Press "Enter" to skip to content

மணிப்பூர் வன்முறை: மியான்மரில் இருந்து ஊடுருவிய மக்கள் காரணமா? எல்லையில் நடப்பது என்ன?

  • எழுதியவர், நிதின் ஸ்ரீவஸ்தவா
  • பதவி, பிபிசி இம்பால் செய்தியாளர்

மதியம் 12 மணியளவில் மணிப்பூர் மத்திய சிறைக்குள் பரபரப்பு அதிகரித்தது.

ஏறக்குறைய 700 கைதிகள் சாப்பிட்டு முடித்தபிறகு அவர்களில் பெரும்பாலான கைதிகள் தங்களுடைய முகாம்களை அடைகின்றனர்.

சைரன் ஓசை நின்றவுடன் சிறையில் அமைதி பரவியது. ஆனால் காவலர்களின் மேற்பார்வையில் சுமார் ஐம்பது பேர் கொண்ட வரிசை எங்களை நோக்கி வந்தது.

அவர்கள் அனைவரும் இந்தியாவின் அண்டை நாடான மியான்மரின் வெவ்வேறு மாகாணங்களில் வசித்தவர்கள். அவர்களின் பயோமெட்ரிக் சரிபார்ப்பு அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு செய்யப்பட இருந்தது.

மணிப்பூரில் வெளிநாட்டினர் தடுப்பு மையம் இல்லை. எனவே மாநிலத்தின் மிகப்பெரிய சிறைக்குள் ஒரு தற்காலிக வெளிநாட்டினர் தடுப்பு மையம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு பகுதியில் ஆண்களும், மற்றொரு பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் உள்ளனர்.

மணிப்பூர் வன்முறை மற்றும் 'சட்டவிரோத ஊடுருவல்கள்’ பற்றிய உண்மை

எல்லை மூடப்பட்டதால் தவிக்கும் மியான்மர் மக்கள்

மியான்மரில் வசிக்கும் 26 வயதான லின் கென் மெங் என்ற இளைஞரை அங்கே சந்தித்தோம். பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் இந்திய எல்லைக்குள் வருவதை தான் வழக்கமாகக் கொண்டிருந்ததாக அவர் கூறினார். 2022 ஆம் ஆண்டில் அவர் இந்திய எல்லைக்குள் பிடிபட்டார். அவருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர் தண்டனையை அனுபவித்து முடித்துவிட்டார். ஆனால் மணிப்பூரில் நடந்து வரும் வன்முறை காரணமாக அவர் திரும்புவதற்கான வழி தற்போது மூடப்பட்டுள்ளது.

“நான் மியான்மரின் சகேயிங் மாகாணத்தில் இருந்து இந்தியாவிற்குள் பசுக்களை விற்க வருவேன். ஒன்பது மாதங்களுக்கு முன்பு நான் கைது செய்யப்பட்டேன். அதன்பிறகு தடுப்பு மையத்தில் இருக்கிறேன். நான் இங்கே மாட்டிக் கொண்டிருக்கிறேன் என்பது என் மனைவி, பிள்ளைகள், பெற்றோருக்குக் கூடத் தெரியாது,” என்று லின் கூறினார்.

சட்டவிரோத வழி

மியான்மரில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்கு வந்ததாகக் கூறப்படும் 100க்கும் மேற்பட்டோர் இந்த சிறையில் உள்ளனர்.

“இந்தியாவின் எல்லையோர கிராமங்களுக்கு கைத்தறி வேலை செய்ய அடிக்கடி வருவேன். ஆனால் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட காரணத்தால் கடந்த ஆண்டு பிடிபட்டேன்” என்று மியான்மரின் சின் மாகாணத்தைச் சேர்ந்த யூ நிங், கூறுகிறார்.

“என்னுடைய நண்பர் ஒருவர் WY மாத்திரைகளை (தடை செய்யப்பட்ட போதை மருந்து) விற்றதால் நானும் பிடிபட்டேன். தண்டனை காலம் முடிந்துவிட்டது. ஆனால் எல்லை மூடப்பட்டிருப்பதால் என்னால் திரும்பிச்செல்ல முடியவில்லை,” என்றார் அவர்.

மியான்மரில் நடக்கும் ராணுவ நடவடிக்கையிலிருந்து தப்பலாம் என்ற எண்ணத்தில் எல்லை தாண்டி வந்ததாகவும் பலர் கூறினர்.

மியான்மர், 2021 ஆம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சியின் கீழ் உள்ளது. பொதுமக்கள் மீதான ராணுவ அடக்குமுறை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் அண்டை நாடான இந்தியாவின் மணிப்பூர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

மணிப்பூர் வன்முறை மற்றும் 'சட்டவிரோத ஊடுருவல்கள்’ பற்றிய உண்மை

மியான்மரின் நிலைமை

அண்டை நாடான மியான்மரின் ராணுவ அரசுக்கும், மக்கள் பாதுகாப்பு படை PDF மற்றும் குக்கி தேசிய படை KNA வுக்கும் இடையேயான வன்முறை மோதல்கள் இன்னும் நடந்து வருகின்றன.

மாநிலத்தில் நடந்துவரும் வன்முறைக்கு அகதிகள் அல்லது சட்டவிரோத ஊடுருவல்காரர்களே காரணம் என்று மணிப்பூர் மாநில அரசும், மத்திய அரசும் கூறுகின்றன. வன்முறையில் குறைந்தது 180 பேர் இறந்துள்ளனர் மற்றும் 60,000 க்கும் அதிகமானோர் வீடுகளை இழந்துவிட்டனர்.

மியான்மரில் நடந்து வரும் ராணுவ நடவடிக்கையின் நேரடி தாக்கம் மணிப்பூர் எல்லையில் தெரிவதாக பிபிசியின் மியான்மர் செய்தியாளர் நியோ லீ யீ கூறினார்.

“மியான்மரிலிருந்து மணிப்பூருக்குத் தப்பியோடிய பலருடன் நான் பேசினேன். அவர்கள் இங்கு நடந்துகொண்டிருக்கும் வன்முறையால்தான் இந்தியா சென்றனர். ஆனால் மணிப்பூர் வன்முறைக்கு அவர்களை பொறுப்பாக்குவது அவர்களை வேதனைப்படுத்தியுள்ளது. தங்களின் பயோமெட்ரிக் தரவுகளை சேமித்து வைப்பதன் மூலம் தங்கள் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும், மணிப்பூரில் தங்களுக்கு உதவி கிடைத்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்,” என்று லீ யீ தெரிவித்தார்.

மணிப்பூரில் உள்ள ஒரு எல்லை நகரத்தில் தனது அடையாளத்தை மாற்றிக்கொண்டு வாழும் மியான்மர் பெண் ஒருவர் பிபிசியிடம் பேசுகையில் தனது கதையை விவரித்தார்.

குக்கி-சின் பழங்குடியினத்தைச் சேர்ந்த டோய் ஷ்வே (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மியான்மரின் ராணுவ நடவடிக்கையிலிருந்து தனது குழந்தைகள் உட்பட முழு குடும்பத்தையும் பாதுகாக்கும் பொருட்டு 2021 இல் மணிப்பூரை அடைந்தார்.

“மியான்மரில் ராணுவம் பலரை கைது செய்து வருகிறது. என்னுடன் பணிபுரியும் சக ஊழியர்கள் பலர் பிடிபட்டனர். என்னையும் காவல் துறையினர் தேடி வந்தனர். என் குடும்பத்தையும் அவர்கள் சிறையில் அடைத்திருப்பார்கள். 2021 இல் நாங்கள் வந்தபோது இங்கு அகதிகள் முகாம் இல்லை. ஆனால் உள்ளூர் மக்கள் எங்களுக்கு ஆதரவளித்து தங்குவதற்கு இடம் கொடுத்தனர். பார்க்கப் போனால் நாம் அனைவரும் ஒன்றுதான்,” என்று அவர் கூறினார்.

ஆபத்து போய்விட்டது, முழு குடும்பமும் இனி இந்தியாவில் பாதுகாப்பாக இருக்கலாம் என்று டோய் நினைத்தார்.ஆனால் மூன்று மாதங்களுக்கு முன்பு, மணிப்பூரில் மெய்தேய் மற்றும் குக்கி சமூகங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. இன்றும் ஆங்காங்கே வன்முறைகள் தொடர்கின்றன.

“இம்ஃபால் மற்றும் சுராசாந்த்பூரில் வன்முறை தொடங்கிய பிறகு எங்கள் அமைதி குலைந்துவிட்டது. ஒரு தாயாக என் கவலை அதிகரித்துள்ளது. இப்போது வரை சில துணிகள் மற்றும் முக்கிய ஆவணங்களை ஒரு பையில் தயாராக வைத்துவிட்டுத்தான் உறங்கச்செல்கிறோம். ஆனால் நாங்கள் ஓட வேண்டியிருந்தால் எங்கு செல்வது என்று தெரியவில்லை. இறுதியில் நாங்கள் மியான்மருக்கு திரும்ப வேண்டும். ஆனால் எப்போது என்று தெரியவில்லை,” என்று கண்களில் கண்ணீர் மல்க அவர் தெரிவித்தார்.

சமூகங்களுக்கு இடையே பகைமை

மணிப்பூர் வன்முறை மற்றும் 'சட்டவிரோத ஊடுருவல்கள்’ பற்றிய உண்மை

மெய்தேய் மற்றும் குக்கி சமூகங்கள் தற்போது மணிப்பூரில் தனித்தனியாக வாழ்கின்றன. கிறித்துவத்தைப் பின்பற்றிய குக்கி சமூகம் சுதந்திரத்திற்குப் பிறகு பட்டியல் பழங்குடி அந்தஸ்தைப் பெற்றது. அதே சமயம் மெய்தேயி மக்கள் ’இந்து பட்டியல் சாதி’யில் சேர்க்கப்பட்டனர்.

குக்கி ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் மெய்தேய் சமூகத்தினர் நிலம் வாங்க முடியாது என்பதும் தற்போது அவர்கள் பழங்குடியினர் அந்தஸ்தை கேட்பதும் மோதலுக்குக் காரணம். கூடவே அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு பிரச்சனையும் உள்ளது.

தற்போதைய நெருக்கடிக்கு அண்டை நாடான மியான்மரின் சின் மற்றும் சகாயிங் மாகாணங்களிலிருந்து ஓடி வந்துள்ள சின்-குக்கி மக்கள்தான் பொறுப்பு என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்களை “சட்டவிரோத ஊடுருவல்காரர்கள்” என்று மாநில அரசு விவரிக்கிறது.

இந்திய – மியான்மர் எல்லையில் போதைப்பொருள் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ‘ஆயுதமேந்திய குக்கி ஊடுருவல்காரர்கள்’ வன்முறைக்குப் பின்னால் இருப்பதாக பெரும்பான்மையான மெய்தேய் அமைப்புகள் கருதுகின்றன.

மணிப்பூர் வன்முறை மற்றும் 'சட்டவிரோத ஊடுருவல்கள்’ பற்றிய உண்மை

பட மூலாதாரம், HINDUSTAN TIMES

மாநிலத்தில் வன்முறை வெடித்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு மே 3 ஆம் தேதியன்று மாநில முதல்வர் என். பிரேன் சிங் செய்தி முகமையான ஏஎன்ஐ க்கு பேட்டி அளித்தார். “மியான்மருடனான மணிப்பூரின் எல்லை 398 கிமீ நீளம் கொண்டது. ஆங்காங்கே உள்ளே நுழையக்கூடிய இடங்கள் உள்ளன. எல்லையை முழுமையாக கண்காணிக்க முடியாது. அங்கு என்ன நடக்கிறது என்பதை இப்போது என்னால் எப்படி சொல்ல முடியும். நமது இந்தியப் படைகள் அங்கு குவிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவர்களால் இவ்வளவு நீண்ட எல்லையை முழுவதுமாக காவல் காக்க முடியாது. அங்கு என்ன நடக்கிறது என்பதை நான் மறுக்கவில்லை. எல்லாம் நன்கு திட்டமிடப்பட்டு நடப்பதாகத் தெரிகிறது. ஆனால் காரணம் தெளிவாக இல்லை,” என்று அவர் கூறினார்..

சின்-குக்கி மக்களின் வரலாறு

இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கும் குக்கி சமூகத்தினர் தனி நிர்வாகம் கோருகின்றனர். ஆனால் மத்திய அரசு இந்த கோரிக்கையை நிராகரித்துவிட்டது.

‘சட்டவிரோத ஊடுருவல்காரர்கள்’ என்ற குற்றச்சாட்டுகளை ‘புனையப்பட்ட கதை’ என்று வர்ணித்த குக்கி சமூகத்தைச் சேர்ந்தவர்கள், இப்பகுதியின் வரலாற்றை மீண்டும் கூறினார்கள்.

“சர்வதேச எல்லைகளை வரையும்போது இங்கு யார் வாழ்கிறார்கள் என்பதை பிரிட்டிஷ் அரசு கருத்தில் கொள்ளவில்லை,” என்று மணிப்பூரின் தடுப்பு மையங்களில் உள்ள மியான்மர் கைதிகளின் வழக்கறிஞர் டேவிட் வைஃபே கூறுகிறார்.

”பல தலைமுறைகளாக நாங்கள் இந்த எல்லையில் வசித்து வருகிறோம். நாங்கள் இந்தியர்கள். ஆனால் என் சகோதரி ஒரு பர்மிய குக்கி குடும்பத்தில் திருமணம் செய்து கொண்டார். அவர் எல்லைக்கு அப்பால் வாழ்கிறார். அவர் இங்கு தங்க வந்தால் அவரை சட்டவிரோத ஊடுருவல்காரர் என்று அழைப்பது தவறு. அவர்கள் நிரந்தரமாக இங்கு தங்க வரவில்லை. அவர்களை அரசியல் அகதிகள் என்று கூட நாம் சொல்லலாம். மியான்மரில் அரசியல் ஸ்திரத்தன்மை இருந்தால் அவர்கள் அங்கே அதிக செளகர்யமாக இருப்பார்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.

இந்தியாவுக்கும் மியான்மருக்கும் இடையே 1,643 கிலோமீட்டர் நீள எல்லை உள்ளது. மிசோரம், மணிப்பூர், நாகாலாந்து மற்றும் அருணாச்சல பிரதேசம் வரை இது நீண்டுள்ளது.

2022 இல் இந்தியா தடை விதிப்பதற்கு முன்பு, இரு நாடுகளுக்கும் இடையில் ‘கட்டுப்பாடற்ற போக்குவரத்து’ குறித்த ஒப்பந்தம் இருந்தது. இதன்படி எல்லையில் வசிக்கும் பழங்குடியினர் விசா இன்றி எல்லையில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவு வரை பரஸ்பரம் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

கடந்த சில ஆண்டுகளில், இந்தியா மியான்மரில் இருந்து மர இறக்குமதியை (தேக்கு போன்ற விலையுயர்ந்த மரம்) அதிகரித்தது. அதே நேரத்தில் மியான்மர் இந்திய நிறுவனங்களிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் ராணுவ உபகரணங்களை வாங்கத் தொடங்கியது.

இந்த வர்த்தகத்தில் முதல் மந்தநிலை கோவிட்-19 இன் போது காணப்பட்டது. இரண்டாவது மந்தநிலை ‘ கட்டுப்பாடற்ற போக்குவரத்து’ ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தபோது உணரப்பட்டது.

மணிப்பூரில் இப்போதும் ஆங்காங்கே வன்முறைகள் தொடர்வதால், மியான்மரில் இருந்து இங்கு வருபவர்கள் யார் என்பதை விசாரிக்க வேண்டியது அவசியம். அத்தகைய சுமார் 2,500 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அரசு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

மியான்மரில் ராணுவ ஆட்சி வந்தபிறகு சுமார் 80,000 அகதிகள் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

மியான்மருடனான தூதாண்மை உறவுகளின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு இந்தியா, அங்கு ஜனநாயகத்தை மீட்டெடுப்பது குறித்து மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறது. ஆனால் இந்தியாவுக்கு ஓடி வந்த அகதிகளை திருப்பி அனுப்புவது தொடர்பாக எந்த முன்னேற்றமும் இல்லை.

மணிப்பூர் வன்முறை மற்றும் 'சட்டவிரோத ஊடுருவல்கள்’ பற்றிய உண்மை

‘போர் அகதிகள்’?

மியான்மரில் இருந்து வருபவர்களில் யார் ‘சட்டவிரோத ஊடுருவல்காரர்கள்’ என்று அழைக்கப்படுவார்கள், யார் ‘போர் அகதிகள்’ என்று அழைக்கப்படுவார்கள் என்ற கேள்வி இன்னும் உள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் வன்முறைகளுக்கு “சட்டவிரோத ஊடுருவல்” மட்டுமே காரணம் என்று கூறுவது அரசின் கட்டுக்கதையா என்று அறிய மணிப்பூர் செய்தித்துறை அமைச்சர் சபம் ரஞ்சனை நாங்கள் அணுகினோம்.

“நாங்கள் எந்த சமூகத்துக்கும் எதிரானவர்கள் அல்ல. எல்லை கடந்து வந்தவர்களைப்பற்றி மட்டுமே நாங்கள் கவலைப்படுகிறோம். எங்கள் மாநிலத்திற்கு பலரும் சட்டவிரோதமாக வருகிறார்கள். எனவே இந்த முக்கியமான பிரச்சனையை நாங்கள் எழுப்ப வேண்டியுள்ளது. மக்களின் பயோமெட்ரிக் போன்றவை எடுக்கப்படுகின்றன. இது ஆரம்பம் தான். இப்போது எல்லையில் வேலி அமைக்கும் பணி தொடங்கும்,” என்று சபம் ரஞ்சன் குறிப்பிட்டார்.

சுராசாந்த்பூரில் உள்ள குக்கி மக்கள் கூட்டணியின் துணைத் தலைவர் சின்கோலால் தான்சிங்

எல்லையில் வேலி அமைக்கும் முன்முயற்சி பற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.

“சுதந்திரம் அடைந்ததில் இருந்து இந்திய-மியான்மர் எல்லை, சுதந்திர எல்லையாக இருப்பதால், குக்கி சகோதரர்கள் அதிக அளவில் இங்கு வர துவங்கினர். காடுகளில் குடும்பங்கள் குடியேறத் தொடங்கியபோது மணிப்பூர் மக்களிடையே பாதுகாப்பின்மை உணர்வு ஏற்பட்டது,” என்று கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அவர் தெரிவித்தார்.

மணிப்பூர்-மியான்மர் எல்லைக்கு நாங்கள் சென்றபோது, பல கிராமங்களைக் கண்டோம். அந்த கிராமங்களில் சில வீடுகள் இந்தியாவிற்குள் வருகின்றன, சில வீடுகள் மியான்மரின் ஒரு பகுதியாக உள்ளன.

எல்லையில் வாழும் மக்களின் மொழி, உணவு, உடை,தொலைபேசிற எல்லாமே ஒரே மாதிரியாக உள்ளன. இவர்களில் மெய்தேய் மற்றும் குக்கி ஆகிய இரு சமூகத்தைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். இவர்கள் அனைவரையும் “சட்டவிரோத ஊடுருவல்காரர்கள்” பிரிவில் வைப்பது மணிப்பூரின் குக்கி சமூகத்தினருக்கு மிகவும் வேதனை அளிப்பதாக உள்ளது.

சுராசாந்த்பூரில் உள்ள குக்கி மக்கள் கூட்டணியின் துணைத் தலைவர் சின்கோலால் தான்சிங்குடன் இது குறித்து நீண்ட நேரம் பேசினோம்.

“சிரியாவில் இருந்தோ அல்லது வன்முறை மோதல்கள் உள்ள வேறு எந்த நாட்டிலிருந்தோ செல்லும் அகதிகள், மனிதாபிமான அடிப்படையில் ஐரோப்பா, பிரிட்டன் அல்லது அமெரிக்கா போன்ற நாடுகளில் தஞ்சம் பெற்று வருகின்றனர். அதேபோல் மியான்மரில் ராணுவ ஆட்சியால் சிரமப்படும் அகதிகளின் மனித உரிமைகளைப் பாதுகாத்து, இந்தியாவும் அவர்களை வரவேற்க வேண்டும்,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

ஆனால் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வரும் குக்கி மற்றும் மெய்தேய் இன மக்களுக்கு இடையே பகைமை ஆழமடைந்து வருகிறது என்பதே அடிப்படை உண்மை.

65 வயதான என் புலிந்த்ரோ சிங், இந்திய-மியான்மர் எல்லையில் உள்ள மோரே நகரில் வியாபாரம் செய்து வந்தார். மே 4 ஆம் தேதி ஒரு வன்முறை கும்பல் அவரது வீடு மற்றும் சேமிப்பு கிடங்கை எரித்துவிட்டது. இந்திய ராணுவம் அவரது குடும்பத்தினரை காப்பாற்றி இம்ஃபாலுக்கு அழைத்துச் சென்றது.

இம்ஃபாலில் எதிர் சமூகத்தின் ஒரு காலி வீட்டில் புலீந்த்ரோ சிங் தனது குடும்பத்துடன் தங்கியுள்ளார். அண்டை நாடான மியான்மருடன் வளர்ந்து வரும் வர்த்தகத்தில் மோரே வணிகர்களுக்கு பெரும் பங்கு இருப்பதால் அவர் திரும்பிச் செல்வதை எதிர்நோக்குவதற்கு ஒரு காரணமும் உள்ளது.

“மத்திய அரசும், மாநில அரசும், மாநிலப் படையை மோரேயில் நிறுத்தினால்தான் நாங்கள் திரும்பிச் செல்வோம். மணிப்பூரின் மக்களை மோரேவில் வாழ அனுமதிக்காவிட்டால், மணிப்பூருக்கு உணவளிக்கும் எங்கள் வணிகம் தோல்வியடையும். முழு மணிப்பூருக்கும் நஷ்டம் ஏற்படும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »