Press "Enter" to skip to content

டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமன கோப்பை திருப்பி அனுப்பிய ஆளுநர்: மீண்டும் அரசுடன் மோதுவது ஏன்?

பட மூலாதாரம், TNDIPR

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தலைவர், உறுப்பினர்களை நியமனம் செய்து மாநில அரசு அனுப்பிய கோப்பை, தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பியதாக செய்தி வெளியாகியுள்ளது.

தேர்வாணையத்தின் தலைவர் நியமனம்

தமிழ்நாட்டில் அரசுத் துறைகளுக்கான பணியாளர்களைத் தேர்வு செய்யும் முகமையாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) செயல்பட்டு வருகிறது.

இந்த ஆணையம் தேர்வுகளை நடத்தி, பணியாளர்களைத் தேர்வு செய்கிறது. ஆணையத்திற்கு ஒரு தலைவரும் 14 உறுப்பினர்களும் இருக்கலாம்.

தேர்வாணையத்தின் தலைவராக 2020ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் பொறுப்பேற்றார். இவர் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி ஓய்வு பெற்றார்.

இதையடுத்து புதிய தலைவர் நியமிக்கப்படாமல், டிஎன்பிஎஸ்சியின் உறுப்பினராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சி.முனியநாதன், தேர்வாணையத்தின் பொறுப்புத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இவர் தவிர, தேர்வாணையத்தின் உறுப்பினர்களாக பேராசிரியர் கே. ஜோதி சிவஞானம், மருத்துவர் கே. அருள்மதி, எம். ஆரோக்கியராஜ் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். ஆகவே, புதிய தலைவரையும் மேலும் சில உறுப்பினர்களையும் நியமிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது.

ஒரு மாதத்திற்கு முன்பே அனுப்பப்பட்ட முக்கிய கோப்பு

டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமன கோப்பை திருப்பி அனுப்பிய ஆளுநர்: மீண்டும் அரசுடன் மோதல்

இதற்கான பெயர்களைப் பரிந்துரைத்து, அதற்கான கோப்பை தமிழ்நாடு அரசு தமிழ்நாடு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது.

ஆணையத்தின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற காவல்துறை தலைவர் சி. சைலேந்திரபாபுவை முன்மொழிந்து தமிழக அரசு கோப்புகளை அனுப்பியது. புதிதாக எட்டு உறுப்பினர்களுக்கான பெயர்களும் அந்தக் கோப்பில் இடம்பெற்றிருந்தன.

இதுதொடர்பான கோப்புகள் ஒரு மாதத்திற்கு முன்பே ஆளுநர் ஆர்.என். ரவியின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்ட நிலையில், ஆளுநர் பல்வேறு கேள்விகளை எழுப்பி அந்தக் கோப்புகளை திருப்பி அனுப்பியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

“இந்த நியமனங்களுக்கான பரிந்துரைகளைக் கோரி எங்கு விளம்பரம் செய்யப்பட்டது, எத்தனை பேர் விண்ணப்பித்தனர்? அவர்கள் எப்படி பரிசீலிக்கப்பட்டனர், தேர்வானவர்கள் எந்த அடிப்படையில் தேர்வானார்கள்?” என்ற கேள்விகளை எழுப்பி, இந்தக் கோப்புகளை தமிழக அரசுக்கே ஆளுநர் திருப்பி அனுப்பிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து ஆளுநர் மாளிகையோ, தமிழ்நாடு அரசோ அதிகாரபூர்வமாக எந்தத் தகவல்களையும் வெளியிடவில்லை. இது தொடர்பாக ஆளுநர் மாளிகையின் கருத்தைப் பெற மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

‘முதல்வரின் விருப்புரிமை’

ஆளுநரின் இந்தச் செயல் ஏற்க முடியாத ஒன்று என்கிறார்கள் தேர்வாணையம் சார்ந்த சில அதிகாரிகள்.

“தற்போது பணியாளர் தேர்வாணையத்தில் உள்ள உறுப்பினர்கள் இதே பாணியில்தான் நியமிக்கப்பட்டனர். இதற்கு முன்பும் இதே பாணியில்தான் நியமிக்கப்பட்டனர்.

அப்போது ஆளுநர் மாளிகை இதை ஏற்றுக்கொண்டது. இந்த நியமனங்கள் முதல்வரின் விருப்புரிமை. அவர்தான் யாரை நியமிப்பது என்பதை முடிவு செய்வார். இது குறித்து யாரும் கேள்வி எழுப்ப முடியாது,” என்கிறார் அந்த அதிகாரி.

சைலேந்திர பாபு

பட மூலாதாரம், SYLENDRA BABU

மேலும், “தேர்தல் மூலம் ஆட்சிக்கு வருபவர்களுக்குப் பல கரிசனங்கள், அக்கறைகள் இருக்கும். அதன்படிதான் தலைவரும், உறுப்பினர்களும் நியமிக்கப்படுவார்கள். உதாரணமாக, தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணயத்தில் பாதிரியார் ஒருவர் இருக்கிறார். இதற்கான சமூகக் காரணங்கள் இருக்கும். இதை ஆளுநர் எப்படி கேள்விக்குட்படுத்த முடியும்?

யுபிஎஸ்சியிலோ, வேறு மாநில தேர்வாணையங்களிலோ இதுபோல நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்துதான் தலைவரையும் உறுப்பினர்களையும் நியமிக்கிறார்களா? இதற்கு முன்பு ஒப்புதல் அளித்த ஆளுநர்கள் தவறு செய்துவிட்டார்களா?

நீட் போன்ற சர்ச்சைக்குரிய மசோதாக்களில் அவர் தயங்குகிறார் என்றால் பரவாயில்லை. ஆனால், இதெல்லாம் வழக்கமான கோப்புகள். அதற்கும் தடைபோடுகிறார் என்றால் என்ன செய்வது? ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்திற்குச் செல்ல முடியுமா?” எனக் கேள்வி எழுப்புகிறார் அந்த அதிகாரி.

தமிழ்நாடு காவல்துறை தலைவராக இருந்த சி. சைலேந்திரபாபு இந்த ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் தேதி ஓய்வுபெற்றார். அவர் ஓய்வு பெறுவதற்கு முன்பிருந்தே, அவருக்குத்தான் தேர்வாணையத் தலைவர் பதவி வழங்கப்படும் என்ற பேச்சு அடிபட்டு வந்தது.

ஒரு மாதத்திற்கு முன்பாகவே இது தொடர்பான கோப்புகள் அனுப்பப்பட்ட நிலையில், அந்தக் கோப்புகள் திருப்பி அனுப்பப்பட்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அரசமைப்பு சட்டம் என்ன சொல்கிறது?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

பட மூலாதாரம், MK STALIN/FB

டிஎன்பிஎஸ்சியின் தலைவரும் உறுப்பினர்களும் மாநில பணியாளர் தேர்வாணயம் குறித்த இந்திய அரசமைப்பு சட்டத்தின் பிரிவுகள் 316-19 அடிப்படையில் நியமிக்கப்படுகின்றனர்.

பிரிவு 316இன்படி, யுபிஎஸ்சியின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை குடியரசுத் தலைவர் நியமிப்பார். மாநில தேர்வாணயத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஆளுநர் நியமிப்பார். ஒவ்வொரு தேர்வாணயமும் எத்தனை உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் என்பதும், அவர்களது தகுதி என்ன என்பதும் அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை.

பொதுவாக, இந்தப் பதவிகளில் நியமிக்கப்படுபவர்கள் அரசுப் பதவிகளில் குறைந்தது பத்தாண்டு அனுபவம் கொண்டவர்களாக இருப்பார்கள். நிர்வாக அனுபவம் கொண்டவர்கள் ஆணையத்தில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த விதி பின்பற்றப்படுகிறது.

மாநில தேர்வாணையத்தின் தலைவராகவோ உறுப்பினராகவோ நியமிக்கப்படும் ஒருவர் ஆறு ஆண்டுகள் இந்தப் பதவியில் நீடிக்கலாம். ஆனால், அதிகபட்ச வயது 62ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருவர் அந்தப் பதவிக்காலம் முடிந்த பிறகு, மீண்டும் மறுநியமனம் பெற முடியாது.

சைலேந்திரபாபுவை பொறுத்தவரை, அவருக்கு வயது 61 ஆகிறது. அவர் தற்போது நியமிக்கப்பட்டால், இன்னும் ஓராண்டு மட்டுமே தலைவர் பதவியில் இருக்க முடியும்.

இதற்கு முன்பு சர்ச்சையானது எப்போது?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக இதற்கு முன்பும் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது.

கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரியில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர்களாக முன்னாள் மாவட்ட நீதிபதி வி. ராமமூர்த்தி, ஆர். பிரதாப் குமார், வி. சுப்புராஜ், எஸ். முத்துராஜ், எம். சேதுராமன், ஏ.வி. பாலுசாமி, ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜாராம் உள்ளிட்டோரை நியமித்தார்.

இந்த நியமனங்களை எதிர்த்து, தி.மு.கவின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்தனர்.

தகுதியில்லாதவர்கள், அரசியல்சார்பு உள்ளவர்கள் இந்தப் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டிருப்பதாக அவர்கள் தங்களது மனுக்களில் குற்றம் சாட்டியிருந்தனர்.

இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்கே.கவுல் மற்றும் மகாதேவன் அடங்கிய அமர்வு, தகுதியை கணக்கில் கொள்ளாமல் செய்யப்பட்ட இந்த நியமனங்கள் செல்லாது என தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்ச நீதிமன்றமும் இந்தத் தீர்ப்பை உறுதி செய்தது.

அரசுக்கு குடைச்சல் தரும் ஆளுநர்

ஆனால், தேர்வாணைய தலைவரையும் உறுப்பினரையும் நியமனம் செய்ய முதலமைச்சருக்கு முழு உரிமை உண்டு. எல்லா விஷயங்களிலும் செய்வதைப் போல இதிலும் ஆளுநர் பிரச்னை ஏற்படுத்துகிறார் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ப்ரியன்.

“இது தொடர்பாக விளம்பரம் செய்திருக்கிறீர்களா என்று ஆளுநர் கேட்கிறார். இதற்கு முன்பாக அப்படி செய்யப்பட்டிருக்கிறதா?

இதற்கு முன்பாக ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியான நடராஜ் நியமிக்கப்பட்டார். அவரும் ஓராண்டுதான் பதவியில் இருந்தார். அப்போது இதுபோல கேள்வியெழுப்பப்பட்டதா?

ஆளுநர் வழக்கம்போல அரசுக்கு குடைச்சல் கொடுக்க இந்தத் தருணத்தைப் பயன்படுத்துகிறார். அவ்வளவுதான்,” என்கிறார் ப்ரியன்.

ஆளுநர் இணை அரசு நடத்த விரும்புகிறாரா?

இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.கவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, தமிழகத்தில் இணை அரசு ஒன்றை நடத்த ஆளுநர் விரும்புவதாக குற்றம் சாட்டியிருக்கிறார்.

சைலேந்திர பாபு ஐபிஎஸ்

பட மூலாதாரம், SYLENDRA BABU

“எந்தவித சர்ச்சைக்கும் இடம்கொடுக்காமல் பணியாற்றிய ஓய்வுபெற்ற டிஜிபி சைலேந்திரபாபுவை, தேர்வாணையத்தின் புதிய தலைவராக நியமனம் செய்து கோப்புகளை அனுப்பினோம். அதை ஏற்க ஆளுநர் மறுக்கிறார் என்றால், ஏதோ அரசியல் செய்ய விரும்புகிறார் என்றுதான் தோன்றுகிறது.

இது கண்டனத்திற்குரியது. சமூகநீதியின் அடிப்படையில் இதுவரை எந்த சமூகத்தைச் சார்ந்தவர்கள் நியமிக்கப்படவில்லையோ, அந்த சமூகத்தைச் சார்ந்தவரை தலைவராக தமிழ்நாடு அரசு நியமித்தது.

நியமனம் குறித்து விளக்கம் அளித்த பிறகும் ஆளுநர் குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறார். தனது உள்நோக்கம் என்ன என்பதை ஆளுநர் விளக்க வேண்டும். தமிழக மக்களை சீண்டிப் பார்க்க நினைக்கிறார். திட்டமிட்டு ஒரு சதியை, குழப்பத்தை உருவாக்க ஆளுநர் செயல்படுகிறார்.

ஜெயலலிதா இருந்தபோது அரசியல்வாதிகளை தலைவராக நியமித்தார். ஆனால், நாங்கள் தி.மு.கவை சார்ந்தவர்களை நியமிக்கவில்லை. நாங்கள் ஓய்வுபெற்ற அதிகாரியைத்தான் நியமித்தோம்,” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார் ஆர்.எஸ். பாரதி.

இந்த நியமனங்களுக்கு ஒப்புதல் அளிக்கவிட்டால், இதை எப்படி எதிர்கொள்ள வேண்டுமோ அப்படி எதிர்கொள்வோம் எனவும் தெரிவித்தார் ஆர்.எஸ். பாரதி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »