Press "Enter" to skip to content

நிலாவில் சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்திற்கு பெயர் வைத்த பிரதமர் மோதி

பட மூலாதாரம், ANI

நான்கு நாட்கள் வெளிநாடு பயணத்திற்குப் பிறகு இந்தியா திரும்பிய பிரதமர் நரேந்திர மோதி, பெங்களூரூவில் இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலாவில் தரையிறங்கிய இடத்திற்கு சிவ்சக்தி(Shivshakti) என்று அழைக்கப்படும் எனக் கூறிய மோதி, இஸ்ரோவின் சாதனையை நினைவுகூறும் வகையில் இனி ஆகஸ்ட் 23ஆம் தேதி தேசிய விண்வெளி தினமாகக் கடைபிடிக்கப்படும் என்றும் கூறினார்.

விஞ்ஞானிகளுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்துவிட்டு, அவர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோதி, இஸ்ரோ விஞ்ஞானிகள் அடுத்த தலைமுறையினரை விழிப்படையச் செய்தது மட்டுமின்றி, அவர்கள் மத்தியில் நீங்காத தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறினார்.

“நீங்கள் ‘மேக் இன் இந்தியா’ (Make in India) திட்டத்தை நிலாவுக்கு எடுத்துச் சென்றுள்ளீர்கள்,” என விஞ்ஞானிகளை பாராட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், “நமது விஞ்ஞானிகள் இஸ்ரோ ஆய்வு தளத்திலேயே செயற்கை நிலாவை உருவாக்கி, அதில் மென்மையாகத் தரையிறங்குவதை பலமுறை பரிசோதனை செய்துள்ளார்கள். நிலாவுக்குச் செல்வதற்கு முன் பல பரிசோதனைகளுக்கு தரையிறங்கிக் கலன் உட்படுத்தப்பட்டதால், அது நிச்சயம் வெற்றி அடையும்,” என்றார்.

உலகின் மிகப்பெரிய பிரச்சனைகளை இந்தியா தீர்க்கும்: பிரதமர் மோதி

பிரதமர் மோதி

பட மூலாதாரம், PTI

சந்திரயான்-3 தரையிறங்கியபோது தான் வெளிநாடுகளில் இருந்தாலும், தன் மனம் முழுவதும் விஞ்ஞானிகள் மீது இருந்ததாகக் கூறினார்.

“நான் இந்தியா வந்தவுடன் உங்களைப் பார்க்க விரும்பினேன். உங்கள் அனைவருக்கும் மரியாதை செலுத்த விரும்பினேன்,” என்றார்.

தொர்ந்து பேசிய மோதி, விஞ்ஞானிகளின் உழைப்பிற்கும், பொறுமைக்கும், ஆர்வத்திற்கும் தலைவணங்குவதாகக் கூறி நெகிழ்ந்தார்.

“நீங்கள் நாட்டை உயர்த்தியிருப்பது சாதாரண இடத்திற்கு அல்ல. இந்தியா தற்போது நிலாவிலும் உள்ளது. இதுவரை யாரும் செய்யாததை நாம் செய்திருக்கிறோம்.

இதுதான் இன்றைய இந்தியா, அச்சமற்ற இந்தியா, போராடும் இந்தியா. புதிதாக சிந்திக்கும், புதிய வழியில் சிந்திக்கும் இந்தியா இது. இருண்ட மண்டலத்திற்குள் சென்றாலும் உலகிற்கு ஒளிக்கதிரைப் பரப்புவோம்,” எனக் கூறி விஞ்ஞானிகளைப் பாராடினார் மோதி.

இந்த 21ம் நூற்றாண்டில் இந்தியா உலகின் மிகப்பெரிய பிரச்சனைகளையும் தீர்க்கும் என்றார் அவர்.

பிரதமர் மோதி

பட மூலாதாரம், ANI

தொடர்ந்து பேசிய அவர்,“ஒரு பக்கம் விக்ரமின்(தரையிறங்கிக்கலன்) நம்பிக்கையும் மறுபக்கம் பிரக்யானின்(ஊர்திக்கலன்) துணிவும் இருக்கிறது. நமது நுண்ணறிவு தொடர்ந்து நிலாவில் தடம் பதித்து வருகிறது.

வெவ்வேறு ஒளிக்கருவி (கேமரா)க்களில் எடுக்கப்பட்ட படங்கள் அற்புதமாக இருந்தன. பூமியின் வரலாற்றில் முதன்முறையாக மனிதன் தன் கண்களால் அந்த இடத்தைப் பார்க்கிறான். இந்த படத்தை உலகுக்கு காட்டும் வேலையை இந்தியா செய்துள்ளது,” எனக் கூறினார்.

சந்திரயானின் வெற்றி இந்தியாவின் வெற்றி மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மனித குலத்தின் வெற்றி எனக்கூறிய அவர், நிலாவில் இந்தியா மேற்கொள்ளும் ஆராய்ச்சி அனைத்து நாடுகளும் நிலாவுக்கு செல்வதற்கான புதிய வழிகளை ஏற்படுத்தும் என்றார்.

தெடர்ந்து பேசிய அவர்,“எளிதாக வாழ்வது மற்றும் எளிதாக ஆட்சி செய்வது விண்வெளித் துறையின் பெரும் பலம். இன்று, நாட்டின் நிர்வாகத்தின் ஒவ்வொரு அம்சத்துடனும் விண்வெளி பயன்பாட்டை இணைக்கும் ஒரு பெரிய பணி நடக்கிறது,” என்றார்.

‘ஜெய் விக்யான்’, ‘ஜெய் அனுசந்தன்’ கோஷமிட்ட மோதி

பிரதமர் நரேந்திர மோதி

பட மூலாதாரம், ANI

பிரதமர் நரேந்திர மோதி கிரீஸ் பயணத்தை முடித்துக்கொண்டு, சனிக்கிழமையன்று(ஆகஸ்ட் 26) நேரடியாக பெங்களூரு சென்றடைந்தார்.

கடந்த ஆகஸ்ட் 23 அன்று நிலாவின் தென் துருவத்தில் சந்திரயான்-3ஐ வெற்றிகரமாக தரையிறக்கியது. அப்போது தென்னாப்பிரிக்காவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்று இருந்தார்.

தென்னாப்பிரிக்காவில் இருந்தே தொலைபேசி மூலமாக விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்த மோதி, விரைவில் அவர்களை நேரில் சந்திப்பதாகத் தெரிவித்திருந்தார்.

பிரிக்ஸ் மாநாட்டிற்குப் பிறகு, பிரதமர் மோதி கிரீஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இன்று (ஆகஸ்ட் 26) இந்தியா திரும்பிய மோதி, நேரடியாக பெங்களூரூவுக்கு சென்றார்.

பெங்களூரு ஹெச்.ஏ.எல் விமான நிலையத்தில் இறங்கிய பிரதமர் மோதி, ‘ஜெய் விக்யான்’, ‘ஜெய் அனுசந்தன்’ என்று கோஷமிட்டார்.

பிரதமர் நரேந்திர மோதி

பட மூலாதாரம், ANI

பெங்களூரு விமான நிலையத்தில் மக்கள் மத்தியில் உரையாற்றிய மோதி, “இந்தியர்கள் மட்டும் அல்லாமல், உலகம் முழுவதும் அறிவியலில் நம்பிக்கை கொண்டவர்கள், இதன் மூலம் எதிர்காலத்தை காணக் கூடியவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்,” என்றார்.

“நமது விஞ்ஞானிகள் நாட்டிற்காக இதுபோன்ற பரிசை வழங்கியுள்ள நிலையில், இங்கு நான் பார்க்கும் காட்சிகள், கிரீஸில் நான் பார்த்தது போல் உள்ளது,” என்றும் அவர் கூறினார்.

விஞ்ஞானிகளை சந்திக்கச் செல்வது மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்த மோதி, தான் நாட்டில் இல்லாததால், இந்தியா வந்ததும் முதலில் விஞ்ஞானிகளை சந்திப்பது என முடிவு எடுத்திருந்ததாக கூறினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »