Press "Enter" to skip to content

பொது சிவில் சட்டம்: இந்து – முஸ்லிம் சட்டங்கள் வேறுபடுவது எங்கே? வாரிசுரிமை யாருக்கு?

பட மூலாதாரம், Getty Images

2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் பொது சிவில் சட்டம் கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திவருகிறது. இந்திய சட்ட ஆணையம் இது குறித்து அரசியல் கட்சியினர், மத அமைப்புகள் மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்டது. பாஜக ஆட்சி நடக்கும் உத்தராகாண்ட் மாநில அரசும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஒரு குழுவை அமைத்து ஆய்வு செய்துவருகிறது. இந்த ஆய்வறிக்கை விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜுன் மாதம் கட்சியினரிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோதியும், பொது சிவில் சட்டம் குறித்துப் பேசினார். ஒரே வீட்டில் இரண்டு பேருக்கு இரண்டு சட்டங்கள் அமல்படுத்தப்பட்டால் அந்த வீடு ஒழுங்காகச் செயல்படமுடியுமா என்று அப்போது அவர் கட்சியினரிடையே கேள்வி எழுப்பினார்.

முத்தலாக்கை அவரது அரசு தடை செய்தது பற்றியும் குறிப்பிட்டார். 2017ம் ஆண்டு முத்தலாக்கை தடை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், மத்திய பாஜக அரசு ஒரு படி மேலே சென்று முத்தலாக் ஒரு குற்றம் என அறிவித்தது. முத்தலாக்கைக் கடைபிடிக்கும் இஸ்லாமிய ஆண் ஒருவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் ஒரு சட்டத்தையும் மத்திய அரசு 2019ம் ஆண்டு கொண்டுவந்தது.

இருப்பினும் முத்தலாக்கால் பாதிக்கப்படும் பெண்களுக்கு எந்த வித பணப்பலனும் அறிவிக்கப்படாததாலும், முத்தலாக்கைப் பயன்படுத்திய கணவர் சிறைக்குச் சென்ற பின் ஒரு முஸ்லிம் பெண் ஆதரவற்றுத் தவிக்கும் நிலை ஏற்படும் என்பதாலும், மத்திய அரசின் இந்தச் சட்டத்துக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் இந்து மதத்தைச் சேர்ந்த ஆண்களுக்கு இது போல் தண்டனை எதுவும் விதிக்கப்படுவதில்லை.

பொது சிவில் சட்டம்: இந்து -  முஸ்லிம் சட்டங்கள் பெருமளவில் வேறுபடும் போது அவற்றுக்கிடையே உள்ள ஒற்றுமைகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

பொது சிவில் சட்டம் திருமணம், மணமுறிவு, தத்தெடுத்தல், வாரிசுரிமை போன்ற பல்வேறு குடும்ப நிகழ்வுகள் குறித்து தனித்தனிச் சட்டங்கள் இருப்பதை மாற்றியமைத்து, அனைத்து சமூகங்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒரு பொதுச் சட்டம் இயற்றப்படவேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டது.

ஆனால், பொது சிவில் சட்டம் எப்படி இருக்கும் என்பது குறித்த சட்டமுன் வரைவு எதுவும் இதுவரை வெளியாகாத நிலையில், ஒரே ஒரு பொதுச் சட்டம் எப்படி முற்றிலும் வேறுபட்ட சமூகங்கள் ஏற்கத்தக்க வகையில் இருக்கும் என நிபுணர்கள் கேள்வி எழுப்புகின்றனர். “இந்து, முஸ்லிம் போன்ற சமூகங்களை வழிநடத்தும் தனிநபர் சட்டங்கள் முற்றிலும் வெவ்வேறானவை,” என டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் மாளவிகா ராஜ்கோடியா தெரிவிக்கிறார்.

இப்போது, நம்மிடையே எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வி என்னவென்றால், இந்த வேறுபாடுகள் எப்படி இந்த சட்டத்தின் மூலம் சமன் செய்யப்படும் என்பதே ஆகும். ஒரு சமூகத்தின் தனிநபர் சட்டம் மற்றொரு சமூகத்தின் மீது திணிக்கப்படுமா? அல்லது அரசு ஒரு சமத்துவமான புதிய தனிநபர் சட்டத்தை உருவாக்கி நடைமுறைப்படுத்துமா?

திருமணம் மற்றும் மணமுறிவு

இந்த இரு சமூகங்களையும் வழிநடத்தும் சில தனிநபர் சட்டங்கள் குறித்து பார்ப்போம்.

இந்து சட்டங்களின் படி, திருமணம் என்பது ஒரு புனிதமான சடங்காகக் கருதப்படும் நிலையில், முஸ்லிம்களிடையே அது ஒரு உடன்படிக்கை மட்டுமே ஆகும். அதனால் மணமுறிவு என்பது திருமண உறவுக்குள் கட்டப்பட்டதாக இருக்கிறது. அதே நேரம் பல்வேறு நிபுணர்களின் கூற்றுப் படி, இந்துகளின் திருமண சடங்கு என்பதும் ஒரு உடன்படிக்கையை ஒட்டியே அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது.

“மணமகனும், மணமகளும் திருமணம் செய்துகொள்ளும் தகுதியைப் பெற இருவரும் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் குறித்து இந்து திருமணச் சட்டம் கூறுகிறது,” என்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த ஸ்கூல் ஆஃப் இந்தியா பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்குட்பட்ட நேஷனல் லா ஸ்கூலின் பேராசிரியர் சரசு எஸ்தர் தாமஸ். “மேலும், மணமுறிவுக்கான அடிப்படைக் காரணங்களும் குறிப்பிடப்பட்டுள்ளதால் இந்து சமூகத்தின் திருமணம் என்பது ஒரு சடங்கு அல்ல.”

திருமணம் குறித்த சட்டங்களில் இது போல் வேறுபாடுகள் இருப்பதைக் கடந்து, யாரை யாருக்குத் திருமணம் செய்து வைப்பது என்பது குறித்தும் இரு சமூக சட்டங்களும் பெரும் அளவில் வேறுபடுகின்றன.

இந்து மத சட்டம், அது தனியாக எழுதப்படாவிட்டாலும், பல்வேறு சமூகங்களில் நிலவும் மாறுபட்ட நடைமுறைகளை ஏற்றுக்கொள்கிறது. எனவே, சில வகையான திருமணங்கள், உதாரணமாக அண்ணன் – தங்கை, அத்தை அல்லது மாமாவை திருமணம் செய்வது போன்ற நடைமுறைகள் ஏற்றுக்கொள்ளப்படாதவை என இந்து திருமணச் சட்டம் கூறினாலும், தென்னிந்தியாவில் தாய் மாமனை ஒரு பெண் திருமணம் செய்துகொள்வது இன்று வரை ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

ஆனால் முஸ்லிம்களின் சட்டம் ஒன்றுவிட்ட சகோதரர்கள் திருமணம் செய்துகொள்வதை அனுமதிக்கிறது.

முஸ்லிம்களின் திருமணம் ஒரு உடன்படிக்கை என கருதப்படும் நிலையில் மணமுறிவு என்பது மிகவும் எளிமையானது. இருப்பினும், இயற்கையாக இதுவும் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு என்றே கருதப்படுகிறது. முத்தலாக் தடை செய்யப்பட்டிருந்தாலும், வேறு வடிவங்களில் ஒருதலைப்பட்சமாக மணமுறிவை அனுமதிக்கும் நடைமுறைகள் இன்னும் செயலில் உள்ளன. ஆனால், இதுபோன்ற நடைமுறைகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் நடந்துவருகின்றன.

பொது சிவில் சட்டம்: இந்து -  முஸ்லிம் சட்டங்கள் பெருமளவில் வேறுபடும் போது அவற்றுக்கிடையே உள்ள ஒற்றுமைகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

தத்தெடுத்தல் மற்றும் பாதுகாவலர் நடைமுறை

இந்து மதச்சட்டங்களின் படி, ஒரு தத்தெடுக்கப்பட்ட குழந்தை என்பது தத்தெடுத்தவரின் சொந்தக் குழந்தைக்குச் சமமானது. ஆனால், முஸ்லிம்களின் சட்டப்படி பார்த்தால், தத்தெடுத்தல் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அண்மைக்காலங்களில், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் கவனிப்பு குறித்த மத சார்பற்ற சட்டம் 2015-ன் படி, முஸ்லிம்களும் குழந்தைகளைத் தத்தெடுக்கும் உரிமைகள் அளிக்கப்பட்டுள்ளன.

மைனர்களுக்கான பாதுகாவலராக யார் இருக்கலாம் என்பதிலும் இரு மதச்சட்டங்களும் முழுமையாக மாறுபடுகின்றன. இந்து மதச் சட்டத்தின்படி, எப்போதும் ஒரு மகன் அல்லது திருமணமாகாத மகளுக்கு ஒரு தந்தை தான் இயற்கையான பாதுகாவலர் என்று சொல்லப்பட்டுள்ளது. இதே போல் திருமண பந்தத்துக்கு மீறிய உறவில் பிறந்த மகன் அல்லது மணமாகாத மகளுக்கு அவர்களுடைய தாய் தான் இயற்கையான பாதுகாவலர் என சட்டம் தெளிவாகக் குறிப்பிடுகிறது.

இருப்பினும் முஸ்லிம்களின் சட்டம் தெளிவான ஒரு நடைமுறையைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் இந்திய சட்ட ஆணையம் அமல்படுத்தியுள்ள நடைமுறையின்படி, ஒரு குழந்தையின் பாதுகாவலர் யார் எனக்கேட்கும் போது, அந்தக் குழந்தையின் மீது யார் மிகுந்த அக்கறை வைத்துள்ளார்களோ, அவர்கள் தான் பாதுகாவலராக இருக்க முடியும்.

வாரிசுரிமை

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் மிகப்பெரும் சவாலாக இருக்கப்போவது வாரிசுரிமை தான். இந்து கூட்டுக்குடும்ப முறையில், மூதாதையர் சொத்துகளை அந்த குடும்ப உறுப்பினர்கள் வைத்திருக்கும் போது, சில வரி விலக்குகள் அமலில் உள்ளன. மற்ற எந்த மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் அது போன்ற சலுகைகள் இல்லை.

இதை கவனத்தில் கொள்ளும்போது, இந்து கூட்டுக்குடும்பங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகைகள் பிற மதங்களைச் சேர்ந்த கூட்டுக்குடும்பங்களுக்கும் அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அல்லது இந்த சலுகைகளை அரசு நீக்கிவிடுமா என்ற கேள்வியும் நம் முன் நிற்கிறது. இந்தியாவில் முதல் மாநிலமாக கேரளா கடந்த 1975ம் ஆண்டு இந்த சலுகைகளை நீக்கிவிட்டது. அதன் பின் வேறு எந்த மாநிலத்திலும் இந்த சலுகைகள் நீக்கப்படவில்லை. அதே நேரம் இது போன்ற சலுகையால் அரசு கஜானாவுக்கு பெரும் இழப்பு எற்படுவதால் இந்த முறையை ஒழிக்கவேண்டும் என சட்ட ஆணையம் 2018ம் ஆண்டு பரிந்துரைத்தது.

இந்து கூட்டுக்குடும்பம் என்பதற்கு அப்பாற்பட்டு பல்வேறு மத சட்டங்களில் வாரிசுரிமை என்பது பெருமளவில் வேறுபடுகிறது. “வாரிசுரிமை என்பதும் இந்து மற்றும் முஸ்லிம் மத சட்டங்களுக்கு இடையே பெரிய அளவில் வேறுபடுகிறது,” என ராஜ்கோடியா தெரிவித்தார்.

முஸ்லிம் குடும்ப உறுப்பினர்களுக்கு அளிக்கப்படும் வாரிசுரிமை விகிதங்கள் இந்து மத வாரிசுரிமை விகிதங்களில் இருந்து மாறுபடுகின்றன என்றார் அவர்.

பொதுவாக முஸ்லிம்களின் சட்டப்படி, ஒரு ஆணுக்கு வழங்கப்படும் சொத்தில் பாதியளவு ஒரு பெண்ணுக்கு வழங்கப்படுகிறது. அதே நேரம் முஸ்லிம்களின் தனிப்பிரிவுகளில் கூறப்பட்டுள்ள சட்டங்களின் படி குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வாரிசுரிமை அளிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக சன்னி முஸ்லிம்களின் சட்டப்படி, வாரிசுகள் 12 பிரிவுகளில் வகைப்படுத்தப்படுகின்றனர். இதில் சகோதரர்கள் மற்றும் சகோதரிகளும் அடக்கம். இந்து மதச்சட்டத்திலும் 2005ம் ஆண்டு வரை மகள்களுக்கு மூதாதையர் சொத்து களில் எந்த உரிமையும் இல்லை.

மேலும், ஒரு ஆண் வாரிசின் திருமண நிலை அவரது வாரிசுரிமையை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை. ஆனால் ஒரு பெண்ணின் திருமண நிலை காரணமாக அவருடைய வாரிசுரிமை சில நேரங்களில் மாறுபடுகிறது. ஒரு பெண்ணின் சொத்துகளைப் பெறுவதில், அவருடைய பெற்றோர்களுடன் ஒப்பிடுகையில், கணவரின் வாரிசுகள் முன்னுரிமை பெற்றுள்ளனர். இது பாகுபாடு காட்டும் வகையில் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.

பொது சிவில் சட்டம்: இந்து -  முஸ்லிம் சட்டங்கள் பெருமளவில் வேறுபடும் போது அவற்றுக்கிடையே உள்ள ஒற்றுமைகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

சமூகம் சார்ந்த சட்டங்களுக்கு இடையே நிலவும் வேறுபாடுகள்

பொது சிவில் சட்டத்துக்கு எதிரான இன்னொரு முக்கியமான சவால் என்னவென்றால், இந்து, முஸ்லிம் சமூகங்களுக்குள்ளேயே சில வேறுபாடுகள் நிலவுவது தான்.

“இந்து மதத்தில் பெரும்பாலான சட்டங்கள் எழுதப்பட்ட சட்டங்கள் அல்ல,” என்கிறார் மருத்துவர் தாமஸ்.

“இந்துகளை எடுத்துக்கொண்டால் திராவிடம், மிதாச்சாரம், தாயபாகம் என பல்வேறு பிரிவுகள் உள்ளன. இந்த சமூகங்கள் கூட்டுக்குடும்பங்களில் சொத்துகளைப் பிரித்துக் கொள்வது குறித்து தங்களுக்குள்ளேயே தனித்தனிச் சட்டங்களை வைத்துள்ளன. மேலும், திருமண முறைகள் உள்ளிட்ட பல்வேறு குடும்ப நடைமுறைகளுக்கும் இந்த சமூகங்களுக்குள்ளேயே தனித்தனிச் சட்டங்கள் உள்ளன.”

இதே போல் முஸ்லிம் சமூகத்திலும் தனித்தனிச் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக ஷியா மற்றும் சன்னி பிரிவு முஸ்லிம்களுக்கு இடையே திருமணம், குடும்ப வாழ்க்கை குறித்து வெவ்வேறு சட்ட நடைமுறைகள் உள்ளன. இந்த இருபிரிவினருக்குள்ளும் சிறுசிறு பிரிவுகள் உள்ளன. உதாரணமாக சன்னி முஸ்லிம்கள் ஹனாஃபி அல்லது மாலிக் பிரிவில் ஏதாவது ஒன்றைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்.

“இந்த பிரிவினருக்கு இடையே நிலவும் வேறுபாடுகளை மாற்றியமைப்பதும், ஒத்திசைப்பதும் மிகப்பெரிய பணி,” என்றார் ராஜ்கோடியா.

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் அரசு என்ன செய்யப்போகிறது என்பதைப் பொறுத்து அடிப்படையில் பல சவால்களை எதிர்கொள்ளவேண்டிய நிலை உள்ளது.

அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்ட ஆணையத்துக்கு தனது பரிந்துரையை அளித்துள்ளது.

முஸ்லிம்களின் குடும்ப நடைமுறைகள் அனைத்தும் அரசமைப்புச் சட்டத்தின் விதிகள் 25 மற்றும் 26ன் கீழ் கடுமையாகக் கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும் ஒவ்வொரு குடிமகனுக்கும் எந்த ஒரு மதத்தையும் பின்பற்றும் உரிமையையும், அந்த மதத்தின் சட்ட திட்டங்களை ஏற்றுக்கொள்ளும் உரிமையும் சில விதிவிலக்குகளுக்கு உட்பட்டு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தனது பரிந்துரையில் கூறியுள்ளது.

மேலும், “இந்தச் சட்டங்களை மாற்றியமைத்தால் மக்களின் கலாச்சார அடையாளங்கள் அழிந்து போகும் ஆபத்து இருக்கிறது என்பதை நாம் மறுக்க முடியாது,” என்றார் ராஜ்கோடியா. அரசமைப்புச் சட்ட விதி 29ன் கீழ் சிறுபான்மையினர் அவர்களுடைய கலாசாரம் மற்றும் பழக்கவழக்கங்களைப் பின்பற்றும் உரிமை அளிக்கப்பட்டுள்ளது. எனவே தற்போதுள்ள நடைமுறைகளை மாற்றியமைக்கும் போது, அது பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டால் மிகப்பெரும் ஆபத்தில் முடிவடையும் என்றார் அவர்.

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது அரசியலமைச் சட்டம் அளித்துள்ள பல்வேறு உரிமைகளுக்கு எதிரானதாக அமைந்துவிடும் ஆபத்து உள்ளது. “ஒரு சமூகத்தின் சட்டதிட்டங்களை மற்றொரு சமூகத்திலும் அமல்படுத்தினால் அது கலாசாரத்தைப் பாதிக்கும் என்பது மட்டுமல்லாமல் பாகுபாட்டையும் ஏற்படுத்தும்,” என அரசமைப்புச் சட்ட நிபுணரும், பேராசிரியருமான தருணாப் கைதான் கூறுகிறார்.

இந்த பொதுமைத் தன்மை என்பது முழுக்கமுழுக்க மத சார்பற்ற முறையில் அமல்படுத்தப்பட்டால் அது நிச்சயமாக எந்த ஒரு மதத்தையும் பாதிக்காது என்றும், அப்போது அந்தச் சட்டத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் விளக்கினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »