Press "Enter" to skip to content

சந்திரயான்-3: நிலவில் 14 நாட்கள் என்ன செய்யும்? நிலா விண்வெளி பயணத்திற்கான தளமாகுமா?

ஜூலை 14ஆம் தேதி மதியம் 2:35 மணிக்குத் தொடங்கிய சந்திரயான்-3இன் சாதனைப் பயணம் 40 நாட்கள் நெடும்பயணத்திற்குப் பிறகு நிலாவில் இன்று மாலை 6:04 மணிக்குத் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் தொழில்நுட்பக் கோளாறுகளால் நிலாவில் மோதி நொறுங்கியது. இதையடுத்து இஸ்ரோ மீது இந்தியா மட்டுமின்றி மொத்த உலகின் கண்களும் முற்றிலுமாகப் பதிந்துவிட்டன. சந்திரயான்-3 மீதான எதிர்பார்ப்பு எகிறிவிட்டது.

சரி, இஸ்ரோவுக்கு இருக்கும் இந்த அழுத்தங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் சாவகாசமாகச் சென்றுகொண்டிருக்கும் விக்ரம் லேண்டர் நிலாவில் வெற்றிகரமாகத் தரையிறங்கிவிட்டது என வைத்துக்கொள்வோம். அடுத்து என்ன செய்யும்?

சந்திரயான்-3 நிலாவில் செய்யப்போகும் ஆய்வுகள், எதிர்கால விண்வெளிப் பயணங்களுக்கே பயனளிக்கும் என்று கூறுகிறார் சென்னையிலுள்ள பிர்லா கோளரங்கத்தின் இயக்குநர் லெனின்.

சந்திரயான்-3 வெற்றிகரமாகத் தரையிறங்கிய பிறகு என்ன மாதிரியான ஆய்வுகளை மேற்கொள்ளும், அந்த ஆய்வுகள் எப்படியெல்லாம் பயனளிக்கும் என்பவை குறித்து இங்கு விரிவாகக் காண்போம்.

சந்திரயான்-3 தரையிறங்கிய பிறகு என்ன நடக்கும்?

நிலாவில் தரையிறங்கும் விக்ரம் லேண்டர் முதலில் என்ன செய்யும்?

நிலாவில் வெற்றிகரமாகத் தரையிறங்கும் விக்ரம் லேண்டர் முதலில் ஒன்றுமே செய்யாமல் ஓய்வெடுக்கும்.

ஆம், சில மணிநேரங்களுக்கு ஒன்றுமே செய்யாது. நிலாவின் தரைப்பரப்பில் இருந்து 10 மீட்டர் உயரம் வரை செயல்படும் விக்ரம் தரையிறங்கி கலனின் ராக்கெட்டுகள் அந்த உயரத்தை அடைந்ததும் நிறுத்தப்படும்.

அதற்குப் பிறகு, அந்த 10 மீட்டர் உயரத்தில் இருந்து தொப்பென கல் விழுவதைப் போல் தரைப்பரப்பில் விழும். அப்படி விழும்போது எழும் புழுதிகள் அடங்கும் வரை விக்ரம் தரையிறங்கி கலன் எதுவும் செய்யாமல் அமைதியாக ஓய்வெடுக்கும்.

அந்தப் புழுதி முழுவதும் அடங்கிய பிறகு, மென்மையாக அந்த தரையிறங்கி கலன் தனது வயிற்றுக்குள் வைத்து ஒரு குழந்தையைப் போல் பாதுகாத்து நிலா வரைக்கும் கொண்டு வந்த ரோவர் எனப்படும் ஊர்திக்கலனை வெளியே அனுப்பும்.

லேண்டரில் ஒரு சாய்வுக்கதவு திறந்து, அதன் வழியே ஊர்திக்கலன் சறுக்கிக்கொண்டு வெளியே வரும்.

இங்கே இந்த தரையிறங்கிக் கலன், ஊர்திக்கலன் இரண்டையும் தாய் கலன், சேய் கலன் என விவரிக்கிறார் விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானியான த.வி.வெங்கடேஸ்வரன்.

“விக்ரம் தரையிறங்கிக் கலன் வெற்றிகரமாகத் தரையிறங்கிய சில மணிநேரங்கள் கழித்து அதன் சேய் கலமான ரோவர் வெளியே வரும். இதுவும் வெற்றிகரமாக நடந்து முடியும்போதுதான் இந்த முயற்சியில் இஸ்ரோ முழு வெற்றி பெற்றதாக அர்த்தம்.”

தாய் கலனின் கதவு திறக்கப்படாமலே போக வாய்ப்புள்ளதா?

சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கிய பிறகு என்ன நடக்கும்?

பட மூலாதாரம், ISRO

சந்திரயான்-2 திட்டம் தோல்வியடைந்தது. ஆனால், அந்தத் திட்டம் இஸ்ரோவுக்கு பல படிப்பினைகளை வழங்கியது. அந்தப் படிப்பினைகளை அடிப்படையாக வைத்து இந்தத் திட்டத்தில் பல புதுமைகளைச் செய்துள்ளது.

அதன் காரணமாக வெற்றிக்கு இந்த முறை அதிக வாய்ப்புள்ளது என்றாலும், அந்தக் கதவு திறக்கப்படாமல் போவதற்கும் வாய்ப்புள்ளது என்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன்.

“தரையிறங்கி கலன் கீழே விழும்போது கட்டமைப்பு ரீதியாக ஏதாவது சேதம் ஏற்பட்டால், கதவு திறக்கப்படாமல் போவதற்கும் வாய்ப்புள்ளது. அத்தகைய பிரச்னைகள் வரவே வராது எனச் சொல்லவே முடியாது.

ஆனால், பெரும்பாலும் இத்தகைய வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு, பல இடர்களைச் சமாளிக்கும் வகையில்தான் தரையிறங்கி கலன் அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் 100 சதவீதம் எந்தப் பிரச்னையும் வராது என உறுதியாகச் சொல்ல முடியாது,” என்கிறார் அவர்.

இருப்பினும், இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூற்றுப்படி தரையிறங்கி கலனில் என்ன மாதிரியான பிரச்னைகள் வரக்கூடும் என்பதை ஆராய்ந்து அதற்கேற்ப செயல்படும் வகையில் இது திட்டமிடப்பட்டு இருப்பதால் தோல்விக்கான சதவீதம் மிகக் குறைவு.

தாய் கலனில் இருந்து ரோவர் வெளியே வந்துவிட்டதை எப்படி உறுதி செய்வது?

சந்திரயான்-3: நிலவில் தரையிறங்கிய பின் செய்யப் போவது என்ன?

பட மூலாதாரம், ISRO

ஊர்திக்கலமான ரோவர் அதன் தாய் கலமான லேண்டரில் இருந்து வெளியே வந்துவிட்டது என்பதை அறிந்துகொள்ள இஸ்ரோ செய்துள்ள வழி என்ன தெரியுமா?

“ஊர்திக்கலன், தரையிறங்கி கலனின் வயிற்றிலிருந்து வெளியே வந்ததும் அதன் தாய்க்கலனை படம்பிடிக்கும். அதேபோல, தாய் கலமான தரையிறங்கி கலன் அதன் சேய் கலமான ரோவரை படம் பிடிக்கும்.

இப்படி, தாயும் சேயும் மாற்றி மாற்றி, ஒன்றையொன்று படம்பிடித்து அனுப்பும். அதன்மூலம்தான் நாம் தாய், சேய் இருவரும் நலம் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்,” என்று விளக்குகிறார் த.வி.வெங்கடேஸ்வரன்.

இந்த இரண்டு புகைப்படங்களையும் காண்பதற்குத்தான் இந்தியா மட்டுமின்றி உலகமே இன்று காத்துக்கொண்டிருக்கிறது.

இந்தத் திட்டத்தில் இஸ்ரோவுக்கு மூன்று முக்கிய நோக்கங்கள் உள்ளன. அதில் முதலாவது நோக்கம் நிலாவின் தரைப்பரப்பில் மென்மையாகத் தரையிறங்குவது. இது வெற்றி பெற்ற பிறகு என்ன நடக்கும்?

இரண்டாவது நோக்கம் ஊர்திக்கலன் வெளியே வந்த பிறகு நடக்கும். அந்த ஊர்திக்கலன் தான் வெளியே வந்துவிட்டதை உறுதி செய்த பிறகு, அது தரையிறங்கிய பகுதியில் உலா வரவேண்டும்.

இதுவும் வெற்றிகரமாக நடந்த பிறகுதான் இந்தத் திட்டத்தை முன்னெடுத்ததன் முதன்மையான நோக்கத்தை தாய், சேய் கலன்கள் முன்னெடுக்கும்.

அதாவது, நிலாவின் மேற்பரப்பில் இஸ்ரோவின் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும். அதற்காக மொத்தம் ஏழு வகையான கருவிகள் உந்துவிசை கலன், தரையிறங்கி கலன், ஊர்திக்கலன் ஆகிய மூன்றிலும் பொருத்தப்பட்டுள்ளன.

நிலாவில் சந்திரயான்-3 என்ன ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும்?

சந்திரயான்-3 தரையிறங்கிய பிறகு என்ன நடக்கும்?

பட மூலாதாரம், ISRO

நிலாவின் தென் துருவப்பகுதியில் 70 டிகிரி அட்சரேகையில் லேண்டர் தரையிறங்குகிறது. அந்தப் பகுதியில்தான் சந்திரயான்-3 தனது ஆய்வுகளைச் செய்யப் போகிறது.

இந்த ஆய்வுகளில், சந்திரயான் அனுப்பிய தரையிறங்கி கலன், ஊர்திக்கலன், உந்துவிசைக் கலன் மட்டுமின்றி சந்திரயான்-2இன் ஆர்பிட்டரும் பெரும் பங்கு வகிக்கப் போகின்றது.

நிலாவின் மேற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்ளப் போவது என்னவோ தாய், சேய் கலன்கள் மட்டுமே. ஆனால், அந்தத் தரவுகளை அனுப்புவதில் தரையிறங்கி கலன், சந்திரயான்-2இன் ஆர்பிட்டர் ஆகியவற்றுக்குப் பெரும் பங்கு உண்டு.

“சேய் கலமான ரோவர் மேற்கொள்ளும் ஆராய்ச்சிகளின் தரவுகளை தாய் கலமான லேண்டர் பெற்று அதை பூமிக்கு அனுப்பும். ஒருவேளை லேண்டர் மூலம் தரவுகள் கிடைக்காமல் போனால் சிக்கலாகிவிடும்.

அதனாலேயே லேண்டர் மூலம் ஆர்பிட்டருக்கும் தரவுகளை அனுப்பி, அதன் மூலமாகவும் அந்தத் தரவுகளை பூமிக்கு அனுப்பும் வகையில் இஸ்ரோ திட்டமிட்டுள்ளது,” என்று விளக்குகிறார் சென்னையில் அமைந்துள்ள பிர்லா கோளரங்கத்தின் இயக்குநர் லெனின்.

அதாவது, “இரண்டு கட்ட பாதுகாப்பு. ஏதேனும் ஒரு வழியில் தரவுகள் கிடைக்கவில்லை என்றாலும் இன்னொரு வசதியின் மூலம் தரவுகள் இஸ்ரோவுக்கு கிடைத்துவிடும். அந்த ஆராய்ச்சித் தரவுகள் மின்காந்த அலைகளாக மாற்றப்பட்டு பூமிக்கு அனுப்பப்படும்,” என்கிறார் லெனின்.

உந்துவிசைக் கலன் நிலாவின் நீள்வட்டப் பாதையில் சுற்றிக்கொண்டே, விண்வெளியில் இருக்கக்கூடிய மற்ற புறக்கோள்களைக் கண்டறிவது போன்ற ஆய்வுகளை மேற்கொள்ளும்.

நிலாவை சுமார் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை இது சுற்றி வரும் என்று இஸ்ரோ கணித்துள்ளது.

உந்துவிசைக் கலன் சேகரிக்கும் தகவல்கள், “எதிர்காலத்தில் உயிர்கள் வாழ ஏதுவான பூமியைப் போன்ற அமைப்புகளைக் கொண்ட புறக்கோள்களைக் கண்டறிவதில் பங்கு வகிக்கும்,” என்று கூறுகிறார் லெனின்.

இவைபோக, லேண்டரும் ரோவரும் மேலும் பல ஆய்வுகளை நிலாவின் தரைப்பரப்பில் மேற்கொள்ளப் போகின்றன.

விக்ரம் லேண்டர் நிலாவில் என்னவெல்லாம் செய்யப் போகிறது?

சந்திரயான்-3

பட மூலாதாரம், Getty Images

தாய் கலமான லேண்டரில் மொத்தம் நான்கு கருவிகள் உள்ளன. அந்தக் கருவிகள்

  • ரம்பா(RAMBHA) எனச் சுருக்கமாக அழைக்கப்படும் கருவி. அதன் முழுப் பெயர் Radio Anatomy of Moon Bound Hypersensitive Ionosphere and Atmosphere.
  • சேஸ்ட் (ChaSTE) எனச் சுருக்கமாக அழைக்கப்படும் கருவி. அதன் முழுப் பெயர், Chandra’s Surface Thermo physical Experiment
  • ஐ.எல்.எஸ்.ஏ என அழைக்கப்படும் இந்தக் கருவியின் முழுப் பெயர் Instrument for Lunar Seismic Activity
  • எல்.ஆர்.ஏ. – இதன் முழுப் பெயர் LASER Retroreflector Array

முதல் கருவியான ரம்பா, நிலாவில் வெப்பம் அதிகமாக இருக்கும் மண் பகுதியில் நடக்கும் மாற்றங்களை ஆய்வு செய்யும்.

இதுகுறித்து விளக்கிய லெனின், “சராசரியாக பொருட்களை நாம் திடம், திரவம், வாயு என மூன்றாகப் பிரிக்கலாம். அந்தப் பொருட்களை இன்னும் அதிகமாக வெப்பமூட்டினால் அவை ப்ளாஸ்மா என்ற மற்றொரு நிலையை எட்டும்.

அதாவது, அந்தப் பொருளில் இருக்கும் மின்னணுக்கள் தப்பித்து அதீத கொதிநிலையில் இருக்கும். அந்த நிலையில் அதுவொரு தனி அடுக்காக இருக்கும்,” என்று விளக்கினார்.

நிலாவில் வளிமண்டலம் இல்லையென்பதால் பகலில் அதீத வெப்பநிலையுடனும் இரவில் உறைபனிக் குளிரோடும் இருக்கும். அந்த நிலையை இந்தக் கருவி ஆய்வு செய்யும். நிலாவில் மண் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்து மண்ணில் ஏற்பட்டுள்ள இத்தகைய மாற்றங்களை இந்தக் கருவி ஆய்வு செய்யும்.

இஸ்ரோ தலைவர் சோம்நாத்

பட மூலாதாரம், ISRO

இவற்றை ஆய்வு செய்வதன் மூலம், அதில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை வைத்து அதன் வளிமண்டலம் சாதாரணமாக உள்ளதா அல்லது ஐயனிகள் ஆக்கப்பட்ட வளிமண்டலமாக உள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். அதுமட்டுமின்றி இந்தத் தரவுகள் நிலவின் வயதைக் கணக்கிட நமக்கு உதவும் என்கிறார் லெனின்.

இரண்டாவது கருவியான சேஸ்ட், நிலாவில் உள்ள பொருட்கள் என்ன நிலையில் உள்ளன, அங்குள்ள வெப்பத்தைத் தாங்கும் தன்மை கொண்டதா அல்லது அந்த வெப்பத்தில் உடையக்கூடிய பொருட்களாக உள்ளனவா என்பது போன்ற தகவல்களைக் கண்டறியும். அதோடு, துருவப் பகுதியில் வெப்பத்தால் அந்த மண்ணில் ஏற்படும் விளைவுகளை இதன்மூலம் அறிய முடியும்.

அதோடு, மண் கெட்டியாக உள்ளதா, துகளாக உள்ளதா அல்லது தூசுகளாக உள்ளதா என்பன போன்ற விஷயங்களையும் அது ஆராயும்.

மூன்றாவது கருவியான ஐ.எல்.எஸ்.ஏ, நிலாவின் மேற்பரப்பில் இருக்கும் நில அதிர்வுகளை ஆராயும். பூமியைப் போலவே நிலாவிலும் நில அதிர்வுகள் உள்ளனவா, இப்போது இல்லையென்றால் முன்பு இருந்தனவா என்பன போன்ற தரவுகளைச் சேகரிக்கும்.

சந்திரயான்-3 செய்யும் ஆய்வுகள் நிலாவை விண்வெளிப் பயணத்திற்கான தளமாக மாற்றவே உதவுமா?

இத்தகைய ஆய்வுகளின் மூலம் எதிர்காலத்தில் நிலாவில் கட்டமைப்புகளை ஒருவேளை மனிதன் உருவாக்கினால், அந்த நிலம் கட்டுமானங்களைத் தாங்கக்கூடிய திறன் கொண்டவையா என்பதை அறிய உதவும் என்கிறார் லெனின். மேலும், அங்குள்ள நில அதிர்வுகளின் தன்மையை உணர்ந்து அதற்கு ஏற்ப கட்டுமானங்களை வடிவமைக்கவும்கூட இது உதவும் என்கிறார் அவர்.

அதுமட்டுமின்றி, நிலாவின் உட்பகுதி மற்றும் மேல்பகுதியின் கட்டமைப்பு எப்படிப்பட்டது, அவை இரண்டுக்குமான வேறுபாடுகள் என்ன, அவற்றின் தன்மை என்ன என்பனவற்றையும் இந்தக் கருவி ஆராயும்.

நான்காவது கருவியான எல்.ஆர்.ஏ, நிலாவின் சுழற்சியை ஆய்வு செய்யும். நிலா பூமியைச் சுற்றி வரும்போது அதன் இயக்கம் எப்படி உள்ளது, அந்த இயக்கம் சீராக உள்ளதா இல்லையா, அதிர்வுகளுடனேயே சுற்றுகிறதா என்ற தகவல்களைச் சேகரிக்கும்.

பூமியிடமிருந்து நிலா சிறிது சிறிதாக விலகிச் செல்வதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். அதுகுறித்தும் இந்தக் கருவி ஆய்வு செய்யும்.

சந்திரயான்-3 தரையிறங்கிய பிறகு என்ன நடக்கும்?

பட மூலாதாரம், ISRO

அதாவது லேண்டரில் ஒரு தகடு பொருத்தப்பட்டிருக்கும்; அந்தத் தகட்டில் பூமியில் இருந்து அனுப்பப்படும் லேசர் கதிர்வீச்சு எதிரொலித்து வரும். அதை வைத்து நிலவின் இயக்கத்தை விஞ்ஞானிகள் அளவிடுவார்கள்.

“இந்த மாதிரியாக அளப்பதன் மூலமாக அது பூமியில் இருந்து எவ்வளவு தொலைவில் இருக்கிறது, ஆண்டுக்கு எவ்வளவு தொலைவு விலகிச் செல்கிறது என்பன போன்ற தகவல்களைத் துல்லியமாகக் கண்டறிய முடியும்,” என்று விளக்கினார் த.வி.வெங்கடேஸ்வரன்.

ரோவர் மேற்கொள்ளப்போகும் ஆய்வுகள் என்ன?

எளிமையாகச் சொல்ல வேண்டுமெனில், சேய் கலமான ரோவர் நிலாவின் மண் மாதிரிகளை ஆய்வு செய்து தரைப்பரப்பின் தன்மை என்ன, வெப்பம் எந்த அளவுக்கு உள்ளது, தண்ணீர் உள்ளதா என்பன போன்ற தகவல்களைச் சேகரித்து அனுப்பும்.

இதில் இரண்டு கருவிகள் உள்ளன. அவை,

  • எல்.ஐ.பி.எஸ் எனப்படும் LASER Induced Breakdown Spectroscope
  • ஏ.பி.எக்ஸ்.எஸ் எனப்படும் Alpha Particle X-Ray Spectrometer

இயல்பாகவே ஒரு பொருளை உடைத்தால்தான் அதற்குள் என்ன இருக்கிறது என்பதை நம்மால் தெரிந்துகொள்ள முடியும். அதேபோல் ரோவர் மண்ணைக் குடைந்து அதிலிருந்து மாதிரிகளை எடுத்து, அதை லேசர் மூலம் உடைத்துப் பார்க்கிறது.

ஒரு கன கிராம் மண்ணை எடுக்கிறது என வைத்துக்கொண்டால், அதற்குள் என்னென்ன தனிமங்கள் உள்ளன என்பதை அதனால் கண்டறிய முடியும்.

இந்தச் செயல்முறையை தங்கத்துடன் ஒப்பிட்டு எளிதாகப் புரிய வைக்க முடியும்.

சந்திரயான்-3 செய்யும் ஆய்வுகள் நிலாவை விண்வெளிப் பயணத்திற்கான தளமாக மாற்றவே உதவுமா?

ஒரு கிராம் தங்கத்தை கடையில் கொண்டுபோய் கொடுத்தால், அதில் எவ்வளவு தங்கம் உள்ளது, எவ்வளவு செப்பு கலக்கப்பட்டுள்ளது என்பதைப் பிரித்துக் கணக்கிடுவார்கள். அதைக் கண்டறிய உதவுவதுதான் அலைமாலை அளவி எனப்படும் ஸ்பெக்ட்ரோமீட்டர் என்ற கருவி.

அதேபோன்ற கருவியைத்தான் நிலாவிலும் பயன்படுத்துகிறார்கள். ஊர்திக்கலன் நிலாவின் தரையைக் குடைந்து மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு செய்யும். அதன்மூலம் அந்த மாதிரிகளில் மெக்னீசியம், அலுமினியம், இரும்பு, சிலிகான், டைட்டானியம் என என்னென்ன தனிமங்கள் உள்ளன என்பதைக் கண்டுபிடிக்கும்.

அதுமட்டும் தெரிந்தால் போதாது, கூடவே நிலாவின் மேற்பரப்பில் உள்ள வேதிம கலவைகளையும் தெரிந்துகொள்ள வேண்டும். ஹைட்ரஜன், ஆக்சிஜன் போன்றவற்றின் இருப்பு, கனிமங்கள் என்னென்ன உள்ளன என்று நிலாவின் மண்ணை எடுத்து ஆய்வு செய்து கண்டுபிடிக்க வேண்டும்.

சந்திரயான்-3 விண்கலனின் மொத்த எடையில் வெறும் 26 கிலோ மட்டுமே எடைகொண்ட ஊர்திக்கலனில் இருக்கும் இரண்டு கருவிகள்தான் இந்த ஆய்வுகள் அனைத்தையும் மேற்கொள்ளப் போகின்றன.

சந்திரயான்-3 திட்டத்தின் ஆயுள் 14 நாட்கள் மட்டுமே

இப்போது நாம் பார்த்த ஆய்வுகளில் உந்துவிசைக் கலன் தவிர மற்ற இரண்டு கலன்களான தாய், சேய் கலன்கள் மேற்கொள்ளப் போகும் ஆய்வுகள் வெறும் 14 நாட்களுக்கு மட்டுமே நடக்கும்.

அந்தத் தரவுகள்தான் உலகளவில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தை ஒரு புதிய பரிமாணத்திற்குக் கொண்டு செல்லப் போகின்றன.

சந்திரயான்-3 செய்யும் ஆய்வுகள் நிலாவை விண்வெளிப் பயணத்திற்கான தளமாக மாற்றவே உதவுமா?

பட மூலாதாரம், ISRO

சந்திரயான்-3இன் தரையிறங்கி கலன், ஊர்திக்கலன் உந்துவிசைக் கலன் ஆகிய அனைத்தும் பூமியில் உள்ள ஆழமான விண்வெளி வலையமைப்பிற்குத் தகவல் அனுப்பவும் செயல்படவும் மின்சாரம் தேவை. அந்த மின்சாரம் அவற்றுக்கு சூரிய மின் தகடுகளின் மூலம் கிடைக்கிறது.

ஆனால், நிலாவின் தென் துருவத்தில் எப்போதும் சூரிய ஒளி இருப்பதில்லை. குறிப்பாக சந்திரயான்-3 தரையிறங்கும் பகுதியில் ஒரு மாதத்திற்கு 14 நாட்கள் பகல் மற்றும் 14 நாட்கள் இரவு என்ற நிலை நிலவுகிறது.

எளிதாகச் சொல்ல வேண்டுமெனில், நிலாவில் ஒரு நாள் நிறைவடைய பூமியில் 28 நாட்கள் ஆக வேண்டும். ஏனெனில், நிலா தன்னைத் தானே சுற்றி வர பூமியின் நாள் கணக்குப்படி 28 நாட்கள் எடுத்துக்கொள்கிறது.

அதனால்தான், இஸ்ரோ 14 நாட்கள் பகல் இருக்கும் காலகட்டத்தில் ஆய்வு செய்ய ஏதுவாகக் கணக்கிட்டு விண்கலத்தை அனுப்பியது.

இதன்மூலம் தரையிறங்கிய பிறகு 14 நாட்களுக்கு லேண்டர், ரோவர் இரண்டும் அவை மேற்கொள்ள வேண்டிய ஆய்வுகள் அனைத்தையும் மேற்கொண்டு பூமிக்குத் தகவல்களை அனுப்பிவிடும்.

அது முடியும் நேரத்தில், “அதாவது நிலாவின் தென் துருவப் பகுதியில் இரவு நெருங்கும்போது அங்கு வெப்பநிலை மைனஸ் 120 டிகிரி செல்ஷியஸ் வரைக்கும் செல்லும். அந்த உறைபனிக் குளிரில் லேண்டர், ரோவர் இரண்டாலும் மின்சார உற்பத்தியைச் செய்ய முடியாது.

அதோடு, அதீத உறைபனிக் குளிரில் அவற்றின் பாகங்கள் சேதமடையவும் வாய்ப்புள்ளது,” என்கிறார் விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன்.

அதனால்தான் இவற்றின் ஆயுட்காலம் 14 நாட்கள் மட்டுமே என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.

ஆகவே, முதல் 14 நாட்களில் கிடைக்கும் தரவுகள்தான் மிக முக்கியமானது. இந்த 14 நாட்களில் கிடைக்கும் தகவல்களே நிலாவுக்கு மனிதர்களை அனுப்பும் இஸ்ரோவின் எதிர்காலத் திட்டங்களுக்கு மிகவும் முக்கியமானவை.

அதுமட்டுமின்றி, எதிர்காலத்தில் இன்னும் பல கனவுத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல இந்தத் தரவுகள் அவசியம் என்கிறார் லெனின்.

சந்திரயான்-3 எதிர்கால விண்வெளிப் பயணங்களுக்கே உதவுமா?

சந்திரயான்-3 செய்யும் ஆய்வுகள் நிலாவை விண்வெளிப் பயணத்திற்கான தளமாக மாற்றவே உதவுமா?

பட மூலாதாரம், NASA

இந்த ஆய்வுகளில் கிடைக்கும் தரவுகள் மற்றும் தகவல்களின் மூலம் எதிர்காலத்தில் நிலாவை நாம் விண்வெளிப் பயணங்களுக்கான இயங்குதளமாகப் பயன்படுத்தும் வாய்ப்புகள் உருவாகலாம் என்கிறார் பிர்லா கோளரங்கத்தின் இயக்குநர் லெனின்.

“எதிர்காலத்தில் விண்வெளிப் பயணத்தின்போது பூமியில் இருந்தே அனைத்தையும் கொண்டு போகவேண்டும் என்ற நிலை இருக்காது. அதற்குப் பதிலாக நிலாவில் ஒரு தளம் அமைத்து அங்கிருக்கும் வளங்களைப் பயன்படுத்தி விண்வெளிப் பயணங்களை மேற்கொள்ளக்கூட வாய்ப்புகள் உண்டு. அதற்கு இந்த ஆய்வுகள் உதவும்,” என்கிறார் அவர்.

அதுமட்டுமின்றி அவரது கூற்றுப்படி, பூமியைவிட நிலாவில் ஈர்ப்புவிசை குறைவு என்பதால் ஒப்பீட்டளவில் அங்கிருந்து விண்வெளிக்குச் செல்ல சிறிதளவு உந்துவிசை கொடுத்தாலே போதும். அதன்மூலம் “செவ்வாய் போன்ற மற்ற கோள்களுக்குச் செல்வதற்கான வாய்ப்பு அதிகம், எரிபொருள் தேவையும் அதன்மூலம் குறையும்.”

மேலும், நிலாவை வளங்களுக்கான ஒரு யூனிட்டாகவும் பயன்படுத்த முடியும் என்கிறார் அவர். அதாவது விண்வெளிப் பயணங்களுக்குத் தேவையான ஹைட்ரஜன், ஆக்சிஜன் போன்றவற்றை அங்கேயே எடுத்துப் பயன்படுத்திக் கொள்ள முடியலாம்.

இந்த மாதிரியான வளர்ச்சிகள் எதிர்காலத்தில் மிகமிகத் தொலைவில் இருந்தாலும், தற்போது சந்திரயான்-3 மேற்கொள்ளும் இத்தகைய ஆய்வுகளின் மூலம் நிலாவுடைய மேற்பரப்பின் தன்மையைப் புரிந்துகொள்வது அத்தகைய வளர்ச்சிகளுக்கான ஒரு தொடக்கமாக அமையும் என்கிறார் லெனின்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »