Press "Enter" to skip to content

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம்: என்ன செய்யப்போகிறது மோதி தலைமையிலான மத்திய அரசு?

பட மூலாதாரம், Getty Images

சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம் இன்று கூடும் நிலையில், அடுத்த நான்கு நாட்களில் பிரதமர் மோதி தலைமையிலான ஆளும் பாஜக அரசு கடைசி நேரத்தில் சில விஷயங்களை செயல்படுத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக எதிர்க்கட்சிகள் கணிக்கின்றனர்.

கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் ஐந்து நாட்களுக்கு சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார். அந்தக் கூட்டத்தில் கேள்வி நேரம் இல்லை என்றும் முன்பே அறிவித்திருந்தனர்.

முதலில் நிகழ்ச்சி நிரல் எதுவும் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனங்களுக்கு பிறகு, நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டது.

அதேபோல, இது வழக்கமான கூட்டத்தொடர் தான் என்றும், தற்போதைய மக்களவையின் 13-வது அமர்வு என்றும், மாநிலங்களவையின் 261 வது அமர்வு என்றும் மத்திய அரசு பின்னர் தெளிவுபடுத்தியது. எனினும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சந்தேகம் எழுப்புவதன் பின்னணி என்ன?

சிறப்புக் கூட்டத்தின் நோக்கம் என்ன ?

நாடாளுமன்றம்

பட மூலாதாரம், Getty Images

மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்ச்சி நிரலில் முதல் நாள் கூட்டமான இன்று, சம்விதான் சபாவின் தொடங்கி நாடாளுமன்றத்தின் 75 ஆண்டு காலப் பயணம், வெற்றி மற்றும் அதன் சாதனைகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தவிர, நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ள 37 மசோதாக்களில் ஐந்து மசோதாக்கள் மட்டும் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் நியமனம் குறித்த மசோதா விவாதத்திற்கு எடுக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா மாநிலங்களவையில் மழைக்கால கூட்டத்தொடரின்போது ஆகஸ்ட் 10 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இரண்டு அவைகளிலும் இம்மசோத நிலுவையில் உள்ளது.

இதற்கு அடுத்ததாக, வழக்கறிஞர்கள்(திருத்தம்) மசோதா 2023 மற்றும் பருவ இதழ்களுக்கான பத்திரிக்கை மற்றும் பதிவுசெய்தல் மசோதா 2023 ஆகியவையும் இந்தக் கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரலில் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த இரண்டு மசோதாக்களும் கடந்த மழைக்கால கூட்டத்தொடரின்போது மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் இன்னும் நிலுவையில் உள்ளது.

இந்த மசோதாக்களைத் தவிர, கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட அஞ்சலக மசோதா 2023ம், இந்த நாடாளுமன்ற கூட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி

பட மூலாதாரம், Getty Images

எதிர்க்கட்சிகளின் சந்தேகம் என்ன ?

எதிர்க்கட்சிகளின் தொடர் விமர்சனம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி சார்பில் பிரதமர் மோதிக்கு கடிதம் எழுதிய பிறகு இந்த நிகழ்ச்சி நிரலை வெளியிட்டிருந்தாலும், இது உத்தேச நிகழ்ச்சி நிரல் தான் என்றும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

மேலும், பட்டியலிடப்பட்டுள்ளவையுடன் கூடுதல் நிகழ்ச்சி நிரல்கள் சேர்க்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பிபிசியிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர், “அவர்கள் என்றைக்கும் சொன்னதைச் செய்ததே இல்லை. இந்த முறையும் சொன்னதை செய்வார்கள் என்ற நம்பிக்கை இல்லை.

ஆனால், தற்போது பட்டியலிடப்பட்டுள்ளவற்றில் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் குறித்த மசோதாவை நிச்சயம் எதிர்ப்போம். ஆனால், அது அவர்கள் நாேக்கமாக இருக்கும் எனத் தோன்றவில்லை,” என்றார்.

மேலும், கடந்த ஒன்பது ஆண்டுகளில் நாடாளுமன்ற நெறிமுறைகள் எதையும் பாஜக அரசு கடைபிடிப்பதில்லை என்றும், நாளை நடக்கவிருக்கும் கூட்டத்தில் நிச்சயம் முன்னறிவிப்பின்றி எதேனும் மசோதா கொண்ட வருவதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக மாணிக்கம் தாக்கூர் கூறினார்.

வழக்கறிஞரும் திமுக., நாடாளுமன்ற உறுப்பினருமான வில்சனும் தேர்தல் ஆணையர் நியமனம் குறித்த மசோதாவை திமுக எதிர்க்கும் எனத் தெரிவித்தார்.

“அவர்கள் ஜனநாயகத்தை மதிப்பதாகத் தெரியவில்லை. தேர்தல் ஆணையம் ஒரு தனியான அமைப்பாக செயல்பட வேண்டும். ஒரு மூன்று பேர் டெல்லியில் அமர்ந்துகொண்டு, ஒட்டுமொத்த இந்தியாவின் ஜனநாயகத்தையும் கட்டுப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுவரையிலும் கூட அப்படித்தான் நடந்துள்ளது,” என்றார் வில்சன்.

சு வெங்கடேசன்

பட மூலாதாரம், Su.Venkatesan/TWIITTER

“அதிகாரத்தை இழக்கக்கூடிய பதற்றத்தில் பாஜக” – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி சு.வெங்கடேசன்

தொடர்ந்து பேசிய வில்சன்,“தமிழ்நாட்டிலேயே கூட ஆர்.கே நகர் தேர்தல் பணப்புழக்கம் அதிகம் இருப்பதாகக்கூறி நிறுத்தினார்கள். பின், மீண்டும் நடத்தி முடித்தார்கள். ஆனால், அந்த தேர்தலில் அவர்கள் கூறிய குற்றச்சாட்டுக்கு யார் மீதேனும் நடவடிக்கை எடுத்துள்ளார்களா என்பன உட்பட, அதைப்பற்றி இப்போது வரை எந்த தகவலும் இல்லை. அதனால், தேர்தல் ஜனநாயகத்தை காப்பாற்ற, நாங்களும் அதை எதிர்ப்போம்,” என்றார்.

ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், “எதையும் நாம் யூகிக்க முடியாது” என்றார்.

“இது நேர்மை சம்மந்தப்பட்டது என்பதால், பாஜக.விடம் அந்த நேர்மையை எதிர்பார்க்க முடியாது.காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கிய அரசியலைப்பு சட்டம் பிரிவு 370-ஐ ரத்து செய்யக் கொண்டு வந்த மசோதா, மாநிலங்களவையில் தாக்கல் செய்வதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பு தான் எங்கள் கைகளுக்கு அந்த மசோதா குறித்து தகவல் வந்தது.

“இப்படி, கடைசி நேரத்தில் எதை வேண்டுமென்றாலும் கொண்டு வருவார்கள்,” என்றார்.

மேலும், தற்போது குறிப்பிடப்பட்டுள்ள நான்கு மசோதாக்கள் தான் நிகழ்ச்சி நிரல் என்றால், அதனை முதலிலேயே வெளியிட்டிருக்கலாமே, அதனை வெளியிட எதற்கு அவ்வளவு தயக்கம் என கேள்வி எழுப்பினார் வெங்கடேசன்.

“அதிகாரத்தை இழக்கக்கூடிய பதற்றத்தை பாஜக.விடம் பார்க்க முடிகிறது. அதன் வெளிப்பாடு தான் இவை. ஜனநாயகத்தை கடைப்பிடிக்கிற நடைமுறை அவர்களிடம் இல்லை.

சட்டத்திற்கு உட்பட்ட விஷயங்கள், மக்கள் நலன் சார்ந்த விஷயங்கள் என்றால், அதனை நாம் யூகிக்கலாம், எதிர்பார்க்கலாம். ஆனால், அவர்கள் முழுமையாக தங்கள் சுயநலன் சார்ந்து தான் செயல்படுபவர்கள்,” என்றார்.

புதிய நாடாளுமன்றக் கட்டடம்

பட மூலாதாரம், TWITTER/OM BIRLA

பாஜக எம்.பி.க்களுக்கு கட்டளையிட்டுள்ள கட்சித் தலைமை

இதற்கிடையில், பாஜக சார்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொறடா சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், இன்று தொடங்கி அடுத்த ஐந்து நாட்களுக்கு நடக்கும் கூட்டத் தொடரில் “நேர்மறையாக செயல்பட வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், “திங்கள்கிழமை தொடங்கி வெள்ளக்கிழமை வரை நடைபெறும் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முக்கியமான அலுவலர்கள் மீது விவாதம் மீது விவாதம் நடைபெற்று அவை நிறைவேற்றப்பட இருக்கிறது”

“இதனால், செப்டம்பர் 18 முதல் 22 வரை ஐந்து நாட்களுக்கு தவறாமல் கூட்டத் தொடருக்கு வந்து கட்சியின் நிலைப்பாட்டினை ஆதரிக்க வேண்டும்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடிதம் எதிர்க்கட்சிகளின் சந்தேகத்தினை மேலும் வலுப்படுத்துகிறது. “இந்த நான்கு மசோதாக்களிலும் ஒன்றும் இல்லை. அந்த நான்கு மசோதாக்களில் உள்ள கூர்களை அமல்படுத்த அவர்கள் அவசரச்சட்டத்தின் மூலமாகவே செய்துவிடலாம். இதற்கென சிறப்புக் கூட்டம் கூட்ட வேண்டியதில்லை,” என்றார் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன்.

ஆனால், புதிதாக எதுவும் அறிவிக்க வாய்ப்பில்லை என்றும், அப்படியே அறிவித்தாலும் அது மக்கள் நலன் சார்ந்ததாகத்தான் இருக்கும் என்றார் தமிழ் நாடு பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா.

“நாடாளுமன்ற புதிய கட்டடம் கட்டி திறக்கப்பட்டுவிட்டது. ஆனால், இன்று வரை எந்தக் கூட்டமும் அங்கு நடத்தப்படவில்லை. அதனால், ஒரு நல்ல நாள் அன்று புதிய அரங்கில் கூட்டம் நடத்தலாம் என்று இக்கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது,” என்றார் சூர்யா.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »