Press "Enter" to skip to content

தமிழ்நாட்டு உயர்கல்வியில் பொதுப் பாடத்திட்டம் – ஆளுநருக்கும் அரசுக்கும் மோதல் ஏன்?

பட மூலாதாரம், TN DIPR

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாநில அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் பொதுப் பாடத்திட்டத்தை கடுமையாக விமர்சித்து கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தை அனைத்து பல்கலைகழக துணை வேந்தர்களுக்கும், ஆசிரியர் அமைப்புகளுக்கும், மாநில உயர்கல்வித்துறைக்கும் அனுப்பியுள்ளார். அவரது எதிர்ப்புக்கு என்ன காரணம்?

தமிழ்நாட்டில் 13 பல்கலைகழங்கள் உள்ளன. தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின் படியே அனைத்து பல்கலைகழகங்களும் இயங்குகின்றன. ஒவ்வொரு பல்கலைகழகத்திலும் மூன்று அல்லது நான்கு பேராசிரியர்கள் கொண்ட, ஒவ்வொரு பாடத்துக்கும் தனியாக பாடத்திட்டக் குழு இருக்கும்.

இது போன்று தமிழகம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட பாடத்திட்டக் குழுக்கள் இருக்கின்றன. இவை ஒவ்வொரு ஆண்டும் சம்பந்தப்பட்ட பாடத்திட்டத்தில் மாற்றங்களை உருவாக்கி மாணவர்களுக்கு ஏற்றவாறு மேம்படுத்தும்.

பொதுப் பாடத்திட்டத்தை தமிழக அரசு ஏன் அமல்படுத்துகிறது?

தற்போது இந்தப் பணியை தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் நிபுணர்களின் கருத்தைக் கொண்டு, செய்துள்ளது. அனைத்து பல்கலைகழகங்களுக்கும், ஒரே பாடத்திட்டத்தை வகுத்து கடந்த மே மாதம் வழங்கப்பட்டது.

பொதுப் பாடத்திட்டத்தை அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அமல்படுத்த வேண்டும் என மாநில அரசு தீவிரமாக வலியுறுத்தி வருகிறது .

அனைத்துக் கல்லூரிகளிலும் ஒரே விதமான பாடத்திட்டம் இருப்பது மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி வலியுறுத்துகிறார். மாணவர்கள் ஒரு பல்கலைகழகத்தில் படித்து விட்டு, மற்றொரு பல்கலைகழகத்துக்கு மாறி செல்லும் போது, பாடத்திட்ட தொடர்ச்சி இருக்கும் என்றார்.

தமிழ்நாட்டு உயர்கல்வியில் பொதுப் பாடத்திட்டம்- ஆளுநரின் எதிர்ப்பு, அரசியல் நோக்கம் கொண்டதா?

பட மூலாதாரம், BBC Sport

மாநில பொதுப் பாடத்திட்டத்துக்கு ஆளுநர் எதிர்ப்பு

ஆனால் இதற்கு ஆசிரியர்கள், துணை வேந்தர்கள், கல்லூரி முதல்வர்கள், தன்னாட்சி கல்லூரி நிர்வாகங்கள் எதிர்ப்பை தெரிவித்து கையெழுத்து இயக்கம், படிகளை திரும்ப வழங்கும் இயக்கம் என பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தான் பல்கலைகழகங்களின் தன்னாட்சியை வலியுறுத்தி ஆளுநரின் கடிதம் வந்துள்ளது.

அதில் அவர்‌, ‘உயர்கல்வியின் தரத்தை தீர்மானிப்பது அரசியல் சாசனப்படி , மத்திய அரசின் கீழ் உள்ளது, எனவே இது மாநில அரசின் வரம்புக்கு உட்பட்டது அல்ல என தெரிவித்துள்ளார், அதே‌ சமயம் பல்கலைகழகங்களே தங்கள் பாடத்திட்டங்களை வகுத்துக் கொள்ளலாம் என பல்கலைகழக மானிய குழு கூறியதையும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

தன்னாட்சி கல்லூரிகள் கடுமையாக எதிர்த்த பிறகு, தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில், அவர்கள் பொதுப்பாடத்திட்டத்தை பின்பற்ற வேண்டாம் என்று விலக்கு அளித்து விட்டது.

மேலும் மொழிப்பாடங்களுக்கான திட்டத்தை பல்கலைகழகங்களே வகுத்துக் கொள்ளலாம் என்றும் முக்கிய பாடங்களில் 25% தங்கள் பகுதிக்கு ஏற்றவாறு மாற்றங்களை செய்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்து தன் நிலையில் இருந்து ஒரு படி கீழே இறங்கி வந்துள்ளது.

“ஆளுநரின் எதிர்ப்பு அரசியல் நோக்கம் கொண்டது”

இப்படி அரசுக்கு பல்கலைகழகங்களுக்கும் இடையிலான சர்ச்சை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது தான், ஆளுநர் ரவியின் கடிதம் அரசை எதிர்த்து போராடும் ஆசிரியர்களுக்கு வலு சேர்க்கும் வகையில் வந்துள்ளது.

ஆனால், தாங்கள் பொது பாடத்திட்டதையும் எதிர்க்கிறோம், ஆளுநரின் கூற்றையும் மறுக்கிறோம் என்கின்றனர் ஆசிரியர்கள். இந்த விவகாரத்தில் ஆளுநரின் நோக்கம் அரசியலாக உள்ளது என கல்லூரி ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் செயலாளர் முனைவர் எம் கிருஷ்ணராஜ் தெரிவிக்கிறார்.

“பொதுப்பாடத்திட்டம் அறிமுகப்படுத்தும் போது அமைதியாக இருந்த ஆளுநர் இப்போது ஏன் இந்த விவகராத்தில் கருத்து தெரிவிக்கிறார். அவர் இந்த சூழலை அரசியலாக்கப் பார்க்கிறார்’ என்றார். “நாங்கள் தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம். அதில் முரண்படும் ஆளுநர் மாநிலத்தில் ஒரு மாற்றம் வரும் போது ஏன் எதிர்க்கிறார்” என கேள்வி எழுப்புகிறார், பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரியில் ஆங்கில இணைப் பேராசிரியரான கிருஷ்ணராஜ்.

ஆளுநர் தன் வரம்பு அறிந்து செயல்பட வேண்டும், மாநிலத்தின் அனைத்து விவகாரங்களிலும் தலையிட அவருக்கு அதிகாரம் கிடையாது என்று திமுக செய்தித் தொடர்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டி கே எஸ் இளங்கோவன் தெரிவித்தார்.

“குஜராத்தில் மனுதர்மத்தை பாடத்திட்டத்தில் புகுத்தியுள்ளனர். இது போன்றவற்றை தமிழகத்தில் செய்யவே அவர் மாநில பொதுப்பாடத்திட்டத்தை எதிர்க்கிறார். தமிழ்நாட்டில் கல்வியின் தரத்தை உயர்த்த அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது” என்றார் அவர்.

பொதுப் பாடத்திட்டம் கல்வி தரத்தை குறைக்கும், ஆசிரியர்கள் எதிர்ப்பு

நாடு முழுவதும் பொதுவான கல்வித்திட்டத்தை திணிக்கும் காரணத்துக்காக மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து வரும் திமுக, இப்படியொரு பொது பாடத்திட்டத்தை மாநிலத்தில் அமல்படுத்த நினைப்பது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

பொதுப்பாடத்திட்டம் அமல்படுத்தினால், கல்வியின் தரம் குறையும், அந்தந்த பகுதியின் கலாச்சாரம், இலக்கியம் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பு இல்லாமல் போகும், பல்கலைகழகங்களுக்கு பாடத்திட்டம் வகுப்பதற்கான சுதந்திரம் மற்றும் உரிமை பறி போய்விடும் என பொதுப் பாடத்திட்டம் ஏன் வேண்டாம் என்பதற்கு காரணங்கள் அடுக்கப்படுகின்றன.

“அரசு அறிமுகப்படுத்தியுள்ள பாடத்திட்டத்தின் மூலம் கல்வியின் தரம் குறைகிறது. உலகத்தில் கல்வியில் உயர்ந்த நாடுகள் கூட ஒரே பாடத்திட்டத்தை பயன்படுத்துவதில்லை. புதுச்சேரி பல்கலைகழகத்தில் கனடா இலக்கியத்தில் திறன் வாய்ந்த பேராசிரியர்கள் இருப்பார்கள். பாரதிதாசன் பல்கலைகழகத்தில் மொழிபெயர்ப்புக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். இவை எல்லாவற்றையும் பொதுப்பாடத்திட்டம் அழித்து விடும்” என்று கூறுகிறார் முனைவர் கிருஷ்ணராஜ்.

மாணவர்களின் வேலைவாய்ப்புகளுக்கான திறன்களை மேம்படுத்தவும், போட்டித் தேர்வுகளில் அவர்கள் அதிகம் தேர்ச்சி பெறவும் பொது பாடத்திட்டம் தேவை என மாநில அரசு வலியுறுத்துகிறது. தேசிய கல்விக் கொள்கை சமூக நீதிக்கு முரணானது என கூறும் திமுக நிலைப்பாட்டுக்கு முரணாக உள்ளது மாநில பொதுப்பாடத்திட்டம்.

தமிழ்நாட்டு உயர்கல்வியில் பொதுப் பாடத்திட்டம்- ஆளுநரின் எதிர்ப்பு, அரசியல் நோக்கம் கொண்டதா?

பாடத்திட்டத்தில் அரசு தலையீடு செய்தால் அது அரசியலாகிவிடும் என்று எச்சரிக்கிறார் கல்லூரி ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் எம். நாகராஜன் தெரிவிக்கிறார்.

“கல்வி எப்படி இருக்க வேண்டும் என்ற பொதுவான வடிவமைப்பை அரசு வழங்கலாம். ஆனால் என்ன சொல்லித் தர வேண்டும் என்பதில் அரசு தலையிடக் கூடாது. வலதுசாரி அரசு அமைந்தால் அவர்கள் கருத்தை திணிக்க முயல்வார்கள். இடது சாரி அரசு அமைந்தால் அவர்கள் கருத்தை திணிப்பார்கள். எனவே கல்வி நிலையங்கள் இந்த அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும்” என்று கூறினார்.

அரசு கூறும் பாடத்திட்டத்தை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால், 500 பாடத்திட்டக் குழுக்கள் என்னவாகும் என கேள்வி எழுப்புகிறார், தூத்துக்குடி வ உ சிதம்பரனார் கல்லூரியில் இயற்பியல் ஆசிரியராக உள்ள நாகராஜன். பல்கலைகழங்க சட்டத்தின் படி பல்கலைகழங்கள் இயங்குகின்றன, அந்த சட்டத்தை திருத்தி விட்டதா அரசு? எனவும் கேள்வி எழுப்புகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »