Press "Enter" to skip to content

இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேலின் வெற்றியின் ரகசியம் என்ன?

பட மூலாதாரம், ISRO

“நான் ஒரு சாதாரண மனிதன். என்னால் இந்த அளவுக்கு வர முடியும் என்றால், எல்லோராலும் வர முடியும். வாய்ப்புகள் எல்லோருக்கும் இருக்கிறது. அதனை நாம் எப்படி பயன்படுத்திக்கொள்கிறோம் என்பது நம் கையில் தான் இருக்கிறது.”

“என்னைப் பொறுத்தவைரக்கும், சுய ஒழுக்கம், 100% ஈடுபாடு, எதிர்பார்ப்புகளில்லா கடின உழைப்பு, நம்மிடம் இருக்கின்ற தனித்தன்மை நமக்கு நிச்சயம் வெற்றியைப் பெற்றுத்தரும், கடின உழைப்பு எப்போதும் வீண்போகாது,” இப்படித்தான் தனது வெற்றியின் ரகசியத்தை பற்றி விவரிக்கறார் சந்திரயான் 3-யின் திட்ட இயக்குநர் வீர முத்துவேல்.

சந்திரயான்- 3 விண்ணில் ஏவப்பட்டு, நேற்று (ஆகஸ்ட் 23) வெற்றிகரமாக நிலாவில் தரையிறங்கியது. இந்த வெற்றிச் செய்தி குறித்து பகிர்ந்த திட்ட இயக்குநர் வீர முத்துவேல், இத்திட்டத்தில் பணியாற்றி அனைத்து விஞ்ஞானிகளுக்கும், பொறியாளர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்தார்.

இந்நிலையில், அவர் சந்திரயான்-3 திட்டத்திற்கு பொறுப்பேற்ற பிறகு வெளியிட்டிருந்த வீடியோ சமூக ஊடகங்களில் தற்போது பகிரப்பட்டு வருகிறது. அதில், தன்னால் சாதிக்க முடியும் என்றால், அனைவராலும் முடியும் என ஊக்கமளித்துள்ளார்.

“அனைத்து நேரங்களிலும் படித்துக்கொண்டிருக்கமாட்டேன்”

வீரமுத்துவேல்

பட மூலாதாரம், SOUTHERN RAILWAYS/ TWITTER

விழுப்புரத்தில் பிறந்த வீர முத்துவேல், 10 ஆம் வகுப்பு வரை தொடர்வண்டித் துறை பள்ளியில் படித்துவிட்டு, தனியார் கல்லூரியில் டிப்ளமோ சேர்ந்துள்ளார்.

“பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் தரப்பில் யாருக்கும் கல்விப்பின்புலம் இல்லை. நண்பர்களுடன் சேர்ந்து இயந்திரவியலில் டிப்ளமோ படித்தேன். அப்போதுதான் பொறியியல் மீது ஒரு ஆர்வம் வந்தது. அதனால், என்னால் 90% மதிப்பெண் எடுக்க முடிந்தது,” என்றார்.

தன்னுடைய கல்லூரிக் கல்வி குறித்து பகிர்ந்துகொண்ட அவர், அதிக மதிப்பெண்கள் எடுப்பதற்காக அனைத்து நேரங்களிலும் படித்துக்கொண்டிருக்கமாட்டேன் எனக் கூறியுள்ளார்.

“அனைத்து செமஸ்டர்களிலும்(Semester) முதல் அல்லது இரண்டாம் இடம் பிடிப்பேன். அது வருவதற்காக அனைத்து நேரங்களிலும் படித்துக்கொண்டிருக்கமாட்டேன். படிக்கும்போது 100% கவனம் செலுத்தி, புரிந்து படிக்க வேண்டும் என நினைப்பேன். அதுவே எனக்கு நல்ல மதிப்பெண்களைப் பெற்றுக்கொடுத்தது,” எனக்கூறியுள்ளார்.

விழுப்புரத்தில் வீர முத்துவேல் படித்த தனியார் பாலிநுட்பம் கல்லூரியின் முதல்வர் ஜே. அமோஸ் ராபர்ட் ஜெயச்சந்திரனிடம் பிபிசி பேசியது. அப்போது அவர், வீரமுத்துவேல் சராசரி மாணவராகத் தான் இருந்தார் எனக் கூறினார்.

வீரமுத்துவேல் கல்வி ஆவணங்கள் சொல்வது என்ன ?

வீரமுத்துவேல் கல்வி ஆவணங்கள்

பட மூலாதாரம், Getty Images

“அவர் சுமார் 25 வருடங்களுக்கு முன் எங்கள் கல்லூரியில் படித்துள்ளார். அவருக்கு பாடம் எடுத்த ஆசிரியர்கள் யாரும் இங்கு இல்லாததால், அவரது கல்வி ஆவணங்களை எடுத்துப்பார்த்தோம். அவர் சராசரியாக ஒரு 70% முதல் 80% எடுக்கும் மாணவராகத்தான் இருந்துள்ளார். ஆனால், அவர் அந்த காலக்கட்டத்திலேயே கல்லூரி செய்முறைத் திட்டங்களை (College Project) அவரே செய்துள்ளார்.” என பகிர்ந்தார்.

வீர முத்துவேல் குறித்து மேலும் பகிர்ந்துகொண்ட அமோஸ், “அவர் படிக்கும் காலத்தில், தற்காலத்திற்கு தேவையான அளவு மட்டும் கல்வியில் செலவழித்துவிட்டு, எதிர்காலத்திற்காக தனது ஆற்றலை வளர்த்துக்கொள்வதில் அப்போதே முனைப்புடன் இருந்திருக்கிறார் என்பது அவரது கல்வி ஆவணங்களைப் பார்க்கும்போது தெரிகிறது,” என்றார்.

வீரமுத்துவேலின் வெற்றிக்கு, அவரது அர்பணிப்பே காரணம் என்றகிறார் அவரது தந்தை பழனிவேல். பிபிசியிடம் பேசிய அவர், “வீர முத்துவேலுக்கு பொறுப்பு கொடுக்கப்பட்ட நாள் முதல் அவர் வீட்டிற்கு கூட செல்லாமல், அவரும் அவரது குழுவினரும் சிறப்பாக செயல்பட்டனர். இந்த திட்டத்துக்காக எனது மகன் வீர முத்துவேல் அவரது பெயருக்கு ஏற்ற வகையில் விடா முயற்சி, வீர முயற்சி எடுத்து வீரமாக வெற்றி கண்டதை நினைத்து பார்க்கையில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்,”

தங்கை திருமணத்துக்கூட செல்லாத வீரமுத்துவேல்

சந்திரயான் 3

பட மூலாதாரம், ISRO

திட்டத்திற்கு பொறுப்பேற்றது முதல் தன்னுடன் கூட சரியாக பேசவில்லை எனக்கூறிய பழனிவேல், தங்கையின் திருமணத்திற்குக்கூட அவர் வராமல் சந்திரயான்-3 திட்டத்திற்காக பணியாற்றுவதாகக் கூறி நெகிழ்ந்தார்.

“இந்த திட்டத்தில் என்றைக்கு பொறுப்பாளராக எனது மகன் நியமிக்கப்பட்டாரோ அன்று முதல் விழுப்புரத்திற்கு வரவில்லை. என்னுடன் அடிக்கடி பேச மாட்டார். குறிப்பாக எனது மகளின் திருமண நிச்சயதார்த்தத்திற்கும் வர முடியாது என்று சொன்னார். அதுபோல் கடந்த 20ஆம் தேதி எனது மகளின் திருமணமும் நடைபெற்றது. அதற்கும் அவர் முடியாது என்று சொன்னார் நான் பரவாயில்லை உன்னுடைய பணி இந்த நாட்டுக்கே முக்கியம் என்று சொல்லி அவரை மேலும் ஊக்கப்படுத்தினேன்,” என்றார்.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தந்தை

தொடர்ந்து பேசிய அவர், “முத்துவேல் என்னைப் பற்றியோ எனது குடும்பத்தைப் பற்றியோ நினைக்க மாட்டார். அவரது பணியில் மிகுந்த ஈடுபாட்டுடனும் அர்ப்பணிப்பு உணர்வுடன் இருப்பார். இப்படிப்பட்ட சூழலில் அவர் இன்றைக்கு வெற்றிக் கொண்டிருக்கிறார்,” என்று ஆனந்த கண்ணீருடன் கூறினார் .

மற்றவர்களிடம் தன்னை வீர முத்துவேலின் தந்தை என அடையாளப்படுத்திக் கொள்வதில் பெருமை கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

“மேலும் எனது மகளின் திருமண பத்திரிகையை எடுத்துச் சென்று உறவினர்கள் நண்பர்கள் வீட்டில் வழங்கும்போது அவர்களது குழந்தைகளை அழைத்து இவர் தான் விஞ்ஞானி வீர முத்துவேலின் தந்தை இவரது மகனை போல் நீங்கள் பணியாற்றி நாட்டிற்கு வீட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று ஒவ்வொரு வீட்டிலும் கூறி மகிழ்ச்சி அடைந்தனர். இது என்னால் மறக்க முடியாது” என்றும் கூறினார்.

வீரமுத்துவேல் இஸ்ரோவில் சேர்ந்தது எப்படி?

முத்துவேலின் தந்தை பழனிவேல்

விழுப்புரம் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட வீர முத்துவேல், 10-ஆம் வகுப்பு வைர தொடர்வண்டித் துறை இருபாளர் பள்ளியில் படித்துள்ளார். பின், விழுப்புரத்தில் உள்ள தனியார் பாலிநுட்பம் கல்லூரியில் இயந்திரவியலில் டிப்ளமோ படித்த அவர், பொறியியல் கல்ந்தாய்வு மூலமாக தனியார் பொறியியல் கல்லூரியில் இயந்திரவியலில் இளங்களை பொறியியல் பட்டம் பெற்றார்.

பின்னர், திருச்சியில் உள்ள ஆர்.இ.சி., கல்லூரியில் முதுகலை பொறியியல் பட்டம் பெற்ற வீர முத்துவேல், கோவையில் உள்ள தனியார் இயந்திரவியல் நிறுவனத்தில் மூத்த பொறியாளராக பணியாற்றியுள்ளார். பின், விண்வெளி ஆராய்ச்சியில் தனக்கு இரந்த ஆர்வத்தின் காரணமாக, பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

கொஞ்ச காலத்திற்கு பிறகு, தனது கனவான இஸ்ரோவில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்து திட்ட பொறியாளராக பணியில் சேர்ந்துள்ளார். பணியில் இருக்கும்போதும், விண்வெளி அறிவியல் மீது தனக்கிருந்த ஆர்வத்தின் காரணமாக, ஐஐடி மெட்ராசில் பிஎச்டி., ஆராய்ச்சி படிப்பில் சேர்ந்து, வெற்றிகரமாக படித்து முடித்துள்ளார்.

அதற்கு பிறகு, இஸ்ரோவில் முதல் நேனோ (NANO) விண்கலத்தை ஏவுவதற்காக குழுவை வழிநடத்தும் வாய்ப்பை பெற்று, மூன்று நேனோ விண்கலன்களை ஏவியுள்ளார். அதற்குப்பிறகு, பல்வேறு இணை பொறுப்புகள் வகித்த வீர முத்துவேல், சந்திரயான்-3 இன், திட்ட இயக்குநராக 2019 நியமிக்கப்பட்டார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »