Press "Enter" to skip to content

கச்சத்தீவு: 100 ஆண்டுகளாகத் தொடரும் விவகாரம் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் சூடு பிடிப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

கச்சத்தீவு மீட்பு என்பது தமிழக அரசியல் களத்தில் புதிய முழக்கம் அல்ல. தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த திமுகவும் அதிமுகவும் கச்சத்தீவை மீட்போம் என பல தேர்தல்களில் வாக்குறுதி வழங்கியுள்ளன.

நாடாளுமன்றத்திலும் 1960களிலும் சரி, தற்போதும் சரி, இந்த விவகாரம் பேசப்பட்டு வருகிறது. நூறு ஆண்டுகளாக நிலவி வரும் இந்த விவகாரம் தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நேரத்தில் மீண்டும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக, பாஜக என கட்சிகள் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றன.

அரசியல் களத்தில் பேசப்படும் அளவு பெரிதாக இருக்கும் கச்சத்தீவு உண்மையில் 285 ஏக்கர் மட்டுமே கொண்ட சிறிய தீவாகும். இதன் அதிகபட்ச அகலமே 300 மீட்டர்கள் தான், நீளம் 1.6 கி.மீ ஆகும்.

இந்தியாவுக்கு இலங்கைக்கும் இடையிலான கடற்பகுதியில் கச்சத்தீவு உள்ளது. அதாவது, இந்தியாவின் ராமேஸ்வரத்திலிருந்து 12 மைல் தொலைவிலும் இலங்கை யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவிலிருந்து 10.5 மைல் தொலைவிலும் பாக் நீரிணைப் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு மிகச் சிறிய தீவுதான் கச்சத்தீவு.

மனிதர்கள் யாரும் வசிக்காத இந்தத் தீவில் புனித அந்தோணியார் தேவாலயம் ஒன்றும் அமைந்திருக்கிறது. அங்கு ஆண்டுதோறும் பிப்ரவரி மார்ச் மாதங்களில் நடைபெறும் விழாவில் இரு நாட்டை சேர்ந்த மக்களும் பங்கேற்பார்கள். இந்த தீவுக்கான உரிமையைத்தான் இந்தியா பெற வேண்டும் என தமிழ்நாட்டில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

கச்சத்தீவு ஏன் சர்ச்சையாகவே உள்ளது?

கச்சத்தீவு அளவில் மிக சிறியதாக இருந்தாலும், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் பகுதியில் அது அமைந்திருக்கும் பகுதி முக்கியமானதாகும். கச்சத்தீவு தற்போது இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இதனால் ராமேஸ்வரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மீனவர்களின் மீன்பிடி உரிமை பாதிக்கப்படுகிறது. இந்த ஆண்டு இது வரை 74 மீனவர்களை இலங்கை அரசு கைது செய்துள்ளது. தமிழக மீனவர்களின் 67 மீன்பிடி படகுகள் இலங்கையிடம் உள்ளது. இந்த தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்தியா கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்படுகிறது.

தமிழக மீனவர்கள் ஏன் தாக்கப்படுகிறார்கள்?

நூறு ஆண்டுகளாக தொடரும் கச்சத்தீவு விவகாரம்: 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் மீண்டும் சூடு பிடிக்கிறது

பட மூலாதாரம், Getty Images

ஒவ்வொரு நாட்டுக்கும் அதற்கான கடல் எல்லை வரையறுக்கப்படும். நிலத்திலிருந்து கடலில் சில தூரம் அந்த நாட்டுக்கு சொந்தமான கடல் பகுதியாக அது இருக்கும். பின், பிரத்யேக பொருளாதார மண்டலம் இருக்கும். அந்தப் பகுதியில், சம்பந்தப்பட்ட நாட்டின் அனுமதி இல்லாமல் யாரும் உள்ளே நுழைய முடியாது. இந்தப் பகுதிக்கு பிறகு, சர்வதேச கடல் எல்லை ஆரம்பிக்கும்.

கச்சத்தீவு அமைந்திருக்கும் இந்தியாவுக்கும் இலங்கைக்கு இடையிலான இடம் மிக குறுகியது என்பதால், கிட்டத்தட்ட இந்திய பொருளாதார மண்டலம் முடியும் இடத்திலேயே இலங்கையின் பொருளாதார மண்டலம் தொடங்குகிறது. எனவே மீனவர்கள் அடிக்கடி இலங்கையின் பொருளாதார மண்டலத்துக்குள் நுழையும் நிலை ஏற்படுகிறது.

இலங்கையில் உள்நாட்டுப் போர் நடந்துக் கொண்டிருந்த போது, இந்தப் பகுதிகளின் மீது இலங்கை அரசின் கவனம் குறைவாகவே இருந்தது. இதனால் தமிழ்நாட்டு மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பது பெரிய பிரச்னையாக இல்லை.

ஆனால் 2009-ல் போர் முடிந்த பிறகு, இலங்கை அரசு தனது கட்டுப்பாட்டை தீவிரப்படுத்தியது. அதன் பிறகு தமிழக கைது செய்யப்படுவதும், துன்புறுத்தப்படுவதும், படகுகள் கைப்பற்றப்படுவதும் அதிகமாகியுள்ளன.

கச்சத்தீவு எப்படி இலங்கையின் கட்டுப்பாட்டுக்கு சென்றது?

1974ம் ஆண்டு இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் கச்சத்தீவு இலங்கையின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அப்போது இந்திய பிரதமராக இந்திரா காந்தியும் இலங்கையின் பிரதமராக சிறிமாவோ பண்டாரநாயக்காவும் இருந்தனர்.

அந்த ஒப்பந்தத்தில் இரு நாடுகளுக்கு இடையேயான எல்லை வரையறுக்கப்பட்டு கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தம் என முடிவானது. எனினும், மீன் பிடி உரிமையும், பயணிகள் விசா இன்றி கச்சத்தீவு சென்று வரும் உரிமையும் பாதுகாக்கப்பட்டு, மீன் வலைகளை உலர்த்தவும் அனுமதி இருந்தது.

ஆனால், அதன் பின் 1976ம் ஆண்டு, இரு நாடுகளுக்கு இடையே மற்றொரு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, “இந்திய மீனவர்களும் அவர்களது மீன் பிடிப் படகுகளும் இலங்கைக் கடல் பகுதியிலும் இலங்கையின் பிரத்யேக பொருளாதார மண்டலப் பகுதியிலும் இலங்கையின் அனுமதியில்லாமல் மீன்டிபிடிக்க அனுமதி இல்லை” என்று கூறியது இந்த ஒப்பந்தத்தின் ஷரத்து.

நூறு ஆண்டுகளாக தொடரும் கச்சத்தீவு விவகாரம்: 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் மீண்டும் சூடு பிடிக்கிறது

பட மூலாதாரம், Getty Images

1974ஒப்பந்தத்துக்கு முன் கச்சத்தீவு யாரிடம் இருந்தது?

இந்தியா, இலங்கை ஆகிய இரு நாடுகளையும் ஆட்சி செய்த பிரிட்டிஷ் அரசு கச்சத்தீவை இந்தியாவின் ஒரு பகுதியாக அங்கீகரித்ததே தவிர, இலங்கையின் ஒரு பகுதியாகக் கருதவில்லை. 1948 செப்டம்பர் 7-ம் தேதி மெட்ராஸ் எஸ்டேட் (அபாலிஷன் அண்ட் கன்வர்ஷன் இன்டு ரயத்வாரி) சட்டத்தின் கீழ் சென்னை மாகாணத்தில் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டபோது கச்சத்தீவு சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியானது.

1972ல் தமிழ்நாடு அரசால் பதிப்பிக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட கெஸட்டியர், கச்சத்தீவை ராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு பகுதியாகக் காட்டுகிறது. கச்சத்தீவின் மேலாய்வு எண் 1250.

நூறு ஆண்டுகளாக தொடரும் உரிமைப் போராட்டம்?

கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தமா, இலங்கைக்கு சொந்தமா என்ற விவகாரம் சுதந்திரத்துக்கு பின் எழுந்ததில்லை. நூறு ஆண்டுகளுக்கு முன்பே இந்த விவகாரத்தில் இரு பகுதியினருக்கும் இடையே ஒத்தக் கருத்து இல்லை.

பதினாறாம் நூற்றாண்டில் இலங்கையை ஆண்ட போர்த்துகீசியர்கள், கச்சத்தீவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததால் கச்சத்தீவு தங்களுக்கு தான் சொந்தம் என இலங்கை கூறுகிறது. ஆனால் ராமநாதபுரம் ஜமீனின் கட்டுப்பாட்டில் கச்சத்தீவு இருந்ததற்கான ஆவணங்கள் இருப்பதாலும், அவர் கச்சத்தீவை கொண்டிருந்ததற்காக இலங்கைக்கு எந்த கப்பமும் கட்டவில்லை என்று ஆவணங்கள் கூறுவதாலும் கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தம் என இந்தியா கூறியது.

1921-ல் சென்னை மாகாண அதிகாரிகளுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இரு தரப்பினரும் கச்சத்தீவை முழுமையாக தங்களுக்கே வேண்டும் என கோரியுள்ளனர். அதில் ஒத்தக் கருத்து ஏற்படாமல் போகவே மீன்பிடி உரிமையை தருவதாக இந்தியா ஒப்புக் கொண்டு அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் அந்த ஒப்பந்தத்தை அப்போதைய காலனி அலுவலகம் ஏற்றுக் கொள்ளாததால் அந்த ஒப்பந்தம் அமலாகவில்லை.

இந்தப் பேச்சுவார்த்தைளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலேயே 1974-ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் ஒப்பந்தம் போடப்பட்ட பிறகே தமிழ்நாட்டில் எதிர்ப்புகள் கிளம்பின.

கச்சத்தீவை தாரை வார்த்தது யார்?

1967-ல் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிக அளவில் இருந்த போது, இந்த பிரச்னை மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் எழுப்பப்பட்டது. ஆனால் மத்திய அரசு இந்த விவகாரத்தில் ஆர்வம் காட்டவில்லை.

1974- ஜூன் 28ம் தேதி, ஒப்பந்தம் கையெழுத்தான போது, தமிழ்நாட்டில் மு.கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வந்தது. மாநில அரசை கேட்காமல் மத்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்துவிட்டதாக திமுக குற்றம் சாட்டியது.

ஒப்பந்தம் கையெழுத்தான மறுநாள் ஜூன் 29ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் தமிழ்நாட்டில் கூட்டப்பட்டது. ஆகஸ்ட் 21ம் தேதி சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்டது. ஒப்பந்தத்தின் ஷரத்துகளை மறுபரிசீலனை செய்யும் படி கருணாநிதி மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

இப்போது வரை அந்தக் கோரிக்கை தமிழக அரசு சார்பாக திமுகவும் அதிமுகவும் ஆட்சியில் இருந்த போது வைத்து வருகின்றன.

இப்போது ஏன் கச்சத்தீவு பிரச்னை பேசப்படுகிறது?

இந்த விவகாரம் அரசியல் களத்தில் அவ்வபோது ஒலித்துக் கொண்டே இருக்கிறது. மீனவ நண்பன் நாங்கள் என மார்தட்டிக் கொள்ள அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்தை பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இரண்டு வாரங்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோதி நாடாளுமன்றத்தில் கச்சத்தீவு விவகாரத்தை எழுப்பினார். காங்கிரஸ் எப்படி நாட்டை பிளவுப்படுத்தியது என்பதற்கு உதாரணமாக இந்திரா கந்தி கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை குறிப்பிட்டு பேசினார்.

நூறு ஆண்டுகளாக தொடரும் கச்சத்தீவு விவகாரம்: 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் மீண்டும் சூடு பிடிக்கிறது

பட மூலாதாரம், Getty Images

அதற்கு பதிலளிக்கும் விதமாக கடந்த வாரம் ராமேஸ்வரத்தில் மீனவர் மாநாட்டில் பங்கேற்று பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், பாஜக ஆட்சிக்கு வந்த பிறகே தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்திருப்பதாக சுட்டிக்காட்டினார். கடந்த மாதம் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இந்தியா வருவதற்கு முன், அவருடன் இந்த விவகாரம் குறித்து இந்திய பிரதமர் பேச வேண்டும் என தான் பிரதமருக்கு எழுதிய கடிதத்தையும் முதல்வர் சுட்டிக் காட்டிப் பேசினார். பாஜக அரசு கச்சத்தீவை மீட்கும் முயற்சியில் இறங்க வில்லை என்றால் அடுத்த நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு அமைய உள்ள புதிய அரசு இதனை நிறைவேற்றக் கூடிய வகையில் திமுக அரசு நடவடிக்கை மேற்கொள்வோம் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மேடையில் பேசினார்.

இதன் பின்னர், மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டில் பேசிய எடப்பாடி பழனிசாமி கச்சத்தீவை மீட்போம் என திமுக கூறுவது பச்சைப் பொய் என்றும், அதை தாரை வார்த்துக் கொடுத்ததே திமுக தான் என சாடினார். அப்போது காங்கிரஸ் கூட்டணியில் இருந்த திமுக, கச்சத்தீவு தாரை வார்த்துக் கொடுப்பதற்கு எதிராக கேள்வி எழுப்பவில்லை என்றார். அதிமுகவின் இந்த குற்றச்சாட்டும் புதிதல்ல.

அதிமுக உருவாகி இரண்டு ஆண்டுகளில் 1974-ம் ஆண்டு கச்சத்தீவு ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போது கட்சியின் தலைவர் எம் ஜி ராமச்சந்திரன், திமுக மத்திய அரசுக்கு சரியான வழிகாட்டுதல் வழங்கவில்லை என குற்றம் சாட்டினார்.

ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுக்கிறது திமுக. மீனவர் மாநாட்டில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், கச்சத்தீவை திமுக தாரை வார்த்ததாக கூறுபவர்கள் வரலாறு தெரியாமல் பேசுகிறார்கள் என்றார். “1971-ம் ஆண்டு கச்சத்தீவை இலங்கை சொந்தம் கொண்டாடிய போது, கச்சத்தீவு இந்தியாவின் அரசுரிமை என்பதற்கான ஆதரங்களை திரட்ட சட்டப் பேராசிரியர் எஸ்.கிருஷ்ணசாமிக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார். 1973 டிசம்பரில் அந்த ஆவணங்களை கருணாநிதி வெளியிட்டார். அதை மீறி தான் 1974ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது. இது ஒப்பந்தம் தான், சட்டம் அல்ல. திமுகவும் அக்தை ஆதரிக்கவில்லை. இந்திரா காந்தியை சந்தித்து கச்சத்தீவை தரக்கூடாது என்று கருணாநிதி வலியுறுத்தினார். அதற்கான ஆதாரங்களை பிரதமரிடம் அளித்தார். சட்டத்துறை செ.மாதவன் உடன் சென்றார். இந்த விவகாரம் குறித்து கருணாநிதி நடத்திய அனைத்துக் கட்சிக்கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த ஒரே கட்சி அதிமுக” என்றார்.

நூறு ஆண்டுகளாக தொடரும் கச்சத்தீவு விவகாரம்: 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் மீண்டும் சூடு பிடிக்கிறது

பட மூலாதாரம், Getty Images

மதுரை மாநாட்டில் கடந்த வாரம், மேலும் பேசிய பழனிசாமி, “2008ம் ஆண்டு திமுக ஆட்சியின் போது உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா தான் கச்சத்தீவை மீட்க வழக்கு தொடுத்தார். மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவிப்பு வழங்கியது. மத்திய அரசு என்ன பதில் மனு தாக்கல் செய்கிறது என பார்த்து மாநில அரசு தாக்கல் செய்யும் என்றார் கருணாநிதி. கச்சத்தீவை மீட்க முடியாது என மத்திய அரசு நீதிமன்றத்தில் கூறியது. அதையே தமிழ்நாடு அரசும் கூறியது” என்றார்.

நீதிமன்றத்தில், 2013ம் ஆண்டு பதில் கூறிய மத்திய அரசு, இந்தியாவின் எந்த பகுதியும் இலங்கைக்கு வழங்கப்படவில்லை. பிரிட்டிஷ் இந்தியாவுக்கு சிலோனுக்குமான பிரச்னையாக கச்சத்தீவு இருந்தது என்றும் 1974, 1976 ஒப்பந்தங்கள் மூலம் அது முடிவுக்கு வந்தது என்று கூறியது.

பிபிசி தமிழிடம் பேசிய தேசிய மீனவர் கட்சி மாநில பொது செயலாளர் சின்னதம்பி, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கச்சத்தீவு பிரச்சனையை அரசியலாக்கி மீனவர்களை ஏமாற்றி மீனவர்கள் வாக்குகளை வாங்கி வருகிறார்கள் என்றும் மத்தியில் ஆளும் பாஜகவும் இதற்கு விதிவிலக்கல்ல என்றும் கூறினார். மேலும் கச்சத்தீவு ஒன்று மட்டும் தான் மீனவர் பிரச்னை போல அரசியல் கட்சிகள் பேசுவது சரியல்ல என்றும் தெரிவித்தார்.

நூறு ஆண்டுகளாக தொடரும் கச்சத்தீவு விவகாரம்: 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் மீண்டும் சூடு பிடிக்கிறது

பட மூலாதாரம், Getty Images

‘என் மண் என் மக்கள்’ பயணத்தின் போது பிபிசி தமிழ் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பாஜக தலைவர் அண்ணாமலை, “இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு இந்தியா நிதி உதவி வழங்கி வருகிறது. கச்சத்தீவை மீட்கும் காலம் கனிந்து வருகிறது. கச்சத்தீவை மீட்பதில் பாஜக உறுதியாக உள்ளது. தமிழக பாஜக சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் இது குறித்து கடிதம் வழங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கச்சத்தீவு இலங்கை கட்டுப்பாட்டில் இருந்தாலும், அதை நீண்ட கால குத்தகைக்கு இந்தியா எடுப்பது, தமிழர்களின் மீன்பிடி உரிமையை உறுதி செய்வது ஆகியவை நூறு ஆண்டுகளாக தொடரும் இந்த பிரச்னைக்கு தீர்வாக முன்வைக்கப்படுகின்றன. இந்தியாவுக்கு சொந்தமான சில தீவுகள் சில வங்கதேசத்துக்கு இது போன்ற குத்தகைக்கு விடப்பட்டது உதாரணமாக கூறப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »