Press "Enter" to skip to content

புகுஷிமா அணுஉலை கழிவுநீர் பசிபிக் கடலில் திறப்பு – மீன்கள் கதிர்வீச்சால் பாதிக்கப்படுமா?

பட மூலாதாரம், reuters

புகுஷிமா அணுஉலை கழிவு நீரை சுத்திகரித்த பின்னர் பசிபிக் பெருங்கடலில் ஜப்பான் திறந்து விட்டுள்ளது. இதனை ஐ.நா. அணுசக்தி பாதுகாப்பு அமைப்பு ஏற்றுக் கொண்டாலும், அந்த நீரில் இன்னும் கதிரியக்கம் எஞ்சியிருக்குமோ என்ற அச்சம் அகலவில்லை. இதையடுத்து, ஜப்பானில் இருந்து மீன்களை இறக்குமதி செய்ய சீனாவும், தென் கொரியாவும் தடை விதித்துள்ளன. ஹாங்காங்கும் விரைவில் தடை விதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற தடைகளை எதிர்கொள்ள ஜப்பானும் தயாராகி வருகிறது.

ஜப்பானை 2011-ம் ஆண்டு தாக்கிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் புகுஷிமா அணுமின் நிலையத்திற்குள் கடல் நீர் புகுந்தது. இதனால் சேதமடைந்த அணு உலைகளில் இருந்த கதிரியக்க எரிபொருளை குளிர்விக்க ஏராளமான கடல் நீர் உள்ளே ‘பம்ப்’ செய்யப்பட்டது. கதிரியக்கம் கலந்த அந்த அணுகழிவு நீரைத் தான் ஜப்பான் தற்போது பசிபிக் பெருங்கடலில் திறந்துவிட்டுள்ளது.

ஜப்பான் என்ன சொல்கிறது?

சேதடைந்த புகுஷிமா அணுஉலையை குளிர்க்க பல கோடி லிட்டர் கடல் நீர் பயன்படுத்தப்பட்டது. அந்த கழிவு நீர் தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொட்டிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பல சுற்றுகள் சுத்திகரிக்கப்பட்ட அந்த நீரை இனியும் அப்படியே வைத்திருப்பது சரியான தீர்வாகாது என்று வாதிடும் ஜப்பான், அதனை பாதுகாப்பான முறையில் சிறிதுசிறிதாக பசிபிக் பெருங்கடலில் கலந்து நீர்த்துப் போகச் செய்துவிடலாம், அதனால் எந்த பாதிப்பும் வராது என்று கூறுகிறது. பசிபிக் பெருங்கடலில் உள்ள கதிரியக்கத்தின் அளவை தொடர்ந்து கண்காணிக்கவும், வெளிப்படைத்தன்மையை பராமரிக்கவும் ஜப்பான் அரசு உறுதியளித்துள்ளது.

ஜப்பானின் வாதத்தை பல அறிவியலாளர்களும் ஏற்றுக் கொள்கின்றனர். ஐ.நா. அணுசக்தி பாதுகாப்பு அமைப்பும் கூட ஜப்பானின் திட்டத்தை அங்கீகரித்துள்ளது. இது சர்வதேச தரத்திற்கு உட்பட்டது, அது சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் தாக்கம் நாம் கவலை கொள்ளத் தேவையில்லாத அளவுக்கு மிகச்சிறியதாகவே அமையும் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

சீனாவும், சில விஞ்ஞானிகளும் எதிர்ப்பது ஏன்?

புகுஷிமா அணுஉலை கழிவுநீர் கடலில் கலப்பு

பட மூலாதாரம், Getty Images

ஜப்பானின் புகுஷிமா திட்டத்திற்கு எதிர்ப்பும் இருக்கவே செய்கிறது. புகுஷிமா அணுஉலை கழிவுநீரை என்னதான் சுத்திரித்தாலும் அதில் ட்ரிட்டியம் மற்றும் கார்பன்-14 ஆகிய கதிரியக்கத் தனிமங்கள் இன்னும் ஆபத்தான அளவுக்கு இருப்பதாகவும், அவற்றை நீக்குவது மிகவும் கடினம் என்று சில விஞ்ஞானிகள் வாதிடுகின்றனர்.

பசிபிக் பெருங்கடலில் கலப்பதன் மூலம் அதனை நீர்த்துப் போகச் செய்துவிடலாம் என்ற ஜப்பானின் வாதத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர். ஜப்பான் கலன்களில் தேக்கி வைத்துள்ள அணுஉலை கழிவுநீரை இன்னும் சில பரிசோதனைகளுக்கு உட்படுத்த வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர். பெருங்கடலின் சுற்றுச்சூழல், கடல்வாழ் உயிரினங்களின் வாழ்க்கை ஆகியவற்றில் இது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்பது அவர்களின் நிலைப்பாடு.

புகுஷிமா நீரைத் திறக்க ஜப்பான் மீனவர்கள் எதிர்ப்பு

புகுஷிமா அணுஉலை கழிவுநீரை பசிபிக் பெருங்கடலில் திறந்து விடும் ஜப்பான் அரசின் திட்டத்தை அந்நாட்டு மக்களே ஒருமனதாக ஆதரிக்கவில்லை. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், ஜப்பானில் சரிபாதி மக்களே அரசின் திட்டத்தை ஆதரிக்கின்றனர். ஜப்பான் மீனவர்கள் மற்றும் கடலோர பகுதிகளில் வாழும் மக்களிடையே அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு அதிகமாக இருக்கிறது.

2011-ம் ஆண்டு புகுஷிமா பேரழிவுக்குப் பின்னர் ஏற்பட்ட பொருளாதார சீர்குலைவில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத அவர்கள், ஜப்பான் அரசின் திட்டத்தால் இன்னும் கூடுதலாக மக்கள் கடல் உணவை புறக்கணிக்கக் கூடும் என்று அஞ்சுகின்றனர். இதனால், தங்களது வாழ்வாதாரம் முற்றிலும் சீர்லைந்துவிடும் என்று அவர்கள் கவலைப்படுகின்றனர்.

“அணு கழிவுநீரை பசிபிக் கடலில் கலப்பதை விட சிறந்த வேறு பல தீர்வுகள் இருக்கக் கூடும். ஆனால், அவர்கள் இந்த நீரை கடலில் திறந்துவிட முடிவு செய்துள்ளனர். இதனால் உலகிற்கும் பிரச்னைதான். இதனை ஏற்றுக் கொள்ளவே முடியாது.” என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய ஜப்பான் மீனவர்கள் தெரிவித்தனர்.

புகுஷிமா அணுஉலை கழிவுநீர் கடலில் கலப்பு

பட மூலாதாரம், Getty Images

சீனாவின் எதிர்வினை என்ன?

2011-ம் ஆண்டு புகுஷிமா அணுஉலை விபத்து நேரிட்டதுமே, அந்த பிராந்தியத்தில் பிடிக்கப்படும் மீன்களை இறக்குமதி செய்ய ஐரோப்பிய ஒன்றியம், சீனா, தென் கொரியா ஆகியவை தடை விதித்துவிட்டன. தற்போது, புகுஷிமா அணுஉலை கழிவு நீரை திறந்துவிடும் ஜப்பானின் நடவடிக்கைக்கு எதிராக சீனா மட்டுமே கடுமையாக எதிர்வினை புரிகிறது. தடையைத் தொடர்ந்தாலும், ஜப்பானின் தற்போதைய நடவடிக்கைக்கு எதிராக தென்கொரியா வெளிப்படையாக இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை. சியோலில் ஜப்பான் தூதரகத்தை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்கள் அங்கே கைது செய்யப்பட்டுள்ளனர்.

புகுஷிமா அணுஉலை கழிவுநீர் கடலில் கலப்பு

பட மூலாதாரம், EPA

மறுபுறம், சீனாவோ புகுஷிமா பிராந்தியத்திற்கு மட்டுமே இருந்த தடையை, ஜப்பான் முழுமைக்குமாக விரிவாக்கியுள்ளது. ஜப்பானில் இருந்து கடல் உணவு இறக்குமதியை சீனா முற்றிலுமாக தடை விதித்துள்ளது. சீனாவைப் பின்தொடர்ந்து ஹாங்காங்கும் விரைவில் தடை விதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பான் ஏற்றுமதி செய்யும் மீன்களில் பாதிக்கும் மேல் இந்த இரு நாடுகளுக்கும்தான் செல்கிறது. அவற்றின் தடையால், ஜப்பானுக்கு சுமார் 8,500 கோடி ரூபாய் வர்த்தக இழப்பு ஏற்படும் என்று தெரிகிறது.

ஜப்பான் எப்படி சமாளிக்கப் போகிறது?

2021-ம் ஆண்டு இந்த திட்டத்தை முன்மொழியும் போதே எதிர்ப்பு கிளம்பியதால், இதுபோன்ற எதிர்வினைகள் வரலாம் என்பதை எதிர்பார்த்தே, ஜப்பான் அரசு மீனவர்களை காக்க மாற்றுத்திட்டத்தை ஏற்கனவே வகுத்துள்ளது. புகுஷிமா அணுஉலை கழிவுநீரை பசிபிக் பெருங்கடலில் திறந்துவிட்ட பிறகு, ஜப்பான் மீனவர்கள் பிடிக்கும் மீன்களை விற்பதில் சிரமம் ஏறபட்டால் அரசே அவற்றை வாங்கிக் கொள்ளும் என்று அந்நாடு தெரிவித்துள்ளதாக ஜபபான் டைம்ஸ் இதழ் கூறியுள்ளது.

புகுஷிமா மற்றும் ஜப்பான் பிற பகுதிகளில் பிடிக்கப்படும் மீன்களை வாங்க புதிய நிதி ஒன்று உருவாக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

‘சூஷி’ உணவை விரும்பும் சீனர்கள் என்ன சொல்கிறார்கள்?

சீனா மற்றும் ஹாங்காங்கில் ஜப்பானிய கடல் உணவான ‘சூஷி’ மக்களிடையே வெகுவாக பிரபலம். ஜப்பான் நடவடிக்கைக்கு எதிர்வினையாக இதுபோன்ற தடைகள் வரக்கூடும் என்று கணித்த உள்ளூர் மக்கள், இப்போதே ஜப்பானிய உணவகங்களுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். இதனால், கடந்த சில வாரங்களால் ஜப்பானிய உணவகங்களில் வழக்கத்தை விட விற்பனை அதிகமாக இருக்கிறது.

“ஜப்பானிய கடல் உணவுகளை தொடர்ந்து ருசிப்பேன். அந்த அளவுக்கு அதன் ருசிக்கு நான் அடிமையாகி விட்டேன்” என்கிறார் ஹாங்காங்கில் உள்ள ஜப்பானிய உணவகத்திற்கு வெளியே காத்திருக்கும் ஹூ என்ற வாடிக்கையாளர்.

புகுஷிமா அணுஉலை கழிவுநீர் கடலில் கலப்பு

பட மூலாதாரம், Getty Images

புகுஷிமாவில் என்ன நடக்கிறது?

நேற்றைய தினம் உள்ளூர் நேரப்படி பிற்பகல் ஒரு மணி முதல் புகுஷிமா அணுஉலை கழிவுநீரை பசிபிக் பெருங்கடலுக்குள் திறந்து விடப்படுவதாக ஜபபானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதற்கென கட்டப்பட்டுள்ள சுரங்கப்பாதை வழியே இந்த கழிவுநீர் பசிபிக் பெருங்கடலில் கலப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

புகுஷிமா அணுஉலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொட்டிகளில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் பல கோடி லிட்டர் கதிரியக்க நீர் சிறிதுசிறிதாக அடுத்த 30 ஆண்டுகளில் முழுவதுமாக பசிபிக் பெருங்கடலுக்குள் கலக்கப்படும் என்பதே ஜப்பான் அரசின் திட்டம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »