Press "Enter" to skip to content

தமிழ்நாட்டில் கடற்படை உலங்கூர்தி மூலம் நாட்டு மர விதைப்பந்துகள் தூவப்படுவது ஏன்?

வறண்ட மாவட்டமான ராமநாதபுரத்தை புதிய உத்தி ஒன்றின் மூலமாக பசுமையாக்கும் திட்டத்தை இந்திய கடற்படை முன்னெடுத்துள்ளது. ஆம். மரங்களுக்கும் கடற்படைக்கும் சம்பந்தம் இருக்கிறது. கடலில், விண்ணிலும் குண்டுகளை ஏவும் இந்திய கடற்படை, தற்போது விதைகளை தூவும் பணியில் இறங்கியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில், வானிலிருந்து உலங்கூர்தி மூலம் விதைப்பந்துகளை, மண்ணில் குறிப்பிட்ட இடங்களில் விதைப்பந்துகள் தூவப்படும். இந்திய கடற்படை வனத்துறையுடன் இணைந்து இத்திட்டத்தை தொடங்கியுள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் அடர்த்தி குறைந்த காடுகளைபசுமையாக்கும் இந்த முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

நாட்டு இன மரங்களின் விதைப்பந்துகள்

ராமநாதபுரம் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட நாட்டு இன மர விதைகளான வேம்பு, புளி, நாவல், புங்கம் உள்ளிட்ட விதைகள் அடங்கிய 5 லட்சம் விதைப் பந்துகள், உச்சிப்புளி அடுத்துள்ள ஐஎன்எஸ் பருந்து கடற்படை உலங்கூர்தி மூலம் தூவப்பட்டது.

வானில் இருந்து விதைப்பந்துகள் தூவும் நிகழ்வினை இந்திய கடற்படை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சரக கமாண்டர் ரவிக்குமார் டிங்கரா கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

ஐஎன்எஸ் பருந்து கடற்படை தளத்தில் இருந்து புறப்பட்ட உலங்கூர்தி ராமேஸ்வரம் அடுத்துள்ள நடராஜபுரம் சுனாமி காலனி பகுதியில் தாழ்வாக பறந்த படி விதைப்பந்துகளை தூவியது.

மாவட்ட வனத்துறை மற்றும் மாதா அமிர்தானந்தமயி மடத்துடன் இணைந்து இந்திய கடற்படை வானில் இருந்து விதை பந்துகள்தூவும் பணியை தொடங்கியுள்ளது என இந்திய கடற்படை தமிழ்நாடு புதுச்சேரி சரக கமாண்டர் ரவிக்குமார் டிங்கரா, தெரிவித்தார். இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர்,

வானில் இருந்து விதைப்பந்துகள் வீசும் போது அந்த பகுதி நிச்சயம் பசுமை மயமாகும் என்று நம்பிக்கை தெரிவித்ததோடு, இது சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

“முடிந்தவரை ராமேஸ்வரம் தீவு பகுதி முழுவதும் விதை பந்துகளை தூவுவதற்கு திட்டமிட்டுள்ளோம்.உலங்கூர்தி மூலம் வானிலிருந்து விதைப்பந்துகள் தூவுவது இதுவே முதல் முறை. இது நல்ல பலனை அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” என அவர் தெரிவித்தார். வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பே விதை பந்து தூவும் பணியானது துவங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் செயல்படுத்த இந்திய கடற்படை திட்டமிட்டுள்ளது.

மேலும், ஐ.என்.எஸ் பருந்து தமிழகத்தின் முக்கிய பகுதியில் இருப்பதால் முதல் கட்டமாக வானில் இருந்து விதைப்பந்துகளை தூவும் பணி இங்கிருந்து துவங்கப்பட்டுள்ளது. அதேபோல் விரைவில் புதுச்சேரி மாநிலத்திலும் இத்திட்டம் தொடங்கப்படவுள்ளது.

கடற்படை உலங்கூர்தி மூலம் விதைப்பந்துகளை தூவும் பணி: ராமநாதபுரம் பசுமையாகுமா?
கடற்படை உலங்கூர்தி மூலம் விதைப்பந்துகளை தூவும் பணி: ராமநாதபுரம் பசுமையாகுமா?

ஏழு லட்சம் விதைப்பந்துகள் தூவப்பட்டுள்ளன

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சீமை கருவேல மரங்களை அழித்து மாவட்டத்தை பசுமைமயமாக்குதலில் வனத்துறை அதிக கவனம் செலுத்தி வருவதாக பிபிசி தமிழிடம் ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் ஹேமலதா தெரிவித்தார்.

இது குறித்து அவர் பேசுகையில்,“அடர்த்தி குறைந்த காடுகளை பசுமையாக்கும் முயற்சியாக இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் 7 லட்சம் விதைப் பந்துகள் வனத்துறை சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தூவப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு வனத்துறை அலுவலகங்களில் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன. இவை அடர்த்தி குறைந்த காடுகளில், விவசாய நிலங்களில், பண்ணைகளில் கடற்கரை ஓரங்களில் நடப்பட்டு வளர்க்கப்படுகின்றன” என்று தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட நாட்டு இன மரங்கள் பல வளர்ச்சிப் பணிகளுக்காக வெட்டப்பட்டு வருகிறது. எனவே முதல் கட்டமாக நாட்டு இன மரங்களின் விதைப்பந்து தூவப்படுகின்றன.

ராமநாதபுரம் கடற்கரை மாவட்டம் என்பதால் கடல் அரிப்பு ஏற்படாமல் கடற்கரைகளை பாதுகாப்பதற்காக வனத்துறை உயிர்வேலி மரங்களான தாழம்பூ மற்றும் சவுக்கு மரங்களை வளர்க்கிறது.

“பேரிடர் காலங்களில் கடல் அரிப்பை தடுப்பதற்கு தாழம்பூ செடிகள் முக்கிய பங்காற்றி வந்ததாக பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. எனவே தாழம்பூ செடிகளை வனத்துறை வளர்த்து மக்களுக்கு வழங்கி வருகிறோம்” என்றார் வன அலுவர் ஹேமலதா.

அதேநேரம் கடற்கரை பகுதியில் வறண்ட பசுமை மாறாக் காடுகள் (TROPICAL FOREST) என்ற திட்டத்தின் கீழும் மரங்கள் நடப்பட்டு வருகின்றன.

கடற்படை உலங்கூர்தி மூலம் விதைப்பந்துகளை தூவும் பணி: ராமநாதபுரம் பசுமையாகுமா?

சீமை கருவேல மரங்கள் அகற்றம்

வனத் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து கடந்த ஒரு ஆண்டு காலத்தில் சாயல்குடி பகுதியில் 50 ஹெக்டர் சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.

சீமை கருவேல மரங்களால் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு விவசாயம் பாதிக்கப்படுவதால் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என பொது மக்கள கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஆனால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கடற்கரை ஓரங்களில் உள் கருவேல மரங்களால் கடல் அரிப்பு தடுக்கப்பட்டு வருகிறது என வனத்துறை கூறுகிறது. எனவே சீமை கருவேல மரங்களை உடனடியாக அப்புறப்படுத்தாமல், படிப்படியாக அகற்ற திட்டமிட்டுள்ளது. கடற்கரைகளில் உள்ள கருவேல மரங்கள் அகற்றி அந்த இடத்தில் கடல் அரிப்பை தடுக்கும் வேறு மரங்கள் நடப்பட்டு வருகின்றன.

“ தூவப்பட்ட விதைகள் அனைத்தும் சரியான இடைவெளியில் விதைப்பந்து களுக்கு பாதிப்பு இல்லாதவாறு சேராங்கோட்டை பகுதியில் விழுந்துள்ளது. எதிர்வரும் பருவமழை காலத்தில் இவை நல்ல பலனை அளிக்கும் என்ற எதிர்ப்பார்க்கிறோம்” என மாவட்ட வன அலுவலர் ஹேமலதா தெரிவித்தார்.

விதைப்பந்து வீசுவது இயற்கைக்கு மாறானது

விதைப்பந்துகள் தூவுவதால் பலன்கள் அதிகம் இருக்கும் என்று அரசு கூறினாலும், இது தேவையற்ற திட்டம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

விதைப்பந்துகளில் உள்ள விதைகள் அனைத்தும் வளர்வதற்கு மிக குறைவான வாய்ப்பே உள்ளது என மதுரை அமெரிக்கன் கல்லூரி தாவரவியல் துறை உதவி பேராசிரியர் மருத்துவர் டி.ஸ்டீபன் தெரிவிக்கிறார்.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “ பூமியில் விழும் விதை பந்தின் மீது வெயில் நேரடியாக படுவதால் நாளடைவில் விதைப்பந்தில் உள்ள களிமண் இறுகி விதைகள் வெப்பத்தில் இறந்துவிடும்.

விதை பந்துகள் வீசும் பகுதியில் எந்த மரம் வளரும் என்று நன்கு ஆராய்ந்து தூவ வேண்டும். ஆனால் அதை பெரும்பாலானோர் செய்வதில்லை. இயற்கைக்கு மாறாக விதைகள் தூவுவதால் அது ஆபத்தில் முடியும்” என்று அவர் தெரிவித்தார்.

அதற்கு பதிலாக 3 முதல் 4 அடி வரை வளர்ந்த செடிகள் அடர்ந்த காடுகளுக்குள் நடுவது பசுமை பரப்பை அதிகரிக்கும் என்று பேராசிரியர் ஸ்டீபன் ஆலோசனை வழங்குகிறார்.

மேலும், வானிலிருந்து தூவப்பட்ட விதைகள் கருவேல மரங்களுக்கு இடையே விழுவதற்கு வாய்ப்பிருப்பதால் அனைத்து விதைகளும் மரமாக வளரும் வாய்ப்பு குறைவு எனவும் கூறப்படுகிறது.

கருவேல மரங்களால் மண் வளம் அதிகரிக்கும்

தொடர்ந்து பேசிய அவர், “ராமநாதபுரம் மாவட்டம் பசுமை மயமாக வேண்டும் என்றால் கருவேல மரங்களை முற்றிலும் அழிக்க வேண்டும் என பலரும் சொல்லி வருகின்றனர். ஆனால் கருவேல மரம் குடை போல் பசுமை போர்த்தி இருப்பதால் சூரிய ஒளி நேரடியாக மண்ணை தாக்காமல் பாதுகாக்கும். இதன் காரணமாக மண்ணில் ஈரப்பதம் தக்கவைக்கப்படும். இது நைட்ரஜன் உற்பத்திக்கு உதவியாக இருக்கும். இதனால் மண் வளம் அதிகரிக்கும்” என்று தெரிவித்தார்.

இப்பகுதியின் நாட்டு இன மரங்களான புளி மற்றும் வேம்பு காடுகளில் வளர்பவை அல்ல, மக்கள் வசிக்கும் பகுதிகளில் வளர்பவை. இதன் விதைகளை அடர் காடுகள் வளர்க்க பயன்படுத்துவது நல்ல பலனை அளிக்காது என்கிறார் பேராசிரியர் ஸ்டீபன்.

“ராமநாதபுரம் போன்ற கடலோர பகுதிகளில் வெயில் அதிகமாக இருப்பதால் நிச்சயம் வெயிலை தாங்கி வளரக்கூடிய மரங்கள் மட்டுமே வளரும். நாம் என்ன முயற்சி செய்தாலும், சூழலை பொருத்து மட்டுமே செடிகள் வளரும் அதை கட்டாயப்படுத்தினால் நிச்சயம் வளராது. அது இயற்கைக்கு புறம்பானது” என்று அவர் கூறுகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »