Press "Enter" to skip to content

இலங்கையில் மலையக தமிழர் கட்டிய வீட்டை இடித்த அதிகாரி; தாக்கச் சென்ற அமைச்சர் – என்ன நடந்தது?

இலங்கைக்கு இந்திய வம்சாவளித் தமிழர்கள் சென்று 200 ஆண்டுகளாகி விட்டாலும் அவர்களின் வாழ்க்கை என்னவோ சொல்லிக் கொள்ளும் அளவுக்கு மேம்படவில்லை.

மலையகத்தின் மாத்தளை பகுதியில் மலையக தமிழர் ஒருவரின் வீடு ஒன்று, தோட்ட நிர்வாகத்தால் உடைக்கப்பட்ட நிகழ்வு அதை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது. இது இலங்கை நாடாளுமன்றம் வரை எதிரொலித்தது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராகவும், மலையக மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலுமான பதாகைகளை ஏந்தியவாறு எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

வீட்டை உடைதெறிந்த தோட்ட உதவி முகாமையாளரை கைது செய்யுமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

மலையக தமிழரின் வீடு இடிக்கப்பட்டது ஏன்?

மாத்தளை – எல்கடுவ – ரத்வத்தை பகுதியிலுள்ள தேயிலை தோட்டத்தில் சுமார் ஆயிரக்கணக்கான மலையக தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். ரத்வத்தை பகுதியில் சுமார் 300க்கும் அதிகமான குடும்பங்கள் வாழ்ந்து வந்தாலும், இவர்களுக்காக 120 வீடுகள் மாத்திரமே காணப்படுகின்றன. வரிசையாக ஒண்டிக்குடித்தன வீடுகளே இங்கு அமைக்கப்பட்டுள்ளன.

ஒரு வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருவதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ரத்வத்தை பகுதியில் உள்ள அத்தகைய வீடு ஒன்றில், நான்கு பிள்ளைகளின் தந்தையான ராமசந்திரனின் குடும்பம் வாழ்ந்து வருகிறது.

இவரது அனைத்து பிள்ளைகளுக்கும் திருமணம் செய்து வைத்துள்ள ராமசந்திரன், தனது வரிசை குடியிருப்பிலேயே, பிள்ளைகளின் குடும்பங்களுடனும் வாழ்ந்து வருகின்றார்.

ராமசந்திரனின் குடும்பத்திற்காக தோட்ட நிர்வாகத்தால் சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்னர் காணியொன்று வழங்கப்பட்டுள்ளது. வறுமை காரணமாக குறித்த காணியில் அப்போது அவரால் வீடு கட்ட முடியவில்லை.

இதையடுத்து, தன்னிடமிருந்த பணத்தைக் கொண்டு, வீடு ஒன்றைக் கட்டிக்கொள்ளும் வகையில் தனது நிலத்தை அவர் தயார்படுத்தியுள்ளார். அவ்வாறு தயார்படுத்தப்பட்ட நிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், தற்காலிகமாக வீடு ஒன்றை அமைக்க ராமசந்திரன் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவரது மகன் குணசீலன் பிபிசி தமிழுக்குத் தெரிவித்தார்.

நான்கு புறமும் மரப் பலகை மற்றும் தகரங்களைக் கொண்டு இந்த வீட்டை இவர்கள் அமைத்துக்கொண்டுள்ளனர். வீட்டிற்குத் தேவையான சில பொருட்களை வீட்டிற்குக் கொண்டு சென்றவர்கள், புது வீட்டிற்குள் செல்லத் தயாராகியுள்ளனர்.

இந்த நிலையில், எல்கடுவ தோட்ட நிர்வாகத்தைச் சேர்ந்த உதவி முகாமையாளர், வீடு அமைந்துள்ள பகுதிக்கு நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 19) வந்து குறித்த வீட்டை உடைக்குமாறு குடும்பத்தாருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த நிலத்தில் முறையற்ற விதத்தில் வீடு நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தே, அந்த உதவி முகாமையாளர் இவ்வாறு செயல்பட்டதாகத் தெரிய வருகின்றது.

மலையக தமிழரின் வீடு இடிப்பு

தமிழரின் வீட்டை உடைக்கும் காணொளி மிகுதியாக பகிரப்பட்டு

எனினும், தமக்கு தோட்ட நிர்வாகத்தால் இந்த நிலம் வழங்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 50 ஆயிரம் ரூபா செலவிட்டு இந்த வீட்டை நிர்மாணித்துள்ளதாகவும் ராமசந்திரன், எல்கடுவ தோட்ட உதவி முகாமையாளருக்கு தெரிவித்துள்ளார்.

இதைப் பொருட்படுத்தாத தோட்ட உதவி முகாமையாளர், ராமசந்திரனின் குடும்பத்தாரை தகாத வார்த்தைகளால் திட்டி, குறித்த வீட்டை அவரே உடைத்தெறிந்துள்ளார்.

இவ்வாறு உதவி முகாமையாளரால் வீடு உடைக்கப்பட்ட விதத்தை, ராமசந்திரன் மகன் குணசீலன் தனது செல்போனில் காணொளியாகப் பதிவு செய்து, சமூக ஊடகங்களில் பகிர்ந்தார். அந்தக் காணொளி ஒரு சில நிமிடங்களிலேயே அதிகளவில் பகிரப்பட்டு, அதிகளவானோர் பார்வையிட்ட நிலையில், இந்த விஷயம் பெரிய பேசுபொருளாக மாறியது.

இலங்கை ஊடகங்கள், சமூக ஊடகப் பதிவுகள் எனப் பல்வேறு வகையிலும் இந்தச் செய்தி உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தது.

மலையக தமிழரின் வீடு இடிப்பா

அமைச்சர் ஜீவன் தொண்டமான் நேரில் ஆய்வு

இந்தச் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையிலான குழு எல்கடுவ பகுதியை நோக்கி நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்டிருந்தது.

எல்கடுவ தோட்ட நிர்வாகத்திற்கும், அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையிலான குழுவிற்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதை அடுத்து, அமைச்சர் தலைமையிலான குழு மற்றும் தோட்ட நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர்.

உடைக்கப்பட்ட வீட்டைப் பார்வையிட்ட அமைச்சர் ஜீவன் தொண்டமான், வீட்டை உடைத்த உதவி முகாமையாளரை அழைத்து வருமாறு தோட்ட நிர்வாகத்திற்குக் கூறினார்.

தோட்ட முகாமையாளரை அமைச்சர் தாக்க முயற்சி

இதன்போது, அங்கு வந்த எல்கடுவ தோட்ட முகாமையாளர் ஒருவர், உதவி முகாமையாளரை அழைத்து வர முடியாது என்ற வகையில் கருத்தைக் கூறி, தோட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையை நியாயப்படுத்த முயன்றார்.

இதையடுத்து, கோபமடைந்த அமைச்சர் ஜீவன் தொண்டமான், குறித்த முகாமையாளரை கடுமையாகப் பேசியதுடன், வாக்குவாதமும் வலுவடைந்தது. இதையடுத்து, முகாமையாளர் மீது தாக்குதல் நடத்த அமைச்சர் ஜீவன் தொண்டமான் முயன்றார்.

அருகிலிருந்தவர்கள் அமைச்சரை பிடித்துக் கொண்டதுடன், தோட்ட முகாமையாளரை அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில், எல்கடுவ தோட்டத் தலைவர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

இதன்போது, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வீடு ஒன்றை நிர்மாணித்துக் கொடுக்க எல்கடுவ தோட்டத் தலைவர் இணக்கம் தெரிவித்தார்.

அத்துடன், குறித்த குடும்பம் வாழும் வரிசை வீடுகளிலுள்ள மேலும் 10 குடும்பங்களுக்கு அதே இடத்தில் தனி வீடுகளை கட்டிக் கொடுக்குமாறு அமைச்சர் ஜீவன் தொண்டமான், பெருந்தோட்ட மனிதவள நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமிக்கு ஆலோசனை வழங்கினார்.

மலையக தமிழரின் வீடு இடிப்பா

வீடுகள் எவ்வாறு நிர்மாணிக்கப்படும்?

இலங்கையிலுள்ள பல பெருந்தோட்ட நிறுவனங்களில் நிறுவனங்கள், அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலங்களை குத்தகை அடிப்படையில் பெற்றே, தமது வர்த்தகத்தை நடத்தி வருகின்றது.

இந்த நிலையில், அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலத்தைப் பெற்றுக்கொள்ள பல்வேறு நடைமுறைகள் காணப்படுவதாக பெருந்தோட்ட மனிதவள நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி தெரிவிக்கின்றார்.

இதன் பிரகாரம், குறித்த நிலங்களை அளவிடும் நடவடிக்கைகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நிலங்கள் அளவிடப்பட்டு, சட்ட ரீதியாகப் பிரிக்கப்பட்டு, முதலில் உரிய தரப்பினருக்கு நிலம் உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட வேண்டும் என அவர் கூறுகின்றார்.

அதன் பின்னரே வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளைத் தன்னால் ஆரம்பிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

எப்படி இருப்பினும், அதற்காக அளவீடு உள்ளிட்ட ஆரம்பக்கட்ட பணிகளை உடனடியாக ஆரம்பித்துள்ளதாக பாரத் அருள்சாமி தெரிவிக்கின்றார்.

நிலம் உறுதிப் பத்திரத்தை பெற்றுக் கொடுத்து, வீடுகளை கட்டிக் கொடுக்க சுமார் 8 மாத காலம் அவசியம் என அவர் கூறுகின்றார்.

பெருந்தோட்ட மனிதவள நிதியத்தின் வசம் காணப்படுகின்ற வீட்டு திட்டத்திற்கு அமைவாகவே இந்த வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளன.

இதன்படி, குறித்த வீடொன்றை நிர்மாணித்துக் கொடுப்பதற்கு சுமார் 30 லட்சம் இலங்கை ரூபா செலவிடப்பட வேண்டும் என்று பெருந்தோட்ட மனிதவள நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி தெரிவிக்கின்றார்.

இதேவேளை, வீட்டை உடைத்த சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரியை உடனடியாக பணிநீக்கம் செய்யுமாறு அமைச்சர் ஜீவன் தொண்டமான், எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனத்தின் தலைவருக்கு அறிவுறுத்திய நிலையில், அவரை பணிநீக்கம் செய்ய நிறுவனத்தின் தலைவர் இணக்கம் தெரிவித்தார்.

மலையக தமிழரின் வீடு இடிப்பா

இலங்கை நாடாளுமன்றத்தில் அமளி – அமைச்சர் பதில்

மாத்தளை – எல்கடுவ – ரத்வத்தை பகுதியில் மலையக தமிழர் ஒருவரின் வீடு ஒன்று, தோட்ட நிர்வாகத்தால் உடைக்கப்பட்ட சம்பவமானது, இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று கடும் அமளியை ஏற்படுத்தியது.

ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள், இன்றைய நாடாளுமன்ற அமர்வுக்கு இடையூறு விளைவித்து, தோட்ட உதவி முகாமையாளரை கைது செய்யுமாறு கோஷங்களை எழுப்பி தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராகவும், மலையக மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலுமான பதாகைகளை ஏந்தியவாறு எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

மலையக தமிழரின் வீடு இடிப்பா

இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த பெருந்தோட்ட அமைச்சர் ரமேஸ் பத்திரண, “மாத்தளையில் தற்காலிக குடியிருப்பிலிருந்து பலவந்தமாக குடும்பம் ஒன்று வெளியேற்றப்பட்டமை தொடர்பில் 24 மணிநேரத்திற்குள் ஆரம்பகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

”இந்தச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது கவலையை தெரிவித்துக் கொள்கின்றேன். நடக்கக்கூடாத ஒரு சம்பவம் நடந்தேறியுள்ளது.

சட்டவிரோத குடியேற்றங்களை நிர்மாணிக்க குடும்பங்களை வெளியேற்ற தோட்ட நிர்வாகத்தைச் சேர்ந்த உதவி முகாமையாளர் நேரடியாகத் தலையிட்டுள்ளார். இது நடக்கக்கூடாத ஒரு சம்பவம். சட்ட நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்.

அதைச் செய்யாது, உதவி முகாமையாளர் நேரடியாக தலையீடு செய்ததால், குறித்த உதவி முகாமையாளருக்கு இடமாற்றம் வழங்கி, அவர் தொடர்பிலான விசாரணைகளை நடத்துமாறு நான் நிறுவனத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளேன்.

அவருக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. விசாரணைகளின் பின்னர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அவர் உறுதியளித்துள்ளார்.

மலையக தமிழரின் வீடு இடிப்பா

அமைச்சர் ஜீவன் தொண்டைமான் வேண்டுகோள்

பெருந்தோட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி தொடர்பில் அனைவரும் ஒன்றிணைந்து தீர்வை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

மாத்தளை விவகாரமானது, தனது ஆதங்கமே தவிர, அதில் அரசியல் கிடையாது என தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

மலையகத்திற்கு தீர்வு கிடைக்க வேண்டுமாயின், எதிர்கட்சி கூறும் எந்தவொரு விஷயத்துடனும் இணைந்து செயற்பட தயார் என அவர் உறுதியளித்தார்.

அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்படும் பட்சத்தில் மலையக மக்களுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க முடியும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு மலையக மக்கள் சென்று 200 ஆண்டுகள்

பெருந்தோட்ட பகுதிகளில் வேலை செய்வதற்காக 1823ஆம் ஆண்டு இலங்கைக்கு இந்தியாவிலிருந்து மலையக தமிழர்கள் அழைத்து வரப்பட்டார்கள்.

தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட இவர்கள் தலைமன்னாரில் தரையிறக்கப்பட்டு, அங்கிருந்து மலையகத்தின் நுழைவாயில் என வர்ணிக்கப்படும் மாத்தளை ஊடாக மலையகத்திற்குள் பிரவேசிக்கின்றனர்.

காடுகளாக இருந்த மலைகளைத் தோட்டங்களாக மாற்றி, இலங்கையின் பொருளாதாரத்திற்குப் பெரிய பங்களிப்பை இன்று வரை 200 ஆண்டுகளாக மலையக மக்கள் செய்து வருகின்றனர்.

மலையக தமிழரின் வீடு இடிப்பா

இலங்கையின் அடையாளமாக சர்வதேச சந்தையில் இலங்கை தேயிலைக்கு ‘சிலோன் டீ” என்ற நாமத்தை பெற்றுக் கொடுத்து, இலங்கையின் தேயிலை தரத்தை மேம்படுத்தி, பொருளாதாரத்திற்குப் பெரிய பங்களிப்பைச் செய்து வருகின்றனர்.

இவ்வாறு மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தலைமன்னார் முதல் மாத்தளை வரையான நடைபவணியொன்று கடந்த மாதம் 28ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டு, இந்த மாதம் 12ஆம் தேதி நிறைவு பெற்றது.

அத்துடன், மலையகம் 200 என்ற தொனிப்பொருளின் கீழ் பல்வேறு மலையக கலை, கலாசார, பண்பாட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அதேவேளை, மலையக அரசியல்வாதிகளாலும் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருவதைக் காண முடிகின்றது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »