Press "Enter" to skip to content

விஜயகாந்த்: தமிழ் திரைப்படத்தில் நிற பிம்பத்தை உடைத்தவர், அரசியலில் சாதித்தது என்ன?

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் இன்று தனது 71-ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

நூறு வருடத்தைக் கடந்து, பல்லாயிரக்கணக்கான நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களின் கனவோடும், உழைப்போடும் இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ் திரைப்படத்தில் கறுப்பு நிறம், பளீர் சிரிப்பு, வீர நடை, எப்பொழுதும் சிவந்த கண்கள், கணீர் குரல் என தனது தனித்தன்மைகளால் 150 திரைப்படங்களுக்கும் மேல் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம்பிடித்தவர் நடிகர் விஜயகாந்த் என்று அவரது ரசிகர்கள் கூறுகிறார்கள்.

விஜயராஜ், விஜயகாந்தாக மாறியது எப்படி ?

விஜயகாந்த்

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் 1952-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி அழகர்சாமி என்ற ரைஸ் மில் முதலாளியின் மகனாகப் பிறந்தார் விஜயராஜ் என்ற விஜயகாந்த். படிப்பில் பெரிதாக ஆர்வமில்லாமல், விஜயகாந்த் தினமும் நண்பர்களுடன் இணைந்து தியேட்டருக்குச் சென்று எம். ஜி. ஆர் திரைப்படங்கள் பார்ப்பது வழக்கம்.

“ஒரு கட்டத்தில் எம்ஜிஆரின் திரைப்படங்களை ஒவ்வொரு காட்சியையும் விளக்குமளவிற்கு திரைப்படத்தின் மீது ஆர்வமானார். அதனைத் தொடர்ந்து, விஜயகாந்த் சென்னைக்குச் சென்று திரைப்படத்தில் சாதிக்க வேண்டுமென முடிவெடுத்துவிட்டார்.” என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.

சென்னை வந்தவரை தமிழ் திரைப்படம் உடனே அள்ளி அணைத்துக் கொள்ளவில்லை. எங்கு சென்றாலும் விஜயகாந்த் கறுப்பு என அவரது நிறத்தைக் காரணம் காட்டியே பல நிராகரிப்புகளை அவர் எதிர் கொள்ள வேண்டியிருந்தது.

தொடர் முயற்சியால், 1979-ஆம் ஆண்டு எம். ஏ. காஜாவின் இயக்கத்தில் “இனிக்கும் இளமை” என்ற திரைப்படத்தில் நடித்து தன் திரைப்பயணத்தைத் தொடங்கினார்.

எம். ஏ. காஜாவிற்கு விஜயராஜ் என்ற பெயரில் விருப்பமில்லை; அந்தக் காலக்கட்டத்தில் ரஜினிகாந்த் புகழின் உச்சத்திலிருந்ததால் அவரது பெயரிலிருந்த காந்த் என்பதை எடுத்து, விஜயராஜ் என்ற பெயரில் இணைத்து விஜயகாந்த் எனப் பெயர் மாற்றம் செய்தார்.

அதிக எண்ணிக்கையில் படங்களில் நடித்த விஜயகாந்த்

விஜயகாந்த்

பட மூலாதாரம், DMDK

‘சட்டம் ஒரு இருட்டறை’, ‘தூரத்து இடி முழக்கம்’, ‘அம்மன் கோவில் கிழக்காலே’, ‘உழவன் மகன்’, ‘சிவப்பு மல்லி’ என அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்து தமிழ் திரைப்படத்தின் முன்னணி நாயகர்களுள் ஒருவரானார்.

‘வைதேகி காத்திருந்தாள்’, ‘உழவன் மகன்’, ‘கேப்டன் பிரபாகரன்’,’வானத்தைப் போல’, ‘தவசி’, ‘ரமணா’ என இதுவரை 150 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ள விஜயகாந்த், 1984 ஆம் ஆண்டு மட்டும் ஒரே ஆண்டில் 18 திரைப்படங்களில் நடித்து சாதனை புரிந்தார்.

இயக்குநர் எஸ்.ஏ. சந்திர சேகர் மற்றும் இராம நாராயணன் ஆகிய இருவரும் தான் விஜயகாந்தின் அதிக எண்ணிக்கையிலான திரைப்படங்களை இயக்கினார்கள். அவை பெரும்பாலும் வசூலைக் குவித்தன.

நடிகராக இருந்தவர் நடிகர் சங்கத் தலைவரானார்

நடிகர் சங்க தலைவர் விஜயகாந்த்

பட மூலாதாரம், VIJAYAKANTH/FACEBOOK

விஜயகாந்த் 1999-ஆம் ஆண்டு நடிகர் சங்கத் தலைவரானார். அவர் நடிகர் சங்கத் தலைவரானபோது, நடிகர் சங்கம் மிகப் பெரும் கடன் சுமையில் இருந்தது.

அதனை வெளி நாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி அதன் மூலம் கடன்களை அடைத்தார். அதோடு மட்டுமல்லாமல், நலிந்த கலைஞர்களுக்கு, உதவி செய்வதற்காக ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி, பெரும் தொகையை வங்கியில் வைப்பீடு செய்தார்.

2002-ஆம் ஆண்டு காவிரி நதி நீர் பிரச்னை உச்சத்தில் இருந்தபோது, அனைத்து நடிகர்களையும் ஒன்றிணைத்து “நீர் தராத கர்நாடகாவுக்கு மின்சாரம் இல்லை” என்ற போராட்டத்தை நெல்லையில் நடத்தினார்.

”மனிதாபிமானமிக்கவர் விஜயகாந்த்”- நடன இயக்குநர் பிருந்தா

விஜயகாந்த்

பட மூலாதாரம், VIJAYAKANTH/FACEBOOK

விஜயகாந்த் குறித்து நடன இயக்குனர் பிருந்தாவிடம் பிபிசி தமிழுக்காக தொடர்பு கொண்டு பேசினோம். அவர் விஜயகாந்த் குறித்துப் பேசும்போது, “விஜயகாந்த் திரைப்படம் படப்பிடிப்புத் தளங்களில் ஒழுக்கத்தினைக் கடைப்பிடிப்பார். அவரது ‘ஷாட்’ முடிந்தவுடன் சென்று கேரவனில் அமர மாட்டார்.” என்றார்.

“விஜயகாந்த் போன்று ஒரு நல்ல மனிதரைப் பார்க்கவே முடியாது. அவர் நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது, நடிகர் சங்கத்தின் கடன்களை அடைக்க வெளிநாடுகளில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது, நடன இயக்குனர்களையும், நடனக் கலைஞர்களையும் மிகவும் அன்போடு கவனித்துக் கொள்வார். “

“நடன இயக்குனர்களுக்கு சிங்கப்பூரிலிருந்து, மலேசியாவிற்குச் செல்லும்போது விமான அனுமதிச்சீட்டுகளையே முன் பதிவு செய்து கொடுத்தார். நடனக் கலைஞர்கள் தானே என அவர் எங்களை பேருந்தில் பயணம் செய்யவிடவில்லை. அவரது நற்பெயரே அவருக்கு இன்னும் நிறைய நன்மைகளைச் செய்யும். மிகவும் அற்புதமான மனிதர்”, என்றார்.

விஜயகாந்த் அரசியலில் சாதித்தது என்ன?

விஜயகாந்த்

பட மூலாதாரம், VIJAYAKANTH/FACEBOOK

திரைப்படத்தில் பல உச்சங்களைத் தொட்ட விஜயகாந்த் 2005-ஆம் ஆண்டு, செப்டம்பர் 14-ஆம் தேதி மதுரையில் மாபெரும் மாநாடை நடத்தி, அதில், ”தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்” என்ற தனது கட்சியின் பெயரையும் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து விஜயகாந்த் திரைப்படத்திற்கு முழுக்குப் போட்டுவிட்டு முழு நேர அரசியலில் இறங்கினார்.

விஜயகாந்த் 2006-இல் கட்சி தொடங்கிய பிறகு, ஒவ்வொரு வருடமும் அவரது பிறந்த நாளை ‘வறுமை ஒழிப்பு தினமாக’ கடைபிடித்து வருகிறார்.

அந்நாளில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிர்வாகிகளும், தொண்டர்களும் விஜயகாந்தின் வழியைப் பின்பற்றி ஏழை, எளிய மக்களுக்கான நலதிட்ட உதவிகளை ‘இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே’ என்ற முழக்கத்தோடு செய்து வருகின்றனர்.

ஏழை எளியவர்களுக்கு உதவுவதில் விஜயகாந்த் போல் யாரும் இல்லை: நடிகர் ரமேஷ் கண்ணா

விஜயகாந்த்

பட மூலாதாரம், VIJAYAKANTH/FACEBOOK

விஜயகாந்த் குறித்து நடிகர் ரமேஷ் கண்ணா அவர்களிடம் பிபிசி தமிழுக்காக தொடர்பு கொண்டு பேசினோம்.

அவர், “விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தபோது, நான் இணைந்து கொள்ள விருப்பப்பட்டேன். அவர் என்னை அழைத்து நீ என் கட்சியில் சேர்ந்தால் ஓரு சார்பாளனாகிப் போவாய். நீ எல்லாருக்கும் பிடித்தவனாக இரு என அறிவுரை வழங்கினார். ” என்றார்.

“பெரும்பாலான உதவி இயக்குனர்களுக்கு சாப்பாடு இருக்காது. வறுமை தான். அப்பொழுதெல்லாம் கண்ணை மூடிக் கொண்டு நாங்கள் நடிகர் விஜயகாந்த் வீட்டிற்குச் செல்வோம். அதேபோல், அவர் என்ன உணவு உண்பாரோ அதே உணவைத் தான் அனைவருக்கும் வழங்கச் சொல்வார்.”

“படப்பிடிப்புத் தளத்திலும் இதே தான், லைட் யூனிட்டிலிருந்து, சவுண்ட் யூனிட்டிலிருந்து அனைவருக்கும் ஒரே சாப்பாடு தான் வழங்கச் சொல்வார். படப்பிடிப்புத் தளத்தில் பாகுபாடு பார்க்காமல் அனைவருடனும் அமர்ந்து ஒன்றாக உணவு உண்பார். ” என்றார் ரமேஷ் கண்ணா.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »