Press "Enter" to skip to content

சந்திரயான்-3: நிலாவை முத்தமிடும் இந்தியா – நேரலை

பட மூலாதாரம், ISRO

பிபிசி தமிழின் காணொளி நேரலைகள்

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அனுப்பியுள்ள சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலாவில் தரையிறங்கத் தொடங்கியது.

கடைசி சில நிமிடப் பயணத்தை விக்ரம் லேண்டர் தொடங்கியிருக்கிறது.

“நிலவில் விக்ரம் லேண்டரை தரையிறங்குவதற்கான எல்லா ஏற்பாடுகளும் தயார். தரையிறங்கிக் கலன் திட்டமிட்டப்படி, குறிப்பிட்ட அந்த இடத்திற்கு மாலை 5.44 மணிக்கு சென்றடையும். தானியங்கி தரையிறங்கி செயல்பாட்டு கட்டமைப்பிடம் இருந்து கட்டளையைப் பெற்றவுடன் தரையிறங்கிக் கலன், கீழே இறங்குவதற்காக அதிலுள்ள என்ஜின்களை இயங்கச் செய்யும். நிலவில் விக்ரம் லேண்டரை தரையிறக்குவதற்கான குழு, கட்டளைகள் சரியான வரிசையில் பெறப்படுகிறதா என்பதை உறுதி செய்யும்.” இஸ்ரோ தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதர் ஹெச்.சி. வாங் சிறப்பு வழிபாடு நடத்தினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த சமூக ஊடக பதிவில், சந்திரயான் 3 திட்டம் வெற்றிபெற வேண்டும் என்று பிரார்த்தனையில் ஈடுபட்டு வரும் கோடிக்கணக்கான நபர்களுடன் நானும் இணைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

சந்திரயான் 3

பட மூலாதாரம், Singapore in India

“இந்தியா வரலாறு படைக்கப் போகிறது” என்று இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

சந்திரயான் 3 திட்டம் வெற்றிபெற வேண்டி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மத வழிப்பாட்டு தலங்களில் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.

டெல்லியில் உள்ள ஜன் கல்யான் சமிதியில் சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற வேண்டி யாகம் வளர்த்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

டெல்லியில் உள்ள பங்களா சாகிப் குருத்வாராவில் மத்திய அமைச்சர் ஹர்திப் சிங் பூரி உள்ளிட்டோர் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். நிலவில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்க வேண்டி காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஹஸ்ரட்பால் தர்காவில் சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள் ஈடுபட்டனர்.

சந்திரயான் 3

பட மூலாதாரம், ANI

இஸ்ரோ நிறுவனர் விக்ரம் சாராபாயின் மகன் கார்த்திகேய சாராபாய் இந்த நிகழ்வு குறித்து ஏ.என்.ஐ. செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில், “இது மிதுவும் முக்கியமான நாள். மற்றவற்றிலிருந்து வேறுபட்ட ஒரு செயல்முறையின் மூலமாகவும், துல்லியமாகவும் சந்திரயான் 3-ஐ அனுப்ப முடிந்திருப்பது இந்தியாவுக்குமட்டுமல்ல பூமியில் உள்ள அனைவருக்கும் ஒரு அற்புதமாக விசயம்.

அறிவியல், பொறியியல் ஆகியவற்றில் தவறில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்கிறோம். நிலவின் தென் துருவத்தில் யாராலும் இறங்க முடியவில்லை. அப்படியிருக்கும் இது மனிதகுலத்திற்கு ஒரு பெரிய விஷயமாக இருக்கும்” என்றார்.

ஒடிசாவை சேர்ந்த பிரபல மணற் சிற்ப கலைஞரான சுதர்ஷன் பட்நாயக், சந்திரயானுக்கு வாழ்த்து தெரிவித்து மணற்சிற்பம் வடித்துள்ளார். சந்திரயான் விண்கலத்தை சுமந்து சென்ற ராக்கெட், நிலவில் இந்திய கொடி பறப்பது போன்றவற்றுடன் ஜெய் ஹோ என்ற வாசகத்துடன் இந்த சிற்பத்தை அவர் வடித்துள்ளார்.

சந்திரயான் 3

பட மூலாதாரம், ISRO

பிரிட்டனின் முதல் விண்வெளி வீராங்கனையான ஹெலன் ஷர்மன் இந்தியாவின் சந்திரயான் திட்டம் குறித்து பிபிசியின் மோனிகா மில்லருக்கு பேட்டியளித்தபோது, இது புதிய அத்தியாயத்தின் ஆரம்பம் என்று குறிப்பிட்டார்.

மேலும், “ நீங்கள் நிலவுக்கு மனிதர்களை அனுப்பப் போகிறீர்கள் என்றால், நிச்சயமாக பனி மிகவும் பயனுள்ளதாக இருக்கும், அவர்கள் நீர் குடிக்க விரும்புவார்கள். அவர்கள் தண்ணீரை ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனாகப் பிரித்து ஆக்ஸிஜனை சுவாசிக்க விரும்புவார்கள். அதிலிருந்து ராக்கெட்க்கு தேவையான எரிபொருளையும் தயாரிக்கலாம்.

எனவே பனி மிகவும் அவசியம். ஆனால், நிலவின் தென் துருவத்தில் உள்ள அந்த பள்ளம் உண்மையில் உயர்ந்த விளிம்பைக் கொண்டுள்ளது. மேலும் அந்த விளிம்பின் ஒருசில பகுதிகளில் நிலையான சூரிய ஒளி இருக்கும். ஒருசில பகுதிகளில் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சூரிய ஒளி இருக்கும். எனவே, நீங்கள் சோலார் மின்சாரத்தை உருவாக்கும் இயந்திரத்தை அங்கு வைத்தால், தொடர்ந்து மின்சாரத்தை உருவாக்கிக்கொண்டே இருக்க முடியும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், மனிதர்கள் இல்லாமல் நிலவில் தரையிறங்குவது, மனிதர்களுடன் தரையிறங்குவதை விட கடினமானது என்றும் தெரிவித்தார்.

சந்திரயான் 3

பட மூலாதாரம், Sudarsan Pattnaik

சந்திரயான் - 3

பட மூலாதாரம், Getty Images

“குழுவினர் இல்லாமல் செல்வதால், உங்கள் கருவிகள் சரியான முறையில் வேலை செய்ய வேண்டும். இரண்டாவது முயற்சியில் ஈடுபடுவதற்கு உங்களுக்கு மிகக் குறைந்த எரிபொருளே இருக்கும். தென் துருவத்தில் மலைகளும் பள்ளங்களும் அதிகமாக இருக்கும். எனவே, நிச்சயமாக அது சவாலானது.

யாராவது மனிதர்கள் செல்லும்போது அந்த நேரத்தில் வழிநடத்த முடியும். காலதாமதம் ஆகும் வாய்ப்பு உள்ளது. எனவே, உங்களின் இயந்திரங்கள் வேகமாக வேலை செய்ய வேண்டும். தூசிகளும் பிரச்னையாக விளங்கலாம். இதற்கு முன்பு சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள்தான் இதனை சமாளித்துள்ளன. ஒருவேளை இந்தியா இதனை சமாளித்தால் பெரிய விசயம். ” என்றும் அவர் குறிப்பிட்டார்.

விண்வெளி ஆய்வில் இந்தியாவில் நிலா குறித்த திட்டம் புதிய அத்தியாயத்தின் ஆரம்பம் என்றும் ஹெலன் ஷர்மன் கூறினார்.

சந்திரயான் 3 திட்டம் கடந்து வந்த பாதையை பார்ப்போம்.

சந்திரயான் 3 திட்டத்துக்கான செலவு எவ்வளவு?

இந்தியாவின் முதல் நிலவு திட்டமான சந்திரயான் -1 கடந்த 2008 இல் ரூ.386 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டது. சந்திரயான் – 2 திட்டத்துக்கு ரூ.978 கோடி செலவிடப்பட்டது. சந்திரயான் 3 திட்டத்துக்கான செலவு ரூ.615 கோடி மட்டுமே?

சந்திரயான் 3 விண்கலம் எப்போது விண்ணில் ஏவப்பட்டது?

ஜூலை 6: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து ஜூலை 14ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலம் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்தது

ஜூலை 11: 24 மணி நேர ஏவுதல் ஒத்திகை வெற்றிகரமாக செய்யப்பட்டது

ஜூலை 13: சந்திரயான் 3 விண்கலத்தின் கவுண்ட் டவுன் பிற்பகல் 1.05-க்கு ஸ்ரீஹரிகோட்டாவில் தொடங்கியது.

ஜூலை 14: சந்திரயான் -3 விண்கலத்தை சுமந்துகொண்டு எல்விஎம்3 எம்4 ராக்கெட் மதியம் 2:35 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

சந்திரயான் 3

பட மூலாதாரம், ISRO

சந்திரயான் 3 விண்கலத்தின் பாதை உயரம் எத்தனை முறை மாற்றப்பட்டது?

சந்திரயான் விண்கலத்தின் பாதை உயரம் உயர்த்தும் (Orbit raising) நடவடிக்கை 5 முறை மேற்கொள்ளப்பட்டது. அவை;

ஜூலை 15: சந்திரயான் 3 விண்கலத்தின் முதல் பாதை உயரம் உயர்த்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 41762 கி.மீ x 173 கி.மீ தொலைவுள்ள நீள்வட்டப் பாதையில் விண்கலம் செலுத்தப்பட்டது.

ஜூலை 17: 2வது முறையாக விண்கலத்தின் பாதை உயரம் உயர்த்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 41603 கி.மீ x 226 கி.மீ தொலைவுள்ள நீள்வட்டப் பாதையில் விண்கலம் செலுத்தப்பட்டது.

ஜூலை18: மூன்றாவது முறையாக சந்திரயான் 3 விண்கலத்தின் பாதை உயரம் உயர்த்தப்பட்டது

ஜூலை 20: நான்காவது முறையாக சந்திரயான் 3 விண்கலத்தின் பாதை உயரம் உயர்த்தும் நடவடிக்கையை இஸ்ரோ மேற்கொண்டது

ஜுலை 25: 5வதாக மற்றும் இறுதியாக சந்திரயான் 3 விண்கலத்தின் பாதை உயரம் உயர்த்தப்பட்டது.

சந்திரயான் 3

பட மூலாதாரம், ISRO

நிலவை நோக்கிய பயணத்தை சந்திரயான் 3 தொடங்கியது எப்போது?

ஆகஸ்ட் 1: புவியின் சுற்றூவட்டப் பாதையில் சுற்றிவந்த சந்திரயான் 3 விண்கலம் திட்டமிட்டப்படி ஆகஸ்ட் 1ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 1 மணி இடையிலான நேரத்தில் நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கியது.

ஆகஸ்ட் 5: சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமான நிலவின் நீள்வட்ட பாதைக்குள் செலுத்தப்பட்டது. அப்போது, 164 கி.மீ x 18074 கி.மீ தொலைவுள்ள நிலவின் நீள்வட்டப் பாதையில் சந்திரயான் 3 இருந்தது.

ஆகஸ்ட் 6: நிலவில் சந்திரயான் 3 விண்கலத்தின் பாதை உயரம் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, 170 கி.மீ x 4313 கி.மீ தொலைவுள்ள நிலவின் நீள்வட்டப் பாதையில் சந்திரயான் 3 இருந்தது.

ஆகஸ்ட் 9: 174 கி.மீ x 1437 கி.மீ என்ற நீள்வட்டப் பாதையில் சந்திரயான் 3 விண்கலம் சுற்றும்படி பாதை சுற்றுவட்டம் குறைக்கப்பட்டது.

ஆகஸ்ட் 14: 151 கி.மீ x179 கி.மீ என்ற நீள்வட்டப் பாதையில் சந்திரயான் 3 விண்கலம் சுற்றும்படி பாதை சுற்றுவட்டம் குறைக்கப்பட்டது.

ஆகஸ்ட் 16: நிலவைச் சுற்றி 153 கி.மீ x163 கி.மீ என்ற நீள்வட்டப் பாதையில் சந்திரயான் 3 விண்கலம் சுற்றும்படி பாதை சுற்றுவட்டம் குறைக்கப்பட்டது.

சந்திரயான் 3

பட மூலாதாரம், ISRO

விக்ரம் லேண்டர் பிரிந்தது எப்போது?

ஆகஸ்ட் 17: சந்திரயான் 3 உந்து சக்தி கலனில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிந்தது.

ஆகஸ்ட் 19: 113 கிமீ x 157 கிமீ என்ற நீள்வட்டப் பாதையில் விக்ரம் லேண்டர் நிலவை சுற்றத் தொடங்கியது

ஆகஸ்ட் 20: 25 கிமீ x 134 கிமீ என்ற நீள்வட்டப் பாதையில் விக்ரம் லேண்டர் நிலவை சுற்றத் தொடங்கியது

ஆகஸ்ட் 23: விக்ரம் லேண்டர் நிலவின் நிலப்பரப்பில் தரையிறங்கவுள்ளது

விக்ரம் லேண்டர் நிலவில் என்ன பணிகளை செய்யும்?

நிலாவின் தென் துருவப்பகுதியில் 70 டிகிரி அட்சரேகையில் லேண்டர் தரையிறங்குகிறது. அந்தப் பகுதியில்தான் சந்திரயான்-3 தனது ஆய்வுகளைச் செய்யப் போகிறது.

நிலாவில் வெப்பம் அதிகமாக இருக்கும் மண் பகுதியில் நடக்கும் மாற்றங்களை அறிவது, நிலாவில் உள்ள பொருட்கள் என்ன நிலையில் உள்ளன, அங்குள்ள வெப்பத்தைத் தாங்கும் தன்மை கொண்டதா அல்லது அந்த வெப்பத்தில் உடையக்கூடிய பொருட்களாக உள்ளனவா என்பது போன்ற தகவல்களை கண்டறிவது ஆகிய பணிகள் மேற்கொள்ளபடவுள்ளன. இதேபோல், பூமியைப் போலவே நிலாவிலும் நில அதிர்வுகள் உள்ளனவா, இப்போது இல்லையென்றால் முன்பு இருந்தனவா என்பன போன்ற தரவுகள் சேகரிக்கப்படவுள்ளன.

விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய பின்னர், அதன் உள்ளே இருக்கும் ரோவர் வெளியே வரும். இந்த ரோவர் நிலாவின் மண் மாதிரிகளை ஆய்வு செய்து தரைப்பரப்பின் தன்மை என்ன, வெப்பம் எந்த அளவுக்கு உள்ளது, தண்ணீர் உள்ளதா என்பன போன்ற தகவல்களைச் சேகரித்து அனுப்பும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »