11ஆம் தேதி சிறுத்தை தாக்கியதை 6 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். கரடி ஒன்று நடைபாதையை கடந்து செல்லும் காணொளிவும் சமூக ஊடகங்களில் சமீபமாக பரவி வருகிறது.

இதைத் தொடர்ந்து, வன விலங்குகள் நடைப்பாதைக்குள் நுழைவது ஏன் என்ற விவாதம் மீண்டும் எழுந்துள்ளது.

திருப்பதி - திருமலை

பட மூலாதாரம், Getty Images

சிறுத்தைகள் ஏன் வருகின்றன?

ராயலசீமா ஆய்வு நிறுவனத்தின் தலைவர் பூமன் பிபிசியிடம் பேசும்போது, திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் படிக்கட்டில் சிறுத்தைகள் அடிக்கடி வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளதாக குறிப்பிட்டார்.

“சீமைக் கருவேல மரங்கள் முதல் காரணம். திருமலை மலையில் அதிகளவு வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களால்தான் தற்போதைய பிரச்னை எழுந்துள்ளது. கந்தா மண்டபம் நாமால கவி அருகே 225 ஏக்கர் பரப்பளவு இடம் இருந்தது. 1985ல் திருமலா திருப்பதி தேவஸ்தான் மரங்கள் இல்லாத அப்பகுதியில் சீமைக் கருவேல மரங்களை நட்டது. சீமைக் கருவேலம் காரணமாக அங்கு வளரும் ஸ்ரீகந்தா, ஈத்தா போன்ற மரங்கள் வளரவில்லை. மற்ற மரங்களும் அதிகநாட்கள் நீடிப்பதில்லை. அதையும் தாண்டி மரங்கள் வளர்ந்தாலும் அவை காய், கனி காய்க்காது ” என்று அவர் கூறுகிறார்.

உணவோ, வேறு விலங்குகளோ அங்கு கிடையாது. அதேநேரத்தில் குறைந்த அளவில் சிறுத்தைகள் அங்கு உள்ளன.

“சமீபத்தில் 30 ஏக்கர் அளவில் சீமைகருவேல மரங்கள் வெட்டப்பட்டன. அதுவரை சீமைகருவேல மரங்களில் நிழலில் வாழ்ந்துவந்த சிறுத்தைகள் இதனால் பாதிக்கப்பட்டன. எனவே, மனிதர்களுக்கு நெருக்கமான இடங்களில் தங்களின் வாழ்விடங்களை அமைத்துகொள்கின்றன” என்றும் பூமன் தெரிவித்தார்.

திருப்பதி - திருமலை

எதிர்காலத்தில் ஆபத்து அதிகரிக்குமா?

நடைபாதைக்கு சிறுத்தைகள் வருவதற்கு கடைகள் இரண்டாவது முக்கிய காரணமாக இருப்பதாகவும் பூமன் குறிப்பிடுகிறார். இவற்றை கட்டுப்படுத்தவில்லை என்றால் எதிர்காலத்தில் சிறுத்தை புலிகள், கரடிகள், யானைகள் போன்ற வனவிலங்குகளில் நடமாட்டமும் ஏற்படக்கூடும் என்று அவர் எச்சரிக்கிறார்.

“வனப்பகுதியில் கழிவுகளை கொட்டுவதால், சாதுவான விலங்குகள் மனிதர்களை நெருங்கி வருகின்றன. அந்த விலங்குகளுக்காக சிறுத்தைகள் வருகின்றன. எனவே, முதலில் கடைகளை கட்டுப்படுத்த வேண்டும். பக்தர்கள் தங்களின் பொருட்களை மலைகளிலேயே வீசி செல்கின்றனர். அதற்கு பதிலாக குப்பைத் தொட்டிகளில் வீச வேண்டும். இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தாவிட்டால், எதிர்காலத்தில் சிறுத்தை புலிகள், கரடிகள், யானைகளாலும் ஆபத்து ஏற்படும்.”

ஆஞ்சநேய சுவாமி கோவில் அருகே மான்களுக்கான பூங்கா இருந்தது. மான்களுக்காக இப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்ததால் இது அகற்றப்பட்டது.

ஆனால், நடந்து செல்லும் பக்தர்கள் அவ்வப்போது அங்கு காணும் மான்களுக்கு ஏதாவது சாப்பிட கொடுப்பதால், அப்பகுதிக்கு மான்கள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதாக திருப்பதி வனப் பாதுகாப்பு அலுவலர் நாகேஸ்வரராவ் தெரிவித்தார்.

நடைபாதையில் செல்லும் பக்தர்கள் மான்களுக்கு உணவளிக்க கூடாது என்று TTD-யின் தலைவர் பூமனா கருணாகர் ரெட்டி அறிவுறுத்துகிறார்.

திருப்பதி - திருமலை

பட மூலாதாரம், Bhooman

திருமலை மலைப்பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் என்பது புதியது அல்ல என்றும் பூமன் கூறுகிறார்.

“முந்தைய காலங்களில் திருமலைக்கு செல்லும் பக்தர்கள் இசைகருவிகளை இசைத்தும் பாட்டுப் பாடியும் சத்தம் எழுப்பியபடியும் செல்லுவார்கள். தற்போது திருமலைக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துவிட்டது. ஆனால், யாரும் பஜனைகளை பாடிக்கொண்டு செல்வதில்லை ” என்கிறார் அவர்.

தன் அப்பாவுடன் திருப்பதிக்கு சிறுவயதில் செல்லும்போது கூட்டம் கூட்டமாக செல்வோம் என்றும் பஜனை பாடிக்கொண்டே செல்வோம் என்றும் நினைவுக்கூர்கிறார் ஸ்ரீகாலஹஸ்தியைச் சேர்ந்த பக்தர் வெங்கடசுப்பா ரெட்டி.

நடைபாதையில் உள்ள ஆபத்து மண்டலங்கள் என்ன?

திருமலையை அடைவதற்கு மூன்று நடைப்பாதைகள் உள்ளன. கடப்பாவிலிருந்து திருமலைக்கு செல்ல குக்கலா தொட்டி வழியாக ஒரு வழி உள்ளது. இது அன்னமய்யா நடந்து வந்த பாதை என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த வழித்தடத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

இரண்டாவது ஸ்ரீவாரி மெட்டில் இருந்து தொடங்கும் நடைபாதை. இவ்வழியாக அதிக பக்தர்கள் செல்வதில்லை.

மூன்றாவது, அலிபிரியில் இருந்து தொடங்கும் படிக்கட்டு. திருமலைக்கு நடந்து செல்ல விரும்பும் பெரும்பாலான பக்தர்கள் இந்த வழியாகத்தான் செல்கின்றனர். இந்த படிக்கட்டில் சிறுத்தைகள் தாக்கும் சம்பவங்களும் நடந்துள்ளன.

திருப்பதி - திருமலை

250வது படிக்கு அருகில் இரண்டாவது கோபுரமான, மைசூர் கோபுரம் வருகிறது. அதன் பிறகு, மூன்றாவது காற்று குவிமாடம் 2,083 வது படிக்கு அருகில் வருகிறது. அங்கிருந்து மலைக்கு செல்லும் நடைபாதை சமவெளி போல் உள்ளது. ஏழாவது மைலில் உள்ள ஆஞ்சநேய ஸ்வாமி சிலையை அடைய எளிதான பாதையாக இருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஜூன் மாதம், கௌசிக் என்ற சிறுவன், அதே பகுதியில் சிறுத்தையால் தாக்கப்பட்டான்.

ஆஞ்சநேய சுவாமி சிலையிலிருந்து லட்சுமி நரசிம்மசுவாமி கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள 2,831வது படி அருகே சில நாட்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று குழந்தை லக்‌ஷிதாவைத் தாக்கியதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த சம்பவங்களை அடுத்து, 2,850 படிக்கு அருகில் உள்ள ஆஞ்சநேய சுவாமி சிலை முதல் லட்சுமி நரசிம்மசுவாமி கோயில் வரையிலான சாலையை தேவஸ்தானம் ஆபத்தான பகுதியாக அறிவித்துள்ளது.

அனுமன் சிலைக்கும் லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கும் இடையே உள்ள தூரம் ஒன்றரை கிலோமீட்டர். இந்த பாதையின் இருபுறமும் இரண்டு மூன்று மீட்டர் தொலைவில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது.

திருப்பதி - திருமலை

தாக்கியது சிறுத்தையா?

லக்‌ஷிதாவை சிறுத்தை தாக்கியதாக கூறப்படும் பகுதியை பிபிசி ஆய்வு செய்தது. நடைபாதையில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் சிறிய மேடு போல் உள்ளது. சுற்றிலும் பாறைகளும் சிறு மரங்களும் உள்ளன.

சிறுத்தையால் குழந்தை கொல்லப்பட்டதாக கூறப்படும் பகுதியில் மனித முடிகள் இன்னும் காணப்படுகின்றன. ரத்தக்கறைகள் இருந்ததாகவும், அவை வெயிலில் காய்ந்துவிட்டது என்றும் கூறப்படுகிறது.

அந்தப் பாறைகளையும் மரங்களையும் தாண்டிச் சென்றால் அடர்ந்த காடு. இந்தப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கூண்டில் சிறுத்தை ஒன்று சிக்கியது. அதனை பிடித்து எஸ்வி உயிரியல் பூங்காவில் அடைத்தனர்.

குழந்தையை கொன்றது இதே சிறுத்தை என்பது உறுதியானால் அதை அங்கேயே வைத்து பாதுகாப்போம். இல்லையென்றால் காட்டில் விட்டுவிடுவோம் என்று நாகேஸ்வரராவ் கூறினார்.

எனினும், இந்த விவகாரம் தீரும் முன்பே, தற்போது மற்றொரு சிறுத்தையும் கூண்டில் சிக்கியுள்ளது.

“நாங்கள் பிடித்த சிறுத்தையும் சிறுமியை தாக்கிய சிறுத்தையும் ஒன்றுதான் என்றால் அதனை உயிரியல் பூங்காவிலேயே நிரந்தரமாக வைத்திருப்போம். அது மனித ரத்தத்துக்கும் சதைக்கும் பழகிவிட்டதால் அதற்கு மற்றொரு வாய்ப்பை கொடுக்கக் கூடாது ” என நாகேஸ்வரராவ் நம்மிடம் தெரிவித்தார்.

சிறுத்தைகள் பொதுவாக மனிதர்களை தாக்காது என குறிப்பிட்ட அவர், “குழந்தையை வேறு எதோ விலங்கு என்று சிறுத்தை தவறாக எண்ணி தாக்கியிருக்கலாம். சத்தம் எழுப்பியபடி நடந்து செல்பவர்கள் அருகில் சிறுத்தைகள் வராது ” என்றும் கூறினார்.

திருப்பதி - திருமலை

பட மூலாதாரம், Rajesh

கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன

ஆபத்து மண்டலமாக அடையாளம் காணப்பட்ட பகுதியில் அதிகாரிகள் இரண்டு கூண்டுகளை அமைத்துள்ளனர். அப்பகுதியில் வேறு ஏதேனும் சிறுத்தைப்புலிகள் இருந்தால், அவற்றையும் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த இரண்டு கூண்டுகளும் நடைபாதையில் ஒரு கிலோமீட்டர் இடைவெளியில் அமைந்துள்ளன. அப்பகுதியில் உள்ள மொத்த சிறுத்தைகளின் எண்ணிக்கையை அறிய ட்ராப் ஒளிக்கருவிகள் (ஒளிக்கருவி (கேமரா)க்கள்) பொருத்தப்பட்டுள்ளன.

அலிபிரி சாலையில் 70 காவலர்கள், ஸ்ரீவாரி மெட்டு அருகே 50 காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும் மொத்தம் 300 ஒளிக்கருவிகள் (ஒளிக்கருவி (கேமரா)க்கள்) பொருத்தப்பட்டு வருவதாகவும் நாகேஸ்வரராவ் தெரிவித்தார்.

நடந்து செல்லும் பக்தர்களுக்கு கம்பு

திருமலை நடைபாதையில் சிறுத்தைப்புலிகள் நடமாட்டம் இருப்பதாக ஊடகங்களில் பெரிய அளவில் செய்திகள் வெளியாகி வருவதால், திருமலை நடைபாதையில் பக்தர்களின் பாதுகாப்பில் டிடிடி கவனம் செலுத்தியுள்ளது.

ஆபத்தான மண்டலமாக கருதப்படும் இப்பகுதியில் எத்தனை சிறுத்தைகள் உள்ளன என்பதை கண்டறியும் பணியை துவக்கியுள்ளதாக தேவஸ்தான நிர்வாக அதிகாரி (EO) தர்மா ரெட்டி தெரிவித்தார்.

அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு வழித்தடங்களில் சிறு குழந்தைகளுடன் நடக்க விரும்பும் பெற்றோரை காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மதியம் 2 மணிக்கு மேல் எந்த சூழ்நிலையிலும் அனுமதி இல்லை. பெரியவர்களுக்கு இரவு 10 மணி வரை அனுமதி. இதனால், பாதயாத்திரையாக செல்லும் ஒவ்வொரு பக்தர்களுக்கும் கம்பு வழங்க முடிவு செய்துள்ளோம் என்று கருணாகர் ரெட்டி தெரிவித்தார்.

டிடிடியின் இந்த முடிவுக்கு சில பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அமெரிக்காவின் நியூஜெர்சியில் இருந்து வந்துள்ள ஹைதராபாத்தை சேர்ந்த லட்சுமிலதா என்ற பெண்மணி பிபிசியிடம் கூறுகையில், இதுபோன்ற முடிவுகளால் ஸ்ரீவாரி பார்வை செய்ய வெளிநாட்டில் இருந்து வந்த தன்னை போன்ற பக்தர்கள் அவதிப்படுகின்றனர் என்றார்.

திருப்பதி - திருமலை

“பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இரண்டு மணிக்கு பின் அனுமதிக்க மாட்டோம் என்று சொல்கிறார்கள். வெளிநாட்டில் இருந்து வருகிறோம். நாங்கள் பல ஆண்டுகளாக இங்கு வந்துகொண்டு இருக்கிறோம். பாதுகாப்பு சரியாக இல்லை. ஒரு நேரத்தில் சாலையில் யாருமே இல்லை. நாங்கள் பயந்துவிட்டோம். இப்போது வேலி போடுவது அவ்வளவு சரியாக இருக்காது என்று நான் நினைக்கிறேன். பாதுகாப்பு வசதிகளை அதிகப்படுத்தினால் பக்தர்கள் நடந்துவருவதற்கு உதவியாக இருக்கும்” என்று கூறினார்.

பக்தர்களின் பாதுகாப்பிற்காக கம்பு கொடுப்பது சரியானதே என்று கருதுவதாக பூமன் கூறுகிறார்.

“அவைகளை கொல்ல நாம் யார்? அவற்றின் இடத்துக்கே சென்று அவற்றையே கொல்லலாமா? விலங்குகள் ஒருபோதும் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிப்பது இல்லை. நாம் அவைகளுக்கு இடையூறு செய்தால், அவற்றை தாக்க முயன்றால் மட்டுமே அவை நம்மைத் தாக்குகின்றன. கம்புகள் மூலம் அவற்றை விரட்டலாம். கம்புகளை தருவதுபோல், குழந்தைகள் பெரியவர்கள் ஆகியோர் வழியில் எங்கும் உட்காரக்கூடாது என்றும் தெரிவிக்க வேண்டும். ” என்கிறார் அவர்.

பாதையை விட்டு விலகி செல்லாதீர்கள்

திருமலை மலையில் வெங்கடேஸ்வரா சரணாலயம் உள்ளது. விலங்குகளை பாதுகாப்பதும், மக்களுக்கு தீங்கு விளைவிக்காமல் பார்த்துக் கொள்வதுமே தங்களின் பணி என வனத்துறையினர் கூறுகின்றனர்.

பக்தர்கள் செல்ல வேண்டிய வழியில் செல்லுமாறும் பக்கவாட்டில் செல்ல முயற்சிக்கக் கூடாது என்று பலமுறை அறிவுறுத்துவதாகவும் வனத்துறையினர் நம்மிடம் கூறினர்.

திருப்பதி - திருமலை

மேலும், இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டுமென்றாலும் கூட அதற்கென அமைக்கப்பட்ட இடங்களில்தான் செல்ல வேண்டும் என்றும் காட்டுக்குள் யாரும் தனியாக செல்லக்கூடாது என்றும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

நடைபாதையில் வேலி சாத்தியமா?

பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முழு நடைபாதைக்கும் வேலி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் நாம் பார்க்க முடிகிறது. இது சாத்தியமா என்று வனத்துறை அதிகாரிகளிடம் பிபிசி கேட்டது.

“மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கும் நடமாட உரிமை உண்டு. எந்த பிரச்சனையும் இல்லாமல் அதை எப்படி செய்வது என்பது குறித்து ஆராய ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட வேண்டும்.

வேலி அமைக்க வேண்டும் என்பதோடு, விலங்குகள் கீழே அல்லது மேலே இருந்து செல்லக்கூடிய வகையில் அந்த வேலி கட்டப்பட வேண்டும். இதையெல்லாம் அறிவியல் ரீதியாக எப்படி செய்வது? இது இந்திய வனவிலங்கு நிறுவனத்துடன் தொடர்புடையது. எனவே இதுகுறித்து பின்னர் முடிவெடுப்போம்,” என்று நாகேஸ்வரராவ் கூறினார்.

சேஷாசலம் மலை உயிர் காப்புப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதால், விலங்குகளுக்கு நடமாட உரிமை உண்டு என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »